Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 045 (Jesus offers people the choice)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

4. ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்ற விருப்பத் தேர்வை இயேசு மக்களுக்குக் கொடுக்கிறார் (யோவான் 6:22-59)


யோவான் 6:51
51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

உணவு எங்காவது அசைவதையும் பேசுவதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இயேசு தன்னை வாழ்வுதரும் உணவு – ஜீவ அப்பம் – என்கிறார். அவர் இவ்வுலகின் உணவைப் பற்றி பேசாமல், பரத்திலிருந்து வரும் ஆவிக்குரிய, தெய்வீக உணவைக் குறித்துப் பேசுகிறார். நாம் அவருடைய மாம்சத்தை அப்படியே உண்ண வேண்டும் என்று அவர் கூறவில்லை. நாம் மனித மாம்சத்தை உண்பவர்கள் அல்ல.

சீக்கிரமாகவே இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். அவருடைய ஆவிக்குரிய தன்மை அல்ல, அவருடைய மனுவுருவாதலே மனுக்குலத்தை மீட்டுக்கொண்டது. அவர் தன்னையே நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுப்பதற்காக மனிதனானார். அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இடறலடைந்தார்கள். அவர் ஒரு சாதாரண மனிதனைப்போல காணப்படுகிறார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். ஒரு தேவதூதனைப் போல பரலோகத்திலிருந்து வந்து தோன்றியிருந்தால் அவர்கள் பாராட்டி அவரை வரவேற்றிருப்பார்கள். அவருடைய மகிமையும் ஆவியும் அவர்களை விடுவிக்காது, மனுக்குலத்திற்காக ஒப்புக்கொடுக்கப்படும் அவருடைய உடலே அவர்களை விடுவிக்கும் என்று இயேசு விளக்கப்படுத்தினார்.

யோவான் 6:52-56
52அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். 53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

யூதர்கள் நடுவில் இயேசுவை விசுவாசித்தவர்களும் இருந்தார்கள் அவரைப் புறக்கணித்தவர்களும் இருந்தார்கள். அந்த இரண்டு குழுக்களும் தங்களுக்குள் தீவிரமாக வாதிட்டுக்கொண்டன. இயேசுவின் சரீரத்தை உண்பது அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்ற சிந்தனையை அவருடைய எதிரிகள் வெறுத்தார்கள். இயேசு யார் தன்னை நம்புகிறார்கள் என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அந்த இரண்டு குழுக்களுக்கிடையிலான பிரிவினையை ஆரம்பித்து வைக்கிறார். அவர் ஒரு குழுவினுடைய அன்பைப் பரிசோதிக்கிறார். மற்ற குழுவினுடைய குருட்டுத்தனத்தை வெளிப்படுத்துகிறார். “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னில் பங்கடையாதவர்கள் மரணத்திலும் பாவத்திலும் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்” என்று சொன்னார். இந்த வார்த்தைகள் அவர்களுடைய காதுகளில் தேவதூஷணம்போல தொனித்தது. அவர்கள் “என்னைக் கொன்று சாப்பிடுங்கள், நான் அற்புதமாக இருக்கிறேன். என்னுடைய உடல் உங்களுக்குக் கொடுக்கப்படும் தெய்வீக வாழ்வாகிய உணவு” என்று இயேசு சொன்னதைப் போல அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்களுடைய இரத்தம் கொதிக்க அவர்களுக்கு கடும் கோபம் மூண்டது. ஆயினும் அவரை நம்பியவர்கள் பரிசுத்த ஆவியினால் இழுக்கப்பட்டு, இந்த உன்னதமான சத்தியத்தை விசுவாசித்து, அவருடைய வார்த்தைகளின் பொருளைப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் பஸ்காவைப் பற்றி சற்று சிந்தித்திருந்தால், யோவான் ஸ்நானகன் இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டியதை நினைவுகூர்ந்திருப்பார்கள். அனைத்து யூதர்களுமே பஸ்காப் பண்டிகையில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியை உண்டார்களே. தங்களை பலிகளோடு அடையாளப்படுத்திக் கொள்வதால் இறைவனுடைய கோபத்திலிருந்து தப்பிக்கத்தானே அவர்கள் அவ்வித பண்டிகையைக் கொண்டாடினார்கள். உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி நானே என்பதை இயேசு அவர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டினார்.

இன்று கர்த்தருடைய பந்தி அவருடைய சரீரத்தை நாம் உட்கொள்கிறோம் என்பதற்கும் அவருடைய இரத்தம் நம்முடைய பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது என்பதற்கும் அடையாளமாயிருக்கிறது. அவருடைய கிருபைக்காக நாம் அவருக்கு நன்றி சொல்லுகிறோம். கலிலேயர்கள் அத்தருணத்தில் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை, அவருடைய வார்த்தைகள் அவர்களுடைய சிந்தையைக் குழப்பியது. இயேசு அவர்களுடைய விசுவாசத்தைப் பரிசோதித்தார். அவர்களுடைய பிடிவாதம் அவர்களுடைய கோபத்தில் வெளிப்பட்டது.

கர்த்தருடைய பந்தியில் கிறிஸ்து, தாம் எவ்வாறு பரிசுத்த ஆவியின் மூலம் நம்மிடம் வருகிறார் என்பதை அடையாளத்தின் மூலம் நமக்கு விளக்குகிற காரணத்தினால் நாம் அவரை மகிழ்வோடும் நன்றியோடும் தொழுதுகொள்கிறோம். அவருடைய பலியின்றி நாம் இறைவனிடம் சேரவோ அவரில் வாழவோ முடியாது. நம்முடைய பாவங்களுக்கான பரிபூரண மன்னிப்பு அவர் நம்மிடத்தில் வருவதை அனுமதிக்கிறது. அவரில் நாம் வைக்கும் விசுவாசம் இந்த அற்புதத்தை நடப்பித்து, அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலில் நம்மைப் பங்குள்ளவர்களாக்குகிறது. நம்மை மீட்டுக் கொண்டதற்காக நாம் ஆட்டுக்குட்டியானவரைத் தொழுதுகொள்கிறோம். கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்ததோடு திருப்தியடையாமல், நாம் என்றும் பரிசுத்தவான்களாக வாழும்படி நம்மை நிரப்பவும் விரும்புகிறார்.

யோவான் 6:57-59
57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.

உயிருள்ள பிதாவாகிய வல்லமையுள்ள இறைவனில் வாழ்வதைப் பற்றி கிறிஸ்து நமக்குச் சொல்லுகிறார். அவர் ஆதியும் அந்தமும் அனைத்து அன்பின் பிதாவுமானவர். கிறிஸ்து பிதாவில் வாழ்கிறார். ஆனால் அவர் தனக்காக வாழாமல் பிதாவுக்காக வாழ்கிறார். அவர் தன்னுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலமாக அல்ல தன்னைப் பெற்றெடுத்த பிதாவின் விருப்பத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிவதன் மூலமாக தன் வாழ்விற்கான பொருளைக் கண்டுகொள்கிறார். குமாரன் பிதாவைச் சேவிக்கிறார். பிதா குமாரனை நேசித்து, குமாரன் மூலமாக தன்னுடைய முழுமையில் பணிசெய்கிறார்.

தனக்கு எதிராக வெகுண்டெழும் மக்களிடம் தனக்கும் பிதாவுக்குமிடையிலான உறவின் இரகசியத்தை இயேசு வெளிப்படுத்தினார். ஒரு மிகப் பெரிய வெளிப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்தார்: “நான் எவ்வாறு பிதாவுக்காக அவரில் வாழ்கிறோனோ அப்படியே நீங்களும் எனக்காக என்னில் வாழும்படி, நான் உங்களுக்காக உங்களில் வாழ விரும்புகிறேன்.” என் அன்பு சகோதரனே, கிறிஸ்துவுடனான இத்தனை நெருக்கமான பிணைப்புக்கு நீங்கள் ஆயத்தமா? உங்கள் அனைத்து நோக்கங்கள் மற்றும் சக்திகளுடன் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா மாட்டீர்களா? கர்த்தர் உங்களில் வாழும்படி நீங்கள் உங்கள் சுயத்திற்கு மரிக்க விரும்புகிறீர்களா?

நடைமுறை மாற்றங்களுக்காக கிறிஸ்து வரவில்லை. அல்லது நமக்கு நாமே உதவி செய்யும்படி செல்வத்தைக் கொடுப்பதற்காகவும் அவர் வரவில்லை. அவர் கிராமப்புற மேம்பாட்டைத் திட்டமிடவில்லை. மக்கள் தெய்வபக்தியுள்ள வாழ்க்கையை என்றும் வாழும்படி அவர்களுடைய இருதயத்தை அவர் மாற்றுகிறார். தன்னுடைய தெய்வீகத்தில் விசுவாசிகளுக்கு அவர் பங்கு கொடுக்கிறார். அவ்விதம் வாழ்ந்து, நேசித்து, சேவைசெய்யும் புதிய மரணமற்ற மனிதனை அவர் படைக்கிறார். அவனுடைய நோக்கம் இறைவனே.

ஆறாம் அதிகாரத்தைத் திரும்ப வாசித்து அதில் “பிதா”, “ஜீவன்” மற்றும் “உயிர்த்தெழுதல்” ஆகிய வார்த்தைகளும் அவற்றிலிருந்து பெறப்படும் மற்ற வார்த்தைகளும் எத்தனை முறை கிறிஸ்துவினால் பயன்படுத்தப்படுகிறது என்று எண்ணிப் பாருங்கள். அப்பொழுது நீங்கள் யோவான் நற்செய்தி நூலின் கருப்பொருளைப் புரிந்துகொள்வீர்கள். கிறிஸ்துவில் விசுவாசியாயிருப்பவன், பரிசுத்த ஆவியில் வாழ்ந்து, உயிர்த்தெழுதலின் மகிமையை நோக்கிச் செல்கிறான்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எங்களிடத்தில் வந்து, பிதாவினுடைய வாழ்வை முழு நிறைவான மகிழ்ச்சியோடு எங்களுக்குக் கொடுத்தமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் பாவங்களை மன்னித்து எங்களைப் பரிசுத்தப்படுத்தும் அப்பொழுது நாங்கள் எங்களுக்காக வாழாமல் பொறுமையோடும் அன்போடும் நாங்கள் உமக்குச் சேவை செய்து, தாழ்மையோடு உம்மைப் பின்பற்றுவோம்.

கேள்வி:

  1. மக்கள் தன்னுடைய உடலை உண்டு, இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று ஏன் இயேசு கூறினார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:36 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)