Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 056 (Beginning of Preaching to the Gentiles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)


அப்போஸ்தலர் 10:44-48
44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். 45 அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், 46 பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். 47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, 48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

கிறிஸ்துவின் வாழ்வைப் பற்றிய உண்மைகளைப் பேதுரு பிரசங்கித்தபோது அந்த எளிமையான பிரசங்கத்தை இறைவன் உறுதிப்படுத்தினார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவர் மேலும் இரட்சிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் அவர் பொழிந்தருளினார். இந்த நிகழ்வு அனைத்து பெருமையுள்ள வார்த்தைகளையும் நிர்மூலமாக்கியது, ஏனெனில் பேதுருவின் வார்த்தைகள் பேச்சாற்றலும் தந்திரமுமுள்ளதாக இருக்கவில்லை. யாரெல்லாம் தங்கள் அகம்பாவத்தினால் மற்றவர்களைக் காட்டிலும் தங்களை மேன்மைப்படுத்துகிறார்களோ அவர்களை இறைவன் புறக்கணிக்கிறார். பெருமையுள்ள ஆவியை அவர் வெறுத்து, தம்முடைய குமாரனுடைய வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்த எளிமையான பிரசங்கங்களை அவர் ஆசீர்வதிக்கிறார். உங்கள் நண்பருடைய இரட்சிப்பையும் அவருடைய விடுதலையையும் நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் கொர்நேலியுவின் வீட்டில் செய்யப்பட்ட பேதுருவின் பிரசங்கத்தைக் கவனியுங்கள். அப்போது கிறிஸ்துவைக் குறித்த ஒரு எளிமையான சாட்சியை இறைவன் எவ்வாறு ஆசீர்வதித்தார் என்றும் முன்பு மீனவராயிருந்த ஒருவரை பரலோகத்தின் வல்லமையினால் எப்படி நிறைத்தார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

விசுவாசம் கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய இருதயங்களைத் திறந்தது. இறைவனுடைய ஆவியானவர் எவ்விதத் தடையுமின்றி அவர்களுடைய இருதயத்தில் வந்தார். பரிசுத்த ஆவியானவரை புறவினத்து மக்கள் மீது பொழிந்தருளியதால், விருத்தசேதனமோ, நியாயப்பிரமாணத்தைக் குறித்த அறிவோ, நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதலோ இல்லாமல் இறைவனுடைய ஈவை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை யூதர்களுக்கு இறைவன் உறுதிப்படுத்தினார். விசுவாசம் மட்டுமே ஒருவரை நீதிமானாக்குகிறது. எந்த மனிதனும் இறைவனுக்கும் முன்பாக தன்னில்தான் தகுதியோ உரிமையோ அற்றவனாயிருக்கிறான். கிறிஸ்துவைத் தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டு அவருடைய இரத்தத்திற்குக் கீழாக தன்னை ஒப்புக்கொடுக்கிறவன் உன்னதமான இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறான்.

பெந்தகொஸ்தே நாளிலிருந்து இந்நாள்வரை, இயேசுவை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் பெருகிவரும் ஆற்றைப் போல பாய்ந்துகொண்டிருக்கிறார். கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் குடிகொள்வதில்லை, ஏனெனில் அவர் குமாரனை மகிமைப்படுத்துகிறார். இறைவனைத் தேடிக்கொண்டிருக்கிற ஒருவர் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தன்னைத் திறந்துகொடுக்கும்போது, ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவர் அவருக்கு ஒளி கொடுக்கிறார். மனித குமாரனைக் குறித்த அவருடைய விசுவாசம் உறுதிப்படுத்தப்பட்டு இறைமகன் அவரை ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவின் வாழ்வு இப்போது அவருக்குள் இப்போது இருக்கிறது. நம்முடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் குடிகொள்வதன் மூலமாக, கிறிஸ்துவின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார். இறைவனுடைய ஆவியானவர் நம்முடைய சிந்தனையோ, தோன்றி மறையும் உணர்வோ, நம்முடைய மனசாட்சியோ அல்ல. அவர் விசுவாசியில் வாழும் இறைவன்.

முன்பு சுயநலவாதியாயிருந்தவருடைய இருதயத்தில் இப்போது இறைவனுடைய அன்பு பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்பு இறைவனை அறியாதவர்கள் இப்போது அவரை “அப்பா பிதாவே” என்று அழைக்கிறார்கள். கர்த்தருடைய ஆவியானவர் நன்றியுணர்வு, வல்லமை, வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தின் ஆவியாக இருப்பதால் வெற்றியின் கீதங்களும் சாட்சிகளும் திரித்துவ இறைவனை நோக்கி ஏறெடுக்கப்படுகின்றன. இறைவனை அறிந்துகொள்கிறவர்கள் துக்கத்தை அல்ல சந்தோஷத்தையும், இன்பத்தையும், இரக்கத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியில் வாழும் வாழ்வை நீங்கள் அறிவீர்களா? கர்த்தராகிய இயேசுவையும் அவர் அருளும் மீட்பையும் உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் இன்றே கிறிஸ்துவின் வாழ்வினால் நிரப்பப்படுவீர்கள்.

அந்த புறவினத்து மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்து திருமுழுக்கு எடுக்காதவர்களாயிருந்தபோதிலும், கீழ்ப்படிதலில் அவர்கள் ஒரு படி எடுத்து வைத்தபோதே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது பொழிந்தருளப்பட்டதைப் பார்த்த பேதுருவும் கூட அந்த யூதர்களுடன் பயந்திருக்கலாம். அவர் விண்ணப்பத்தினாலும், உபவாசத்தினாலும், நற்செயல்களினாலும் அல்ல விசுவாசத்தினால் மட்டுமே மீட்கப்பட்டார்கள். அவர்கள் விருத்தசேதனம் செய்யவோ, சாஸ்டாங்கமாக விழவோ, சடங்குகளைக் கைக்கொள்ளவோ வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர்கள் சாதாரணமாக அமர்ந்திருக்கும்போதே இறைவனுடைய வெளிப்படையான அன்பினாலும் வெளிச்சத்தினாலும் நிரப்பப்பட்டார்கள்.

இவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டு இறைவனுடைய குடும்பத்தில் இணைக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் விசுவாசிகளைத் திருச்சபையில் சேர்ப்பதற்கு வெளிப்படையான அடையாளமாக வழங்கப்படும் திருமுழுக்கை அவர்களுக்குத் தடைசெய்யக் கூடாது என்று பேதுரு தைரியமாக முடிவெடுத்தார். பேதுருவிலும் யூத விசுவாசிகளிலும் இருந்த அதே ஆவிதான் கிறிஸ்துவை விசுவாசித்த புறவினத்து மக்களுக்கும் அருளப்பட்டது. புறவினத்து மக்கள் மறுபிறப்படைந்ததையும் அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டதையும் கண்ட பேதுருவும் அவரோடு சென்றிருந்த யூதர்களும் குழப்பமடைந்தாலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவர்களுக்குத் திருமுழுக்கைக் கொடுத்து, அவர்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். கொர்நேலியுவினால் அழைக்கப்பட்ட அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவருடைய வீட்டை நிரப்பியிருந்த காரணத்தினால் அன்று இரட்சிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை அநேகம். இவ்வாறு அன்று பாலஸ்தீனாவிலிருந்து ரோமர்களின் முக்கிய நகரமாகிய செசரியாவில் திருச்சபை நிறுவப்பட்டது.

தங்களுடைய இரட்சிப்பினால் தங்களுக்குக் கிடைத்த சந்தோஷத்திலும் அனுபவத்திலும் அறிவின் முழுமையிலும் பேதுருவும் அவருடன் வந்தவர்களும் இருந்து பங்கெடுத்துச் செல்ல வேண்டும் என்று அந்த மக்கள் அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள். அந்த நாட்களில் துதியும், மகிமையும், நன்றியும் எப்போதும் பிதாவிற்கும் குமாரனுக்கும் ஏறெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்வாறு இறைவன் புறவினத்து மக்களுக்கு திருச்சபையின் கதவை விரிவாகத் திறந்து வைத்து, எதிர்காலத் திருச்சபை எவ்வாறு இருக்கும் என்பதை அவர்களுக்குக் காண்பித்தார். இதை அவர் புறவினத்து மக்களுக்கு அப்போஸ்தலனாயிருந்த பவுலைக் கொண்டு செய்யாமல், பேதுருவைக் கொண்டு செய்தார். சகோதர சகோதரிகளே அந்த தருணத்திலிருந்துதான் உங்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் நீங்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் எங்களுக்காக மனிதனாக வந்தமைக்காக உமக்கு நன்றி. எங்கள் பாவங்களைச் சுமப்பதற்காக நீர் உம்முடைய உயிரைக் கொடுத்தீர். நீர் எங்களை இறைவனோடு ஒப்புரவாக்கினீர். நீர் மரித்தோரிலிருந்து எழுந்தபடியால் நாங்கள் நீதிமான்களாக்கப்படுகிறோம். உம்முடைய பரிசுத்த ஆவியை நீர் எங்களுக்குத் தருவதால் உமக்கு நன்றி, அவரை எங்கள் நண்பர்கள் மீதும் எதிரிகள் மீதும் பொழிந்தருளும்.

கேள்வி:

  1. மனிதனுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு வாசம் செய்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)