Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 052 (Disparate views on Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)


யோவான் 7:37-38
37 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். 38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

பண்டிகையின்போது இயேசு மறுபடியும் தேவாலயப் பிரகாரத்தில் மக்களுக்குப் பிரசங்கம் செய்தார். அவர்கள் பிரதான ஆசாரியன் பலிபீடத்தின் மீது தண்ணீரை ஊற்றுவதற்காகக் காத்திருந்தார்கள். இறைவனுக்கு முன்பாக தண்ணீரை ஊற்றும்படி ஆசாரியர்கள் அணிவகுத்து நடந்து வந்தார்கள். அது நன்றி பலியாகவும், வருகிற வருடத்திற்குரிய ஆசீர்வாதத்தை அவர்கள் இறைவனிடம் தேடுவதற்கான அடையாளமாகவும் காணப்பட்டது. “இரட்சிப்பின் ஊற்றுக்களை மகிழ்ச்சியோடு மொண்டுகொள்வார்கள்” என்ற ஏசாயாவின் வார்த்தைகளை இந்தச் செயலுக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தார்கள்.

அனைத்து சடங்குகளையும் அனுசரித்த போதிலும் இரட்சிப்பைக் கண்டடையாத தாகமுள்ள ஆத்துமாக்களை இயேசு கண்டார். எதிர்பார்ப்புடன் இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “தாகமுள்ளவர்களே என்னிடத்தில் வந்து இலவசமாக ஜீவ தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள். தாகமுள்ளவன் என்னிடத்தில் வரக்கடவன். நானே ஜீவ ஊற்று” என்று அழைத்தார்.

தெய்வீக வாழ்வுக்காக ஏங்காதவர்கள் இரட்சகரிடத்தில் வருவதில்லை. ஆனால் இயேசுவினிடத்தில் வருகிறவர்களிடம் அவர், “என்னை விசுவாசித்து என்னோடு தன்னை இணைத்துக் கொண்டவன் அநேகருக்கு ஆசீர்வாதமான ஊற்றாக மாறுகிறான். என்னில் விசுவாசம் வைக்கும்படி வேதாகமம் உங்களை ஊக்குவிக்கிறது. நீங்கள் என்னிடத்தில் வந்து வாழ்வையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இறைவனும் கட்டளையிடுகிறார். கிறிஸ்துவினிடத்தில் தைரியமாக வந்து அவருடைய வார்த்தைகளைப் பருகி, அவருடைய ஆவியினால் நிரப்பப்படுகிறவர்கள் மறுரூபமடைவார்கள். தாகமுள்ளவன் நீரூற்றாக மாறுகிறான்; தீமையுள்ள சுயபெருமைக்காரன் உண்மையுள்ள வேலைக்காரனாகிறான்.

இயேசுவின் பராமரிப்பை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? அவர் உங்களை தெளிந்த நீருள்ள கிணறாக மாற்ற விரும்புகிறார். உங்கள் இருதயம் தீமையான சிந்தனைகளையே வெளிக்கொண்டு வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இயேசு உங்கள் இருதயத்தையும் உங்கள் உதடுகளையும் சுத்திகரித்து அநேகருக்கு உங்களை ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாற்ற முடியும்.

அவர் உங்கள் மனதையும் ஆத்துமாவையும் மட்டுமல்ல உங்கள் உடலையும் தூய்மைப்படுத்த விரும்புகிறார். அப்பொழுது நீங்கள் இறைவனுக்குப் பிரியமான ஜீவபலியாக மாறி இழந்து போனவர்களுக்கு சேவை செய்ய முடியும். அவர் உங்கள் முழுமையான பரிசுத்தமாகுதலைத் நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் நீங்கள் உங்களுக்காக வாழாமல் உங்கள் பலத்தை மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் இலவசமாகப் பயன்படுத்துவீர்கள். யாரெல்லாம் இயேசுவுக்குத் தங்களை நிபந்தனையற்ற முறையில் ஒப்புக்கொடுக்கிறார்களோ அவர்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக மாறுவார்கள்.

யோவான் 7:39
39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.

யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். நாம் இன்னும் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்வதால், நம்முடைய தலைமுறையில் ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது ஒரு அற்புதமான செயலாகும். அவர் சாதாரண தேவதூதனோ மாயாவியோ அல்ல, அவர் பரிசுத்தத்தினாலும் அன்பினாலும் நிறைந்த இறைவனாகவே இருக்கிறார். ஆவியானவர் தூய்மையான தீக்கொழுந்தைப் போலவும் சக்தியுள்ள மின்சாரத்தைப் போலவும் இருக்கிறார். அதேவேளையில் அவர் உருக்கமாக ஆறுதல்படுத்துபவராகவும் இருக்கிறார். ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாறுகிறான்.

கிறிஸ்துவின் காலத்தில் தெய்வீக ஆவியானவர் அனைவரின் மீதும் ஊற்றப்படவில்லை, ஏனெனில் பாவம் மனுக்குலத்தை அவர்களுடைய கர்த்தரிடத்திலிருந்து பிரித்திருந்தது. குற்றச் செயல்கள் என்னும் பெரிய மலை பரிசுத்த ஆவியானவருக்கும் மனித குலத்திற்கும் நடுவில் தடையாக இருந்தது. ஆனால் இயேசு தன்னுடைய மரணத்தின் மூலமாக பாவத்தை மேற்கொண்டு, பரலோகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்த பிறகு, பிதாவும் அவரும் ஐக்கியப்பட்டு அவருடைய அன்பின் ஆவியானவரை எங்குமிருக்கும் விசுவாசிகள் மீது பொழிந்தருளினார். இறைவன் ஆவியாயிருக்கிற காரணத்தினால் அவர் எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர். கிறிஸ்துவின் இரத்தத்தினால் தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட ஒரு விசுவாசியினுடைய உள்ளத்தில் அவரால் வாழமுடியும். என் சகோதரனே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா? கிறிஸ்துவின் வல்லமை உங்கள் மீது வந்திருக்கிறதா? உயிர்மீட்சிக்கும் ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகிய இயேசுவிடம் வாருங்கள். அவர், “என்னிடத்தில் வருகிற எவனும் பசியடையான், என்னை விசுவாசிக்கிறவன் எவனும் தாகமடையான்” என்று உறுதியளிக்கிறார். யாரெல்லாம் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்களுடைய இருதயத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டுவரும் என்று வேதாகமம் கூறுகிறது.

யோவான் 7:40-44
40 ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். 41 வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? 42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லெகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். 43 இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. 44 அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.

இயேசுவினுடைய வார்த்தைகளிலுள்ள சத்தியத்தின் வல்லமையை சிலர் உணர்ந்து அதற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். இறைவனுடைய சித்தத்தை அறிந்து, மனிதருடைய இருதயத்தின் இரகசியங்களை நிதானிக்கும் ஒரு தீர்க்கதரிசிதான் அவர் என்று அவர்கள் பொதுமக்கள் நடுவில் அறிக்கை செய்தார்கள். இறைவனுடனிருந்த ஐக்கியத்தின் மூலமாக பழைய ஏற்பாட்டில் மக்களை வெற்றிக்கு மேல் வெற்றிக்கு வழிநடத்திச் சென்ற மோசேக்கு வாக்குப்பண்ணப்பட்ட தீர்க்கதரிசி இவர்தான். இந்த வகையில் நசரேயனாகிய இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்று அவர்களில் சிலர் அறிக்கையிட்டார்கள்.

ஆயினும் பரிசேயர்கள் இதை எதிர்த்து இவ்வாறு வாதிட்டார்கள்: “இவர் நாசரேத்திலிருந்து வருகிறார். ஆனால் மேசியா வரும்போது தாவீதின் நகரத்திலும் தாவீதின் வித்திலுமிருந்துதானே வருவார்?” அவர்கள் மேற்கோள்காட்டும் வேதப்பகுதி சரியானதுதான். அப்படியானால் தான் பெத்தலகேமில்தான் பிறந்தார் என்று இயேசு ஏன் அவர்களுக்கு அறிவிக்கவில்லை? அதற்கு சில காரணங்கள் உண்டு: முதலாவது, ஏரோது தன்னுடைய அரசகுலத்திலிருந்தல்லாமல் வேறு அரசனை அனுமதிக்க மாட்டான். அவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்காக ஆயிரக் கணக்கான மக்களைக் கொல்லவும் ஆயத்தமாயிருந்தார்கள். இரண்டாவது, இயேசு வரலாற்று ஆதாரங்களினால் தனக்கு விசுவாசிகளை உருவாக்க விரும்பவில்லை. அவர் தம்முடைய அன்பினாலும் அவருடைய சர்வ ஏகாதிபத்தியத்தை அவர்கள் கண்டு உணருவதினாலுமே அவர்களுடைய நம்பிக்கையைப் பெற விளைந்தார். இவ்வாறு அவர் காணாமல் விசுவாசிப்பவர்களையே தன்பக்கம் இழுத்துக்கொண்டார்.

மக்கள் கூட்டத்தின் நடுவில் முரண்பாடு முற்றி பிளவுபட்டார்கள். சிலர் அவரை மேசியா என்று அறிக்கையிட்டார்கள் சிலர் மறுதலித்தார்கள். தேவாலயத்துச் சேவகர்கள் அவரைக் கைது செய்யும் நோக்கத்தோடு காத்திருந்தார்கள்; ஆனால் அவருடைய வார்த்தைகளிலிருந்த சர்வஏகாதிபத்திய மகத்துவம் அவர்களை அச்சுறுத்தியதால் யாரும் அவருக்கு அருகில் செல்ல இயலாதிருந்தார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே உம்முடைய அன்புக்காகவும் மகத்துவத்திற்காகவும் நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீரே வாழ்வின் ஆதாரம். விசுவாசத்தினால் உம்மை நீர் எங்களோடு இணைத்துக் கொண்டீர். நீர் உம்முடைய ஆவியைப் பொழிந்தருளினீர். பாவிகளாகிய எங்களுக்கு விசுவாசத்தினால் உம்முடைய தெய்வீகத்தைத் தந்தீர். நாங்கள் என்றென்றும் வாழும்படி உம்முடைய இரத்தத்தினால் எங்களைக் கழுவினீர்.

கேள்வி:

  1. “தாகமாயிருக்கிறவன் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன்” என்று சொல்லும் அதிகாரம் ஏன் இயேசுவிடம் மட்டும் இருக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 07:59 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)