Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 068 (Our security in the union of Father and Son)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
3. நல்ல மேய்ப்பன் இயேசு (யோவான் 10:1–39)

ஈ) பிதாவோடும் குமாரனோடும் உள்ள ஐக்கியத்தில் நமக்கிருக்கும் பாதுகாப்பு (யோவான் 10:22-30)


யோவான் 10:22-26
22 பின்பு எருசலேமிலே தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். 24 அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். 25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 26 ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

தேவாலயப் பிரதிஷ்டைப் பண்டிகை என்பது கி. மு. 515ல் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போய் திரும்பி வந்து தேவலாயத்தைப் புதுப்பித்ததை நினைவுகூர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சி ஆரவாரம் மிக்க ஒரு தருணமாகும். மக்கபேயர்கள்தான் அந்த தேவாலயத்தை கி. மு. 165 திரும்பக் கட்டினார்கள். அது டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். எருசலேம் 750 மீட்டர் உயரத்தில் இருப்பதால், அது குளிரும் மழையுமுள்ள காலமாகக் காணப்படும். ஏற்கனவே துன்பத்திற்குள்ளான இயேசு, இந்த சந்தர்ப்பத்தில் மறுபடியும் தேவாலயத்திற்குள் வந்து, அங்கு வருபவர்கள் கேட்கும்படி சாலமோனுடைய மண்டபத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். இந்த கிழக்கு மண்டபம் அப்போஸ்தலர் 3:11 மற்றும் 5:12 ஆகிய பகுதிகளில் மறுபடியும் குறிப்பிடப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் யூதர்கள் இயேசுவைத் தாக்க ஆயத்தப்பட்டார்கள். அவர் எதிர்பார்க்கப்படும் மேசியாவா இல்லையா என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்:டுக்கொண்டார்கள். மக்கள் எதிர்பார்த்திருந்த மேசியாவைக் காட்டிலும் மேன்மையான, பரந்துபட்ட காரியங்களைச் செய்யும் ஒருவராகவே அவர் தன்னை அறிவித்தார். அவர்கள் எதிர்பார்த்திருந்ததற்கும் அதிகமான காரியங்களை இயேசு சொன்னபோது அவர்கள் இடறலடைந்தார்கள். ஆனால் இயேசு மேசியாவாக இருக்க முடியும் என்று சிலர் நம்பினார்கள். அவருடைய ஆள்த்துவமும், அதிகாரமும், அவருடைய செயல்களும் மக்களை நம்ப வைத்தது.

அவர்கள் இவ்வாறு கேட்டதன் மூலமாக ஒரு கிறிஸ்தவ தேசிய இயக்கத்திற்கு அவர் மக்களை அழைக்கும்படி இயேசுவை வற்புறுத்தினார்கள். அந்தப் பண்டிகை மக்கபேயர்களுடைய புரட்சியின் நினைவாகத்தானே கொண்டாடப்பட்டது. அவர் தன்னை அரசனாக அதிகாரபூர்வமாக அறிவித்து, மக்களை ஆயுதமேந்த அழைப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் ரோமப் பேரரசின் ஆட்சியைப் புறக்கணித்து அதற்கு எதிராகப் போரிடவும் ஆயத்தமாயிருந்தார்கள். இயேசுவின் திட்டமோ வேறுவிதமாக இருந்தது. அவர் தாழ்மையையும், அன்பையும், மனமாற்றத்தையும் பற்றி பேசினார். இயேசு தான் மேசியா என்பதை யூதர்களிடம் சொல்லவில்லை. ஆனால் சமாரியப் பெண்ணிடம் சொன்னார். குணமாக்கப்பட்ட குருடனிடத்திலும் தன்னுடைய மகிமையை அவர் அறிக்கை செய்தார். கொடூரமான அரசியல்வாதியாகிய ஒரு மேசியாவை யூதர்கள் எதிர்பார்த்தார்கள். அவரோ இரக்கமுள்ள ஆன்மீக இரட்சகராக காணப்பட்டார். மக்கள் அதிகாரத்தையும், விடுதலையையும், மகத்துவத்தையும் குறித்துக் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். இயேசுவோ சுய வெறுப்பையும், மனஸ்தாபத்தையும், புதுப்பித்தலையும் குறித்துப் பேசினார். அவர் தன்னுடைய மேன்மையை அவர்களுக்கு அறிவித்தார். ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளாமல், அவரிடம் இல்லாததை எதிர்பார்த்தார்கள். அவர்களுடைய சிந்தையும் கிறிஸ்துவின் சிந்தையும் ஒத்துப்போகவில்லை. விசுவாசம் அவர்களுடைய இருதயத்தில் தோன்றவில்லை. இயேசுவின் ஆவிக்கு அவர்கள் தங்கள் இருதயத்தைத் திறந்துகொடுக்கவில்லை. அவரைத் தாங்கி, அவருக்கு வெற்றியளித்த பிதாவின் நாமத்திலே அவர் அற்புதங்களைச் செய்தார். யூதர்கள் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உறவையே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இன்றுவரை தீவிரவாதத்தையும், பணத்தையும், எல்லைகளை விரிவாக்குதலையுமே தேடுகிறார்கள்.

யோவான் 10:27-28
27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.

இயேசு இறைவனுடைய தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியாக இருக்கிறார். அவர் தன்னைப் பின்பற்றிவரும் மந்தைகளும் ஆட்டுக்குட்டிகளுமானவர்களைப் பார்த்து, தன்னுடைய தன்மையை அணிந்துகொள்ளும்படி அறிவுறுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் புதிய படைப்புகளாக மாற்றி, இயேசுவின் சத்தத்தை கேட்கும்படி அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் திறந்திருக்கிறபடியால், அவருக்குச் செவிகொடுப்பதே அவர்களுடைய முதன்மையான குணாதிசயமாயிருக்கிறது. விருப்பத்துடன் செவிகொடுப்பதே சீஷத்துவத்தின் ஆரம்பமாகும்.

தன்னுடைய வார்த்தைக்குச் செவிகொடுப்பவர்களைக் கிறிஸ்து தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார். அவர் அவர்களை நேசித்து, அவர்களுடைய இரகசியங்கள் அனைத்தையும், அவர்களை எவ்விதமான சாயலில் மாற்றப் போகிறார் என்பதையும் அறிந்திருக்கிறார். மெய்க்கிறிஸ்தவர்கள் இலக்கற்றவர்களாக, பொறுப்பற்றவர்களாக வாழமாட்டார்கள். அவர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய பெயர்கள் பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் இறைவனுடைய புதிய படைப்புகளாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறார்கள்.

இயேசு நல்ல மேய்ப்பனைப் போல இருக்கிறார். அவருடைய மந்தைகள் அவருடைய சத்தத்தை அறிந்திருக்கிறது. அவரை மகிழ்வுடன் பின்சென்று அவருடைய தலைமைத்துவத்திற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கிறது. அவை தங்கள் மேய்ப்பனுடைய சித்தத்தைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. எந்தத் தீமையான சிந்தனைகளுக்கும் அவர்களுடைய இருதயத்தில் இடமில்லை. அவைகள் சாந்தமுள்ள ஆடுகளாயிருக்கிறது.

கிறிஸ்து அவர்களில் செயல்பட்டதாலேயே இந்த மாற்றம் அவர்களில் ஏற்பட்டிருக்கிறது. பாவத்தையும் மரணத்தையும் வெல்வதற்கு வேண்டிய இறைவனுடைய அன்பையும் வல்லமையையும் அவர் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்கள் அவருடைய ஈவாகிய நித்திய வாழ்வைப் பெற்றிருப்பதால், மரிக்காமல் என்றும் பிழைத்திருப்பார்கள்.அவர்கள் நித்திய நியாயத்தீர்ப்பிலும் அழிவிலுமிருந்து காக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட எந்த மந்தையும் அழிந்து போகாது. அவர் தன்னுடைய மகிமையை விட்டு மனித குலத்தை மீட்கும்படியாக இறங்கி வந்து, அவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக தன்னுடைய உயிரைக் கொடுத்தார். எந்த விலைகொடுத்தாகிலும் அவர்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். உங்கள் ஆண்டவருடைய கரத்தில் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறதா? நீங்கள் கிறிஸ்துவின் திறமையையும் வல்லமையையும் நம்புகிறீர்களா? ஒன்று நீங்கள் இந்த உலகத்தில் பாவியாக அலைய வேண்டும் அல்லது பரிசுத்த ஆவியினால் நிறைந்து, கிறிஸ்துவினால் இறைவனுடைய பிள்ளையாக மாற்றப்பட வேண்டும். கர்த்தருடைய பாதுகாப்பு நம்முடைய செயல்களைக் காட்டிலும் வல்லமையுள்ளது. ஏனெனில் அது நம்முடைய அறிவையும் தாண்டி வேலைசெய்யும். நாம் வெற்றியாளராகிய கிறிஸ்துவின் அருகில் நிற்போம்.

யோவான் 10:29-30
29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. 30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

இந்த வாலிபனாகிய கிறிஸ்து தங்களை மரணம், சாத்தான் மற்றும் இறைவனுடைய கோபம் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாரா என்ற சில விசுவாசிகளுக்குச் சந்தேகம் வரும். இது புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு தனது பிதாவையும் அவருடைய சர்வவல்லமையையும் நினைப்பூட்டுகிறார். பிதாவே இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொரு தனிமனிதனையும் தெரிந்துகொள்கிறார். பிதாவினுடைய தெரிந்துகொள்ளுதலும் சித்தமும் இல்லாமல் ஒருவரும் இயேசுவைப் பின்பற்ற முடியாது.

குமாரனை விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்கும் பிதாவாகிய இறைவன் பொறுப்பாளியாயிருக்கிறார். பிதா மேன்மையானவரும் சர்வவல்லமையுள்ளவருமாயிருக்கிறார். இயேசு தன்னையே பிரியப்படுத்தி வாழாமல் தன்னுடைய பிதாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

இதுதான் சுயவெறுப்பின் அளவுகோல். தெய்வத்துவத்தின் பரிபூரணம் முழுமையும் அவருக்குள் இருந்தது. சிலர் கிறிஸ்து பிதாவைக் காட்டிலும் சிறியவர் என்று பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் யார் தன்னை உயர்த்துகிறானோ அவன் தாழ்த்தப்படுவான் என்றும் யார் தன்னைத் தாழ்த்துகிறானோ அவன் உயர்த்தப்படுவான் என்றும் சொல்லுகிறார். இயேசு தன்னுடைய பிதாவிற்கு அனைத்து மகிமையையும் கொடுத்தபடியால், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று சொல்லும் உரிமையை அவர் பெற்றிருக்கிறார். இயேசு இவ்விதமாக வெளிப்படையாகப் பேசுவதால் நாங்கள் இன்னொரு இறைவனை உருவாக்குகிறோம் என்ற குற்றச்சாட்டு வலுவிழந்து போகிறது. நாங்கள் மூன்று தெய்வங்களை வழிபடவில்லை. ஒரே இறைவனைத்தான் வழிபடுகிறோம். கிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் இருக்கும் இந்த ஒற்றுமையை புரிந்துகொள்ள முடியாதவர்கள் பெருமையுள்ளவர்களாயிருக்கிறார்கள். தாழ்த்துவதில்தான் மேன்மை ஆரம்பிக்கிறது என்பதை உணராதிருக்கிறார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே நல்ல மேய்ப்பன். நீர் உம்முடைய மந்தைக்காக உம்முடைய உயிரைக் கொடுத்தீர். நாங்கள் மரிக்காதபடி நீர் எங்களுக்கு நித்திய வாழ்வைத் தந்தீர். நீர் எங்களை மரணம், சாத்தான், பாவம் மற்றும் இறைவனுடைய கோபம் ஆகியவற்றிலிருந்து காப்பதற்காக உமக்கு நன்றி. யாரும் எங்களை உம்முடைய கரத்திலிருந்து பறிக்க இயலாது. பிதா உம்மில் இருக்கிறார் என்பதை அறிந்து, எங்களுடைய பெலவீனத்தில் உம்முடைய பெலன் விளங்கும்படி நீர் எங்களுக்கு தாழ்மையைக் கற்றுத்தாரும்.

கேள்வி:

  1. கிறிஸ்து தன்னுடைய மந்தையை எப்படி நடத்துகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)