Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 098 (The Night Sermon)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

7. இரவு பிரசங்கமும், துரோவாவில் கர்த்தருடைய பந்தியும் (அப்போஸ்தலர் 20:6-12)


அப்போஸ்தலர் 20:6-12
6 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.9 அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.10 உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.11 பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.

ஹோமேரின் பாடல்கள் மற்றும் கிரேக்க புராணங்களுக்குப் பேர் போன துரோவா, ஐரோப்பாவில் நற்செய்தியை கொண்டு செல்ல பவுலுக்கும், அவனது உடன் வேலையாட்களுக்கும் ஆரம்பமாக இருந்தது. எபேசுவில் அப்போஸ்தலனுக்கு எதிராக ஏற்பட்ட கடும் எதிர்ப்பிற்குப் பின்பு பவுல் துரோவாவிற்கு வந்தான், அங்கே கிறிஸ்துவின் நாமத்தில் ஒரு உயிருள்ள சபையை நிறுவினான். (2 கொரிந்தியர் 2:12) எருசலேமிற்கு திரும்பும் வழியில் அவன் கடைசியாக இந்த பட்டணத்தை சந்தித்திருந்தான். பிலிப்பு துறைமுகம் காவல்லாவில் இருந்து துரோவாவிற்கு பயணம் செய்ய அவர்களுக்கு ஐந்து பகல்-மற்றும் ஐந்து இரவுகள் தேவைப்பட்டது என்று லூக்கா எழுதுகிறான். அவர்கள் முதலாவது ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கடந்து வரும் போது, அவர்களுக்கு இரண்டு நாட்கள் தான் தேவைப்பட்டிருந்தது. பவுலின் பயணத்தின் கடைசியில் ஒவ்வொரு காரியமும், கடினமாக, போராட்டம் மிகுந்ததாக, மற்றும் பிரச்சினைக்குரியதாக இருந்தது என்பதை இது உணர்த்துகிறது. இருப்பினும் அவர்கள் ஒவ்வொன்றையும் பொறுமை, நம்பிக்கை மற்றும் பெலத்துடன் சகித்துக் கொண்டார்கள்.

ஆரம்ப வசனங்களில் நாம் ஒரு குறிப்பைப் பார்க்கிறோம். துரோவாவில் யூதர்களின் ஓய்வுநாளில் அல்லாமல், வாரத்தின் முதல் நாளை புறஜாதி விசுவாசிகள் ஆராதனை நாளாக கடைப்பிடித்ததை காண்கிறோம். இந்த நாளில் கர்த்தர் வருமளவும் கர்த்தருடைய மரணத்தை நினைவு கூரும் வண்ணமாக அவர்கள் அப்பம் பிட்டு கர்த்தருடைய பந்தியை அனுசரித்தார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், கர்த்தருடைய பந்தியில் அவரது பிரசன்னம் மற்றும் பரிசுத்த ஆவியில் அவரது வல்லமை இவைகளே ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு, அவர்களது விசுவாச வாழ்வின் அஸ்திபாரங்களாக இருந்தது. அவர்களது சிந்தனைகள் உயிருள்ள ஆண்டவரை மையமாகக் கொண்டிருந்தது. அவரே அவர்களின் விண்ணப்பங்களைக் கேட்பவர், அவர்களை நீதிமானாக்குகிறவர், பரிசுத்தமாக்குகிறவர், அவர்களுக்காக இறைவன் முன்பு பரிந்து பேசுபவர், மற்றும் அவர்களை பூரணப்படுத்துபவர் ஆவார். பரிசுத்த ஆவியானவர் துவக்கி செயல்படுத்திய கிரியைகளினால் அலங்கரிக்கப்பட்டு, அவருடைய இரண்டாம் வருகையில் ஏற்றுக்கொள்ளப்பட பாத்திரவான்களாக அவர்கள் காணப்படுவார்கள்.

பவுல் மிக நீண்ட பிரசங்கத்தைப் பண்ணினார். பிரசங்கத்தை கேட்ட ஒருவர் கூட இருபது நிமிடங்களுக்குப் பின்பு களைப்படையவில்லை. ஒரு மணி நேரம் கழித்து, “போதும், நாம் வீட்டிற்குச் செல்வோம்” என்று அவர்களில் ஒருவர் கூட கூறவில்லை. பரிசுத்த ஆவியானவரின் அக்கினி அப்போஸ்தலனின் இருதயத்தில் இருந்து அவர்களது இருதயங்களுக்கு கடந்து சென்று, அவர்களை ஒளியூட்டி, எழுப்புதலடையச் செய்து பலப்படுத்தியது. நற்செய்தியினால் பிரகாசிப்பிக்கப்பட்ட அநேகரது மனங்களுக்கு அடையாளமாக அந்த மேலறையில் அநேக விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அந்த விளக்குகளில் இருந்து புறப்பட்ட வெளிச்சம் அந்த இருளில் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது.

அநேக விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால் காற்று புகையுடன் காணப்பட்டது. இதனிமித்தமாக வசனத்தைக் கேட்டவர்கள் சோர்வுற்று, தூக்க களைப்புடன் இருந்தார்கள். ஐத்திகு என்ற வாலிபன் மாசில்லாத காற்றை சுவாசிக்கும்படி ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டிருந்தான். ஒரு வேளை அவன் பகலில் கடினமாக உழைத்து, களைப்புற்றவனாக இருந்திருக்கக் கூடும். அவன் பவுலின் பிரசங்கத்தை கேட்க விரும்பினான். ஆனாலும் அவனது கண்ணிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டிருந்தன. அவன் தலை சாய்த்து அப்படியே தூங்கிவிட்டான். பின்பு அவன் பக்கமாக சாய்ந்து மேலிருந்து கீழே தரையிலே விழுந்துவிட்டான்.

இச்சம்பவம் இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றது. “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஏனெனில் ஆவி உற்சாகமுள்ளது தான் மாம்சமோ பலவீனமுள்ளது”. பிரசங்கத்தின் போது, பரிசுத்த வேதாகமம் வாசிக்கப்படும்போது, கவனம் சிதறாமல் எச்சரிக்கையுடன் இருப்பது கடினமான காரியம் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். சபைக்கு செல்வோர் அநேகர் நீண்ட பிரசங்கங்கள் நிமித்தம் தூங்கி வழிகிறார்கள். நற்செய்தி முழுமையானதாக இருந்தும் அவர்கள் பாவம், மற்றும் பெருமை இவைகளினால் ஆவிக்குரிய மரணத்தில் வீழ்ந்து போகிறார்கள்.

சன்னல் அருகேயிருந்து அந்த வாலிபன் கீழே விழுந்தவுடன் துரோவா சபையின் அங்கத்தினர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பவுல் துரிதமாக படிக்கட்டுகள் வழியே கீழே இறங்கிச் சென்றான். அந்த வாலிபன் மரித்திருந்தான், அவனது இதயத் துடிப்பு நின்றிருந்தது. பிரசங்கத்தை கேட்டவர்களில் ஒருவனுடைய மரணம் நிகழ்ந்ததின் மூலம் மரணத்தை ஜெயித்து எழுந்தவரைக் குறித்த பிரசங்கத்தை பிசாசு பரியாசம் பண்ண விரும்பினான். பிசாசினுடைய இந்த வெற்றியினால் பவுல் அதிருப்தியுடன் இருந்தான். பரிசுத்த ஆவியானவர் இறைவனின் மனிதன் மற்றும் தீர்க்கதரிசி எலியா செயல்பட்டதை நினைவிற்கு கொண்டு வந்தார். விசுவாச விண்ணப்பத்தின் மூலம் விதவையின் இறந்த மகனை, மூன்று முறை அவன் மீது விழுந்து, உயிரோடு எலியா எழுப்பியிருந்தான். (1 ராஜா 17:17-24) பயத்துடன் இருந்த கூட்டத்திற்கு முன்பு பவுல், அந்த மரித்த மனிதன் மீது, எலியா செய்தது போல் மூன்று முறை அல்ல, மாறாக இயேசுவின் நாமத்தினால் ஒரே முறை விழுந்தான். அவனை அணைத்துக் கொண்டான். மரித்த மனிதன் சுவாசிக்க ஆரம்பித்தான். அவனது ஆத்துமா அவனுக்குள் திரும்பி வந்தது. அவன் உயிர் பெற்றான். யோப்பாவில் பேதுருவை கிறிஸ்து பயன்படுத்தியது போல, பவுலை அவர் பயன்படுத்தி இதைச் செய்தார் கிறிஸ்து தனது சீடர்களுக்கு கொடுத்த கட்டளையின் மூலம் அப்போஸ்தலர்களின் தலைவர்கள் செயல்படுவதை பார்க்க முடிந்தது. (மத்தேயு 10:8) வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

துரோவாவில் ஐத்திகு உயிரோடு எழுந்த சம்பவம் நிகழ்ந்தது. மேல் அறையில் இருந்து மனிதர்கள் கீழே இறங்கி தரைப்பகுதிக்கு வந்த போது, வாலிபன் உயிரோடிருப்பதைக் கண்டார்கள். பவுல் அவர்களிடம் வந்து கூறினான். “கவலைப்பட வேண்டாம். மேலறைக்கு திரும்பிச் செல்லுங்கள், பிரசங்கத்தை தொடருவோம். வாலிபன் உயிரோடு இருக்கிறான்”. இந்த அற்புதத்தின் விளைவாக அப்போஸ்தலன் பெருமையடையவில்லை. மருத்துவனாகிய லூக்கா இதைக் குறித்து மிக குறைவாகவே எழுதியுள்ளான். அந்த கூட்டம் முடிந்த பிற்பாடு வாலிபனின் உறவினர்கள் ஐத்திகுவுடன் இணைந்துகொண்டு, அவனுக்கு வாழ்வு கொடுத்ததற்காக பவுலிடம் நன்றி கூறினார்கள். அவன் தனது எஜமானனை மட்டும் கனப்படுத்தினான். அவரே மரணத்தில் இருந்து உயிரோடு எழுந்தவர், பாவங்களை மன்னிக்கிறவர், பிசாசுகளைத் துரத்துபவர்.

கிறிஸ்துவின் வெற்றிப் பவனியே பவுலின் பிரசங்கத்தின் உள்ளடக்கமாக இருந்தது. அந்த நாள் முடியும் வரை பிரசங்கம் தொடர்ந்தது. அவன் பிரசங்கம் மட்டும் பண்ணவில்லை. வசனத்தைக் கேட்ட சபையாருடன் இணைந்து அப்பம்பிட்டு புசித்தான். இரட்சிப்பின் பாத்திரத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அங்கத்தினர்களாக இணைந்து இருந்தார்கள். அவரது வாழ்வின் வல்லமையில் பங்கெடுத்து, அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தார்கள். நூற்றாண்டுகள் தோறும் கிறிஸ்தவ சபையில், விசுவாசிகளின் இதயங்களில் கிறிஸ்து வாசமாயிருப்பதும், அவரது ஆவிக்குரிய சரீரத்தில், அவரைப் பின்பற்றுபவர்கள் ஐக்கியமாக இருப்பதும் மிகப்பெரிய இரகசியமாக இருக்கிறது.

சகோதரனே, நீ தூக்க கலக்கத்துடன், களைப்புற்றிருக்கிறாயா? கிறிஸ்துவின் வார்த்தையைக் குறித்து அதிகம் கேட்க விரும்புகிறாயா? இரட்சிப்பின் நற்செய்தியினால் எழுப்புதல் அடைய வேண்டுமா? பாவம் மற்றும் மரணத்திலிருந்து இரட்சகர் அடிமைகளை விடுவித்திருக்கிறார். அவரது வெற்றிப்பவனியில் அவர்கள் இணைந்து கொள்வார்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது கனத்திற்குரிய அப்போஸ்தலர்கள் மூலம் மரித்தவர்களை நீர் உயிரோடு எழுப்பினீர். நாங்கள் உம்மை வாஞ்சிக்கிறோம். உமது வருகைக்காக ஆவலாய் காத்திருக்கிறோம். அப்போது உம்முடைய வல்லமையுள்ள வார்த்தையினால் நீர் எங்களை எழுப்புவீர். உமது ஆவிக்குரிய சரீரத்தில் நீர் எங்களை ஒன்றாக்கியிருக்கிறீர். உமது பரிசுத்த ஆவியினால் எங்களது இருதயங்களில் நீர் ஆளுகை செய்கிறீர். எங்கள் முழு இருதயத்தோடு நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். முழு உலகின் சபைகளின் ஆசீர்வாதத்திற்காக உம்மை மன்றாடுகிறோம்.

கேள்வி:

  1. பவுலின் மூலமாக வாலிபனை கர்த்தர் உயிரோடு எழுப்பியதின் முக்கியத்துவம் என்ன? துரோவாவில் வாரத்தின் முதலாம் நாள் ஏன் கர்த்தருடைய பந்தி அனுசரிக்கப்பட்டது?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:05 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)