Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 040 (In Christ, Man is Delivered)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

6. கிறிஸ்துவுக்குள்ளாக மனிதன் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து விடுவிக்கப்படுகிறான் (ரோமர் 8:1-11)


ரோமர் 8:1
1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

நம்முடைய தீய சுபாவத்திலிருந்து நம்முடைய சொந்த சக்தியினால் நம்மை நாமே விடுவித்துக்கொள்ள முடியாது என்பதை பவுல் ரோமர் 5 முதல் 7 வரையுள்ள அத்தியாயங்களில் விளக்கினார். நியாயப்பிரமாணம் நம்மை இரட்சிக்காமல், பாவம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடத்தில் உருவாக்கி, நம்மை நியாயந்தீர்க்கிறது. மரணத்தின் ஆவி நம்முடைய எலும்புகளில் வாசம்பண்ணுகிறது. பாவம் நம்முடைய நல்லெண்ணத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மனிதன் தன்னைத்தான் விடுவித்துக்கொள்ள முடியாது என்பதைக் காண்பிக்கிறார். மனிதன் சுயமாக நீதியுள்ளவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் வாழ முடியும் என்ற எண்ணத்தை முற்றிலுமாக சிதைத்துப் போடுகிறார்.

இந்த மறுக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் இறைவனோடு வாழ்வதற்கான ஒரே வழி கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைக்கும் புதிய வாழ்வு மட்டுமே என்பதை 8-ம் அத்தியாயத்தில் காண்பிக்க ஆரம்பிக்கிறார்.

இயேசுவோடு இணைக்கப்பட்ட ஒரு மனிதன் மீட்பருடைய ஆட்சிக்குள் நுழைகிறான். ஆண்டவர் அவனோடு செல்வதாலும், அவனைப் பாதுகாப்பதாலும், அவனுக்காக கரிசனையுடைவராக இருப்பதாலும் இப்போது அவன் தனித்தவனாகவும், கைவிடப்பட்டவனாகவும், பெலவீனனாகவும், குற்றவாளியாகவும் இருப்பதில்லை. அந்த விசுவாசி நல்லவன் என்பதற்காக ஆண்டவர் அவனுக்கு இந்த நன்மைகளைச் செய்வதில்லை. மாறாக அவன் இரக்கமுள்ள இரட்சகருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவர் அவனை நீதிமானாக்கி, பரிசுத்தப்படுத்தி, தம்முடைய அன்பினால் அழகுபடுத்தி, எப்போதும் அவனைப் பாதுகாக்கிறார். கிறிஸ்துவே விசுவாசியில் வாழ்கிறார். அவர் அவனை மாற்றியமைத்து, பவுல் சொல்கிறபடி அவனைக் “கிறிஸ்துவுக்குள்ளான” வாழ்க்கை வாழும்படி நடத்துகிறார். திருச்சபையில் தொடர்ந்திருப்பதைப் பற்றி அவர் பேசுவதில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, அவருடைய அன்பில் மூழ்கியிருக்க வேண்டும் என்றே அவர் எதிர்பார்க்கிறார்.

நம்முடைய விசுவாசம் கொள்கை ரீதியான நம்பிக்கையை மட்டும் கொண்டதல்ல. கிறிஸ்து நம்முடைய பெருமையைச் சிலுவையில் கொலைசெய்து, புதிய வாழ்வுக்கென்று அவர் நம்மைத் தம்முடன் உயிரோடு எழுப்பியிருக்கிற காரணத்தினால் நம்முடைய விசுவாசம் பரிசுத்த நடக்கையில் வெளிப்படுகிற ஒன்றாக இருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் அவரோடு சேர்ந்துகொண்டு, அவருடைய பரலோக வல்லமையைப் பெற்றுக்கொள்கிறான். இந்த வார்த்தைகள் வெறும் தத்துவஞானக் கருத்துக்கள் அல்ல, பரிசுத்த ஆவியானவர் குடிகொண்டிருக்கும் இலட்சக் கணக்கான விசுவாசிகளுடைய அனுபவமாக இது காணப்படுகிறது. கிறிஸ்துவையும் அவருடைய இரட்சிப்பையும் பெற்றுக்கொள்கிறவரிடத்தில் இறைவனே வந்து குடிகொள்கிறார்.

பிசாசு உங்களுக்கு எதிராகக் கொண்டுவரும் குற்றச்சாட்டுகளினால் கலங்கியிருக்கும் உங்கள் மனதை உங்களுக்காக வழக்காடும் தெய்வீக ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் ஆறுதல்படுத்துகிறார். கிறிஸ்துவுக்குள் நீங்கள் நீதிமான்களாக இருக்கிறீர்கள் என்பதை பரிசுத்த இறைவனுடைய நாமத்தினாலே அவர் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறார். சீரழிந்துபோன இந்த உலகத்தின் நடுவில் தூய்மையாக வாழும் பரலோகத்தின் வல்லமையை நீங்கள் அவர் மூலமாகப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஏழாம் அத்தியாயத்தில் பவுல் விளக்குவதைப் போல பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் வாழும்போது அவனுடைய நிலை மாற்றப்படுகிறது. அவன் தன்னுடைய இயற்கையான சுபாவத்தில் பெலவீனமுள்ளவனாக தொடர்ந்து நிலைத்திருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால் மாபெரும் இரட்சிப்பை அவன் அனுபவித்த பிறகு, விரும்புகிறதைச் செய்யாமல் வெறுக்கிறதைச் செய்கிற நிலை மாற்றப்படுகிறது. இப்போது அவன் இறைவனுக்குப் விருப்பமானதைச் செய்கிறான். அவனுடைய இருதயம் இறைவனுடைய வல்லமையினால் மகிழ்ந்திருக்கிறது.

நியாயத் தீர்ப்பின் நேரத்திலும் உயிரோடெழுந்து வெற்றி சிறந்த கிறிஸ்து நம்மோடு இருப்பார் என்பதையும் இந்த ஆவியானவர் உறுதிசெய்கிறார். அவருடைய புயம் இறைவனுடைய கோபத்தினுடைய நெருப்பின் நாவுகளுக்கு நம்மைத் தப்பிக்கச் செய்யும். கிறிஸ்துவுக்குள்ளானவர்களுக்கு நியாயத் தீர்ப்பில்லை என்ற காரணத்தினால் பரிசுத்தருடைய கோபத்தின் கதிர்களில் இருந்து நாம் காக்கப்படுவோம்.

இப்பொழுதும் நாம் அன்பின் பொறுமையிலும், தாழ்மையின் மகிழ்ச்சியிலும், சத்தியத்தின் தூய்மையிலும் கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்தும்படி அவர் நமக்கு உதவிசெய்கிறார். இந்த நற்குணங்கள் நம்மில் தானாக உருவானவை அல்ல, கொடி திராட்சைச் செடியிலிருந்து சத்தைப் பெற்றுக்கொள்வதைப் போல நாம் கிறிஸ்துவில் இணைந்திருப்பதால் இந்த குணாதிசயங்களைப் பெற்றுக்கொள்கிறோம். அதனால்தான் நம்முடைய ஆண்டவர், “என்னில் நிலைத்திருங்கள்; அப்போது மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்கள்” என்று சொன்னார். நம்முடைய நம்பிக்கை எவ்வளவு பெரியது.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவா, எங்கள் பெருமையிலிருந்து நீர் எங்களை இரட்சித்து, அசுத்த நடத்தையில் இருந்து எங்களை நீர் காப்பாற்றி, எங்களுடைய பாவங்களை நீக்கி எங்களை நீதிமான்களாக்கி, அனைத்து அசுத்தங்களிலுமிருந்து எங்களைச் சுத்திகரித்தபடியால் நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக உம்மைத் துதிக்கிறோம். உம்முடைய வாழ்வையே நீர் எங்களுக்குக் கொடுத்தீர், நாங்கள் பரிசுத்தராக நடக்கும்படி எங்களை உம்முடைய அன்பினால் மீட்டீர், இவ்வுலகத்திலிருந்து உம்முடைய அன்பினால் அழைக்கப்பட்ட அனைவரோடும் நாங்கள் ஐக்கியமாக இருக்கும்படி செய்தீர், அதற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.

கேள்வி:

  1. 8-ம் அத்தியாயத்தின் முதல் வாக்கியத்தின் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 12:57 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)