Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 097 (The Holy Spirit reveals history's developments)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

4. வரலாற்றின் முக்கியமான வளர்ச்சியைப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார் (யோவான் 16:4-15)


யோவான் 16:12-13
12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

இயேசு சகலத்தையும் அறிந்தவர். அவர் தமக்குப் பிரியமான சீஷர்களுக்கும் பரலோகத்தின் இரகசியங்களையும் எதிர்காலத்தையும் பற்றி தெரியப்படுத்த விரும்பினார். ஆனால் அவர்களுடைய ஆத்துமாக்களும் சிந்தைகளும் அப்படிப்பட்ட ஆழ்ந்த சத்தியங்களை முழுமையாக புரிந்துகொள்ள இயலாதவைகளாயிருந்தன. பரிசுத்த ஆவியானவருடைய ஒளியூட்டுதல் நமக்கு அருளப்படாவிட்டால் ஒரே நேரத்தில் இயேசு எப்படி பிதாவின் வலதுபக்கத்திலும் நம்முடைய இருதயத்திலும் வாழமுடியும் என்பதை நம்முடைய தர்க்கரீதியான அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. அதுபோலவே ஒரே இறைவன் மூன்று நபர்களில் வாழ்கிறார் என்ற உண்மையையும் இயற்கையாக நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மனித மூளையால் இதைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இயலாமையில் நமக்குத் துணைசெய்து, நம்முடைய சிந்தைகளுக்கு ஒளியூட்டுகிறார். அவர் எதிர்காலத்தின் இரகசியங்களையும் மறைக்கப்பட்ட இருதயத்தின் நினைவுகளையும் நமக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறார், ஏனெனில் அவர் பரிசுத்த திரித்துவத்தின் இரகசியத்தை அறிந்திருக்கிறார்.

சத்திய ஆவியானவர் வந்து அவர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என்று கிறிஸ்து ஏற்கனவே சொல்லியிருந்தார். சத்தியம் என்றால் என்ன? இயேசு உலகத்திலுள்ள தகவல்களைப் பற்றி விவரிக்கும் விதமாக அவர் “சத்தியங்கள்” என்று பன்மையில் பேசாமல் “நானே சத்தியம்” என்று ஒருமையில் பேசினார். பரிசுத்த ஆவியானவர் வந்து நமக்குக் கொடுக்கப்போகும் வெளிப்பாடானது நமது தன்மையிலும் செயலிலும் கிறிஸ்துவின் முழுமைக்குள் நம்மை நடத்துவதாக இருக்கும். இயேசு ஒரு சாதாரண மனிதனல்ல என்பதால் அவர் பிதாவிலும் பிதா அவரிலும் இருக்கிறார்கள். சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தப்படுதல் என்பது பிதாவைக் குறித்த அறிவையும் அவரோடு நிலைத்திருந்து என்றென்றும் அவரோடு வாழ்வதைக் குறிக்கிறது. இந்த நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள “சத்தியம்” என்ற வார்த்தை சட்டரீதியான, தர்க்கரீதியான அல்லது ஒழுக்கரீதியான உண்மை ஆகியவற்றை மட்டும் குறிக்காமல், பரந்த நிலையில் குறிப்பான மற்றும் பொதுவான அனைத்து உண்மைகளையும் உள்ளடக்கும் வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாம் பரிசுத்த திரித்துவ இறைவனை அறியும்படியாகவும் அவருடைய அற்புதமான வல்லமைகளை அனுபவிக்கும்படியாகவும் பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பரலோக சத்தியங்களுக்குள் நம்மை வழிநடத்துகிறார்.

இவையனைத்திலும் பரிசுத்த ஆவியானவர் பேசுகிற, கவனிக்கிற, சுயாதீன சித்தமுள்ள ஒரு சுதந்திரமான நபராயிருக்கிறார். ஆனால் அவர் அதேவேளையில் பிதாவின் சித்தமில்லாமல் எதையும் செய்கிறதில்லை. அவர் புதிய சிந்தனைகளை முன்வைக்காமல் பிதா அவருக்குச் சொல்லியவைகளையே நமக்கு எடுத்துச் சொல்லுகிறார். பரிசுத்த திரித்துவத்தைப் பொறுத்தவரை அன்பினால் ஏற்படும் சுதந்திரத்தில் மூவரும் ஒருவருக்கொருவர் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவ்வாறு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய திருச்சபையானது அவருடைய வருகையில் பரிபூரணமானதாக நிற்கும்படி அதைக் கட்டியெழுப்ப விரும்புகிறார்.

யோவான் 16:14-15
14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

பரிசுத்த ஆவியானவரின் பணிக்குப் பின்னாலுள்ள நோக்கம் கிறிஸ்துவின் மகிமையே. இயேசு எவ்விதமாக தம்மை வெறுத்து அனைத்து மகிமையையும் பிதாவுக்கே செலுத்தினாரோ, அதேபோல பரிசுத்த ஆவியானவரும் தம்மை மகிமைப்படுத்தாமல் தம்முடைய அனைத்துச் செயல்களிலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். இதன் மூலம் நாம் நம்முடைய அனுபவங்கள், வெற்றிகள் அல்லது செயல்களைப் பற்றிப் பேசாமல், இரட்சகராகிய இயேசுவை மட்டுமே மகிமைப்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். நம்முடைய மனமாற்றம் அல்ல, இயேசுவின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்கள் கழுவப்படுவதே முக்கியமானது. நம்மையே தமக்காக விலைகொடுத்து வாங்கிய இயேசுவை மகிமைப்படுத்துவதே பரிசுத்த ஆவியானவரின் அசைவுகளுக்கும் வல்லமைகளுக்குமுள்ள ஒரே நோக்கமாகும். சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்து அப்போஸ்தலர்கள் சாட்சிகொடுத்தபோது, அவர்களுடைய சாட்சியின் மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் தானாக எதையும் செய்யாமல், இயேசு வார்த்தையிலும் செயலிலும் எதை ஆரம்பித்தாரோ அதை நிறைவேற்றி முடிக்கிறார். அவர் இயேசுவின் வார்த்தைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, அவருடைய ஜீவனை அவர்களில் தெளிவுபடுத்துகிறார். அவர்கள் தங்கள் இரட்சகரில் ஊன்றப்பட்டவர்களாக அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்கிறார். பரிசுத்த திரித்துவத்தின் நபர்களுக்கிடையில் எப்போதும் இருக்கும் ஒரு உறவை நாம் தூரத்திலிருந்து காண்கிறோம். ஒருவர் தம்முடைய மகிமையை ஒருபோதும் நாடாமல் எப்போதும் மற்றவர்களுடைய மகிமையை நாடுகின்றனர்.

இயேசு தம்முடைய ஊழிய காலத்தில் தாழ்மையுள்ளவராக, “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்று சொன்னார். ஆனால் தம்முடைய சீஷர்களை விட்டுப் பிரிந்துபோகும்போது, “வானத்திலும் பூமியிலும் எனக்குச் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். ஏனெனில் அவர் பிதாவுடன் சேர்ந்து அனைத்தையும் படைத்தவர். பிள்ளைகள் தகப்பனுக்கு உரியவர்களாகவும் தகப்பன் பிள்ளைகளுக்கு உரியவர்களாகவும் இருப்பதைப் போல, பிதா குமாரனுக்கு உரியவராயிருக்கிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, சிலுவையில் நீர் எங்களுக்காகப் பலியாகி பாவத்தின் பாரத்தை நீக்கினீர். உம்முடைய அளவற்ற அன்புக்காக உமக்கு நன்றி. உம்முடைய பலியையும் உயிர்த்தெழுதலையும் எங்கள் வாழ்க்கை மகிமைப்படுத்தத்தக்கதாக உம்முடைய பரிசுத்த ஆவியானவரினால் எங்களை நிறைத்தருளும். உம்முடைய சத்தியத்தின் நற்பண்புகளில் நடந்துகொள்ளத்தக்கதாக நீர் எங்களை சோமபேறித்தனம், மாய்மாலம், பெருமை ஆகியவற்றிலிருந்து விடுவியும்.

கேள்வி:

  1. உலகத்தின் மாற்றத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)