Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 098 (Christ predicts the joy of the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

5. உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை கிறிஸ்து சீஷர்களுக்கு முன்னறிவிக்கிறார் (யோவான் 16:16-24)


யோவான் 16:16-19
16 நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். 17 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி: 18 கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள். 19 அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?

இந்த சாயங்காலத்திலேயே தம்முடைய பிரிவினையைக் குறித்து இயேசு மூன்று முறை தமது சீஷர்களிடம் பேசினார். இயேசு அவர்களிடம் இவ்விதமாக திரும்பத் திரும்பப் பேசுவது சீஷர்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவர்கள் அவருடைய நோக்கத்தை அறியவில்லை. ஆனால் இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும் தம்முடைய வருகையைக் குறித்தும் அவர்களிடம் பேசினார். அவர் உயிர்த்தெழுந்து தம்முடைய பிதாவைச் சந்தித்துவிட்டு, தமது உயிர்த்தெழுந்து சரீரத்துடன் சுவரை ஊடுருவி சீஷர்களைக் காண வந்தார்.

அவர்கள் ஒலிவ மலையில் ஏறிச் சென்றபோது அவருடைய சீஷர்களுக்கு தமது உயிர்த்தெழுதலைப் பற்றி அவர் முன்னறிவித்தவைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. முன்பு அவர் அவர்களைவிட்டுப் போகப்போகும் திட்டத்தைக் குறித்துப் பேசினார். இப்போது அவர் உண்மையில் நடைபெறப்போகும் பிரிவினையைப் பற்றிப் பேசுகிறார். இந்தத் திட்டங்களும் நோக்கங்களும் அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை அவர்கள் அறிக்கை செய்தார்கள். அவர்கள் வேதனையும் குழப்பமும் அடைந்தார்கள். அவர் பரலோகத்திற்குப் போகப்போகிறார் என்பதால் துக்கப்பட்டார்கள்.

யோவான் 16:20-23
20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். 21 ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். 22 அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். 23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

இயேசு சீஷர்கள் பேசுவதைக் கேட்காவிட்டாலும், அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தார். அவர்களைத் தேற்றுவதற்குப் பதிலாக இன்னும் கண்ணீரும், வேதனையும், புலம்பலும் அவர்களுடைய வாழ்வை ஆட்டம்காணச் செய்யும் என்பதை அவர்களுக்கு வலியுறுத்திக் கூறினார். அது ஒரு நல்ல அரசனுடைய மரணத்தைப் போலக் காணப்பட்டது. அப்படிப்பட்ட தருணங்களில் மக்கள துக்கப்பட்டு நம்பிக்கை இழக்கிறார்கள். சீஷர்கள் துக்கப்பட்டபோது அவர்களுடைய எதிரிகள் மகிழ்வுற்றிருப்பார்கள். இங்கே எதிரிகள் என்று இயேசு குறிப்பிடும்போது உலகத்தைக் குறிக்கிறார், வெறுமனே யூதமதத் தலைவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. கிறிஸ்துவுக்கு வெளியில் இருக்கும் அனைவரும் இழந்துபோன உலகத்தைச் சேர்ந்தவர்கள். அவர் இறைவனை விட்டுத் தூரமானவர்களும் பரிசுத்த ஆவிக்கு எதிராக கலகம் செய்பவர்களுமாயிருக்கிறார்கள்.

மேலும் சீஷர்கள் பெரிய மகிழ்ச்சியைக் கண்டுகொள்வார்கள் என்றும் சொன்னார். ஒரு தாயின் பேறுகால வலியைப்போல கண்ணீரும் புலம்பலும் சிறிதுகாலம் மட்டுமே இருக்கும். தாங்கள் பெற்றெடுக்கப்போகும் குழந்தையை நினைத்து தாய்மார் இந்த பிரசவ வலியை பெரிதாகக் கருதுவதில்லை.

இயேசு உயிரோடு எழுந்தபோது சீஷர்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. அவர்களுடைய குற்றங்களைக் குறித்த காரியங்கள் தீர்க்கப்பட்டது; மரணம் மேற்கொள்ளப்பட்டது; சாத்தானுடைய ஆளுகை வீழ்த்தப்பட்டது; இறைவனுடைய கோபம் அவர்கள் மீதிருந்து அகற்றப்பட்டது. அவர்களுடைய மறுதலிப்புகளோ, பயங்களோ, அவிசுவாசங்களோ கிறிஸ்துவின் வருகையையோ அவர்களுடைய பாவமன்னிப்பையோ தடைசெய்ய முடியாது. கர்த்தர் அவர்களைக் காப்பதால் யூதர்களால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அவர்களைக் கலங்கடித்துக்கொண்டிருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பதில் கிடைத்தது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் அவர்களுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்தது.

யோவான் 16:24
24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.

இயேசு தம்முடைய பிரிவுபசாரப் பிரசங்கத்தின் ஆரம்பத்தில் சீஷர்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது பிதாவினுடைய நாமத்தின் மகிமைக்காக அவர்களுக்கு அருளப்படும் என்று சொன்னார் (யோவான் 14:13). அநேகர் இந்தத் திரித்துவ இறைவனுடைய ஐக்கியத்திற்குள் வரவேண்டும் என்று இயேசு விரும்புவதால் இந்த விண்ணப்பங்கள் திருச்சபை கட்டப்படுவதையும் நற்செய்தி நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆகவே அவர், “முதலாவது இறைவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். பரலோக காரியங்களுக்கும் இவ்வுலக காரியங்களுக்கும் இறைவன் பதில்தருவார் என்று இயேசு வாக்களித்தாலும், இவ்வுலகத்திற்குரிய காரியங்களிலும் பரலோக காரியங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

உங்கள் இருதயத்தின் கேள்விகளும் கோரிக்கைகளும் என்ன? உங்களுக்கு பணமா, சுகமா அல்லது வெற்றியா எது வேண்டும்? உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்களா? இறைவன் ஒருவர் இருக்கிறாரா? அவர் இரக்கமுள்ளவரா? போன்ற கேள்விகள் உங்களைத் தாக்குகிறதா? உங்கள் குற்ற உணர்வின் பாரம் உங்களை அழுத்துகிறதா? சோதனைகள், அழிவுகள், துயரங்களினால் பாடுபடுகிறீர்களா? தீய ஆவிகளைக் கண்டு நீங்கள் நடுங்குகிறீர்களா? இயேசு வரவேண்டும் என்றும் அவர் தம்முடைய சமாதானத்தின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை வேதனைப்படுத்தும் கேள்வி எது? நீங்கள் மேலோட்டமானவரா அல்லது ஆழ்ந்து சிந்திப்பவரா? நீங்கள் நல்லதே நடக்கும் என்று நினைப்பவரா அல்லது எல்லாமே தீமையாகத்தான் நடக்கும் என்று நம்புபவரா? நீங்கள் சீக்கிரமாகக் காயப்பட்டு விடுகிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்ப வேண்டும் என்ற நீங்கள் கேட்கிறீர்களா?

உங்களுடைய ஒவ்வொரு பிரச்சனையையும் விண்ணப்பத்தில் இறைவனிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் பரலோக பிதாவிடம் உங்கள் மனதைத் திறந்து பேசுங்கள். விண்ணப்பத்தில் வீண் வார்த்தைகளை அலப்பாமல், நீங்கள் கேட்க வேண்டிய காரியம் என்ன என்பதைக் கவனமாக சிந்தியுங்கள். முதலில் இயேசு உங்களுக்கு அருளிய வரங்களை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துங்கள். நன்றி செலுத்துவதே நமக்கு உகந்தது. உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். ஏனெனில் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றில் நாம் குறைவுள்ளவர்கள். நீங்கள் அறிக்கை செய்த பாவங்களை அவர் உங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்றும் உங்களைக் குறித்த அவருடைய விருப்பம் என்ன என்பதை அவர் உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேளுங்கள். அப்போதுதான் உங்களுக்குத் தீமையான காரியங்களுக்காக நீங்கள் விண்ணப்பிக்க மாட்டீர்கள். அவருடைய கிருபையை நாடி அவர் உங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நம்புங்கள். இறைவன் அன்பாகவே இருக்கிறார் என்பதையும் அவர் மற்ற அனைவரையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதையும் ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம். உங்கள் நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் அதே கிருபையை அவர் வழங்கும்படியாக அவர்களுக்காக விண்ணப்பியுங்கள். நீங்கள் மட்டும்தான் தேவையுள்ளவர் என்று கருதாதீர்கள். அனைவருமே பாடுகளை அனுபவிக்கிறார்கள். உங்கள் கேள்விகளை தைரியமாகவும் நேரடியாகவும் கிறிஸ்துவிடம் கேளுங்கள். உங்கள் பிரச்சனைகளைச் சுற்றி நன்றிகளையும் பாவ அறிக்கைகளையும் கோர்த்து ஒரு மாலையை உருவாக்கி மற்றவர்களுக்கான விண்ணப்பத்துடன் சேர்த்து அவருக்கு அணிவியுங்கள். அப்போது இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பத்தின் உண்மையான வல்லமையை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

உண்மையான விண்ணப்பம் என்பது வேண்டுதல்களோடும் நன்றியறிதலோடும் ஆராதனையோடும் இறைவனோடு உரையாடுதலாகும். அப்படிப்பட்ட உரையாடல்களில் காரியங்களைத் திரும்பத்திரும்பக் கூறி அதை வளர்க்க வேண்டாம். உங்கள் பெற்றோரிடத்தில் எவ்வளவு சுருக்கமாக உங்கள் கோரிக்கைகளை முன்வைப்பீர்களோ அவ்வாறே சுருக்கமாகப் பேசுங்கள். “கர்த்தாவே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று முணுமுணுத்த ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டான் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். பரலோக பிதா லாசருவை எழுப்ப வேண்டும் என்று எளிமையாகக் கேட்ட மாத்திரத்திலேயே லாசரு உயிருடன் எழுப்பப்பட்டான். விசுவாசம்தான் இரட்சிப்பையும் ஆதரவையும் வெற்றியையும் பெற்றுத்தருகிறது. தைரியமாக நன்றியுணர்வுடன் அவருடைய கிருபைக்காக விண்ணப்பியுங்கள். நீங்கள் அவருடைய பிள்ளை என்று அழைக்கப்படுகிறீர்கள். ஒரு பிள்ளையைப் போல சந்தோஷத்துடன் எதையும் மறைக்காமல் அவரிடம் பேசுங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு கிறிஸ்து ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் விண்ணப்பங்கள் அல்ல அதற்கான முதன்மையான காரணம். பிதாவும் குமாரனும் உங்களை ஆசீர்வதிக்கச் சித்தங்கொண்டுள்ளனர். உங்களுக்கு எது முக்கியம், அன்பளிப்பா, அன்பளிப்பைக் கொடுக்கிறவரா? கர்த்தர் உங்களுக்கு நிறைவைக் கொடுக்கிறார், ஆயினும் அவரே நிறைவாயிருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நாம் குறைவுள்ளவர்கள் என்றும் இயேசு நம்முடைய விண்ணப்பங்களுக்குப் பதில் தருகிறார் என்றும் நாம் அறியும்போது நமது மகிழ்ச்சி முழுமையடைகிறது. அவர் மற்றவர்களையும் ஆசீர்வதித்து நம்முடைய விண்ணப்பங்களினால் அவர்களை மீட்கிறார். இயேசு மேகங்களில் வருவதைக் காணும்போது நம்முடைய மகிழ்ச்சி பேரானந்தமாக மாறும். அப்போது நம்முடைய சந்தோஷத்தை விவரிக்க முடியாது. கர்த்தராகிய இயேசு அனைவரும் காணும்படி வரவேண்டும் என்பது உங்கள் விண்ணப்பத்தின் முக்கிய வேண்டுதலாயிருக்கிறதா?

விண்ணப்பம்: பிதாவாகிய இறைவனே, உம்முடைய குமாரனை எங்கள் இரட்சகராக நீர் அனுப்பியதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இவ்வுலக கவலைகளை மறந்து சிலுவையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள எங்களுக்கு உதவும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடத்தில் எளிமையாகப் பேசுவதைப்போல நாங்கள் பொறுப்புடன் விண்ணப்பிக்கும்படி நீர் எங்களை விடுவித்தருளும். தங்கள் பாவங்களினால் நிறைந்து, தமது மூடத்தனத்தினாலும் வெறுப்பினாலும் இருதயத்தில் வாதிக்கப்படும் எங்கள் எதிரிகளையும் நீர் விடுவியும். எங்களோடுள்ள உமது பிரசன்னத்தை அவர்களும் அனுபவிக்கும்படி நீர் அவர்களுடைய கட்டுகளை அவிழ்த்துவிடும்.

கேள்வி:

  1. இயேசுவின் நாமத்தில் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்கு பிதாவாகிய இறைவன் எவ்வாறு பதிலளிக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)