Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 087 (The Holy Trinity descends on believers)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
இ - மேலறையில் பிரிவுபசாரப் பிரசங்கம் (யோவான் 14:1-31)

2. பரிசுத்த திரித்துவம் தேற்றரவாளன் மூலமாக விசுவாசிகளில் இறங்குகிறார்கள் (யோவான் 14:12–25)


யோவான் 14:15
15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

நற்செய்திப்பணி கல்வாரிக்கு நன்றி செலுத்தும்பணியாகும். யார் நற்செய்திப் பணியைச் செய்யவில்லையோ அவர்கள் கிறிஸ்துவின் விடுதலையை அறியவில்லை. உங்களுடைய விண்ணப்பங்களும் சாட்சிகளும் கனியற்றதாக இருக்குமானால், நீங்கள் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கிறீர்களா அல்லது உங்களுடைய பாவங்கள் ஆசீர்வாதத்தைத் தடைசெய்கிறதா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். மற்றவர்களின் ஆசீர்வாதத்திற்குத் தடையாயிருக்கிற உங்கள் குறைகளை அவரிடம் அறிக்கை செய்யுங்கள். கர்த்தர் நமக்கு எண்ணற்ற கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். உங்கள் எதிரிகளை நேசியுங்கள். நீங்கள் சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து விண்ணப்பம் செய்யுங்கள். உங்கள் பரலோக பிதா பூரணராயிருக்கிறதுபோல நீங்களும் பூரணராயிருங்கள். வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். இந்தக் கட்டளைகள் அனைத்தும் “நான் உங்களை நேசிப்பதைப் போல நீங்களும் ஒருவரையொருவர் நேசியுங்கள்” என்ற கட்டளையில் அடங்கியிருக்கிறது. இந்தக் கட்டளைகள் நமக்குப் பாரமானவைகள் அல்ல. அவை நம்முடைய வாழ்க்கையின் உதவியாகவும் விசுவாசத்திற்கும் அன்பிற்கும் பாலமாகவும் அமைகிறது.

யார் கிறிஸ்துவின் விடுதலையைப் பெற்றிருக்கிறானோ அவன் சுயத்திற்கு சேவைசெய்யும்படி வாழாமல் இரட்சகராகிய கிறிஸ்துவுக்குச் சேவை செய்யும்படி வாழுவான்.

யோவான் 14:16-17
16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

ஒருவன் தன்னுடைய சொந்த முயற்சியினால் இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ள நினைத்தால் அவனால் அது முடியாது. அந்தக் காரணத்திற்காகத்தான் இயேசு பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அனுப்ப வேண்டும் என்று பரிந்துபேசுகிறார். அவருக்குப் பல்வேறு பணிகள் இருக்கிறது. அவர் சத்திய ஆவியாக நம்முடைய பாவத்தின் அளவைக் காண்பிக்கிறார். அதன்பிறகு சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை நமக்கு முன்பாகக் காண்பித்து, நம்முடைய பாவங்களை மன்னிக்கும் தெய்வீக குமாரன் அவரே என்பதை உறுதிசெய்கிறார். கிருபையினால் அவர் நம்மை இறைவனுக்கு முன்பாக நீதிமான்களாக்குகிறார். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவரே நமக்கு இரண்டாம் பிறப்பைக் கொடுக்கிறார். அவர் நம்முடைய வாய்களைத் திறந்து இறைவனை பிதாவே என்று அழைக்கச் செய்கிறார். இந்த புத்திர சுவிகாரத்தின் ஆவியினால் நாம் உண்மையில் இறைவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிசெய்துகொள்கிறோம். இறுதியாக அவர் நமக்கு ஆதரவாகப் பேசுபவராக நம்மைப் பாதுகாக்கிறார். சாத்தானுடைய பொய்கள் நம்முடைய காதுகளில் தொனித்துக்கொண்டிருந்தாலும் நமது இரட்சிப்பு முழுமையானது என்று நமக்குப் பின்னாக இருந்து நமக்கு உறுதிப்படுத்துகிறார். நம்முடைய போராட்டங்களிலோ இவ்வுலகத்திலுள்ள திருப்திகளிலோ நாம் உறுதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. இயேசு அனுப்பும் தேற்றரவாளனே நமக்கு அந்த நிச்சயத்தைக் கொடுக்கிறார்.

எந்த ஒரு மனிதனும், அவன் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்தாலும், கவிஞனாக இருந்தாலும், தீர்க்கதரிசியாக இருந்தாலும் அவன் இயற்கையாக பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்தப் பரிசுத்த ஆவி கொடுக்கப்படுகிறார். இயேசுவை நேசிக்காதவர்கள், அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வதில்லை. ஆனால் இயேசுவை நேசித்து அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்பவர்கள் நடைமுறையில் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் இருந்தால் நம்முடைய பெலவீனத்திலும் நாம் இறைவனுடைய பெலனை அனுபவிப்போம். மரணத்திலோ, நியாயத்தீர்ப்பிலோ இந்தத் தேற்றரவாளன் உங்களைக் கைவிடமாட்டார், ஏனெனில் அவர் நித்தியமானவர்.

யோவான் 14:18-20
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். 19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். 20 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

காட்டிக்கொடுப்பவன் வெளியே சென்றபிறகு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து தான் சீக்கிரமாக அவர்களை விட்டுச் செல்லப் போவதாகவும் அவர் செல்லும் இடத்திற்கு அவர்களால் பின்பற்றிச் செல்ல முடியாது என்றும் கூறுகிறார். ஆனாலும் அவர் அவர்களிடத்தில் திரும்பி வருவதாக வாக்களிக்கிறார். அவர்களுடைய பயத்தைத் கருத்தில்கொண்டு இயேசு சொன்ன இந்த வார்த்தைகளுக்கு இரண்டு பொருளுண்டு: முதலாவது, கர்த்தர் ஆவியானவரில் இருப்பதால் இது ஆவியானவரின் வருகையைக் குறிக்கிறது. இரண்டாவதாக காலத்தின் முடிவில் நிகழவிருக்கும் இரண்டாம் வருகையைக் குறிக்கிறது. இந்த இரண்டு காரணங்களுக்காக அவர் அவர்களைவிட்டு தம்முடைய பிதாவினிடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பிரிவில்லாமல் பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் வந்திருக்க முடியாது.

இந்த ஆவியானவரே நம்முடைய கண்களையும் இருதயத்தையும் உடனடியாகத் திறக்கிறவர். இயேசு மற்ற மனிதர்களைப் போல தம்முடைய மரணத்திற்குப் பிறகு தான் வைக்கப்பட்ட கல்லறையிலேயே தங்கிவிடாமல் உயிரோடு எழுந்து இன்று பிதாவுடன் இருக்கிறார். இந்த அண்டசராசரத்திற்கும் நம்முடைய இரட்சிப்புக்கும் ஆதாரமாயிருப்பது அவருடைய ஜீவனே. நாமும் விசுவாசத்தினாலே மரணத்தை மேற்கொண்டு கிறிஸ்துவில் ஒரு நீதியின் வாழ்க்கையை நடத்தும்படி, அவர் மரணத்தை வென்று ஜீவனை நமக்குக் கொடுத்திருக்கிறார். நம்முடைய மார்க்கம் முழுவதும் ஜீவ நம்பிக்கையின் மார்க்கமாகும். நம்மைத் தேற்றும் உண்மையான ஆவியானவர் இறைவனுடைய ஆவியானவராயிருந்து, நம்மில் வந்து வாசம்பண்ணி, குமாரன் பிதாவிலும், பிதா குமாரனிலும் பரிபூரண ஐக்கியத்திலிருப்பதை நமக்கு உணர்த்துகிறார். பரிசுத்த திரித்துவத்தைக் குறித்த அறிவு என்பது கணக்குப் பாடத்தைப் புரிந்துகொள்வதைப் போன்றதல்ல. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் வந்து வாழ்ந்து, குமாரன் பிதாவில் இணைந்திருப்பதைப்போல நம்மையும் பிதாவுடன் இணைக்கிறார். இந்த இரகசியங்கள் மனிதர்களாக நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது.

இயேசு நம்மில் தனியாக வந்து வாசம்செய்வேன் என்று குறிப்பிடாமல், “நாங்கள் வந்து வாசம்பண்ணுவோம்” என்று பன்மையில் குறிப்பிடுகிறார். ஒரு தனிப்பட்ட கிறிஸ்தவனில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுவதோடு மட்டுமன்றி, அந்த கிறிஸ்தவன் ஆவிக்குரிய மாளிகையில் ஒரு ஜீவனுள்ள கல்லாக இருக்கிறான். அனைத்து விசுவாசிகளும் அந்த ஆலயத்தில் பங்கடைகிறார்கள். இந்த வாக்குத்தத்தம் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளது: “நீங்கள் என்னிலும் நான் உங்களிலும்” விசுவாசிகளின் ஐக்கியத்தில்தான் இயேசு தம்மை வெளிப்படுத்துகிறார். “நான் எங்களை நேசிப்பதைப் போல நீங்களும் ஒருவரையொருவர் நேசியுங்கள்” என்ற கட்டளையுடன் இயேசு இந்த வாக்குத்தத்தத்தை நிறைவு செய்வதைக் கவனித்தீர்களா? இறைவனுடைய முழுமையை நிரப்பப்போவது நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துவிடம் இணைக்கப்படுகிறோம்.

விண்ணப்பம்: பரிசுத்த தேவ ஆட்டுக்குட்டியே, உம்முடைய மரணத்தினால் நாங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருப்பதால் நாங்கள் உமக்கு முன்பாகப் பணிகிறோம். எங்களுடைய அற்ப விசுவாசத்தையும் அறியாமையையும் மன்னியும் அப்போது உமக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தடை நீங்கிப்போகும். எங்கள் போராட்டங்கள் அனைத்திலும் நாங்கள் உம்மைக் கண்டு, அந்த மேன்மையான காட்சியிலேயே நாங்கள் வாழட்டும். எங்களை நித்தியத்திற்கும் ஒற்றுமையாகக் காத்துக்கொள்ள வல்லவராகிய சத்திய ஆவியாகிற தேற்றரவாளன் வந்துவிட்டார் என்பதற்காக உமக்கு நன்றி.

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயங்களாக இயேசு குறிப்பிடுபவை யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:55 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)