Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 036 (Freedom from the Law)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

2. நியாயப்பிரமாணத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் விடுதலை பாவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் விடுதலைக்கு வழிவகுக்கிறது (ரோமர் 6:15-23)


ரோமர் 6:15-22
15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே. 16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? 17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். 18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். 19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள். 20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள். 21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. 22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

யூதர்களுடைய தந்திரமான கேள்விகள் மறுபடியும் பவுலுடைய மனதில் எதிரொலிக்கின்றன: நாம் இப்போது நியாயப்பிரமாணத்திற்குக் கீழாக இல்லை என்பதாலும் கிருபையினால் மீட்கப்பட்டிருப்பதாலும் இனிமேல் பாவம் செய்யலாமா?

இந்த சாத்தானுடைய கேள்வியை பவுல் முழுவதுமாக நிராகரிக்கிறார். ஏனெனில் இது பரிசுத்த ஆவியினால் கேட்கப்படுகிற கேள்வியல்ல, பிசாசினால் கேட்கப்படுகிற கேள்வி. விசுவாசிகள் கிறிஸ்துவினுடைய அன்பிற்காக தங்களை முழுவதும் மனமுவந்து ஒப்புக்கொடுத்தவர்கள் என்ற உண்மையைப் பவுல் சாட்சியிடுகிறார். அதனால் அவர்கள் இறைவனுடைய வாழ்வையும் நீதியையும் தங்களுடைய வாழ்வில் சுமந்தவர்களாக அவர்கள் பாவத்தினுடைய வல்லமையிலும் நியாயப்பிரமாணத்தின் முறைப்பாடுகளில் இருந்தும் விடுதலையடைந்திருக்கிறார்கள். தெய்வ பயமின்றி மனிதர்களுடைய சுதந்திரத்தைக் கோருகிறவர்கள் பொய்யர்களாயிருக்கிறார்கள். வேதாகம அறிஞராகிய லூத்தர் மனிதனை ஒரு கழுதைக்கு ஒப்பிடுகிறார். கழுதையைப் போல ஒரு தனிமனிதன் தன்னை ஓட்டுகிறவனில்லாமல் பயணிப்பதில்லை. ஒன்று நீங்கள் இறைவனால் வழிநடத்தப்பட வேண்டும் அல்லது சாத்தானால் வழிநடத்தப்பட வேண்டும். இறைவன் உங்களுடைய இறைவனாகும் போது, அவர் உங்கள் மீது சவாரி செய்யும்போது, நீங்கள் அவரை மகிழ்வோடு சுமந்து செல்வீர்கள், அவருக்கு நீங்கள் தொடர்ச்சியாகவும் ஆர்வத்துடனும் பணி செய்வீர்கள். அப்பொழுது பாவமும், அதனால் உண்டாகும் அழிவும், மரணத்தின் சக்தியும் உங்களைப் பொறுத்தவரை முடிவுக்கு வந்துவிடும். அதற்குப் பதிலாக நம்பிக்கையும் சமாதானமும் ஆவிக்குரிய விடுதலையும் ஆரம்பமாகிவிடும். பொறுப்பற்ற வாழ்க்கைக்காகவோ அல்லது களியாட்டுக்காகவோ கிறிஸ்து உங்களை விடுவிக்கவில்லை. நீங்கள் இறைவனைச் சேவிக்கவும் நீதியின் ஆவியினால் மற்றவர்களை வழிநடத்தவுமே அவர் உங்களை மீட்டிருக்கிறார்.

கிறிஸ்து எதற்கும் அடிமைப்படாத சுதந்தரமானவராகவும் நித்திய இறைவனாகவும் இருந்தபோதிலும் தமக்கே ஒரு நுகம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும் அவர் மகிழ்வோடு பிதாவினால் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த நுகத்திற்குத் தம்மை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தார். சிலுவையின் மரணம் வரை அதற்குக் கீழ்ப்படிந்தார். தெய்வீக அன்புக்கு அடிமைப்பட்டவராக உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்தார். ஆகவே, நீங்கள் ஏன் அவரைப் பின்பற்றக் கூடாது. நீங்கள் உங்கள் நண்பர்களுடைய பாவங்களைச் சுமக்கிறீர்களா? அவர்களுடைய பொறுப்பின்மையின் நிமித்தம் பாடுகளை அனுபவிக்கிறீர்களா? அதனால் கலக்கமடையாதீர்கள். அவர்களுடைய இரட்சிப்பிலும் ஆவிக்குரிய விடுதலையிலும் உங்களுடைய மனதைச் செலுத்துங்கள். இறைவனுடைய அன்பு அனைத்து மக்களுடைய இரட்சிப்பையும் நாடும்படி உங்களை வழிநடத்தும்.

வெறும் பேச்சிலோ அல்லது உணர்ச்சியிலோ அல்ல, உண்மையான தீர்மானத்தோடும், தியாகத்தோடும், உங்கள் அனைத்து ஆற்றலோடும் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்படி கிறிஸ்துவோடும் நடத்தப்படும் உங்கள் வாழ்வு உங்களை வழிநடத்தும். முன்பு நீங்கள் எப்படி உங்கள் நேரத்தையும், பணத்தையும், வரங்களையும் வீண் களியாட்டுக்களில் செலவு செய்தீர்களோ அப்படி கிறிஸ்துவினுடைய சேவையில் மற்றவர்களுடைய இரட்சிப்புக்காக செலவு செய்வீர்கள். துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக இருந்து, சுகவீனமானவர்களைச் சந்தித்து, பசியுள்ளவர்களுக்கு உணவளித்து, பெலவீனரைத் தாங்கி, நீதியைத் தேடுகிறவர்களுக்கு நற்செய்தியினால் ஒளியூட்டுவீர்கள்.

விசுவாசிகளில் இருக்கும் கிறிஸ்துவின் அன்பு இந்த அநீதி நிறைந்த உலகத்தில் பொறுமையோடும் நம்பிக்கையோடும் வாழும்படி அவர்களை வழிநடத்தும். நீங்கள் கிறிஸ்துவினுடைய அடிமையாகி விட்டீர்களா? அப்படியானால் மனந்திரும்புதலினால் மரணத்திற்குத் தப்பி, கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்து, நித்திய வாழ்வில் நிலை நிறுத்தப்பட்டுள்ள உங்கள் மேல் பாவத்திற்கு இனி வல்லமை இல்லை.

ரோமர் 6:23
23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

இந்த அற்புதமான வசனம் நற்செய்தியை நமக்குச் சுருக்கிக் கூறுகிறது. இயற்கையாக மனிதனுடைய நிலை என்ன என்பதையும் அந்நிலையில் இருந்து மனிதனை மீட்க கிறிஸ்து என்ன செய்திருக்கிறார் என்பதையும் இரத்தினச் சுருக்கமாக இவ்வசனம் எடுத்துரைக்கிறது.

1. பாவத்தினால் நாம் மரணமடைந்தோம். நாம் பாவம் நிறைந்தவர்களாக இருக்கிற காரணத்தினால் மரணம் தவிர்க்க முடியாதது. அனைவரும் பாவிகளாக இருக்கிற காரணத்தினால் அனைவரும் மரணமடைய வேண்டும். இதுதான் வாழ்வின் யதார்த்தம்.

2. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இறைவனுடைய ஈவைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த கொடை பொன்னோ, பொருளோ, விலையுயர்ந்த ஆபரணங்களோ அல்ல, இவ்வுலகத்தில் காணப்படும் பொருட்கள் எதிலிருந்தும் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. மாறாக, அது நேரடியாக இறைவனுடைய இதயத்திலிருந்து புறப்பட்டு வந்து நம்முடைய இருதயத்தில் வாழும் ஒன்றாக இருக்கிறது. இறைவனுடைய ஆட்சியில் நாம் பங்குபெறும்படியாக அவருடைய மகனோடு சிலுவையில் அறையப்பட்ட அனைவருக்கும், அவர் தம்முடைய சொந்த உயிரையே வாழ்வாகக் கொடுக்கிறார். அவரே கர்த்தாதி கர்த்தராக இருப்பதாலும், பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் என்றும் ஆளுகை செய்யும் ஒரே இறைவனாக இருப்பதாலும் அவர் அப்படிச் செய்கிறார்.

விண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவா நாங்கள் உம்மைத் தொழுகிறோம். பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட்டிருந்த எங்களை விடுவித்து, மரணத்தின் கட்டுகளில் இருந்து எங்களைக் காப்பாற்றி, கிறிஸ்துவின் ஆளுகைக்குள் எங்களைக் கொண்டுவந்து, நாங்கள் மரணமடையாதபடி பரிசுத்த ஆவியானவர் தரும் வாழ்வினால் எங்களை நிரப்பி, உம்மில் வாழும்படி உம்முடைய மாபெரும் கிருபையை எங்களுக்குத் தந்தீர்.

கேள்வி:

  1. பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமையாக இருப்பதற்கும் கிறிஸ்துவின் அன்புக்கு அடிமையாக இருப்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 12:02 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)