Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 119 (Moving to Sidon and Then to Crete)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஊ - செசரியாவிலிருந்து ரோமாபுரிக்கு கடல் பயணம் (அப்போஸ்தலர் 27:1 - 28:31)

1. முதலில் சீதோனுக்கும் பிறகு கிரேத்தாவுக்கும் செல்லுதல் (அப்போஸ்தலர் 27:1-13)


அப்போஸ்தலர் 27:1-13
1 நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள். 2 அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான். 3 மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான். 4 அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஒதுக்கிலே ஓடினோம். 5 பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். 6 இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான். 7 காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம். 8 அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது. 9 வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி: 10 மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். 11 நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான். 12 அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். 13 தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தா தீவுக்கு அருகாக ஓடினார்கள்.

இரண்டு நீண்ட வருடங்கள் கடந்து போய்விட்டது. பவுல் இன்னும் சிறைச்சாலையில்தான் இருக்கிறார். அந்த நாட்களில் பவுல் விண்ணப்பங்களை ஏறெடுப்பதிலும், தியானம் செய்வதிலும், திருச்சபைகளுக்குக் கடிதங்களை எழுதுவதிலும், சில தனிநபர்களுடன் முகமுகமாய்ப் பேசுவதிலும் தனது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டார். இறுதியில் ஆளுனர் பவுலை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்தார். அவர் மரியாதையாக ஒரு கப்பலில் அனுப்பி வைக்கப்படவில்லை. மாறாக ஒரு கைதியாக ரோமரல்லாத மற்ற கைதிகளுடனும் ரோமாபுரியின் கேளிக்கை மைதானங்களில் வீசப்படக்கூடிய அடிமைகளுடனும் அவர் கப்பல் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அடிமைகள் மைதானத்தில் கொடிய மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் அல்லது வேடிக்கை பார்க்கும் மக்களுடைய மகிழ்ச்சி ஆரவாரத்தின் நடுவில் அம்மிருகங்களால் கொடூரமாகக் கொல்லப்பட வேண்டும்.

பவுல் தனியாகப் பிரயாணம் செய்யவில்லை. மருத்துவராகிய லூக்காவும் உண்மையுள்ள மனிதனாகிய அரிஸ்தர்க்கு என்பவரும் அவரோடு பயணம் செய்தார்கள். இந்த இடத்திலிருந்து அப்போஸ்தலர் நடபடிகளில் “நாங்கள்” என்று தன்மையில் (first person) பேசப்படுவதை நாம் மீண்டும் காண்கிறோம். துயரங்களோடும் பாடுகளோடும் பரிசுத்தவான்களின் ஐக்கியம் முடிவடைந்துவிடுவதில்லை. மரண ஆபத்துகளிலும் அது ஆழமாக வேர்கொண்டு நிலைத்திருக்கும். பவுல் இரண்டு வருடங்கள் சிறைச்சாலையில் கழித்தபோது லூக்கா தன்னுடைய நற்செய்தி நூலுக்காவும் அப்போஸ்தலர் நடபடிகளுக்காகவும் நேரடியான சாட்சிகளிடம் விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார். கிறிஸ்துவின் வார்த்தைகளைத் தொகுத்து வைத்திருந்தவர்களிடத்தில் சேகரித்து எழுதிவைத்திருந்த பிரதிகளாகிய அந்த விலைமதிப்புடைய பொக்கிஷத்தைத் தன்னுடைய நீண்ட, ஆபத்தான பயணத்தின்போது பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். அவற்றை நீதில் நனைத்து விடாதபடி பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாத்தார். ஆனால் அந்த எழுத்துக்கள் எதிலும் அவர் தன்னுடைய பெயரைக் குறிப்பிடவில்லை. இந்த மூன்று பேரும் தங்களுக்குள் இருந்த அன்பின் ஐக்கியத்தினால் ரோமாபுரியை நோக்கிய தங்களுடைய பயணத்தில் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளை எவ்வாறு மேற்கொண்டார்கள் என்பதைக் காண்பது ஆறுதலளிக்கக்கூடியது.

அவர்கள் கடல் மார்க்கமாக சீதோனுக்குச் சென்றார்கள். அங்கு ஒரு கிறிஸ்தவர்களுடைய சமுதாயம் இருந்தது. செசரியா சிறைச்சாலையில் பவுல் இருந்தபோது அவரை அறிந்து அவர் மீது நல்நம்பிக்கை கொண்டிருந்த யூலியு என்ற மனிதாபிமானமுள்ள நூற்றுக்கதிபதி கப்பல் சரக்குகளை இறக்கும்போது சீதோன் நாட்டிற்குள் சென்று தன்னுடைய நண்பர்களைப் பார்த்து வருவதற்கு அவருக்கு அனுமதியளித்திருந்தார். அந்த தருணத்தில் ரோமர்களுடைய வழக்கப்படி பவுல் ஒரு போர்ச்சேவகனுடைய கையோடு சேர்த்து விலங்கிடப்பட்டிருந்திருக்கலாம். ஆயினும் அந்தச் சங்கிலி முழு நற்செய்தியை அறிவிப்பதற்கு அவருக்குத் தடையாக இருக்கவில்லை.

அவர்கள் அனதோலியாவிற்கு நேராகப் பிரயாணத்தைத் தொடங்கியபோது கப்பலுடைய திசைக்கு எதிர்த்திசையில் பலத்த காற்று வீசியது. கப்பல் தொடர்ந்து காற்றை எதிர்த்து முன்னேற முடியாமல் திணறி நின்றது. அவர்கள் தங்கள் பாய்மரங்களின் உதவியின்றி காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள். தூரத்திலுள்ள ரோமாபுரிக்கு அவர்களைக் கொண்டு செல்லும் மேற்குத் திசை காற்றில்லாத காரணத்தினால் அவர்கள் சைப்பிரஸ் மலைகளின் மறைவில் பயணம் செய்தார்கள். அவர்கள் இறுதியில் அனதோலியாவில் இருந்த மைரா என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கு கோதுமையை ஏற்றிக்கொண்டு ரோமாபுரிக்குச் செல்லும் பெரிய கப்பலைக் கண்டு அதில் கைதிகளை ஏற்றினார்கள். வழக்கமாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலாக இருந்த அது அன்று பயணிகளையும் ஏற்றிச் செல்லும் கப்பலாக மாறியது. தங்களுடைய காலனியாதிக்கத்திற்குக் கீழ் இருந்த விலை குறைந்த கோதுமையையும் இரத்த வெள்ளத்தில் மிதக்கப்போகும் அடிமைகளையும் சுமந்துகொண்டு ரோமர்களுக்காக அந்தக் கப்பல் ரோமாபுரியை நோக்கிப் புறப்பட்டது. இவ்வாறுதான் தங்களுடைய அநியாயமான ஆட்சியை ஆதரிக்கக்கூடியவர்களாக ரோமாபுரியின் மக்களை சோம்பேறிகளாகவும் சிந்தனையற்றவர்களாகவும் அன்றைய ஆட்சியாளர்கள் மாற்றி வைத்திருந்தார்கள். அதே போன்ற நிலை இன்றும் சில நாடுகளில் நிலவுவதை நாம் காணலாம். மக்கள் உண்பதற்கு உணவும் சோர்வு நீங்குவதற்கு விளையாட்டும்தான் மக்களுடைய தேவைகளாகக் கருதப்படுகிறது.

ரோமாபுரிக்கு நற்செய்தி எடுத்துச் செல்லப்படுவதை தீய ஆவிகள் தடைசெய்வதைப் போல இருந்தது, பவுல் இறுதியாக ரோமாபுரிக்குச் செல்லும்படி மேற்கொண்ட பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட தடைகளும். நரகத்தின் வெறுப்பு பவுலையும் அவரது உடன் பயணிகளையும் தாக்குவதற்கு ஆயத்தமாயிருந்தது. தனக்கு எதிராக வரும் தீமையின் தாக்குதல்களைப் பவுல் உணர்ந்தார். நேரிடவிருக்கும் ஆபத்துக்களைப் பற்றிச் சொல்லி, அதிகாரிகளைப் பவுல் எச்சரித்தார். ஆனால் கப்பல் தலைவன் “நல்ல துறைமுகம்” எனப்பட்ட கிரேத்தா துறைமுகத்திற்கு வந்தவுடன் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டான். நல்ல துறைமுகம் உண்மையில் அவர்களுக்கு நல்ல துறைமுகமாக இருக்கவில்லை. குளிர்காலத்தின் காற்றுக்கு ஊடாகப் பிரயாணம் செய்வது சாத்தியமில்லாத காரணத்தினால் அவர்கள் குளிர்காலத்தை ஒரு பாதுகாப்பான துறைமுகத்தில் கழிக்க வேண்டும் என்று கருதி, காற்று வீசுவதற்கு முன்பாகவே தங்கள் பிரயாணத்தை ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர்களுடைய இந்த முடிவு பயணிகள் யாவரையும் கடலின் ஆழத்தில் அமிழ்த்த வேண்டும் என்று தீயவனாகிய பிசாசினால் உண்டான யோசனையாக இருந்தது. நற்செய்தி அறிவிக்கப்படுவதைத் தடைசெய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல பிசாசின் நோக்கம், நற்செய்தியாளர்கள் அனைவரையும் இரக்கமின்றி அழிக்க வேண்டும் என்றும் அவன் கருதுகிறான்.

விண்ணப்பம்: எங்களுடைய ஆத்துமாக்களும் எங்கள் நண்பர்களுடைய ஆத்துமாக்களும் அழிக்கப்பட்டுப் போய்விடாதபடி எப்போதும் நாங்கள் உம்முடைய சத்தத்தைக் கேட்க ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, உம்முடைய பாதுகாப்பில் நிலைத்திருக்க எங்களுக்குப் போதித்தருளும்.

கேள்வி:

  1. ரோமாபுரிக்கு கடல்வழியாகப் பயணம் செய்த அந்த மூன்று பரிசுத்தவான்கள் யார்?

www.Waters-of-Life.net

Page last modified on March 07, 2014, at 05:56 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)