Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 081 (Founding of the Church at Philippi)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

4. பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34)


அப்போஸ்தலர் 16:19-24
19 அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக் கொண்டு போனார்கள்.20 அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,21 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.22 அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;23 அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.24 அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.

இந்த அடிமைப்பெண்ணை பால் தரும் பசுவாக அநேக பணக்காரர்கள் கருதினார்கள். அவர்கள் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த பெண்ணின் மனரீதியான பிரச்சினைகள் குறித்து கவலைப்படவில்லை. அவர்கள் அவளில் செயல்பட்ட பிசாசின் பொய் மற்றும் தந்திரத்தின் மூலமாக அதிகமான பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். பணத்தை கொடுக்கக்கூடிய அவர்களது உறுதியான அஸ்திபாரத்திற்கு திடீரென தடை ஏற்பட்டவுடன் அவர்கள் கோபம் பற்றியெறிந்தது. அவர்கள் பவுலையும், சீலாவையும் பிடித்து இழுத்து, அதிகாரிகள் முன்பு பலவந்தமாக கொண்டு வந்து நிறுத்தினார்கள். பட்டணத்தில் கலகம் உண்டாக்குவதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தினார்கள். அப்போஸ்தலர்கள் எவ்விதம் அந்தப் பெண்ணிற்கு மனக்கிலேசத்திலிருந்து விடுதலை அளித்தனர் என்று அவர்கள் கூறவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் பொய் குற்றச் சாட்டுகளை முன்வைத்தார்கள். அவர்கள் முராட்டாட்டமிக்க யூதர்கள் என்றும், விரும்பத்தகாத முறைமைகளை போதிக்கிறார்கள் என்றும் மதிப்புமிக்க ரோமர்களுக்கு பொருத்தமற்றதை பேசுகிறார்கள் என்றும் கூறினார்கள். பிலிப்பியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களை அவர்கள் தூண்டி எழுப்பினார்கள். குறிசொல்பவளின் எஜமான்கள் நன்கு அறியப்பட்டவர்களாக, மதிப்புமிக்க மக்களாக இருந்தார்கள். ஆகவே கோபத்துடன் சீறிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் நீதிபதியின் முற்றம் நோக்கி ஆரவாரத்துடன் வந்தது. அந்த நியாயாதிபதி இந்த இரண்டு யூதர்களுக்கு எதிராக பொதுமக்கள் இருப்பதைக் கண்டான். அவர்களைக் கண்காணித்தவர்களிடம் ஒருவன் சைகை காட்டினான். அவனது பணி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதைக் காண்பது ஆகும். அவர்கள் அப்போஸ்தலர்களை தாக்கினார்கள், அவர்களது ஆடைகளை கிழித்தார்கள், அவர்களை காயப்படுத்தினார்கள், அவர்களை கொடூரமாக தாக்கி அடித்தார்கள். பரியாசம்பண்ணிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் முன்பு இவர்களை வேடிக்கையாக்கினார்கள்.

பிரச்சினை உருவாக்கிய இந்த இரண்டு பேரை நன்கு அடித்து நியாயம் விசாரித்த செயல்களுக்கு பின்பு, அவர்கள் குறுகிய, அழுக்கு நிறைந்த சிறைச்சாலையின் உள் அறையிலே தூக்கி எறியப்பட்டார்கள். அவர்கள் முதுகுப்புறத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவர்களது சரீரங்களில் காயங்கள், வலிகளினால் வேதனைகள் காணப்பட்டது. மேலும் அவர்கள் கால்களின் கணுக்கால் பகுதி உறுதியான தொழுமரத்தின் கட்டைகளில் மாட்டப்பட்டது. அவர்கள் தப்பமுடியாதபடி உறுதியான சங்கிலிகளினால் கட்டப்பட்டார்கள். சிறையிடப்பட்ட இவர்களின் மனங்களில் என்ன எண்ணங்கள் காணப்பட்டது? அவர்கள் ரோமர்களை சபித்தார்களா? அவர்கள் வருத்தப்பட்டார்களா? குறிசொல்பவளிடம் இருந்து பிசாசைத் துரத்தியதை நினைத்து வருந்தினார்களா? புதிய வளர்ந்து வரும் சபைக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதலை நினைத்து பயந்தார்களா? இல்லை. அவர்கள் இப்படிப்பட்ட எண்ணங்கள் எதுவும் கொண்டிருக்கவில்லை. சிறைக்கைதிகள் தங்களுடைய ஆண்டவருடன் விண்ணப்பத்தின் மூலம் பேசினார்கள். அவர்கள் துன்பப்படுத்தியவர்களை ஆசீர்வதித்தனர். கிறிஸ்து சிலுவையை சுமப்பதில் தாங்களில் பங்கெடுப்பதற்கு பாத்திரவான்காளாயிருந்ததை எண்ணி நன்றி செலுத்தினார்கள்.

அப்போஸ்தலர் 16:25-28
25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.26 சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.27 சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.28 பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ்செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.

அவர்களது முதுகு உழப்பட்டடிருந்தது, மிக நீண்ட காயங்கள் ஏற்பட்டிருந்தது. அப்போஸ்தலர்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்கவில்லை. பணிவுடன் கவனித்துக்கொள்ளும் தாதிமாரின் பணிவிடைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் தொழுமரத்தில் சங்கிலிகளினால் கட்டப்பட்டு, அழுக்கு நிறைந்த உள்ளறையிலே, இருள் சூழ்ந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் சபிக்கவில்லை, அழவில்லை. ஆனால் அவர்கள் இணைந்து கீதங்களை பாட ஆரம்பித்தார்கள். பரிசுத்த ஆவியானவர் சின்ன ஆசியா பகுதியில் தொடர்ந்து பணி செய்வதை தடுத்து, மக்கெதொனியாவில் தொடர்ந்த கிறிஸ்துவின் வெற்றிப்பவனியில் களிகூர்ந்தார்கள்.

ஐரோப்பாவில் கிறிஸ்துவின் வெற்றியின் காலை ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது. இருள் அகலத் துவங்கியது. மரித்தோரில் இருந்து எழுந்தவரின் நாமத்தை அறிக்கையிட்டதால் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. பூமியில் இறைவனுடைய ராஜ்யம் கட்டப்படுவதைத் தடுக்கக்கூடிய மேற்கொள்ள முடியாத பெரிய தடை என்று எதுவும் இல்லை. பாடுகள்பட்ட இரண்டு அப்போஸ்தலர்களும் கீதங்களை சத்தமாகப் பாடினார்கள். சிறைச்சாலையில் இருந்த மற்றவர்களும் அதைக் கேட்டார்கள். துதியின் பாடல்கள் பரலோகத்தை அடைந்த அந்நேரம் நடுராத்திரியாய் இருந்தது. சபை வரலாற்றில் துன்புறுத்தப்பட்ட, உபத்திரவப்படுத்தப்பட்ட அநேகருக்கு ஆறுதலை அளிக்கக் கூடிய ஒரு காரியமாக அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள இந்த நிகழ்வு உள்ளது. நடுராத்திரியில் ஏறெடுக்கப்பட்ட துதியின் பாடல்களைக் கேட்டு இறைவன் உடனடியாக பதிலளித்தார். தூதர்கள் மூலமாக அல்ல, வெளிப்பாட்டின் வார்த்தைகள் மூலம் அல்ல, மாறாக பயங்கரமான பூமி அதிர்ச்சி மூலமாக பதிலளித்தார். அவர்கள் பாடுகளோடு இந்தக் காரியத்தையும் சேர்த்து பிசாசானவன் செய்கிறானோ என்று முதலாவது அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். கற்கள, பூச்சுகள் மேலிருந்து கீழே விழத் தொடங்கியது. மேலும் உடனடியாக சிறைச்சாலையின் கதவுகள் திறந்தன. அவர்களது சங்கிலிகள் கழன்று விழுந்தன. இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டு பவுல் தப்பிச் செல்ல முயலவில்லை. மற்ற சிறைக்கைதிகள் அப்போஸ்தலர்கள் பாடலைக் கேட்டு அதில் ஆழமாக லயித்திருந்தார்கள். பூமியதிர்ச்சியின் மூலம் இறைவன் அளித்த மறுமொழியைக் கண்டு அவர்கள் தப்பிச்செல்ல தைரியம் கொள்ளவில்லை. தங்கள் பாவங்கள் மீது இறைவனுடைய நியாயத்தீர்ப்பு வந்துவிட்டதாக அவர்கள் அனைவரும் பயந்தார்கள்.

சிறைச்சாலைக் காப்பாளன் தனது படுக்கையை விட்டு விரைந்து எழுந்தான். சிறைச்சாலைக் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டான். எல்லா சிறைக்கைதிகள் தப்பியிருப்பார்கள் என்று எண்ணினான். அவனது கரத்திலிருந்து அவர்கள் தப்பியதாக எண்ணி பயம் மற்றும் தலைகுனிவு அவனுக்கு ஏற்பட்டது. தனக்கு ஏற்படப்போகிற தண்டனை, பாடுகள், மரணம், குழப்பம் அடிமைப்படுத்தப்படுவது ஆகியவற்றை எண்ணி கலங்கினான். இப்படிப்பட்ட பயங்கள் மற்றும் கற்பனைகளினால் நிறைந்தவனாக, அவன் பட்டயத்தை உருவி தற்கொலை செய்ய முயற்சித்தான்.

சிறைக்காவலன் பட்டயத்தை உருவி தன்னைத்தானே குத்திக் கொல்லப் போவதைக் கண்ட பவுல் மிகுந்த சத்தமிட்டான்; “நிறுத்து! உன்னை நீயே கொல்ல வேண்டாம்! பயப்படாதே! ஒருவர் கூட தப்பவில்லை. எல்லா கைதிகளும் இங்கே இருக்கிறோம்.!” சிறைக்கைதிகளிடம் பொதுவாக காணப்படும் சாபவார்த்தைகள், தூஷணங்கள் இவற்றிற்கு மாறாக பவுலின் சத்தத்தில் காணப்பட்ட அன்பு, அவனது பண்பான வார்த்தைகளில் வெளிப்பட்ட ஆளுதல் காணப்பட்டது. சிறைக் கைதிகளுக்கு தப்பிக்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவர்கள் அதைச் செய்வார்கள், பின்பு தங்களை காவல் காப்பவர்களை தாக்கி பழிவாங்க நினைப்பார்கள். ஆனால் இந்தக் காட்சி மாறுபட்டதாக, வித்தியாசமானதாக இருக்கிறது! சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன. இருப்பினும் மிருகங்களைப் போல கைதிகள் தாக்கவில்லை. அவர்களில் ஒருவனாக பவுல் வேண்டிக்கொண்டான், அன்பான, பணிவான வார்த்தைகளோடு, காவலன் தன்னைத்தானே தாக்காதபடி தடுத்தான். இந்த வார்த்தைகள் சிறைக்காவலனை அதிர்ச்சியடையச் செய்தது. அவனது கற்பனையான எண்ணங்கள் அனைத்தும் மறைந்து போனது. அவனுடைய எதிரி அவனை நேசிப்பதைக் கண்டு அவன் வெகுவாய் ஆச்சரியப்பட்டான். மேலும் தான் தற்கொலை செய்யாதபடிக்கு தடுத்ததை எண்ணி வியப்புற்றான். அவனது கண்கள் விரிவாய்த் திறந்தன. அவன் ஏதோ ஓர் ஆழ்ந்த கனவு காண்பது போல அவனது தலையில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

விண்ணப்பம்: உயிருள்ள ஆண்டவரே, நாங்கள் அவநம்பிக்கை மற்றும் குழப்பத்தில் இருக்கும் போது உமது பணிவான வார்த்தைகளைக் கேட்க உதவும். எங்கள் நம்பிக்கை மறையும்போது உமது அன்பின் வார்த்தைகளைக் கேட்க கற்றுத்தாரும். உமது ஆறுதலுக்கு நேராக எங்களை நடத்தும். அப்போது நாங்கள் ஒருபோதும் மரிக்காமல் வாழ்ந்திருப்போம்.

கேள்வி:

  1. துன்புறுத்தப்பட்ட சிறைக்கைதிகள் ஏன் நடுராத்திரியில் கீதங்களைப் பாடினார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:55 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)