Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 002 (Identification and apostolic benediction)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)

அ) அடையாளப்படுத்துதல் மற்றும் அப்போஸ்தலனின் வாழ்த்துரை (ரோமர் 1:1-7)


ரோமர் 1:1
1 இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த பெருமையுள்ள அரசன் சவுலின் பெயர் தான் பவுல் பிறந்த போது அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. திருச்சபையைத் துன்பப்படுத்தியவன் கிறிஸ்துவின் மகிமையைக் கண்டபோது, தான் ஒன்றுமில்லையென்பதை உணர்ந்தான். பின்பு அவன் “சிறியவன்” என்று பொருள் உடைய “பவுல்” என்ற பெயரை ஏற்றுக் கொண்டான். தன்னுடைய சிறப்புமிக்க நிரூபத்தை அவன் இவ்விதம் தொடங்குகிறான். சிறியவனாகிய நான் இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இருக்கிறேன்.

கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அவன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறான். தனது விருப்பத்தை இழக்க அவன் சம்மதித்திருந்தான். அவனுடைய எஜமானுக்கு முற்றிலுமாக தன்னை ஒப்புக்கொடுத்தான். அவன் மனப்பூர்வமாக தன்னை வெறுமையாக்கினான். தன்னைத் தாழ்த்தினான், தனது அகங்காரத்திற்கு மரித்தான். கிறிஸ்துவின் ஆவியினுடைய நோக்கங்களுக்காக வாழ்ந்தான். அவனுடைய ஆண்டவரின் சித்தத்தை மிகுந்த சந்தோஷத்துடன் நிறைவேற்றினான். ரோமருக்கு எழுதின நிரூபத்தின் ஆசிரியர் உயிருள்ள கிறிஸ்து தான் என்பதை இது வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து தன்னுடைய கீழ்ப்படிதலுள்ள ஊழியக்காரனுக்கு இதை வெளிப்படுத்தினார். பவுலின் விருப்பத்திற்கு எதிராக இந்த வெளிப்பாடு இல்லை. கிறிஸ்து தன்னுடைய விசுவாசிகளை அடிமைப்படுத்துகிறதில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்படும்படி விட்டுவிடுகிறார். அவரை விசுவாசிக்க, அவரை நேசிக்க வழிநடத்துகிறார். அவர்கள் அவரை விட்டு பிரிந்துபோக விரும்புவதில்லை. ஏனெனில் அவரே அன்பின் ஆதாரமாக இருக்கிறார். அவருக்குள் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

கிறிஸ்துவின் ஊழியக்காரனாக, தனது தாழ்மையின் மூலம் பவுல் உன்னதமான நிலைக்கு, கனமான நிலைக்கு உயர்த்தப்பட்டான். தேசங்கள் மத்தியிலே தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டுவதற்காக அவனுடைய ஆண்டவர் அவனை அழைத்தார். ராஜாக்கள், அதிபதிகள் தங்களின் தூதுவர்களுக்கு அதிகாரம் வழங்கி, அவர்களுடன் ஏற்படுத்துகிற உடன்படிக்கை மூலம் தொடர்ந்து உறவுக்குள்ளாக இருப்பதைப் போல, பவுலுக்கு ஆண்டவர் அதிகாரத்தையும், உரிமைகளையும் வழங்கினார். அதேவிதமாக கிறிஸ்துவும் தன்னுடைய பணிக்காக இன்று உன்னை நேரடியாக அழைக்கிறார். இயேசுவின் அழைப்பிற்கு உனது இருதயத்தை திறந்துகொடு. ஒப்புக்கொடுத்தல் மற்றும் தாழ்மையுடன் தாமதமின்றி உன்னை முழுமையாக அவருக்கு அர்ப்பணம் செய். அப்போது உன் மூலமாக அவருடைய வல்லமை மற்றவர்களுக்கு கடந்து செல்லும். தேசங்களுக்கு கிறிஸ்துவின் தூதுவர்களைப் போல (ஸ்தானாபதி) பவுலுடைய கடிதங்கள் உலகத்தை மாற்றி அமைக்கும்படி செயல்பட்டன. கிறிஸ்துவிற்குப்பின் “சிறியவன்” என்று பொருள் கொண்ட பவுலை விடப் பெரியவன் ஒருவனுமில்லை.

கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பவுலின் நற்செய்தி என்ன? அது இறைவனின் மகிமையுள்ள நற்செய்தி ஆகும். பவுல் தன்னுடைய சொந்த எண்ணங்களோடு வரவில்லை. பரிதாபமுள்ள உலகிற்கு நற்செய்தியை அவன் தெளிவுபடுத்தினான். அக்காலத்தில் “நற்செய்தி” என்ற வார்த்தை அவர்களுக்கு பரிச்சயமான ஒன்றாக இருந்தது. அரசு சார்ந்த அறிவிப்புகளுக்காக ரோம மன்னனின் வீட்டில் அது பயன்படுத்தப்பட்டது. அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் போது அல்லது அவன் எதிரிகள் மீது வெற்றி பெறும் போது இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆகவே ராஜரீக குடும்பத்தில் நற்காரியங்களை பிரகடனம் செய்வதற்கு இவ்வார்த்தை பயன்படுத்தபட்டதால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. மனிதர்களுக்காக இறைவன் செய்த நற்காரியங்களை பவுல் கொண்டு வந்தார். கிறிஸ்துவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தினார். கிறிஸ்து வல்லமைகள் மீது வெற்றி கொண்டார். அதனால் இரட்சிப்பு கிடைக்கிறது. நற்செய்தியைக் கேட்பவர்கள் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள். இறைநீதிக்கு உட்படுகிறார்கள்.

பரிசுத்தமுள்ள இறைவன் நியாயப்பிரமாண மேதை பவுலை பிரித்தெடுத்து தீமையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். நியாயப்பிரமாணம் என்ற கடின நுகத்தை தங்கள் கழுத்தின் மேல் சுமந்து, நற்செயல்களை சார்ந்து வாழும் மக்களை விடுவிக்கும்படியாக அவர் அப்படிச் செய்தார். அவர்கள் தங்களைத் தாங்களாகவே விடுவித்துக் கொள்ள முடியாது. எனவே கிருபையின் காலத்திற்குள் அவர்களை கொண்டு வருகிறார். அவர்கள் கிறிஸ்து மூலமாக பரலோகத்தை அடைய முடியும். அவரே பிதாவிடம் செல்லக் கூடிய ஒரே வழியாக இருக்கிறார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் உமது ஊழியக்காரனாகிய பவுலை அழைத்ததற்காக நன்றி கூறுகிறோம். அவன் மூலமாக நாங்கள் உமது வார்த்தையைக் கேட்கும்படி, நீர் அவனை உலகம் முழுவதிலும் அனுப்பினீர். எங்களது பெருமை மற்றும் சுயதிருப்தி என்ற பாவங்களை மன்னியும். எங்களை தாழ்மைப்படுத்த உதவும். உம்முடைய அன்பின் ஊழியக்காரர்களாக மாற உதவும். உலகத்தின் அனைத்து விசுவாசிகளோடும் சேர்ந்து உமது தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற உதவும்.

கேள்வி :

  1. ''பவுல் தன்னுடைய நிரூபத்தின் முதல் வாக்கியத்தில் தன்னைக்

குறிப்பிடப் பயன்படுத்தும் தலைப்புகள் என்ன?''

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)