Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 042 (First Persecution of the Christian Church at Jerusalem)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

1. எருசலேமில் உள்ள கிறிஸ்தவ சபையின் முதல் உபத்திரவமும் சமாரியா முழுவதும் விசுவாசிகள் சிதறிப்போகுதலும் (அப்போஸ்தலர் 8:1-8)


அப்போஸ்தலர் 8:1-3
1 அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். 2 தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்.3 சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.

சாட்சியை கேட்டவர்கள் அனைவரும் கடுஞ்சினத்தினால் நிறைந்திருந்தார்கள். ஏனெனில் அவர்கள் ஸ்தேவான் பேசியதை வெளிப்படையான தூஷணம் என்று கருதினார்கள். ஸ்தேவான் கிருபை, இரக்கத்திற்காக கெஞ்சாமல் பரிந்துரை விண்ணப்பம் செய்த போது அவர்கள் இன்னும் அதிகமாக கோபம் அடைந்தார்கள். ஹெலனிஸ்டிக் யூதர்களில் கால் பகுதிக்கும் மேலானோர் கிறிஸ்தவர்களாக மாறியிருந்தார்கள். கோபமுற்ற சட்டநிபுணர்கள் அவர்களை நோக்கி விரைந்தார்கள். அவர்களுடைய நோக்கம் அவர்களை அழிப்பதாகும். ஏனெனில் அவர்களும் ஸ்தேவானைப் போல, அன்புடன் தர்க்கரீதியாகவும், கிரமமாகவும் எருசலேம் மக்களுக்கு பிரசங்கிக்க ஆரம்பித்திருந்தார்கள். பிரதான ஆசாரியர்கள் மக்கள் மத்தியில் மேலும் வெறுப்புணர்வைத் தூண்டினார்கள். பகைமையின் அக்கினியை மிகவும் தீவிரமாக பரவச் செய்தார்கள். பாரம்பரியங்கள் உடைக்கப்பட்டதன் விளைவாக மிகப்பெரிய அளவில் கோபம் பெருகியது. கண்டுணரக்கூடிய ஆசிர்வாதங்கள் நிமித்தம் பழைய உட்பகைகள் மற்றும் பொறாமைகள் மீண்டும் தலை தூக்கியது. அந்நாட்களில் எருசலேமில் அதிகமான கண்ணீர் சிந்தப்பட்டது. குழந்தைகளை விட்டு பெற்றோர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். கணவன்கள் தங்களுடைய மனைவிகளை விட்டு பிரிக்கப்பட்டார்கள். விதவையான தாய்மார்களிடமிருந்து வாலிபர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்.

சவுல் பக்திவைராக்கியமுள்ளவர் மேலும் மதப்பற்றுள்ளவர். இயேசு எனப்படும் கள்ள உபதேசத்தை அழிப்பதற்காக யூத ஆலோசனைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கடிதம் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. கமாலியேலின் ஆலோசனை அங்கு எடுபடவில்லை. நியாயப்பிரமாணத்திலும், ஆராதனை முறைமைகளிலும் உறுதியில்லாத ஒவ்வொரு யூதனும் துன்புறுத்தப்பட்டான். சவுல் துணிகரமாக வீடுகளில் நுழைந்தான். அதற்காகவே ஒரு குழுவை வைத்திருந்தான். அவன் ஆண்கள், பெண்கள் அனைவரையும் பலவந்தமாக இழுத்து சென்றான். அவர்களை சிறைச்சாலையில் போட்டான், வாரினால் அடிப்பித்தான். அவர்கள் இயேசுவை மறுதலிக்கவில்லையென்றால், அவர்களுக்கு மரணத்தையும் கொண்டுவந்தான்.கிறிஸ்தவ சபையை துன்புறுத்தியதற்காகவும், மரணத்திலிருந்து எழுந்தவருக்கு எதிராக தூஷணம் பண்ணும்படி மெய்யான விசுவாசிகளை கட்டாயப்படுத்தியதற்காகவும், பிற்பாடு பவுல் கண்ணீருடன் அறிக்கையிட்டான். நியாயப்பிரமாணத்தை மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்க முற்பட்டதால் அவன் குருடனாகவும், அன்பற்றவனாகவும் இருந்தான். நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல் அன்பு என்பதை உணராமல் அவன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான். மேலும் அவன் பிசாசாக மாறியிருப்பதை அவனது செயல்கள் மூலம் உணராமல் அவன் பட்டயத்தின் மூலம் இறைவனுக்கு சேவை செய்தான்.

அண்டைப்பகுதிகளுக்கு அநேக கிறிஸ்தவர்கள் சிதறிப் போனார்கள். அவர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள், தூரமான கிராமங்களுக்கு ஓடிப் போனார்கள். வெறுத்து ஒதுக்கப்பட்ட சமாரியாவுக்கும் சென்றார்கள். மரணப்புயலில் இருந்து தங்களை பாதுகாக்க அங்கு கூடாரம் போட்டார்கள். மக்கள் அவர்களிடம் கேட்டார்கள். “நீங்கள் ஏன் ஓடி வந்துள்ளீர்கள்? உணவும் இல்லாமல், உடையும் இன்றி ஏன் இந்த குழப்பம்? அவர்கள் பதிலளித்தார்கள். “நாங்கள் கிறிஸ்துவை நேசிக்கிறோம். எங்களது எதிரிகளையும் நாங்கள் நேசிக்கிறோம். எனவே தான் நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம். இவ்விதமாக அவர்கள் அந்த மக்களுக்கு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவரைக் குறித்த நற்செய்தியை கூறினார்கள். எருசேலமில் அவருடைய சபை பாடுபட, கிறிஸ்து அனுமதித்தார். அது சுருங்கிப் போவதற்கு அனுமதித்தார். பயத்துடன் சிதறி ஓடுகிற கோழிக் குஞ்சுகள் மீது நீலவானத்தில் இருந்து திடீரென தாக்குவதற்கு பாயத் துடிக்கும் கழுகைப் போல துன்மார்க்கமான எதிரி செயல்பட்டான். கிறிஸ்துவின் கட்டளையின்படி எருசலேமில் இருந்து ஒவ்வொரு யூத கிராமத்திற்கும், சமாரியாவிற்கும், பின்பு மற்ற நாடுகளுக்கும் நற்செய்தியானது கூறப்பட்டது. கிறிஸ்துவின் வெற்றிப் பவனி ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. அது உலகத்தின் முடிவு வரை ஒவ்வொரு மொழி, இன மக்களுக்கு கிறிஸ்துவின் வருகை வரை தன்னுடைய வழியில் தொடர்கிறது.

எல்லாக் கிறிஸ்தவர்களும் எருசலேமை விட்டு ஓடிப் போகவில்லை. அப்போஸ்தலர்கள் தங்களுடைய இரட்சகருக்காக மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்கும்படி அங்கேயே இருந்தார்கள். வயதானவர்கள் மற்றும் விதவைகளுடன், அவர்களுக்கு ஆறுதலாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அனாதைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கவனித்துக் கொண்டார்கள். உண்மையுள்ள மேய்ப்பர்களாக அப்போஸ்தலர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் தங்களது சொந்த விடுதலையைத் தேடவில்லை. குறிப்பாக தீமையின் நாட்களில் தங்களுடைய மந்தையைக் காத்துக்கொண்டார்கள். அப்போஸ்தலர்களின் கரங்களினால் ஆசீர்வாத சுகத்தை அனுபவித்த அநேக நண்பர்கள் ஒருவேளை அப்போஸ்தலர்களை பாதுகாத்திருக்கலாம். இந்த அப்போஸ்தலர்கள் ஸ்தேவானைப் போல, விடுதலையடைந்த கிறிஸ்தவ சகோதரர்களைப் போல இல்லாமல் தேவாலயத்திற்கு தொடர்ந்து சென்று விண்ணப்பங்கள் ஏறெடுத்தினாலும், மேலும் நியாயப்பிரமாணம் மற்றும் பிற முறைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உண்மையுள்ள யூதர்களாக இருந்ததினாலும், ஒருவேளை அவர்கள் துன்புறுத்தப்படாமல் இருந்திருக்கலாம்.

மேலும் எருசலேமின் அனைத்து மக்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோபமான நிலையில் இல்லை. ஆலோசனைச் சங்கத்திற்கு நெருக்கமாக இருந்தவர்கள் மாத்திரமே எல்லா சந்துகள் மற்றும் தெருக்களில் சென்று பரிசுத்த ஆவியானவரை தங்களில் பெற்றிருக்கும் ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து அழிக்க முற்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரைக்கூட நினைவில் வைத்திருக்கக் கூடாது என்று அவர்கள் உறுதியாக செயல்பட்டார்கள். இந்த கலகத்தின் நிமித்தம் பக்தியுள்ள அநேக யூதர்கள், ஸ்தேவானின் கல்லெறியப்படுவதை அங்கிகரிக்காதவர்கள் இணைந்து கூடினார்கள். அவர்கள் ஸ்தேவானின் சரீரத்தை சுமந்து சென்று எல்லோரும் காணும்படி நல்லடக்கம் செய்தார்கள். அவனுக்காக சத்தமிட்டு அழுது, புலம்பினார்கள். இந்த மிகப்பெரிய அநீதியினால் தங்கள் மீதும், தங்கள் பட்டணத்தின் மீதும் இறைவனின் கோபாக்கினை விழுவதை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் இந்த சத்தியத்தின் தாழ்மையுள்ள ஊழியனை நேசித்தார்கள். பூமியில் இறைவனின் தூதனைப்போல அன்புள்ள மனிதனாக அவர்களுக்கு சேவை செய்திருந்தவனை நேசித்தார்கள். இந்த பக்தியுள்ள மனிதர்கள் நற்செய்தியின் ஆவிக்கு வெகு அருகில் இருந்தார்கள். இருப்பினும் கிறிஸ்தவத்தில் வெளிப்படையாக இணைந்து கொள்ள தைரியம் கொள்ளவில்லை.

அருமையான சகோதரனே, துன்புறுத்தலின் நேரம் வரும்போது நீ பாடுபட ஆயத்தமாய் இருக்கிறாயா? அல்லது நீ ஓடிப்போக முற்படுவாயா? பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு கவனமாக செவிகொடு. அவர் உன்னைப் படிப்படியாக வழிநடத்த விரும்புகிறார். இரத்தசாட்சியாக மரித்து தான் குமாரனை மகிமைப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. நீ எங்கிருந்தாலும் அவருக்கு சாட்சியாய் வாழ அவர் விரும்புகிறார். ஆகவே ஆண்டவரின் சத்தத்திற்கு கவனமாக செவி கொடு. உனது சுயநலத்திற்கு மரித்துவிடு. அப்போது கிறிஸ்துவிற்கு நீ சேவை செய்ய முடியும். அவருக்காக வாழ முடியும்.

விண்ணப்பம்: ஆண்டவரே! நீரே என்னை ஆட்கொண்டவர். நான் எனக்காக வாழாதபடி, இரவும், பகலும் உமக்காக சேவை செய்ய உதவி செய்யும். மரணபரியந்தம் உண்மையாய் இருக்க கற்றுத்தாரும். வார்த்தைகளில் மாத்திரம் அல்ல, உம்முடைய அன்பை நற்செயல்களில் வெளிப்படுத்துவதிலும் உண்மையாய் இருக்கச் செய்யும். எங்கள் மீது இரக்கமாயிரும். உமது அன்பிற்கு எதிரிகளாய் இருக்கும் அனைவரையும் ஆசீர்வதியும். ஆமென்.

கேள்வி:

  1. எருசலேமில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட போது உண்டான அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)