Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 027 (Man is not Justified by Circumcision)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
ஆ - விசுவாசத்தினால் கிடைக்கும் புதிய நீதி அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது (ரோமர் 3:21-4:22)
3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக் குறித்து ஆபிரகாம் மற்றும் தாவீதின் உதாரணங்கள் (ரோமர் 4:1-24)

ஆ) விருத்தசேதனத்தினால் ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுவதில்லை (ரோமர் 4:9-12)


ரோமர் 4:9-12
9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே. 10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்த போதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே. 11 மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும், 12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

இங்கு பவுல் யூதர்களுடைய நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். அவர்களுடைய முக்கிய நம்பிக்கைகளில் ஒன்றாகிய விருத்தசேதனத்தை அடித்து நொறுக்குகிறார். வனாந்தரத்தின் மக்கள் விருத்தசேதனத்தை பழைய உடன்படிக்கையின் மாபெரும் அடையாளஙகளில் ஒன்றாகக் கருதினார்கள். யாரெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்களோ அவர்கள் இறைவனுக்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். விருத்தசேதனம் பண்ணப்படாதவர்கள் இறை நிந்தனையாளர்களாகக் கருதப்பட்டார்கள். ஆகவே, யூத மதத்தில் புதிய விசுவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய சுத்திகரிப்பின் அடையாளமாக விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலமாகத்தான் அவர்கள் இறைவனுடனான உடன்படிக்கைக்குள் நுழையும் தகுதியைப் பெறுகிறார்கள்.

ஒரு மனிதன் விருத்தசேதனத்தினால் அல்ல, விசுவாசத்தினால்தான் நீதிமானாக்கப்படுகிறான் என்பதைப் பவுல் ஆபிரகாமுடைய வாழ்க்கையின் மூலமாக கண்டிப்பான யூதர்களுக்கு நிரூபித்துக் காண்பிக்கிறார். ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுவதற்கு முன்பாகத்தான் ஆண்டவருடைய அழைப்பைப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு அவருடைய விசுவாசம்தான் அவர் நீதிமானாக்கப்படுவதற்கு ஆதாரமாகவும் காரணமாகவும் இருந்தது. ஆபிரகாமைப் பொறுத்தவரை விருத்தசேதனம் என்பது ஒரு முத்திரையாக இருந்ததே தவிர, அவர் இறைவனிடத்தில் திரும்புவதற்கான உரிமையாக அது இருக்கவில்லை. அவர் விசுவாசத்தினால் ஏற்கனவே இறைவனுடன் உடன்படிக்கையில் நுழைந்துவிட்டபடியால் விருத்தசேதனம் அவருக்கு உதவவில்லை.

ஆபிரகாம் விருத்தசேதனமுள்ள விசுவாசிகளுக்குத் தகப்பனாக மாறுவதற்கு முன்பாகவே விருத்தசேதனமில்லாத பிறவினத்து விசுவாசிகளுக்குத் தகப்பனாகி விட்டார் என்றும் ஏனெனில் அவர் விருத்தசேதனமில்லாத நிலையில் பிறவினத்தாராக இருக்கும்போதுதான் நீதிமானாக்கப்பட்டார் என்றும் பவுல் தைரியமாக எடுத்துரைக்கிறார். இந்த வாதத்தின் மூலமாக விருத்தசேதனமுள்ளவர்களாக இருந்து கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களைவிட பிறவினத்து விசுவாசிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார் என்று பிறவினத்து மக்களுடைய அப்போஸ்தலனாகிய பவுல் நிரூபிக்கின்றார். இறைவன் உண்மையான விசுவாசத்தின் மூலமாகவும் மனமாற்றத்தின் மூலமாகவுமே மகிமைப்படுகிறார்; உடல் ரீதியான அடையாளங்களினாலும் அன்றாட சடங்குகளினாலும் அல்ல.

இவ்விதமாகப் பவுல் யூதர்களுடைய அகம்பாவத்தைத் தெளிவுபடுத்தி, அவர்களுடைய போலியான நம்பிக்கையை நிராகரித்தபோது, அவர்கள் அவர் மீது கடுங்கோபங்கொண்டார்கள். ஆயினும், அந்த மதவெறி பிடித்த யூதர்களும்கூட கிருபையின் நற்செய்தியை விசுவாசித்தால் ஆபிரகாமைத் தங்கள் தகப்பனாகப் பெற்றுக்கொள்வார்கள் என்று கூறுகிறார். நம்முடைய பிறப்பினாலோ, அல்லது விருத்தசேதனத்தினாலோ அல்ல, சிலுவையில் அறையப்பட்டவரை நம்புவதே இறைவனிடம் சேருவதற்கான ஒரே வழியாகும். கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பொறுத்தவரை திருமுழுக்கு எடுத்துக்கொண்ட அனைவரும், அவரை விசுவாசிக்கவில்லை என்றால் நீதிமான்களாக்கப்படுவதில்லை. ஏனெனில் எந்தவொரு மனிதனும் இறைவனுக்கு முன்பாக தன்னுடைய உண்மையான விசுவாசத்தின் மூலமாகத்தான் நீதிமானாக்கப்படுகிறானேயன்றி எந்தவித சடங்கினாலோ அடையாளத்தினாலோ அல்ல.

விண்ணப்பம்: ஓ, பரலோக தகப்பனே, நாங்கள் பாவிகளாகவும் தீமை நிறைந்தவர்களாகவும் இருக்கிற காரணத்தினால் உம்மிடத்தில் வருவதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் உம்முடைய பிரியமான மகன் தம்முடைய அன்பை எங்களிடத்தில் வெளிப்படுத்தி, சிலுவை மரணத்தின் மூலமாக எங்களை நீதிமான்களாக்கியிருக்கிறார். ஆகவே நாங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறோம். அவருடைய மீட்பில் எங்களைக் கட்டுகிறோம். அவருடைய முன்னுதாரணத்தைப் பின்பற்றுகிறோம். ஏனெனில் உலகமெங்கும் உம்மை நேசிக்கிறவர்களை நீர் நீதிமான்களாக்கிப் பரிசுத்தப்படுத்துகிறீர்.

கேள்வி:

  1. மனிதர்கள் ஏன் விருத்தசேதனத்தினால் அல்ல, விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான்களாக்கப்படுகிறார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 09, 2021, at 09:11 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)