Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 065 (Preaching in Antioch)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)

3. அனடோலியாவின் அந்தியோகியாவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:13-52)


அப்போஸ்தலர் 13:13-25
13 பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.14 அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வு நாளிலே ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.15 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்தி சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.16 அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.17 இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,18 நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,19 கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து,20 பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.21 அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பதுவருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.22 பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளை யெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்.23 அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.24 இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.25 யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.

சீப்புருதீவில் இருளின் வல்லமை மீதான கிறிஸ்துவின் வெற்றியைத் தொடர்ந்து, அந்தத் தீவில் சபைகளை நிறுவுவதில் காணப்பட்ட கஷ்டங்களை நோக்கிப் பார்த்த போது, பவுலுக்கு ஒரு காரியம் தெளிவாகப் புலப்பட்டது. பர்னபாவின் சொந்த ஊரில் அவர்கள் தொடர்ந்து பிரசங்கிப்பதை பரிசுத்த ஆவியானவர் விரும்பவில்லை. ஆகவே பவுல் எழுந்து, தனது குழுவினருடன் அனடோலியாவின் உயரமான மலைகள் மற்றும் கடற்கரையை ஒட்டி கப்பலில் பயணித்தார்கள். நிச்சயமாக பர்னபாவும், அவனது இனத்தானாகிய யோவானும் சீப்புரு தீவில் தங்கியிருப்பதை விரும்பியிருப்பார்கள். அங்கு பொறுமையுடனும், பொறுப்புடனும் பணிசெய்து திருச்சபைகளை நிறுவிட எண்ணியிருப்பார்கள். ஆனால் பவுல் தனது வழி அனடோலியாவை நோக்கி இருப்பதை அறிந்தான். பவுலை விட்டு பிரிவதை ஆறுதலின் மகனாகிய பர்னபா விரும்பவில்லை. ஆகவே தனது சொந்த ஊரை விட்டு செல்ல ஆயத்தமாய் இருந்தான். பரிசுத்த ஆவியானவரின் கட்டளையை மீறாமல், அவர்களுடன் அந்த ஒரே பணியில் இணைந்து பணியாற்ற சென்றான்.

இறைவனின் வல்லமையினால் அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கு பவுல் தனது கூட்டாளிகளுடன் கப்பற்பிரயாணம் செய்தான். அந்தியோகியா பட்டணத்திற்கு அருகில் செஸ்டிரிஸ் நதிக்கரையில் உள்ள பெர்காவில் அவன் நீண்ட காலம் தங்கவில்லை. மாறாக அவன் 160 கிலோ மீட்டர் முன்னேறிச் சென்றான். எட்டு நாட்கள் பயணத்தில் அவர்கள் உயரமான மலைகளின் சிகரங்களை கடந்து சென்றார்கள். அப்பயணத்தில் ஆபத்துகள், தாங்க முடியாத உஷ்ணம், சோர்வு, பசி மற்றம் தாகம் நிறைந்திருந்தது. எருசலேமைச் சேர்ந்த வாலிபன் யோவான் இப்பயணத்திலும், இதுவரை ஏற்பட்ட காரியங்களின் வளர்ச்சியிலும் விருப்பமற்றவனாகக் காணப்பட்டான். அவன் இரண்டு அப்போஸ்தலர்களையும் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்ப தீர்மானித்தான். இருப்பினும் மீண்டும் ஒரு முறை பவுலுடன் தங்கியிருப்பதை பர்னபா நாடினான். அவனது உறவினனுடன் தனக்கிருந்த தனிப்பட்ட உறவை அவன் பற்றிக் கொண்டிருக்கவில்லை. ஆண்டவருடைய பணியில் தொடர்ந்து இருப்பதில் ஆர்வமற்றிருந்த தனது உறவினன் பிரிந்து செல்லும்படி விட்டுவிட்டான். இந்தப் பணியில் பர்னபாவின் உறவினன் தொடர்ந்து வரவில்லை.

அனடோலியாவின் சமவெளிப் பகுதிகளில் அமைந்திருந்த முக்கியமான வணிக ரீதியான பட்டணமாக அந்தியோகியா சின்ன ஆசியாவில் இருந்தது. பவுலும் பர்னபாவும் தனது குழுவினருடன் இணைந்து அங்கு சென்றார்கள். இது கடல் மட்டத்தை விட 1000 மீட்டர்கள் உயர்வாக இருந்த இடமாகும். அவர்கள் அந்தியோகியாவில் நுழைந்தவுடன், உடனடியாக அப்பட்டணத்தில் பொது இடங்களில் பிரசங்கிக்கவில்லை. ஆனால் அவர்கள் யூதர்களின் ஜெப ஆலயத்திற்கு முதலில் சென்றார்கள். கடந்த காலங்களில் ஆபிரகாமின் பிள்ளைகள் மெய்யான இறைவனின் வெளிச்சத்தை பெற்றிருந்தார்கள். முழு உலகிற்கும் இறைவனின் முழுமையான ஒளியாக இருக்கின்ற, தமது மகிமைக்கு நேராக அவர்களை அழைக்கின்ற இயேசுவைக் குறித்து பவுல் அவர்களுக்கு பிரசங்கித்தான். மருத்துவராகிய லூக்கா பதிவு செய்துள்ள இந்த சொற்பொழிவு பவுல் யூதர்களின் ஜெப ஆலயங்களில் வழங்கியிருந்த மற்ற அனைத்து சொற்பொழிவுகளுக்கும் ஒரு முன் மாதிரியாக கருதப்படுகிறது. இயேசு கிறிஸ்துவைக் குறித்த பழைய ஏற்பாட்டின் சத்தியத்திற்கு மக்களை இணங்கப்பண்ணுவதே அதனுடைய நோக்கமாக இருந்தது. இந்த உரையை மிகவும் ஆழமாக நாம் பார்க்கும் போது, பவுலும், பர்னபாவும் தங்கள் விசுவாசத்தின் மீது எவ்விதம் சார்ந்திருந்தார்கள் என்பதைக் காண முடியும். அவர்கள் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசனங்களில் இருந்து பிரசங்கித்தார்கள். பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாட்டிற்கு அஸ்திபாரம் மற்றும் ஆரம்பம் என்று கருதினார்கள்.

அந்தியோகியாவின் ஜெப ஆலயத்தில் யூதர்களுடன் சேர்ந்து சில புறஜாதியாரும் இருந்தார்கள் என்று வாசிக்கிறோம். ஒரே இறைவன் என்கிற கருத்தைக் கேட்டு அவர்கள் வியப்புற்றார்கள். பழைய ஏற்பாட்டு மனிதர்களின் ஒழுக்க வாழ்வின் உன்னத நிலையை அவர்கள் மதிப்பிட்டார்கள். இந்த மதக்கோட்பாடுகளில் நம்பிக்கையுடைய விசுவாசிகளிடம் பவுல் யுதர்களிடம் பேசுவது போலவே மிகுந்த மரியாதையுடன் பேசினான். இறைவனை கனப்படுத்துகிற மற்றும் இறைவனுக்கு பயப்படுகிற இப்படிப்பட்ட மக்களைக் கொண்டு, பவுல் தான் செல்லுமிடமெங்கும் உறுதியான சபைகளை நிறுவினான்.

நாம் வாசிக்கின்ற வசனங்கள் 17 முதல் 25 வரை, இறைவனின் செயலை விவரிக்கக்கூடிய பதினான்கு வினைச் சொல்கள் இருப்பதை அறிய முடியும். மனித மூட நம்பிக்கைகளைக் கொண்டோ அல்லது இறையியல் கோட்பாடு ஆராய்ச்சியைக் கொண்டோ பழைய ஏற்பாட்டின் வரலாறு கட்டியமைக்கப்படவில்லை என்பதை நீங்கள் உணர முடியும். பழைய ஏற்பாடு என்பது இறைவனின் செயல்பாடுகளை உள்ளடக்கிய தொடர் நிகழ்வு ஆகும். இறைவன் அனைத்தையும் ஆளுகிறவர், சர்வஞானி மற்றும் அனைத்தையும் பெற்றிருப்பவர் என்பதை நீங்கள் அடிப்படையில் உணரவில்லையெனில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை புரிந்து கொள்ள முடியாது. மக்களின் முடிவுகள் என்பது கொள்கைகள், பேரழிவுகள் அல்லது விதிகளால் மாற்றியமைக்கப்படுவதில்லை. இறைவன் மட்டுமே அதைச் செய்கிறார். அவர் தனிப்பட்ட நபர்களை அவர்களின் தகுதியின் அடிப்படையில் அல்ல, மாறாக அவருடைய கிருபையின் புகழ்ச்சிக்காக தெரிந்து கொள்கிறார். அவருடைய வார்த்தைக்கு ஒப்புக் கொடுக்காதவனை அவர் தள்ளிவிடுகிறார். நீங்கள் அளவற்ற ஞானத்தை அடையும்படி எல்லா வினைச் சொற்களின் வித்தியாசமான அர்த்தங்களை படியுங்கள்.

இறைவன் முற்பிதாக்களை தெரிந்தெடுத்த போது, உலக இரட்சிப்பின் வரலாற்றை துவக்கி வைத்தார். மேலும் கிறிஸ்துவின் வருகையின் மூலம், அவரது முழுமையான திட்டத்தை நிறைவேற்றினார். இறைவனது வரலாற்றின் நிறைவேறுதலில், ஆண்டவர் பழைய ஏற்பாட்டின் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். வனாந்தரத்தில் மிகுந்த பொறுமையுடன் அவர்களது கலகத்தை அவர் தாங்கிக் கொண்டார். கானானின் நிலப்பகுதிகளை அவர்களுக்கு வழங்கினார். அவர்களை ஆளுகை செய்ய நீதியுள்ள நியாயாதிபதிகளை நியமித்தார். அவர்களது வேண்டுகோளின்படி, ஒரு ராஜாவையும் கொடுத்தார். அவர்களது முதல் ராஜாவாய் இருக்கும்படி சவுலை அபிஷேகம் பண்ணினார். அவனது ஆட்சியின் ஆரம்பத்தில் அற்புதமான ஓர் உதாரணமாக இருந்தான். புறஜாதிகளின் அப்போஸ்தலன் கூட சவுல் என்ற பெயரை உடையவனாக இருந்தான் வாலிபப்பருவத்தில் தனது ராஜரீக பெயரைக் குறித்து கர்வம் மிக்கவனாக சவுல் இருந்தான். ஆனால் அவனது ராஜாவாகிய இயேசுவை சந்தித்த போது அவரது தாழ்மையை தன் வாழ்வில் உடையவனாக மாறினான். சவுல் என்ற பெயரை அகற்றிவிட்டு பவுல் என்று பெயர் சூடிக் கொண்டான். அதன் அர்த்தம் “சிறியவன்” என்பதாகும்.

ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாகக் காணப்பட்ட தாவீது அரசனில் இறைவனின் வரலாறு தெளிவாகக் காணப்பட்டது. தாவீது தனது பாவங்களில் இருந்து மனந்திரும்பினான். இறைவனின் சித்தத்தை தேடினான். பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவனிடமிருந்து சங்கீதங்களும், 3000 ஆண்டு காலமாக இன்றும் மக்கள் ஏறெடுக்கின்ற அநேக விண்ணப்பங்களும் பாய்ந்தோடி வந்தது. தாவீதின் வாயிலிருந்து வந்த அநேக தீர்க்கதரிசனங்களை கிறிஸ்துவும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் இறைவனின் இந்த வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறவில்லை என்று யூதர்கள் நினைத்தார்கள். அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார்கள். “தாவீதின் சந்ததியில் வரும் சத்தியமாக இருக்கும் நித்தியமான இறைவனின் குமாரனாக இருக்கின்ற வாக்குப்பண்ணப்பட்ட குமாரன் எங்கே?” எல்லா யூதர்களும் இந்த முக்கியமான வாக்குத்தத்தத்தை அறிந்திருந்தார்கள். அவருடைய மக்களையும், எல்லா மக்களையும் பூரணமான சமாதானத்திற்கு நேராக வழிநடத்தும் இறை ராஜாவாக இருக்கின்ற கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தார்கள். பவுல் தன்னிடம் கேட்டுக்கொண்டவர்களை பார்த்து ஒரு சுருக்கமான வாக்கியத்தை கூறினான். இயேசு தாவீதின் குமாரன், அதே சமயத்தில் அவர் இறைவனின் குமாரனாக வந்திருக்கிறார். அவரே நாசரேத்தூர் இயேசு. அவர் உலக ரட்சகர். அவர் ரோம அரசர்களாகிய சீசர்களை விடப் பெரியவர். அவர் மெய்யான மனிதன், மெய்யான இறைவன், நித்தியமானவர், பரிசுத்தம் மற்றும் மகிமை நிறைந்தவர்.

இந்த விளக்கங்களுக்குப் பின்பு பவுல், யோவான் ஸ்நானகனைக் குறித்த சத்தியங்களை குறிப்பிட்டு பேசினான். அவன் தான் கிறிஸ்து என்று சில யூதர்கள் நினைக்கும் அளவிற்கு சின்ன ஆசியா பகுதி முழுவதும் மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் குறித்த அவனது செய்திகள் பரவியிருந்தது. இயேசுவுடன் ஒப்பிடப்படும் போது யோவான்ஸ்நானகன் தான் தகுதியற்றவன் என்பதை அறிக்கையிட்டான் என்று பவுலும் தெளிவுபடுத்தினான். அவன் அவருடைய வேலைக்காரன் மட்டுமே. அவருக்காக பணி செய்தவர்களில் மிகவும் குறைவான பணி செய்தவன் என்று அவன் தன்னை தாழ்த்தினான். அவன் தீவிர ஆர்வத்துடன் கிறிஸ்துவின் வருக்கைக்காக காத்திருந்தான். தன்னுடைய சீஷர்களை வரப்போகின்ற ஆண்டவருக்கு நேராக வழிநடத்தினான். அவருக்காக வழியை ஆயத்தப்படுத்தி ஆவலாய் இருக்கும்படி செய்தான்.

விண்ணப்பம்: மகிமையுள்ள, சர்வத்தையும் ஆளுகிற ஆண்டவரே, எங்கள் சிந்தனைகளைச் சுற்றியோ, சுயத்தை மையமாக வைத்தோ நாங்கள் வாழாதபடி உதவும். உம்முடைய வரலாற்றுச் சங்கிலியில் நாங்கள் இணைந்து கொள்ளவும் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உம்முடைய கிரியைகளுக்கு சாட்சியாய் இருக்கவும் உதவும். எங்கள் எதிர்காலத்தை திட்டம்பண்ணுவது தலைவர்களோ அல்லது கட்சிகளோ அல்ல நீர் மட்டுமே எங்களது ஆண்டவர். உமது நாமத்தை அறிக்கையிட எங்களுக்கு கற்றுத்தாரும். உம்முடைய ராஜ்யம் எங்களிடத்திற்கும், முழு உலகத்திற்கும் வரட்டும்.

கேள்வி:

  1. மனிதனுடனான இறைவனது வரலாற்றின் தூண்டுதல் மற்றும் நோக்கம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)