Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 118 (Paul Before Agrippa II)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)

12. இரண்டாம் அகிரிப்பாவிற்கும் அவனுடைய அரச பரிவாரங்களுக்கும் முன்பாக பவுல் (அப்போஸ்தலர் 25:13 - 26:32)


அப்போஸ்தலர் 26:16-23
16 இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். 17 உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, 18 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 19 ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை. 20 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். 21 இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம் பண்ணினார்கள். 22 ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். 23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.

இவ்வாறு கடிந்துரைக்கப்பட்ட சவுல் சோர்வடைந்து தன்னுடைய பாவங்களின் நினைவினால் நம்பிக்கை இழந்துவிட கிறிஸ்து அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர் உடனடியாக விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி பணிக்கப்பட்டார். அவர் தைரியமான முன்னேறிச் செல்லும்படியான கட்டளையையும் ஆதரவையும் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஏனெனில் கிறிஸ்து இந்த கடின மனதுடைய கொலைகாரனுக்கு காட்சியளித்தது, அவருக்குப் பாவ மன்னிப்பளிக்கவும் அவரைத் தம்முடைய பணிக்காக அழைத்து அனுப்பவுமே. இறையியல் கருத்துக்களைப் பற்றி விவாதம் செய்வதற்காக கிறிஸ்து பவுலை அழைக்கவில்லை. தான் எவ்வாறு உயிருள்ள ஆண்டவரால் சந்திக்கப்பட்டேன் என்பதை மற்றவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிதான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு மகிமை நிறைந்த கிறிஸ்துவே அவருடைய சாட்சியின் மையப்பொருளானார். அவர் யூதரிடத்திற்கும் புறவினத்து மக்களிடத்திற்கும் கிறிஸ்துவை எடுத்துச் செல்லும்போது கிறிஸ்து அவரை தம்முடைய தெய்வீக வல்லமையினால் நிரப்பி, அவருடன் கூட இருந்து அவரைப் பாதுகாப்பதாக வாக்களித்தார். ஆகவே பவுலுக்கு எதிராக சதி செய்து அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள் இறைவனுக்கே எதிராகச் செயல்படுகிறார்கள்.

கிறிஸ்துவை நீங்களும் பிரசங்கிக்க வேண்டும் என்ற அவருடைய அழைப்பை நீங்கள் கேட்கவில்லையா? நற்செய்தியில் நீங்கள் கிறிஸ்துவின் மகிமையைப் பார்க்கவில்லையா? அப்படியானால் 18-ம் வசனத்திலுள்ள ஆண்டவருடைய கட்டளையை எங்களோடு சேர்ந்து நீங்களும் படியுங்கள். அப்போது நீங்கள் கிறிஸ்துவின் நோக்கத்தையும் பிரசங்கத்தின் ஏழு அர்த்தங்களையும் அறிந்துகொள்வீர்கள்.

  1. உயிருள்ளவரும் உங்களோடு இருப்பவருமாகிய கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் பகிர்ந்துகொள்ளும் சாட்சியின் மூலமாக உங்களுடன் இருக்கும் மக்களின் குருடான மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும்.
  2. அப்பொழுது அவர்கள் உலகத்தின் ஒளியாகிய கர்த்தராகிய இயேசுவை அறிந்துகொண்டு, தங்கள் இருளான வாழ்வை விட்டு மனந்திரும்புவார்கள்.
  3. ஒவ்வொரு மனிதனும் பிசாசின் தீய வல்லமையாகிய சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறான். கிறிஸ்து மட்டுமே அவனுடைய ஆழ்மனதில் செயல்பட்டு தமது தெய்வீக வல்லமையினால் அவனை விடுவிக்க முடியும்.
  4. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை நம்புகிறவர்கள் இறைவனுடைய கோபத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து காக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பரிசுத்த இறைவனிடம் வந்து மகிழ்ச்சியோடு அவரைத் தொழுதுகொண்டு, அவருக்குச் சேவை செய்கிறார்கள்.
  5. நாம் நடைமுறையில் இறைவனோடு இணைக்கப்படுவதன் மூலமாகத்தான் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நமது இருதயங்கள் சுத்திகரிக்கப்படுகின்றன.
  6. பரிசுத்த ஆவியானவர் ஆயத்தம் செய்யப்பட்ட இருதயத்தில் வாழும்போது அவரே நமக்கு வரவிருக்கும் மகிமைக்கு ஆதாரமாயிருக்கிறார்.
  7. இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதன் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளாமல், தம்மிடத்தில் வருகிறவர்களுக்காக செயல்பட்டு, அவர்களை விடுவிக்கும் கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதால் பெற்றுக்கொள்கிறோம்.

அன்புள்ள வாசகரே, நீங்கள் தனிப்பட்ட முறையில் சாத்தானுடைய வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட இருதயத்தோடு கிறிஸ்துவுக்குச் சேவை செய்கிறீர்களா? நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கை செய்து அவற்றை விட்டு விட்டீர்களா? இப்போது கிறிஸ்துவின் ஒளியில் நடக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் சாட்சியின் மூலம் இன்னும் பலர் இந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள அவருடைய இந்த இரட்சிப்பைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லும்படி இறைவன் உங்களையும் அழைக்கிறார். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேளுங்கள்.

அகிரிப்பா அரசனைப் பார்த்து பவுல் சொன்னது இதுதான்: “கிறிஸ்து எனக்குக் காட்சி கொடுத்து, எனக்கு ஒப்புவித்த கட்டளை என்னை மேற்கொண்டது. மகிமையின் ஆண்டவருடைய கட்டளைக்கு நான் உடனடியாகக் கீழ்ப்படிந்தேன். கிறிஸ்துவை நான் சந்தித்ததுதான் என்னுடைய பணியில் தூண்டுகோலாக இருக்கிறது. இரட்சகரிடத்தில் மனந்திரும்பி நம்பிக்கை வையுங்கள் என்ற செய்தியை எருசலேமிலும் தமஸ்குவிலும் உலகெங்கும் நான் பிரசங்கிக்க வேண்டும். உங்கள் செத்த செயல்களை விட்டு மனந்திரும்பி, உயிருள்ள கடவுளிடம் திரும்புங்கள் என்றும் உங்கள் பெருமையை விட்டுவிட்டு பரிசுத்த ஆவியானவருடைய சித்தத்தினால் ஆண்டவருடைய சித்தத்தைச் செய்யுங்கள் என்றும் நான் தொடர்ந்து மக்களுக்கு அறிவிக்க வேண்டியிருக்கிறது. உங்கள் சுய கற்பனைகளில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டாம். மாயையான உங்கள் நீதியின் மேல் உங்கள் எதிர்காலத்தைக் கட்ட முயற்சிக்காதீர்கள். நீங்கள் பிசாசைப் போல மாறக்கூடிய அளவு பாவிகள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உங்கள் கரங்களை கிறிஸ்துவை நோக்கி நீட்டினால் அவர் உங்களை விடுவிப்பார். உங்கள் ஞானிகளும் சட்ட வல்லுனர்களும் இந்த இரட்சகரைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய தேவையில் இருக்கிறார்கள். பாவிகளும் குற்றவாளிகளும் தங்களுக்கு மனமாற்றமும் புதுவாழ்வும் தேவை என்பதை நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

சிலுவையில் அறையப்பட்டு உயிரோடு எழுந்த கிறிஸ்துவினால் மக்களுக்கு இரட்சிப்பு தேவை என்று பவுல் அறிவித்த காரணத்தினால் யூதர்கள் அவரை வெறுத்தார்கள். பவுல் மீது இந்த மத வெறியர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, தேவாலயத்தைத் தீட்டுப்படுத்துவதையோ, கலகத்தைத் தூண்டிவிடுவதையோ, நீதிச் சட்டத்தை மறுதலிப்பதையோ குறித்ததல்ல. பவுல் கிறிஸ்துவை நேசித்து அவருக்கு செயலூக்கத்தோடு சாட்சியிட்ட காரணத்தினால்தான் அவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கிறார்கள். அவர்கள் கொலைசெய்ய கிறிஸ்து இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று பவுல் கருதிய காரணத்தினால்தான் அவர்கள் அவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு எதிர்த்து நிற்கவில்லை என்றால் தாங்கள் இறைவனுடைய மகனையே கொலைசெய்ய குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்குமே.

தேவாலத்தில் பெருங்கூச்சலிட்ட மக்கள் கூட்டத்திடமிருந்து ஆண்டவராகிய இயேசு தம்முடைய பணியாளனைக் காப்பாற்றி அவரை அரசர்களுக்கும் ஆண்டிகளுக்கும் ஞானிகளுக்கும் கல்வி கற்காத பேதையருக்கும் சாட்சியிடும்படி நிறுத்தியிருக்கிறார். அவருடைய சாட்சி பழைய ஏற்பாட்டின் நீதிச்சட்டத்திற்கும் தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களுக்கும் முற்றிலும் ஒத்திருக்கிறது. இறைவனுடைய மகன் அரசியல் விடுதலையாளராக வரவில்லை, அவர் உலகத்தின் மக்களுடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கிற இறைவனுடைய ஆட்டுக்குட்டியாகவே வந்தார். இறைவனுடைய ஆவியினால் இறைவனாக இருந்த இயேசு மனிதனாகப் பிறந்ததன் மூலமாக இவ்வுலகத்தை இறைவனோடு ஒப்புரவாக்குகிறார். வேறு யாரும் இந்தப் பணியைச் செய்ய முடியாது. அவர் மரணத்தை மேற்கொண்டு, பாவத்தினுடைய அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்து, இறைவனுடைய கோபத்திலிருந்து நம்மை விலக்கிக் காத்த காரணத்தினால் அவர் எல்லாம்வல்ல இறைவன் என்பதை நிரூபித்திருக்கிறார். அதனால் இறைவன் தரும் விடுதலை யூதர்களுக்கு மட்டுமல்ல புறவினத்து மக்கள் அனைவருக்கும் உரியது. கிறிஸ்துவே வெற்றி வீரர். அவருடைய நற்செய்தி அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அதைத் தடைசெய்ய யாராலும் முடியாது. அவருடைய வெளிச்சம் இருளில் ஒளிருகிறது.

கேள்வி:

  1. நாம் கிறிஸ்துவைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற கட்டளையில் இருக்கும் ஏழு முக்கிய அம்சங்கள் யாவை?

அப்போஸ்தலர் 26:24-32
24 இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். 25 அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். 26 இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. 27 அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். 28 அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான். 29 அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 30 இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, 31 தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.

பவுல் தன்னுடைய முந்தைய வார்த்தைகள் மூலமாக ரோமர்கள் மற்றும் கிரேக்கர்களுடைய தெய்வங்கள் அனைத்தும் இருள் என்றும் இயேசு கிறிஸ்து மட்டுமே உலகத்தின் ஒளி என்றும் கூறுகிறார் என்பதை பெருமையுள்ள ஆளுனர் புரிந்துகொண்டார். இறந்துபோன ஒரு மனிதன் உலகத்தின் விடுதலையாளரானார் என்றும், அவர் சீசரைவிட பலமுள்ளவர் என்றும், இவ்வுலகத்தின் தெய்வங்கள் அனைத்தையும்விட அவரே பிரகாசமானவர் என்றும் இந்தக் கைதி சொல்லிய செய்தி மேட்டிமையான ஆளுனரால் ஏற்றுக்கொள்ள முடியாதாக இருந்தது. ஆகவே பெஸ்து அனைத்து மக்களுக்கும் முன்பாக சத்தமிட்டு, “பவுலே, நீ ஏன் உளறுகிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? நீ சட்டத்தைத் தொடர்ந்து தியானித்து, தொடர்ந்து ஜெப தபங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் உன்னுடைய கண்கள் இருளடைந்து விட்டனவா?” என்று கத்தினான்.

பரிசுத்த ஆவியினால் மட்டுமே எவரும் இயேசுவைக் கிறிஸ்து என்று சொல்ல முடியும் என்பதை பவுல் அறிந்திருந்த காரணத்தினால், ஆளுனரால் தன்னுடைய செய்தியைப் புரிந்துகொள்ள முடியாததைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. ஆகவே பவுல் ஆளுனரை நோக்கி: “நான் பயித்தியக்காரன் அல்ல. நான் சரியாக உண்மையைப் பற்றி தெளிவாகப் பேசுகிறேன். நான் ஆர்வக்கோளாறு காரணமாகவோ, பக்திப் பரவசத்தினாலோ இங்கு பேசவில்லை. உயிரோடிருக்கிறவரும் மகிமை நிறைந்தவருமாகிய கிறிஸ்துவைக் குறித்த உண்மையை உங்கள் நடுவில் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். மேலும் அவர் திடீரென்று, அகிரிப்பா அரசனை நோக்கி தான் பேசுகின்ற காரியங்களுக்கு அவரை சாட்சியாகக் கருதிப் பேசத் தொடங்கினார். நசரேயனாகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதை ஒவ்வொரு யூதனும் அறிந்திருந்தான். அவர் உயிரோடு எழும்பினார் என்பதற்கு கிறிஸ்தவர்கள் சாட்சியிடுகிறார்கள்.

பவுல் தன்னுடைய பரிவாரங்களுடன் அமர்ந்திருந்த பெருமையுள்ள அகிரிப்பாவைப் பார்த்துக் கேட்டார்: “தீர்க்கதரிசிகளினால் உரைக்கப்பட்ட நற்செய்தியை நீர் நம்புகிறீர்களா? கிறிஸ்து பாடுபட்டு மரணத்தை அனுபவித்து, நீதிச்சட்டத்தின்படி மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதை நீர் நம்புகிறீரா?”. அரசனுடைய இருதயம் நடுக்கங்கள் கொண்டது என்பதைப் பவுலால் கிரகிக்க முடிந்தது. பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருந்த சத்தியத்தை மறுதலிக்க அவர் விரும்பவில்லை. அதனால் அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அப்போது பவுல், “அகிரிப்பாவே, நீர் இதை நம்புகிறீர் என்று இப்போது நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறினார். பவுல் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். அரசனுடைய மனதின் எண்ணங்களை அறிந்தவராக அவருடைய விசுவாச அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் தயக்கத்தோடும் வெட்கத்தோடும் அந்த அரசன் பதிலுரைத்தான்: “நான் ஏறத்தாள ஒரு நம்பிக்கையாளனாக மாறிவிட்டேன். உன்னுடைய செய்தியை நீர் முடிக்கும்போது, நான் அதை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்கு நானும் பலியாகி விடுவேன்” என்றார்.

பவுல் இருதயத்தில் மகிழ்ச்சியடைந்தார். ஒரு நாட்டினுடைய அரசனின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதைப் பார்த்து அவர் ஆரவாரித்து: “நான் உண்மையில் சிறைக்கைதி அல்ல. நீங்களே பாவத்தின் அடிமைகளாயிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள் அவர் உங்களை விடுவிப்பார். நான் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தாலும் உண்மையில் விடுதலையுள்ளவனாக இருக்கிறேன். நீரும் உம்முடைய சகோதரியாகிய பெர்னிக்கேயாளும் ஆளுனரும் இங்கு கூடியிருக்கும் அதிகாரிகளும் செசரியாவிலுள்ள அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

பவுல் அவர்களைத் தன்னுடைய அன்பினால்தான் எதிர்கொண்டார். அவருடைய வாயிலிருந்து நெருப்புப் போன்ற வார்த்தைகள் புறப்பட்டு வந்தாலும் அவருடைய கண்களிலிருந்து இரக்கத்தின் ஒளி பிரகாசித்தது. அவர் பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்தவராகக் காணப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அரசன் எழுந்து நின்றான். பவுலுக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. நற்செய்தியின் வல்லமையினால் அவன் தாக்கப்பட்டதால் அவனுடைய மனசாட்சி அசைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்திருந்த அனைவரும் பவுல் நீதியுள்ள மனிதன் என்று அறிந்து அவர் குற்றமற்றவர் என்று சாட்சியிட்டார்கள். குற்றவாளியே நியாய விசாரணை செய்கிறவர்களை குற்றவாளிகளாகத் தீர்த்த இந்த வித்தியாசமான நீதிவிசாரணை மன்றத்திலிருந்து சென்ற அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருந்தார்கள். காரணம் அவர்களுடைய இருயதம் இறைவனுடைய வார்த்தையினால் தாக்கப்பட்டிருந்தது. இறுதியாக நடைபெற்ற நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட அரசன்: “இந்த மனிதனை விடுதலை செய்யலாம். ஆனால் இவனே சீசரிடத்தில் விசாரிக்கப்படும்படி செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்ட காரணத்தினால், நாம் இவனை ரோமுக்கு அனுப்ப வேண்டும்” என்றார். பவுல் சீசருக்கு அபயமிடவில்லை என்றால் அவரை விடுவிக்கலாம் என்று அரசவை முடிவெடுக்கக் காரணம் யூதர்களுடைய மேல்மட்ட ஆலோசனைச் சங்கம் அவரை விடுவிப்பதை ஏற்றுக்கொள்ளாது என்பதுதான். ஆளுனராகிய பெஸ்து மக்கள் பிரதிநிதிகளுடைய முடிவுக்கு இசைந்து போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அதன் விளைவாக பவுல் உயிருள்ள பிதாவினுடைய சித்தப்படி ரோமாபுரிச் சிறையில் இருக்க நேர்ந்தது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நீரே உயிருள்ள இறைவனாகவும் அனைத்து மனிதர்களையும் விடுவிப்பவராகவும் இருப்பதற்காக உம்மைத் துதிக்கிறோம். அனைத்து மக்களும் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படவும், சாத்தானுடைய தீவிர வல்லமையிலிருந்து காக்கப்படவும் தக்கதாக நாங்கள் உம்முடைய சத்தியத்தையும் நீதியையும் அனைத்து இன மக்களுக்கும் தெரியப்படுத்த எங்களுக்கு உதவிசெய்யும். தாழ்மையோடும் தைரியத்தோடும் உம்முடைய மாபெரும் நற்செய்தியை அறிவிக்கிறவர்களாக நாங்கள் முன்னேறிச் செல்லும்படி உம்முடைய பரிசுத்த ஆவியானவர் தரும் பொறுமையினாலும் வைராக்கியத்தினாலும் எங்களை நிறைத்தருளும்.

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:47 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)