Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 065 (Jesus reveals himself to the healed one)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
2. பிறவிக் குருடனைக் குணமாக்குதல் (யோவான் 9:1-41)

இ) குணமாக்கப்பட்டவனுக்கு இயேசு தன்னை இறைமைந்தனாகத் தன்னை வெளிப்படுத்துகிறார் (யோவான் 9:35–41)


யோவான் 9:35-38
35 அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். 36 அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். 37 இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே, பேசுகிறவர் அவர்தான் என்றார். 38 உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

இந்த ஆறுதலளிக்கும் கதையை நாம் வாசிக்கிறோம். குணமாக்கப்பட்ட அந்த மனிதன் தள்ளிவைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைத் தேடி, அவனுடைய துயர நேரத்தில் அவனைக் கண்டு விசாரித்தார். கிறிஸ்துவின் நிமித்தமாக தங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரிக்கப்பட்டுள்ள விசுவாசிகள் ஒவ்வொருவருக்கும் இது ஒரு ஆறுதலான காரியம். நீங்கள் அந்நிலையில் இருப்பீர்களாயின், இயேசு உங்களுடைய அழுகையைக் கேட்டு, உங்களிடத்தில் வருவார், அவர் உங்களை விட்டுவிட மாட்டார் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். உங்கள் மக்களை நீங்கள் நம்பாதீர்கள். அப்படி நம்பினால் ஏமாந்து போவீர்கள். இயேசுவை மட்டுமே நம்புங்கள். வானத்திலும் பூமியிலும் நீங்கள் நம்பத் தகுந்த ஒரே நபர் அவர் மட்டுமே. அவர் உங்களை நேசிக்கிறார்.

அதன்பிறகு இயேசு, அந்த வாலிபனிடம் முக்கியமான கேள்வியைக் கேட்கிறார். “இறைவனுடைய மகனும், மனித குமாரனுமாயிருக்கிறவரை நீ விசுவாசிக்கிறாயா?” அந்த வாலிபன் பழைய ஏற்பாட்டின் தானியேல் 7:13-14ஐ அறிந்திருந்தான் என்று இயேசுவுக்குத் தெரியும். மனித குமாரனே பூமியை நியாயம் தீர்ப்பவரும் இறைமகனும் ஆவார் என்று அந்த வேதப்பகுதி கூறுகிறது. அந்த வாலிபன் இவ்வுலக வாழ்விற்கும் நித்தியத்திற்கும் இறைமகனுடைய மகத்துவத்திற்கு, பின்வாங்காமல் தன்னை ஒப்புக்கொடுக்க விருப்பமா என்று இயேசு அவனிடம் கேட்டார். இயேசு சாதாரண மனிதனல்ல என்பதை அந்த வாலிபன் ஏற்கனவே அறிந்திருந்தான் என்பது “ஆண்டவரே” என்று அவன் இயேசுவை அழைப்பதிலிருந்து தெரிகிறது. இருப்பினும் அவன் இறைமைந்தன் யார் என்பதை இன்னும் அதிகம் அறிய விரும்பினான். ஏனெனில் சாதாரண மனிதனை ஆராதிப்பது விக்கிரக ஆதாரனையல்லவா?

அவனுடைய இந்தக் கேள்விக்கு இயேசு மகிமையான பதிலைக் கொடுத்தார். “நீ அவரை உன்னுடைய சரீரக் கண்களினால் பார்ப்பதற்கு முன்பாகவே, உன்னுடைய விசுவாசக் கண்களினால் அவரைப் பார்த்திருக்கிறாய். உன்னுடனே இப்போது பேசுகிறவரே இறைமைந்தன்” என்று குறிப்பிட்டார். இதைக் கேட்டவுடன் அந்த வாலிபன் சற்றும் தாமதிக்காமல் தன்னை முழுவதும் இயேசுவிடம் ஓப்படைத்து விட்டான். “ஆண்டவரே, நான் உம்முடையவன், நீர் என்னுடைய அரசன், என்னுடைய எஜமான், என்னுடைய கர்த்தர். நீரே மாம்சத்தில் வெளிப்பட்ட அன்பு. இன்றிலிருந்து உம்முடைய அடிமையாக இருக்கும்படி நான் என்னை மனப்பூர்வமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்” என்று கூறும் வண்ணமாக அவரை விழுந்து பணிந்துகொண்டான். சகோதரனே, மாம்சத்தில் வந்த இறைமைந்தன் இயேசுவே என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு விசுவாசியாக அவருக்கு உங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா? ஒரு அடிமையாக நீங்கள் அவருக்கு ஆராதனை செய்திருக்கிறீர்களா?

யோவான் 9:39-41
39 அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். 40 அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். 41 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

அந்த வாலிபன் இயேசுவை இவ்வாறு விழுந்து பணிந்துகொண்டபோது, அவனை யாரும் தடைசெய்யவில்லை. ஏனெனில் இயேசு அனைத்து கனத்துக்கும் பாத்திரராயிருக்கிறார். ஆனால் இயேசு தன்னுடைய வருகை பெருமையுள்ளவர்களுக்கும் சத்தியத்தை அறியாமல் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போலி பக்தர்களுக்கும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும் என்று குறிப்பிட்டார். பாவிகளும் குருடர்களும் இதையறிந்து மனந்திரும்புகிறார்கள். விபச்சாரிகள் சுத்திகரிக்கப்படுகிறார்கள். மனந்திரும்பாதவர்களை இயேசு நியாயந்தீர்க்கவில்லை. அவருடைய இரட்சிப்பைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களே தங்களை நியாயந்தீர்த்துக்கொள்கிறார்கள். தீர்க்கதரிசிகளின் மூலமாகவும் வேதாகம ஆதாரங்கள் மூலமாகவும் முன்பு அவர்கள் ஓரளவு வெளிச்சத்தைப் பெற்றிருந்தார்கள். இயேசுவின் பிரசங்கத்தை அவர்கள் மனப்பூர்வமாகப் புறக்கணித்த காரணத்தினால் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த வெளிச்சத்தையும் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் குருடர்களாகவும், கடின இருதயமுள்ளவர்களாகவும், பிடிவாதக்காரராகவும், வெறுப்புள்ள கொலைகாரராகவும் மாறிப் போனார்கள். கிறிஸ்துவின் வருகையும் அவருடைய பிரசங்கமும் இரண்டு விளைவுகளை உண்டுபண்ணுகிறது. ஒன்று இரட்சிப்பு மற்றது நியாயத்தீர்ப்பு. ஆசீர்வாதம் அல்லது சாபம். உங்களுடைய இருதயத்தில் அது என்ன விளைவை உண்டுபண்ணியிருக்கிறது?

இயேசு தன்னுடைய வார்த்தைகள் மூலமாக தங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று அங்கிருந்த பரிசேயர் உணர்ந்துகொண்டார்கள். “நாங்கள் குருடரா?” என்று இயேசவிடம் அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய மாய்மாலத்தைத் தோலுரித்துக் காட்டினார். “உண்மையில் உங்கள் குருட்டுத்தனம் என்ன என்பதை நீங்கள் கண்டு, உங்கள் ஆவிக்குரிய நிலைக்காக மனம்வருந்தியிருந்தால், நீங்கள் யோவான் ஸ்நானகனுக்கு முன்பாகவே மனந்திரும்பியிருப்பீர்கள். பாவ மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருப்பீர்கள். ஆனால் நீங்கள் உங்களை நீதிமான்களாகக் கருதிக்கொண்டு, உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் உரிமை பாராட்டுவதால், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். அவ்வித பெருமையினால் நீங்கள் உங்கள் குருட்டுத் தனத்தையும் கடினமனதையும் காண்பிக்கிறீர்கள். நீங்கள் உலகத்தின் ஒளியானவரிடத்திலிருந்து சிறிய அளவிலான ஒளியைக்கூட நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்” என்றார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே மனித உருவில் வந்த இறைமகன். நாங்கள் உம்மை ஆராதித்து, இப்பொழுதும் எப்பொழுதும் எங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களுடைய பலமும் உடைமைகளும் உமக்கே உரியவை. எந்தச் சிறிய பாவமும் உம்மைவிட்டு எங்களைப் பிரித்துவிடாதபடி, எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் இருதயத்தைச் சுத்திகரிக்கும்படி உம்மைக் கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி:

  1. இயேசுவுக்கு முன்பாகப் பணிந்தகொள்வது எதைக் காட்டுகிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:17 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)