Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 008 (The Righteousness of God)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)

இ) இறைவனுடைய நீதி நிலைநிறுத்தப்படுதல் மற்றும் உறுதியான விசுவாசத்தின் மூலம் நாம் அதை அனுபவித்தல் (ரோமர் 1:16-17)


ரோமர் 1:16
16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

ரோமில் அநேக நற்செய்திகள் இருந்ததினால் “நற்செய்தி” என்ற வார்த்தை பிரபல்யமாகவும், பொருள் நிறைந்த ஒன்றாகவும் இருந்தது. அதாவது ராஜகுடும்பத்தின் நிலையில் நற்செய்தியை அறிவித்தல் என்பது தலைநகரத்தில் இருந்த அம்மக்களால் ஆர்வமுடன் கேட்கப்பட்டது.

நற்செய்தியின் நிலையை ராஜரீக பிரகடணங்களுக்கு இணையாக அவன் உயர்த்திப் பேசினான். பாலஸ்தீனா என்ற சிறிய நாட்டில் இருந்து வந்த என்னுடைய நற்செய்தியைக் குறித்து நான் வெட்கப்படவில்லை என்று அவன் கூறினான். நான் தலைநகரின் மத்தியில் அதை கொண்டு வந்திருக்கிறேன். இறைவனுடைய ஒப்பற்ற குமாரன், அவர் முற்காலங்களில் முன்னுரைக்கப்பட்டவர். இப்போது தமது இறை தன்மையில் அவர் மாம்சத்தில் வெளிப்பட்டு நமக்கு சமீபமானார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் எல்லா மனிதர்களையும் மீட்டுக் கொள்கிறார். அழிந்து போகக்கூடிய அரசனுக்குப் பிறந்த அழிந்து போகக் கூடிய குமாரனைக் குறித்த அறிவித்தல் அல்ல என்னுடைய நற்செய்தி. அது நித்திய பிதாவின் நித்திய குமாரனுடைய பிறப்பு பற்றிய மகிழ்ச்சியுள்ள செய்தி ஆகும். ராஜரீக செய்திகள் ரோமப்படைகள் வென்ற மகிழ்ச்சியுள்ள செய்திகளை கொண்டுவரும். அல்லது ராஜ விளையாட்டுகளைக் குறித்த அறிவிப்பைத் தரும். அல்லது பெருந்திரள் மக்களுக்கு உணவு வழங்கும் அறிவிப்பாக இருக்கும். எல்லா மனுக்குலத்தையும் பாவம், மரணம். சாத்தான், இறைவனுடைய கோபாக்கினை மற்றும் நியாயத்தீர்ப்பில் இருந்து மீட்கும் நற்செய்தியை நான் கொண்டுவருகிறேன். என்னுடைய நற்செய்தி எல்லா ரோம நற்செய்திகளைவிட சிறந்தது. அது உலகலாவியது, நித்தியமானது, வல்லமையுள்ளது, பெரியது, மகிமையுள்ளது. அது தத்துவங்கள், புத்தகங்கள் அல்லது வெறுமையான நம்பிக்கையின் மீது கட்டப்படவில்லை. மாறாக அது ஒரு நபரை மையமாகக் கொண்டதாகும்.

யூதர்கள் பயன்படுத்திய “கிறிஸ்து” என்ற வார்த்தையின் பல்வேறு அர்த்தங்களை ரோமர்கள் அறியவில்லை. “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்ற பொருளில் அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். அது ரோம மன்னனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெயர் ஆகும். அவனுடைய அரசு பணிகளுடன் சேர்ந்து அவன் பிரதான ஆசாரியனாகவும் கருதப்பட்டான். ரோம மன்னன் அரசியல், இராணுவ, சட்ட பணிகளுடன், பெருந்திரள் மக்களின் பல்வேறு தேச கடவுள்கள் மற்றும் ஆவிகளுடன் ஒப்புரவாக்குதலின் பணியையும் செய்கிறவனாக கருதப்பட்டான். அவன் எல்லா ஆசீர்வாதத்திற்கும், சமாதானத்திற்கும் மத்தியஸ்தனாக காணப்பட்டான்.

ஆனால் கிறிஸ்து கர்த்தாதி கர்த்தராக இருக்கிறார். வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் உண்மையான பிரதான ஆசாரியனாக இருக்கிறார். அவர் ஒருவரே மத்தியஸ்தராக, இறைவனிடம் நமக்காக பரிந்து பேசுபவராக இருக்கிறார்.

ஆகவே பவுல் இந்த நற்செய்தியின் ஆரம்பத்தைக் குறித்த அறிவிப்பில், ரோமமன்னர்களுக்கு மட்டுமே உரியதாக கருதப்பட்ட “உலகின் இரட்சகர்” என்ற பதத்திற்குரிய தகுதியுடையவர் இயேசு மட்டுமே என அறிவிக்கிறான். கிறிஸ்துவின் குமாரன் என்ற தன்மையையும், இறை தன்மையையும் தெளிவுப்படுத்துகிறான். மேலும் அவர் ஆண்டவர், நியாயதிபதி, அரசர், அதிபதி மற்றும் ஒப்புரவாக்குபவர் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

குமாரனாகிய கிறிஸ்துவின் இந்தப் பெயர்கள், அவருடைய வேறுபட்ட பணிகள் என்பது ஓர் வெற்றுச் சிந்தனை அல்ல. அது உலகில் உள்ள எல்லா வல்லமைகளிலும் பெரியதாயிருக்கிற ஒப்பற்ற வல்லமை ஆகும். ஏனெனில் நற்செய்தி இறைவனுடைய வல்லமையை உள்ளடக்கியுள்ளது. நற்செய்தியில் ஆண்டவர் தாமே பிரசன்னமாயிருக்கிறார். அவர் கருப்பு எழுத்துகள் மூலம் பேசுகிறார். அழைக்கப்பட்டவர்களுக்கு புது வாழ்வைத் தருகிறது, மறுபிறப்படையச் செய்கிறது. ஆகவே உங்கள் அலமாரிகளில் மற்ற புத்தகங்களுக்கு இணையாக புத்தகத்தோடு புத்தகமாக இதையும் கருதாதீர்கள். அதை உயர்த்தி பிடியுங்கள், சரியான இடத்தை அதற்கு கொடுங்கள். ஏனெனில் மற்ற அனைத்து புத்தகங்களையும் இது நியாயந்தீர்க்கிறது. நற்செய்தி தன்னில் தானே பூரணமாயுள்ளது. இறைவன் பரிபூரணமானவர். புதிய உலகை படைக்கக்கூடிய வல்லமையினால் அவர் நிறைந்திருக்கிறார்.

நம்முடைய தீமையான உலத்தை அழிக்கும்படியாக கிறிஸ்துவின் நற்செய்தியின் மூலம் இறைவனுடைய வல்லமை வெளிப்படவில்லை. அது நம்மைக் காக்கின்றது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையும் அவர் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். நம்முடைய பரலோகப் பிதா ஓர் சர்வாதிகாரி அல்ல. அவருடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி அவர் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. அவர் ஒவ்வொருவருக்கும் அதை இலவசமாக வழங்குகின்றார். கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு தங்கள் இருதயங்களை திறந்து கொடுக்கிற ஒவ்வொருவரும், அவரை விசுவாசிக்கிறவர்களும் இறைவனுடைய வல்லமையை அனுபவிக்கிறார்கள். விசுவாசமில்லாமல் இரட்சிப்பு இல்லை. விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் இறைவனின் குமாரனுடன் இணைக்கப்படுகிறார்கள். அவர் விசுவாசிகளுக்கு தனது இறைதன்மையை கொடுக்கிறார். அவர்களை தூய்மைப்படுத்துகிறார், பரிசுத்தப்படுத்துகிறார், அவர்களை எழுப்புதலடையச் செய்கிறார்.

அவருக்கு தனது இருதயத்தை திறந்துகொடுக்கும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் மீதான விசுவாசம், நித்திய இரட்சிப்பை அருளுகின்றது. இறைவனுடைய குமாரன் மீது நம்பிக்கை வைப்பது மட்டுமே இரட்சிப்பிற்கான ஒரே வழி ஆகும். விசுவாசத்தின் மூலம் ஒரு விசுவாசி மன்னிப்பையும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலையும் பெற்றுக்கொள்ளுகிறான். ரோமருக்கு எழுதின நிரூபத்தில் விசுவாசம் என்பது ஓர் முக்கிய செயலாக வலியுறுத்தப்படுகிறது. விசுவாசமில்லாமல் நீ இறைவனை அறிய முடியாது. அவருடைய வல்லமையை உணரமுடிகிறது. விசுவாசிக்கிறவர்கள் நீதிமானாக்கப்படுகிறார்கள். அவ்விதமாகவே வாழுகின்றார்கள்.

பெரும்பாலான யூதர்கள் கிறிஸ்துவை புறக்கணித்து, வெறுத்து, சிலுவையில் அறைந்தாலும், சிலர் இந்த மகிழ்ச்சியான உண்மையை அனுபவித்தார்கள். ஒருவன் தன்னைத் தாழ்த்தும் போது அவரை அறிகிறான். அவரை விசுவாசிக்கிறான். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். இறைவனுடைய அன்பில் நிலைத்திருந்தார்கள். ஆதி அப்போஸ்தலர்களின் சாட்சியின் மூலம் இன்றும் பரிசுத்த திரியேகரின் வல்லமை மக்கள் மத்தியில் தங்கியிருக்கிறது.

யூதர்களில் சிலர் கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக் கொண்டிருந்த போது, பெருந்திரளான கிரேக்கர்களும், மற்ற தேசத்தைச் சார்ந்தவர்களும் இரட்சிப்பின் நற்செய்திக்கு தங்கள் இருதயங்களைத் திறந்தார்கள். இந்த செய்தி வெறுமையான வார்த்தைகள் அடங்கிய ஒன்றல்ல என்பதை அவர்கள் அனுபவித்தார்கள். அது இறைவனின் வல்லமையினால் நிரப்பப்பட்டிருந்தது. அது விசுவாசிகளை வாழுகின்ற கிறிஸ்துவுடன் நித்திய உடன்படிக்கையில் இணைக்கின்றது.

பிரியமுள்ள சகோதரனே, கிறிஸ்துவின் நற்செய்தியை நீ கவனமாக வாசி. அவருடைய வார்த்தைக்கு உன் இருதயத்தை திறந்துகொடு. இயேசுவின் இறைதன்மை மீது விசுவாசம் கொள். உனது விண்ணப்பங்கள் மூலம் அவருடன் பேசு. சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்து மெய் இரட்சகர், ஆசாரியர், வல்லமையுள்ள அரசர், மற்றும் உலகின் மீட்பர் என்பதை நீ அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்வாய். ஆகவே நற்செய்தியின் மீது உனது வாழ்வைக் கட்டு. தைரியமாக இரு. உனது பலவீனத்திலும் இறைவனுடைய பலம் வெளிப்படும்.

விண்ணப்பம்: நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனே, நீர் கிறிஸ்துவின் நற்செய்தியில் உம்மை வெளிப்படுத்தியிருக்கிறீர். எங்களை தூய்மைப்படுத்தும். எங்களுக்குள் வாசம்பண்ணும். ரோமருக்கு எழுதின நிரூபத்தின் எழுத்துகள் மற்றும் புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு புத்தகத்தின் மூலம் உமது வல்லமை முழுமையாக வெளிப்படுவதற்காக, நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். நாங்கள் உமது சத்தத்தைக் கேட்கும்படி, உம்மை விசுவாசிக்கும்படி எங்கள் கண்களையும், மனதையும் திறந்தருளும். உமது பராமரிப்பிற்கும், உமது வழிநடத்துதலுக்கும் எங்கள் வாழ்வை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறோம்.

கேள்வி:

  1. வசனம் 16-ல் உள்ள எந்த வாக்கியம் மிகவும் முக்கியமானது என்று நீ கருதுகிறாய்? ஏன்?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)