Previous Lesson -- Next Lesson
இ) வருங்காலத்தைக் குறித்து இயேசு முன்னுரைக்கிறார் (யோவான் 21:20-23)
யோவான் 21:20-22
20 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.21 அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.22 அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
பேதுரு இயேசுவினுடைய ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் மேய்க்கும்படி அவனுடைய எஜமானனிடம் இருந்து அழைப்பு பெற்றபோது அதற்கு செவி கொடுத்தார். யோவான் சீடர்களில் வயது குறைந்தவராக இருந்தார். யோவானைக் குறித்த இயேசுவின் நிலையை அறிய பேதுரு ஆர்வமாய் இருந்தான். அவன் வயது குறைந்தவனாய் இருப்பதால், அவனை வீட்டிற்கு அனுப்பி விடுவாரா? அல்லது சண்டையில் அவனை அதிகாரியாக நியமிப்பாரா?
ஒருவேளை பேதுருவின் வார்த்தைகளில் பொறாமையின் சாயல் காணப்பட்டிருக்கலாம். ஏனெனில் மற்றவர்களை விட தான் அதிகம் நேசித்த யோவானுக்கு இயேசு முன்னுரிமை கொடுக்கலாம் என்று எண்ணினான். அந்த கடைசி இராப்போஜனத்தில் இறுக்கமான சூழ்நிலை மத்தியில் காட்டிக்கொடுப்பவன் யார் என்று விசாரிக்கும்படி பேதுரு யோவானுக்கு சைகை காட்டினான்.
இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவனாக யோவான் இருந்தான். எனவே சிலுவையின் அருகே, கிறிஸ்துவின் எதிரிகள் மத்தியில் தனது உயிரை பணயம் வைத்து நின்று கொண்டிருந்தான். ஆண்டவர் உயர்த்தெழுந்தார் என்பதை முதலில் விசுவாசித்தவன் அவன். மீன்களை பிடித்துக்கொண்டிருந்த சமயம் ஆண்டவரை முதலில் அடையாளம் கண்டு கொண்டவன் அவன். பேதுருவை இயேசு அழைக்கும் முன்பாகவே அவன் இயேசுவை பின்பற்றி நடந்து வந்தான். அவனது இருதயம் கிறிஸ்துவிடம் இணைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் மத்தியில் ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவனாக அவன் இருந்தான். மேலும் பேதுரு இயேசுவிடம் கேட்டான். இதே விதமான கடினமான மரணத்தை அவனும் சந்திப்பானா என்று அவனைக் குறித்து முன்னுரைக்கும்படி கேட்டான். அல்லது தனக்கு மாத்திரம் அப்படிப்பட்ட மரணமா? என்பதை வினவினான். இயேசு முதன்மை அப்போஸ்தலனுக்கு இவ்விதம் பதிலளித்தார். மற்ற அனைவரையும் ஆளுகை செய்வது அல்ல, சகோதரனாக அவர்களுக்கு சமமாக இருக்க வேண்டும். கர்த்தருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் யோவானின் முடிவைக் குறித்து கவலைப்படுவது பேதுருவின் வேலையல்ல. பேதுரு அப்போஸ்தலர்களின் செய்தியாளனாக இருந்தார். யோவான் அமைதியுடன் இருந்தான். ஜெபத்துடன் இருந்தான். திருச்சபையில் இறையியல் கோட்பாடுகளின் வளர்ச்சியில் பங்காற்றினான். விண்ணப்பத்தின் வல்லமையினால் தாக்கத்தை ஏற்படுத்தினான். (அப்போஸ்தலர் 3:1; 8:14; கலாத்தியர் 2:9)
யோவானைப் பற்றி இயேசு குறிப்பிட்ட வார்த்தைகளில் இருந்து நாம் ஒன்றை கற்றுக்கொள்கிறோம். நாம் கிறிஸ்துவின் பணியில் நீண்ட காலம் வாழுகிறோமா அல்லது அவருக்காக இந்த பூமியில் விரைவில் மரிக்கிறோமா என்பது முக்கியமல்ல. மிக முக்கியமானது நமது விசுவாசமும், அவருக்கு தொடர்ச்சியாக கீழ்ப்படிவதும் ஆகும். இயேசு அவரைப் பின்பற்றியவர்கள் அனைவரையும் ஒன்று போல் பாவிக்கவில்லை. ஒவ்வொருவரும் அவரது எஜமானரை மகிமைப்படுத்த சிறப்பான பாதையை ஆயத்தம்பண்ணுகிறார். யோவானின் மரணம் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. ஒருவேளை இயற்கை மரணமாக அது இருக்கலாம்.
பேதுரு தன்னை மட்டும் பார்க்க வேண்டும் என்று இயேசு கூறினார். மற்றவர்களை அவன் பார்க்கக் கூடாது. இதற்காக நாம் மற்ற கிறிஸ்தவர்களை குறித்து அக்கறையற்றிருக்கக் கூடாது என்பது இதன் பொருள் அல்ல. நாம் நம்முடைய வாழ்க்கைக்கான இறைவனின் சித்தத்தை அறிய முற்படுகிறோம். எந்த நிபந்தனையுமின்றி அவரைப் பின்பற்றுகிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனின் நோக்கமும் உண்மையாகப் பின்பற்றுவது ஆகும்.
மேலும் அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்து சீஷர்களுடன் இயேசு பேசினார். உலக வரலாற்றின் இலக்காக அந்த வருகை இருக்கிறது. இந்த எதிர்கால நிகழ்விற்கு நேராக எல்லா சீஷர்களின் சிந்தனைகளும் திசை திருப்பப்பட்டது. எல்லா சந்ததியினரது ஏக்கங்களும் நிறைவேறும். இறைவன் மக்கள் மத்தியில் பிரசன்னமாவார். இயேசு தமது மகிமையுடன் வருவார். நீங்கள் அவரை எதிர்பார்த்து இருக்கிறீர்களா? விண்ணப்பம், சேவை, புனிதப்பாடல்கள், மற்றம் பரிசுத்தப்படுத்தப்பட்ட உங்கள் சாட்சி இவைகளினால் நீங்கள் ஆயத்தமாய் உள்ளீர்களா? மற்றவர்களைப் பின்பற்றாமல் இயேசுவை விசுவாசத்துடன் பின்பற்றும் பெருந்திரளான விசுவாசிகளை அவரது பிரசன்னத்தில் நாம் காண்போம்.
யோவான் 21:23
23 ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
யோவான் வயது முதிர்ந்து மரிக்காமல் இருப்பான் என்ற கருத்து பரவியது. மேசியாவைக் குறித்த எதிர்பார்ப்புகள் நிறைந்த சபைகளுக்கு அவன் ஒரு அடையாளமாக மாறினான். கர்த்தர் வருமளவும் அவன் மரிப்பதில்லை என்ற நம்பிக்கை பரவியது. ஆண்டவரின் சீக்கிரமான வருகையை பவுலும் எதிர்பார்த்திருந்தார். அப்போது அவர் மரிக்காமல். நொடிப்பொழுதில் மறுரூபமாக்கப்பட்டு, பரலோகத்தினுள் எடுத்துக்கொள்ளப்படுவார் என்று எண்ணினார். யோவான் ஓர் உண்மைவாதி. இயேசு அவ்விதமாகக் குறிப்பிடவில்லை என்று எழுதுகிறார். வானங்கள் திறக்கும், மகிமையுள்ள கர்த்தர் தோன்றுவார். யோவானைக் குறித்த ஆண்டவனின் நோக்கங்கள், முடிவுகள் பேதுருவின் விருப்பங்களுக்கு உட்பட்டதல்ல. ஆண்டவர் தமது சீடர்களை வழிநடத்தும்படி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பாதையை வகுக்கிறார். அவர் மாத்திரமே நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீரே மகிமை நிறைந்த இரட்சகர், உண்மையுள்ள மேய்ப்பர். பேதுருவையும், யோவானையும் அவர்களுக்கு பொருந்தும் வழிகளில் தனித்தனியாக அவர்களை நடத்தியதற்காக உமக்கு நன்றி. தங்கள் வாழ்வு மற்றும் மரணத்தின் மூலம் உம்மை அவர்கள் மகிமைப்படுத்தினார்கள். உம்மை மட்டுமே பின்பற்றி நடக்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தாரும். உமது வருகையின் நோக்கத்திற்கு நேராக எங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வழிநடத்தும். சீக்கிரத்தில் நிகழப்போகும் உமது வருகைக்காக அவர்கள் மகிழ்ச்சியும் தங்களை ஆயத்தம் செய்ய வழிநடத்தும்.
கேள்வி:
- இந்த நற்செய்தியில் உள்ள கிறிஸ்துவின் இறுதி வார்த்தைகள் என்ன பொருள் தருகிறது?