Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 092 (Spiritual Revival in Ephesus)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

2. எபேசுவில் ஏற்பட்ட ஆன்மீக எழுப்புதல் (அப்போஸ்தலர் 19:1-20)


அப்போஸ்தலர் 9:8-12
8 பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். 9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான். 10 இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். 11 பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். 12 அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.

கிறிஸ்துவின் முதலாம் வருகையின் காலத்திலிருந்து, இவ்வுலக வரலாற்றில் இறைவனுடைய அரசு இப்பூமியின் மீது நிறுவப்பட்டு, வளர்ச்சியடைந்து, முழுமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசியலில் ஏற்படும் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, புரட்சியினால் ஏற்படும் மாற்றங்களாக இருந்தாலும் சரி, சமய மற்றும் பொருளாதார வளர்ச்சிகளாயிருந்தாலும் சரி அவையனைத்தும் நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய அரசின் வருகைக்குக் கட்டியம் கூறுவதாகவே நடைபெறுகிறது. கிறிஸ்து தன்னில் மறைந்திருக்கும் ஆவிக்குரிய அரசைப் பற்றியே பரப்புரை செய்கிறார். அவர் தெய்வீக அரசனும் கர்த்தாதி கர்த்தருமாயிருக்கிறார். தீமையில் இருக்கும் மக்களைக்கூட அவர் அடக்கி ஆள்வதில்லை. விண்ணப்பத்தினால் பலருடைய உள்ளங்களில் ஊற்றப்பட்ட தம்முடைய மென்மையான பரிசுத்த ஆவியையே அவர் அனுப்புகிறார். கிறிஸ்துவின் அரசு முதலில் தோன்றிய காலத்திலிருந்து, மறைவாகவே இருந்தது. அது உண்மையான திருச்சபையில் வாழுகின்ற இறைமக்களாகிய இறைவனைத் துதிக்கும் பரிசுத்தவான்கள் நடுவில் பரவியிருந்தது. ஆனால் நாம் இரண்டாவது முறை கிறிஸ்து வருவார் என்று எதிர்பார்த்திருக்கிறோம். அப்போது அவர் மகிமையின் ஆண்டவர் என்பது அனைத்து மக்களுக்கும் வெளிப்படும். அவருடைய வெற்றிபவனி அனைத்து நாடுகளிலும் மகிழ்ச்சியுடன் நடக்கும். இறைவனுடைய அரசு உங்களுடைய கிராமத்தை, நகரத்தை, பள்ளியை அடைந்துவிட்டதா? “எங்கே இரண்டு மூன்று பேர் என்னுடைய பெயரில் கூடிவருகிறார்களோ அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்” என்று கிறிஸ்து கூறியிருக்கிறார்.

எபேசுவிலிருந்த யூதர்களுடைய ஜெப ஆலயத்தில் இறைவனுடைய அரசைக் குறித்த பிரசங்கத்தையே பவுல் செய்தார். அது மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து பேசப்பட்டது. இறைவனுடைய வல்லமை இவ்வுலகத்தில் தோன்ற வேண்டும் என்று அனைத்து யூதர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த காரணத்தினால் பழைய ஏற்பாட்டுப் பக்தர்கள் பவுலுக்குக் கவனமாகச் செவிகொடுத்தார்கள். ஆனால் பவுல் அவர்களுக்கு: “இறையரசு எதிர்காலத்தில் தோன்றுவதல்ல; ஏனெனில் அது ஏற்கனவே வந்துவிட்டது. அரசன் இவ்வுலகத்தில் பிறந்தார், வாழ்ந்தார், கொலைசெய்யப்பட்டார், மரணத்தை மேற்கொண்டார், இறைவனுடைய கோபத்தை நீக்கினார், நம்முடைய பாவங்களைத் துடைத்தார், பிதாவினிடத்திற்கு ஏறிச்சென்று, இப்போது ஆளுகை செய்து தம்முடைய அரசைக் கட்டிவருகிறார்” என்று போதித்தார்.

இறைவனுடைய அரசைப் பற்றி பவுல் ஒரு தத்துவக் கருத்தை விவாதிப்பதைப் போல விவாதிக்கவில்லை. இறைவனுடைய அரசை அவர் அறிவித்தார். அதற்கு மக்கள் முழுவதுமாக கீழ்ப்படிய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். தெய்வீக அரசனுக்கு மக்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நம்முடைய இறைநம்பிக்கை என்பது நடைமுறைக்கு உதவாத ஏட்டுச்சுரக்காய் அல்ல. மாறாக, அது மரணத்தையும் சாத்தானையும் மேற்கொண்டு, இன்றும் உயிரோடிருக்கும் இயேசு கிறிஸ்து என்ற நபரைப் பற்றிப்பிடித்துக்கொள்வதைப் பற்றியது.

எபேசு ஜெப ஆலயத்திலிருந்தவர்கள் அனைவரும் பவுலுடைய போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் மனந்திரும்பவில்லை. அவர்களில் சிலர் கடினப்பட்டார்கள். அவர்கள் பவுலை எதிர்த்து பொதுமக்கள் நடுவில் அவரை அவமதித்தார்கள். ஆனால் அந்த இரண்டு தரப்பிலும் யார் வெல்வார்கள் என்று பார்க்கும்படி மக்கள் கூட்டம் அமைதியாக வேடிக்கை பார்த்ததுதான் ஆச்சரியமானது. அவர்கள் பவுலுக்கு எதிராகப் பேசியவர்களை அமைதிப்படுத்தவில்லை. பவுல் அந்த மக்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். காரணம் நற்செய்தியைப் பிரசங்கிப்பது என்பது போட்டியிடுவதல்ல. விடுதலையையும் மீட்பையும் கொண்டுவரும்படி வெளிப்பாட்டை எடுத்தறிவிப்பது. அதைக் கேட்டுக் கீழ்ப்படிகிறவர்கள் விடுதலையடைகிறார்கள். கிறிஸ்துவை தங்கள் தனிப்பட்ட விடுதலையாளராக ஏற்றுக்கொள்பவர்கள் நிலைவாழ்வைப் பெற்று என்றென்றுமாக வாழ்கிறார்கள்.

பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்டவர்கள் தங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். அவர்கள் சீடர்களாகி அவரைப் பின்பற்றினார்கள். உயிருள்ள ஆண்டவரைப் பற்றி இன்னும் பல காரியங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். அவமதித்து, நற்செய்திக்கு செவிகொடாதவர்களைவிட்டு இந்த மக்களை பவுல் வேறுபடுத்தினார். அவர் ஒரு உயிருள்ள திருச்சபையாக உருவாக்கப்பட்டார்கள்.

அவர்களுக்குத் தொடர்ந்து போதனைகளை வழங்குவதற்காக பவுல் ஒரு கலாசாலையை அல்லது அரங்கத்தைப் பயன்படுத்தினார். அவர்களுக்கு அவர் ஓய்வு நாட்களில் மட்டுமல்ல, வாழ்வுதரும் உணவின்மேல் பசியுள்ளவர்களுக்கு அவர் அனுதினமும் ஆவிக்குரிய உணவளித்தார். இது எத்தனை ஆச்சரியமானது! காலையிலும் மாலையும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக பவுல் தனது கைகளால் உழைத்தார். மதியத்திலும் இரவிலும் அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களிலும் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். தர்ஸýப் பட்டணத்து மனிதனாகிய இவருடைய உள்ளம் இறைவனுடைய அன்பினாலும் கிறிஸ்துவின் கிருபை வரங்களினாலும் நிறைந்திருந்தது. அவர் இயேசுவின் அரசுக்காக தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்தார். அவர் அந்த இரண்டு வருட காலமும் தனது இயலாமைகள் நடுவிலும் தன்னுடைய உள்ளத்திலும் உடலிலும் உள்ள அனைத்து பலத்தையும் பயன்படுத்தி கிறிஸ்துவுக்காக உழைத்தார். அவருடைய பலவீனத்தில் கிறிஸ்துவின் கிருபை அவரை பெலப்படுத்தியது.

இந்த வித்தியாசமான மனிதனைப் பார்ப்பதற்காக எபேசுவிலிருந்தவர்களும் அதைச் சுற்றியிருந்த கிராமத்து மக்களும் கூடிவந்தார்கள். அவர்கள் சந்தை வெளிகளிலும், பெண்களின் கூட்டத்திலும், வாலிபர்களுடைய அரட்டைகளிலும் பவுலைப் பற்றி பேசினார்கள். அந்த மக்களுடைய பேச்சு பவுலைப் பற்றியதாகவே இருந்தது. பவுல் வெறும் தத்துவஞானக் கருத்துக்களைப் பேசவில்லை என்றும் இறைவனுடைய வல்லமை அவரிடத்திலிருந்து நேரடியாக அவர்களிடத்தில் வருகிறது என்றும் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய இருதயம் அசைக்கபட்டது, அவர்கள் புதுப்பிக்கப்பட்டார்கள். நம்பிக்கையற்ற அவர்கள் வாழ்வில் ஒளி பிறந்தது.

இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை இறைவன் வெளிப்படுத்துகிறார். கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆடையைத் தொட்டவர்கள்கூட தங்கள் நோய்கள் நீங்கி சுகமடைந்தார்கள். இங்கு பவுலுடைய ஆடைகளினாலும் மக்கள் சுகமடைகிறார்கள். பலர் பேதுருவின் நிழலினால்கூட சுகமடைந்தார்கள். அவர்களுடைய வியர்வையைத் துடைப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய துணிகள்கூட மக்களுக்கு சுகம் கொடுத்தது. அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால் அவர்களுடைய நோய்கள் எல்லாம் பறந்துபோகும். நீங்கள் கவனமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பவுல் அற்புதங்களைச் செய்யவில்லை. ஆனால் இறைவன் தம்முடைய வல்லமையை பவுல் மூலமாக உறுதிப்படுத்தினார். நோய்கள் குணமாக்கப்பட்டது, அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டது. கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவில் வைத்த விசுவாசத்தின் மூலமாக இவை நிகழ்ந்தன.

மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் முன்னெப்போதும் நடந்திராதவாறு ஆசியா மாகாணத்தில் மாபெரும் எழுப்புதல் நடைபெற்றது. சில வருடங்களுக்கு முன்பாக பவுல் தானாகவே எபேசுவிற்குச் சென்று பணிசெய்ய வேண்டும் என்று கருதினார். பரிசுத்த ஆவியானவர் அதைத் தடுத்தபோது அவர் கீழ்ப்படிந்து ஐரோப்பாவிற்கு பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி சென்றுவிட்டார். இரண்டாவது முறையும் பணிசெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற சோதனையை மேற்கொண்டு பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலுக்குத் தன்னை அவர் ஒப்புக்கொடுத்தார். அவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து தனது நேர்த்திக்கடனை செலுத்தும்படி எருசலேமிற்குச் சென்றார். அதனால்தான் இம்முறை கர்த்தராகிய இயேசு தம்முடைய பணியாளனுடைய கீழ்ப்படிதலுக்குரிய பரிசை அவருக்குக் கொடுத்தார். அவர் பவுல் மூலமாக தம்முடைய அரசின் கருவூலத்தைத் திறந்து, தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுடைய வாழ்வில் கிறிஸ்து இருந்து, செயல்பட்டு அவர்களை விடுவிக்கிறார்.

விண்ணப்பம்: எங்கள் பரலோக பிதாவே, உம்முடைய திருக்குமாரனுடைய வெற்றி பவனி இன்று எங்களை வந்தடைந்திருக்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். சிலுவையினூடாக வெளிப்படும் உம்முடைய தெய்வீக வல்லமைக்காக உமக்கு நன்றி. நாங்கள் முழுவதும உமக்குக் கீழ்ப்படியும்படி எங்களை பரிசுத்தப்படுத்தும். எங்களிடத்திலும் இந்த முழு உலகத்திற்கும் உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக, உம்முடைய அரசு வருக.

கேள்வி:

  1. எபேசுவில் இறையரசு எவ்வாறு வெளிப்பட்டது?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:51 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)