Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 058 (Sin is bondage)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

உ) பாவம் என்பது அடிமைத்தனமே (யோவான் 8:30-36)


யோவான் 8:30-32
30 இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

கிறிஸ்துவின் தாழ்மையும் உணர்ச்சியும் நிறைந்த சாட்சி அவருக்குச் செவிகொடுத்த பலரைப் பாதித்தது. அவர் இறைவனிடத்திலிருந்து வந்தவர் என்று அவர்கள் விசுவாசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் தன்னை நம்புவதை இயேசு உணர்ந்து செவிகொடுக்கும் அவர்களுடைய ஆர்வத்தை ஏற்றுக்கொண்டார். அவருடைய நற்செய்தியை விசுவாசித்தால் மட்டும் போதாது, அவர்கள் அவருடைய வார்த்தைகளைச் சிந்தித்து அவரோடு இணைந்துகொள்ள வேண்டும். ஒரு கிளை மரத்தில் நிலைத்திருப்பதைப் போல அவர்கள் அவரில் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்திற்குள்ளும் சிந்தைக்குள்ளும் தடையின்றி பிரவாகித்து வருவார். அதன் மூலம் அவர்கள் தங்கள் நடைமுறை வாழ்வில் இறைவனுடைய சித்தத்தை செய்கிறவர்களாக மாற்றப்படுவார்கள். இவ்வாறு கிறிஸ்துவின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறவர்கள் சத்தியத்தை உணர்ந்து கொள்வார்கள். ஏனெனில் சத்தியம் என்பது வெறும் சிந்தனையல்ல, அது நம்முடைய நடைமுறை வாழ்வைப் பாதிக்கும் மெய்மையாகும்.

முதலாவது, இறைவனுடைய சத்தியம் என்பது உண்மையும் ஞானமுமுள்ள பேச்சு; இரண்டாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவன் அன்பிலும் செயலிலும் ஒன்றாயிருத்தல். நாம் கிறிஸ்துவில் வேர்கொள்ளும்போது தூய திரித்துவத்தின் அழகை உணர்ந்துகொள்வோம்.

இறைவனை அறிதல் நம்முடைய வாழ்க்கையை மாற்றும். நாம் எவ்வளவு தூரம் மற்றவர்களை நேசிக்கிறோமோ அவ்வளவுதான் நாம் இறைவனை அறிந்திருக்கிறோம். அன்பில்லாதவன் இறைவனை அறியான். கிறிஸ்துவின் வார்த்தையின் மூலமாக நாம் இறைவனை அறியும்போது நாம் சுயநலத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம். மந்திரும்புதலைப் பற்றியும் சட்டங்களைக் கைக்கொள்வதைப் பற்றியும் பேசுவதால் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட மாட்டோம். இறைவனை அறிவதும், குமாரனுடைய பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதும், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையில் வருவதுமே நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும். இறைவனுடைய அன்பு மட்டுமே நம்முடைய சுயநலம் சுயம் ஆகியவற்றின் சங்கிலிகளை அறுக்கக்கூடியது.

யோவான் 8:33-36
33 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். 34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 35 அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். 36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

யூதர்கள் குழப்பமடைந்தார்கள்; அவர்களுடைய மூதாதையர் பார்வோனுக்குக் கீழாக நானூறு வருடங்கள் அடிமைகளாக வாழ்ந்தார்கள், இறைவன் அவர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த காரணத்தினால் அவர்கள் விடுதலையடைந்தவர்கள் என்று கருதிக்கொண்டார்கள். (யாத். 20:2). அவர்கள் விடுதலையடைந்தவர்கள் என்ற உண்மையை இயேசு மறுதலித்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அவரை விசுவாசிக்க ஆரம்பித்தவர்களுடைய பெருமையை இயேசு அடித்து நொறுக்கினார். அவர்கள் பாவத்தின் அடிமைகள் என்றும் சாத்தானுடைய கைதிகள் என்றும் இயேசு காண்பித்தார். நம்முடைய அடிமைத்தனத்தின் மரணப் பாரத்தை நாம் உணர்ந்துகொள்ளவில்லை என்றால் நாம் விடுதலைக்காக ஏங்க மாட்டோம். தன்னுடைய பாவங்களைத் தன்னால் மேற்கொள்ள முடியாது என்று அறிந்தவன் மட்டுமே இறைவன் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்பான். பலர் ஏன் இயேசுவைத் தேடுவதில்லை என்பதற்கான காரணத்தை நாம் இங்கு பார்க்கிறோம். அவர்களுக்கு இரட்சிப்புத் தேவையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இயேசு வலுவாக சத்தியங்களை எடுத்துரைத்தார்: “பாவம் செய்கிறவன் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான். பல வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை பொய், சோம்பல் மற்றும் உதாசீனம் போன்ற பாவங்களுடன் ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பாவத்துடன் விளையாடி கற்பனைகளில் மூழ்கினார்கள். அதன் பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அந்தப் பாதையில்தான் செல்வதென்று தீர்மானித்து, தங்கள் பாதையை வஞ்சகத்தினால் திட்டமிட்டார்கள். சில தீமைகளை அவர்கள் முயற்சி செய்து பார்த்தார்கள், இறுதியில் அவை அவர்களுடைய பழக்கங்களாயின. அவர்கள் அந்தப் பாவங்களின் அசிங்கத்தையும், தீமையையும் உணர்ந்து, தங்களுடைய மனசாட்சியின் குற்றப்படுத்தலையும் கேட்டபோது, காலம் ஏற்கனவே கடந்துவிட்டிருந்தது. இப்பொழுது அவர்கள் அந்தப் பாவங்களுக்கு அடிமைகளாயிருக்கிறார்கள். அவர்கள் ஒரு குற்றத்தை தயக்கத்துடன் செய்யும்படி தூண்டப்பட்டார்கள். இப்போது அவர்கள் தங்கள் தீமையான எண்ணத்திற்கு செவிகொடுத்த அந்தத் தருணத்தை சபித்துக்கொண்டிருக்கிறார்கள். போலி பக்தி என்ற வேஷத்தை அவர்கள் தரித்திருந்தாலும் அவர்கள் தீமை நிறைந்தவர்கள். அந்த உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள். கிறிஸ்து இல்லாத எந்த மனிதனும் தன்னுடைய இச்சைகளுக்கு அடிமையாயிருக்கிறான். ஒரு காய்ந்த சருகை புயல் அலைக்கழிப்பதைப் போல அப்படிப்பட்டவர்களுடைய மனம் பிசாசினால் அலைக்கழிக்கப்படும்.

அப்போது இறைவனுடைய குமாரன் தன்னுடைய கிருபையுள்ள வார்த்தைகளைக் கூறுகிறார்: “இப்போது நான் உங்களுடன் இருக்கிறேன், உங்களுடைய கட்டுக்களை அறிந்திருக்கிறேன். நான் உங்களை விடுவித்து உங்கள் பாவங்களை உங்களிலிருந்து துடைத்தெறிய ஆயத்தமாயிருக்கிறேன். நான் ஒரு மேலோட்டமாக மாற்றத்தைக் கொண்டுவரவோ, கடுமையான சட்டத்தைக் கொடுக்கவோ வரவில்லை. இல்லை. நான் உங்களைப் பாவத்தின் வல்லமையிலிருந்தும், மரணத்தின் பலத்திலிருந்தும் பிசாசுக்கு உங்கள் மீதிருக்கும் உரிமையிலிருந்தும் விடுவிக்கும்படி வந்தேன். நான் உங்களை மறுபடியும் பிறக்கச் செய்து உங்களைப் புதுப்பிக்கிறேன். அப்பொழுது உங்களுக்குள் இருக்கும் இறைவனுடைய வல்லமை பாவத்திற்கு எதிராக செயல்படும். சாத்தான் பலவழிகளில் உங்களைச் சோதிப்பான் என்பது உண்மைதான். நீங்கள் இடறுவீர்கள், ஆனால் அடிமைகளைப் போல் அல்ல, தங்கள் உரிமைகளை ஆவலுடன் காத்துக்கொள்ளும் பிள்ளைகளைப் போல.”

“நீங்கள் நித்தியமாக மீட்கப்பட்டுள்ளீர்கள். என்னுடைய இரத்தத்தை விலையாகக் கொடுத்து பாவச் சந்தையிலிருந்து உங்களை நான் வாங்கியிருக்கிறேன். நீங்கள் இறைவனுக்கு சிறப்பானவர்கள். நீங்கள் சுதந்திரமுள்ள பிள்ளைகளாக இருக்கும் உரிமையை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட உங்களை நான் இறைவனுடனான ஐக்கியத்திற்குள்ளும் மனப்பூர்வமாக, நன்றியுடன் அவருக்குச் சேவை செய்வதற்கும் வழிநடத்துவேன். குற்றச் சிறையிலிருந்து உங்களை இறைவனுடைய ஆளுகைக்குள் கொண்டுவரும் விடுதலையாளர் நானே. என்னிடத்தில் வரும் யாருடைய கதறுதலுக்கும் செவிகொடுக்கும் அதிகாரமுள்ள இறைமகன் நானே.”

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே உம்மை நாங்கள் ஆராதித்து துதிக்கிறோம். நீரே சர்வவல்லமையுள்ள இரட்சகர். சாத்தானுடைய கொடுமையிலிருந்து எங்களை நீரே சிலுவை மரணத்தினால் விடுவித்தீர். எங்களுடைய பாவங்கள் அனைத்தையும் நீர் மன்னித்து விட்டீர். கசப்பிலும் வெறுப்பிலும் நிலைத்திராதபடி எங்களைச் சுத்திகரித்து, விடுதலையும் மகிழ்ச்சியும் உள்ள பிள்ளைகளாக இறைவனைச் சேவிக்கச் செய்கிறீர்.

கேள்வி:

  1. எப்படி நாம் உண்மையான விடுதலையைப் பெறலாம்?

கேள்வித்தாள் 3

அன்பின் வாசகரே, இந்த 19 கேள்விகளில் 17க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  1. ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததில் இருக்கும் இரகசியம் என்ன?
  2. மக்களால் அரசராக்கப்படுவதை இயேசு மறுத்ததன் காரணம் என்ன?
  3. உணவுக்காக தேடிவந்த மக்களை இயேசு எவ்வாறு தன்னில் விசுவாசம் வைக்கும்படி நடத்துகிறார்?
  4. “ஜீவ அப்பம்” என்றால் என்ன?
  5. இயேசுவின் போதனையைக் கேட்டவர்களுடைய முறுமுறுப்புக்கு அவர் எவ்வாறு பதிலுரைத்தார்?
  6. மக்கள் தன்னுடைய உடலை உண்டு, இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று ஏன் இயேசு கூறினார்?
  7. வாழ்வைத் தரும் ஆவியானவர் கிறிஸ்துவின் சரீரத்தோடு எவ்வாறு இணைந்தார்?
  8. பேதுருவினுடைய சாட்சியிலிருந்து நாம் எவற்றைக் கற்றுக்கொள்கிறோம்?
  9. உலகம் இயேசுவை ஏன் பகைக்கிறது?
  10. நற்செய்தி இறைவனிடமிருந்துதான் வருகிறது என்பதற்கான ஆதாரம் என்ன?
  11. இறைவனை அறிந்த ஒரே நபர் இயேசு மட்டுமே. ஏன்?
  12. அவருடைய எதிர்காலத்தைப் பற்றிய இயேசுவின் முன்னறிவித்தல் என்ன?
  13. “தாகமாயிருக்கிறவன் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்கடவன்” என்று சொல்லும் அதிகாரம் ஏன் இயேசுவிடம் மட்டும் இருக்கிறது?
  14. பரிசேயர்களும் ஆசாரியர்களும் ஏன் சாதாரண மக்களை புறக்கணித்தார்?
  15. விபச்சாரியைக் குற்றப்படுத்தியவர்கள் ஏன் இயேசுவின் சமூகத்தைவிட்டுப் போய்விட்டார்கள்?
  16. இயேசு தன்னைக் குறித்து உலகத்தின் ஒளி என்று சாட்சி பகர்வது பரலோக பிதாவைக் குறித்த நம்முடைய அறிவுடன் எவ்வாறு தொடர்புடையதாயிருக்கிறது?
  17. “நானே அவர்” என்பவரை விசுவாசிப்பதன் பொருள் என்ன?
  18. பரிசுத்த திரித்துவத்தில் தன்னுடைய நிலைப்பாட்டைக் குறித்து இயேசு என்ன கூறுகிறார்?
  19. எப்படி நாம் உண்மையான விடுதலையைப் பெறலாம்?

உங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 08:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)