Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 035 (The Believer Considers Himself Dead to Sin)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஈ - இறைவனுடைய வல்லமை பாவத்தின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கிறது (ரோமர் 6:1-8:27)

1. விசுவாசி தன்னைப் பாவத்திற்கு மரித்தவனாக நினைத்துக்கொள்கிறார் (ரோமர் 6:1-14)


ரோமர் 6:12-14
12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. 13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

பாவத்தின் வல்லமையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவோடு ஐக்கியப்படுத்தப்பட்ட ஒருவன் பாவத்தை வெறுக்கிறவனாகவும் பாவத்தைச் செய்ய விரும்பாதவனாகவும் இருக்கிறான். இச்சைகள் வல்லமையுள்ளவைகள், ஆயினும் கிறிஸ்துவின் அன்பு அதைவிட வலிமையானது. நற்செய்தியில் நிலைத்திருப்பவனும், விண்ணப்பத்தில் நிலைத்திருப்பவனும், தன்னுடைய சரீரத்திலும் ஆத்துமாவிலும் எழும் விருப்பங்களைத் தடைசெய்யும் வல்லமையைப் பெற்றுக்கொள்ள முடியும். அவன் தனக்குத் தானே சேவை செய்கிறவனாக இருக்கமாட்டான். அல்லது தீய உபதேசத்தைப் பின்பற்றுகிறவனாக இருக்கமாட்டான். எல்லாத் தீய செயல்களிலிருந்தும் விலகியிருக்க மனப்பூர்வமாக முயற்சி செய்வான். அவன் பாவச் சோதனையின் சத்தத்திற்கு இனிமேல் செவிகொடுப்பதில்லை. ஏனெனில் அவன் வெற்றி வீரராகிய இயேசுவோடு தொடர்ந்து ஐக்கியத்தில் இருக்கிறான். அவருடைய வல்லமையில் நம்முடைய உடலில் உள்ள மரணத்தின் நோக்கங்களைக் காட்டிலும் பெரியது. இவ்வுலகத்திலுள்ள தத்துவஞானிகள் அனைவருடைய அறிவைக் காட்டிலும் மேலான ஞானத்தை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுக்கிறார்.

தீய செயல்கள், தீய புத்தகங்கள், தீய திரைப்படங்கள் மற்றும் தீய நண்பர்கள் ஆகியவை அனைத்திலிருந்தும் விலகியிருங்கள். அவை கிறிஸ்துவோடு உங்களுக்கிருக்கும் ஐக்கியத்தைவிட்டு உங்களைப் பிரித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பாவத்தின் வல்லமையை நீங்கள் கவனத்தில் கொள்ளாமல் கிறிஸ்துவை நம்பி அவருடைய இரட்சிப்பின் வல்லமையைச் சார்ந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இறைவனுக்கு உரியவர்களாக மாறிவிட்டீர்கள். நீங்கள் அவருடைய ஆவியைச் சுவாசித்து, நித்திய சத்தியத்தை அனுபவித்திருக்கிறீர்கள். ஆகவே, இறைவனைப் பற்றிச் சிந்திக்காமல் உங்களுடைய வழிகளை எப்படி உங்களால் சிந்திக்க முடியும்? ஒரு புனிதப் போரில் ஈடுபடும் போராளியைப் போல உங்கள் ஆண்டவரிடத்தில் வந்து, உங்களுடைய காலம், பொருள், பணம் எல்லாவற்றையும் அவருக்கு ஒப்படையுங்கள். உங்களுடைய தியாகம் என்பது ஒரு கடமையல்ல, அது உங்களுடைய பாக்கியம், மகிழ்ச்சி, இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் வழி. அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சமாக இருக்கிற காரணத்தினால் நீங்கள் எங்கு சேவை செய்ய வேண்டும் என்று உங்கள் ஆண்டவர் விரும்புகிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். ஆகவே, அறுப்புக்கு எஜமான் வேலையாட்களை அனுப்பும்படி விண்ணப்பம் செய்யுங்கள். ஆண்டவருக்குப் பணி செய்வதில் அவசரப்பட வேண்டாம், பிடிவாதமாக இருக்க வேண்டாம். அவருடைய வழிநடத்துதலை நாடுங்கள். பாவத்திலே மரணத்தில் இருக்கும் மனிதர்கள் நித்திய வாழ்வைப் பெறும்படி உயிரோடு எழும்புவதற்கு உங்களைப் பயன்படுத்த இறைவன் விரும்புகிறார். ஆகவே உங்கள் உடலையும் உடைமைகள் அனைத்தையும் இறைவனுடைய நீதியின் ஆயுதங்களாக ஒப்புக்கொடுங்கள்.

நீங்கள் ஒரு காலத்தில் பாவத்தில் மரணமடைந்திருந்தீர்கள், ஆனால் இப்போது கிறிஸ்துவுக்குள் உயிரடைந்திருக்கிறீர்கள் என்பதால் அவருக்கு நன்றி செலுத்த மறந்துவிடாதீர்கள். உங்கள் வரங்களை இறைவனிடத்தில் திரும்பக் கொடுங்கள். பலர் மீட்கப்படுவதற்குக் கருவியாக அவற்றை அவர் பயன்படுத்துவார். பரிசுத்தர் கிறிஸ்துவுக்காக உங்களைத் தகுதிப்படுத்துகிறார். உங்களுடைய பலவீனத்தில் தம்முடைய நீதியின் வல்லமையை மகிமைப்படுத்தும்படி அவர் உங்களை அனுப்புகிறார். தயங்க வேண்டாம்! அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் கிறிஸ்துவின் அடிமை என்று அழைக்கிறார். எல்லா நேரத்திலும் கிறிஸ்துவுக்குச் சேவை செய்யும்படி உங்கள் வாழ்வை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்து எப்போது அவரை உண்மையாகப் பின்பற்றப் போகிறீர்கள்?

பவுலைப் போல இறைவனுடைய அன்பின் ஐக்கியத்தில் சேவை செய்யும் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறார்கள். தங்களுடைய இருதயத்தில் ஆரம்ப மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று அறிந்துகொள்கிறார்கள். உங்களுடைய இருதயத்தின் சிம்மாசனத்தில் பாவம் புன்னகையோடு வீற்றிருப்பதில்லை. கிறிஸ்து உங்கள் இருயத்ததைத் தனதாக்கிக்கொண்டு உங்களோடு வாழ்கிறபடியால் புதிய யுகம் உங்கள் வாழ்வில் ஆரம்பித்திருக்கிறது. இறைவனுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்வது இயலாத ஒரு கடமை அல்ல. ஆனால் அவற்றுக்கு மகிழ்வோடு கீழ்ப்படிய விரும்புகிறோம். அவ்வாறு கீழ்ப்படியும் விருப்பத்தை பரிசுத்த ஆவியானவர் நம்மில் மெதுவாகத் தோற்றுவிக்கிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கிருபையில் வல்லமை அருளப்பட்டிருக்கிறது. மரணமும் அழிவும் அவனை ஆளுகை செய்வதில்லை. கிறிஸ்து மட்டுமே தம்முடைய கிருபையோடு நம்முடைய இருதயத்தில் ஆளுகை செய்கிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, ஒவ்வொரு காலையிலும் ஒவ்வொரு மாலையிலும் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். ஏனெனில் நீர் எங்களுடைய அழிவிற்குரிய உடல்கள் நித்திய வாழ்வில் பங்கடையும்படி உம்மோடு எங்களை இணைத்திருக்கிறீர். நீர் எங்களுடைய இருயத்திலும் வாழ்க்கையிலும் ஆளுகை செய்கிறீர். எங்களுடைய முழு மனதோடும் முழு பலத்தோடும் அனைத்துப் பணத்தோடும் உம்மையும் உம்முடைய பரலோக பிதாவையும் துதிக்கும் விதமான ஞானமுள்ள நடக்கையை எங்களுக்குப் போதித்தருளும். அப்போது விசுவாசிகளாகிய நாங்கள் அனைவரும் உம்முடைய அன்பிற்கு அடிமைகளாகக் கருதப்படுவோம்.

கேள்வி:

  1. நம்மையும் நம்முடைய உடலின் அங்கங்களையும் இறைவனுடைய நீதியின் ஆயுதங்களாக எப்படி மாற்றுவது?

இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும்
குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.

(அப்போஸ்தலர் 24:16)

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 11:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)