Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 054 (Beginning of Preaching to the Gentiles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)


அப்போஸ்தலர் 10:17-33
17 அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று: 18 பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். 19 பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். 20 நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்கும் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். 21 அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான். 22 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைப்பெற்றார் என்றார்கள். 23 அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள். 24 மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். 25 பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். 26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். 27 அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, 28 அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். 29 ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். 30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: 31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. 32 யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். 33 அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.

சத்தியத்திற்கு வெகுதொலைவிலுள்ள சிந்தனைகளை ஒன்றிணைத்துக் குழப்பும் தத்துவ ஞானிகளைப் போன்றவர் அல்ல இறைவன். கனவில் பேதுருவோடு அவர் பேசிக்கொண்டிருந்தபோது நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியுவின் வேலைக்காரர்கள் ஏற்கனவே பேதுருவைக் காண புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தோல்பதனிடும் சீமோனுடைய வீட்டைத் தேடி அதன் துர்நாற்றத்தினால் அதைச் சீக்கிரமாகவே கண்டுபிடித்து விட்டார்கள். அவர்கள் அங்கு வந்து சீமோனிடம் விருந்தாளியாகத் தங்கியிருந்த இறைவனுடைய மனிதன் எங்கே என்று கேட்டார்கள்.

பேதுருவோ தான் கண்ட தரிசனத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாதவராக அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார். தன்னுடைய கண்களைக் கசக்கிக்கொண்டு யாரோ தன்னை வீதியிலிருந்து அழைப்பதைக் கவனித்தார். அவர் கனவிலிருந்து திடீரென விழித்துப் பார்த்தபோது, அங்கு போர்வீரர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, முதலில் அவர்கள் தன்னைக் கைதுசெய்வதற்குத்தான் வந்திருக்கிறார்கள் என்று கருதினார். அப்போஸ்தலர்களில் மிகவும் தைரியசாலியான பேதுருவைப் பார்த்து பரிசுத்த ஆவியானவர் இவ்வாறு கூறினார்: “பேதுருவே, உன்னுடைய கண்களைத் திறந்து நான் காண்பித்த தரிசனம் உண்மையாவதைக் கவனித்துப் பார். இறைவன் அசுத்தமான மனிதர்களுடன் இருந்து அவர்களை மனந்திரும்பும்படி அழைப்பதைக் கவனி. இதோ நான் உன்னைப் புறவினத்து மக்கள் நடுவில் அனுப்புகிறேன். நான் அவர்களை நேசித்து, அவர்களைச் சுத்தப்படுத்தியிருப்பதால் நீ அவர்களை அசுத்தமானவர்களாகக் கருதாதே”.

பேதுரு அந்த போர்வீரர்களை விட்டு ஓடாமல், இறைவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தார். எந்தவித பயமும் கவலையும் இல்லாமல் ரோமப் போர்வீரர்களுடன் அவர் சென்றார். பேதுரு தன்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்கள் வந்த நோக்கத்தை விசாரித்தார். பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு நன்றாக உதவிகளைச் செய்துவந்த அதிகாரியாகிய கொர்நேலியுவுக்கு ஒரு பிரகாசமான தூதன் காட்சியளித்தார் என்பதை அவர்கள் பேதுருவிடம் அறிவித்தார்கள். அதனால் அந்த தூதனுடைய கூற்றுப்படி இறைவனுடைய வார்த்தைகளைக் கேட்கும்படி பேதுருவை அழைத்து வரும்படி தாங்கள் அனுப்பப்பட்டதையும் அவர்கள் அறிவித்தார்கள்.

இதைக் கேட்ட பேதுரு உடனடியாக நியாயப்பிரமாணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களை வீட்டிற்குள் அழைத்து, அவர்கள் அன்று அங்கு தங்கும்படி ஏற்பாடு செய்தார். அவர் முழங்கால் படியிட்டு விண்ணப்பம் செய்தார். தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளும்படி அப்படிச் செய்தார். தனக்கு மூன்று முறை காண்பிக்கப்பட்ட தரிசனத்தின்படி இறைவன் நியாயப்பிரமாணத்தின் சில விதிமுறைகளை நீக்குகிறார் என்பதை அவர் அறிந்துகொண்டார். கொர்நேலியு இறைவனுடைய வழிநடத்துதலுக்குத் தன்னைக் கீழ்ப்படுத்தியதைப் போலவே, இன்னும் பேதுரு தன்னுடைய மனசாட்சியில் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவராயிருந்தபோதிலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

மறுநாள் காலையில் பாலஸ்தீனக் கடற்கரைப் பாதை வழியாக தம்முடைய பிரயாணத்தை ஆரம்பித்து, தெற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்து இறுதியில் செசரியாவை வந்தடைந்தார். தம்முடைய பிரயாணத்திற்குச் சாட்சிகளாயிருக்கும்படி சில சகோதர்களையும் பேதுரு தம்மோடு அழைத்துக்கொண்டு வந்தார். தம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட காரியம் ஏதோ நடைபெறுகிறது என்பதை மட்டும் பேதுரு அறிந்திருந்தார். அவர் தான் மட்டுமே இந்த தெய்வீக சத்தியத்தை அனுபவிக்க வேண்டும் என்ற விரும்பாமல், கிறிஸ்துவின் திட்டங்களைக் குறித்துப் பின்னாட்களில் சாட்சியிடக்கூடிய சாட்சிகளையும் அவர் தேடிக்கொண்டார்.

ஒருநாள் நடைப்பிரயாணத்திற்குப் பிறகு மறுநாள் காலையில் அவர்கள் செசரியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். கிறிஸ்துவின் சத்தத்திற்கு அப்போஸ்தலர் உடனடியாகவும் நிச்சயமாகவும் கீழப்படிவார் என்பதை அறிந்திருந்த காரணத்தினால் பேதுருவின் வருகையின் நாளை கணக்கிட்டு அதற்காக ஆயத்தமாயிருந்தார். தன்னுடைய நண்பர்களையும் உறவினர்களையும் அவருடைய வருகைக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். அவர்கள் விண்ணப்பத்தோடும் அதிக எதிர்பார்ப்போடும் அந்த நிகழ்வுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

பேதுரு வந்து சேர்ந்தபோது ஒரு பிரகாசமான தேவதூதனையோ, ஒரு உள்ளூர் தத்துவ ஞானியையோ, தன்னுடைய தலையைச் சுற்றிலும் ஒளிவட்டத்தைப் பெற்றிருந்த ஒரு தீர்க்கதரிசியையோ கொர்நேலியு காணவில்லை. அவர் ஒரு சாதாரண மீனவனையே கண்டார். இருப்பினும் இறைவன் முழுமையான அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்திருந்த கொர்நேலியு பேதுருவை வணங்க முற்பட்டார். எல்லாம் வல்ல இறைவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதுவன் என்ற வகையில் பேதுருவை அவர் வணங்க முயற்சித்தபோது அவர் உண்மையில் இறைவன் மீது தான் வைத்திருந்த மரியாதையையே வெளிப்படுத்தினார்.

ஆனால் பேதுருவோ தனக்கு தரப்பட்ட அனைத்து கனத்தையும் புறக்கணித்தார். அந்த அதிகாரியிடம் அவர் சொன்ன முதல் வாசகம் “எழுந்திரும்” என்பதே. “நானும் உம்மைப் போல ஒரு மனிதன்தான். இறைவன் அல்ல, ஆகவே எழுந்திரும்” என்று கூறினார். கிறிஸ்துவின் தூதுவர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பிஷப்பும் போப்புவும் கொண்டிருக்க வேண்டிய கொள்கை இதுதான். எந்த மனிதனும் ஆராதனைக்குப் பாத்திரவான் அல்ல, காரணம் நாம் அனைவரும் கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம். தன்னுடைய வாழ்வின் ஆரம்ப நாட்களில் கடினமானவராக, பாவத்தில் விழுந்து போனவராக, சத்தியம் செய்கிறவரும், பொய்சொல்கிறவராகவும் வாழ்ந்த காலத்தைப் பேதுரு மறந்துபோய்விடவில்லை. ஆனால் ஆண்டவர் அவர் மேல் கிருபையாயிருந்து, மக்களிடத்திலும் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்திலும் பேசும்படி அவருக்குக் கட்டளை கொடுத்தார். இப்போது புறவினத்து மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி இறைவன் அவரை அனுப்பியிருக்கிறார். கொர்நேலியு தன்னை தெய்வமாக்கிவிடாமலும் தனக்கு மகிமையைச் செலுத்தாமலும் இருக்கும்படி பேதுரு பார்த்துக்கொண்டார். அவர்கள் இருவரும் சுருக்கமாக கலந்துரையாடிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தார்கள். அங்கு அப்போஸ்தலருடைய கரத்திலிருந்து தெய்வீக அற்புதத்தை எதிர்பார்த்துக்கொண்டு, பெரிய மக்கள் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள்கூட்டம் முழுவதும் யூதர்கள் புறக்கணித்த புறவினத்து மக்களாயிருந்தார்கள்.

அங்கு வந்திருந்த புறவினத்து மக்கள் மீதான தம்முடைய வெறுப்பை பேதுரு மேற்கொண்டார். மற்ற இனத்து மக்களுடன் பழகுவதோ அவர்களோடு எந்த வகையிலும் ஒன்றுபடுவதோ யூதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட காரியம் என்பதை முதலில் பேதுரு அவர்களுக்கு விளக்கினார். இருப்பினும் எந்த மனிதனையும் அசுத்தன் என்றோ சாதாரணமானவன் என்றோ கருதத்கூடாது என்ற புதிய கட்டளையை அவர் இறைவனிடத்திலிருந்து பெற்றிருந்தார். பேதுரு இந்த மக்களோடு இறுதியாக அமர்ந்தபோதிலும்கூட அவர்களிடத்தில் என்ன செய்வது, அல்லது அவர்களுக்கு என்ன சொல்வது என்று அவர் அறியாதிருந்தார். ஒரு யூதக் கிறிஸ்தவனைப் பொறுத்தவரை ஒரு புறவினத்து மக்களுக்குப் பிரசங்கம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத செயல். அவர் அங்கு வந்திருந்தவர்களிடத்திலேயே அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இந்த இறைவனுடைய மனிதர்கள் அவர்களுடைய சிந்தையை அறிந்துகொள்ள வேண்டும் விரும்பியது அவர்களுக்கு ஆச்சரியமாயிருந்தது. அப்போது கொர்நேலியு பேசத்தொடங்கி, நான்கு நாட்களுக்கு முன்பாக தேவதூதன் தனக்கு தரிசனம் கொடுத்த விதத்தை விளக்கினார். இறுதியில் அவர்: “தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படி நாங்கள் எல்லாரும் இப்போது தேவசமூகத்தில் கூடியிருக்கிறோம்” என்ற மேன்மையான கூற்றை மொழிந்தார்.

உங்கள் மாணவர்களிடத்தில், அயலகத்தாரிடத்தில, நண்பர்களிடத்தில் இதே கேள்வியை நீங்கள் எதிர்கொள்ளலாம். உங்களுடைய சாட்சி என்ன? இறைவனைக் குறித்து நீங்கள் அறிந்தது என்ன? எங்களுக்குச் சொல்வதற்கு ஏதேனும் செய்தி உங்களிடத்தில் உண்டா? அல்லது நீங்கள் பேசாமல் அமைதியாக இருக்கப்போகிறீர்களா? நீங்கள் இறைவனைக்குறித்த அனுபவங்கள் ஏதேனும் பெற்றிருக்கிறீர்களா? அல்லது அவரைப் பற்றி ஏதேனும் கற்றிருக்கிறீர்களா? ஆம் என்றால் நீங்கள் அமைதிகாக்காமல் உங்கள் வாய்களைத் திறந்து பேசுங்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே எங்கள் இருதயம் புரிந்துகொள்வதில் மந்தமுள்ளதாவும் எங்கள் புத்திகள் கடினமானவைகளாகவும் அறியாமையுள்ளவைகளாகவும் இருக்கின்றன. உம்முடைய இரட்சிப்பின் சாட்சியைக் கேட்கும்படி காத்துக்கொண்டிருக்கிற அனைத்து மக்களையும் காணும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும். நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களை நீங்கள் கண்டு, அவர்களை உம்முடைய இரட்சிப்பினால் நிரப்பும்படி, உம்முடைய பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு நாங்கள் உடனடியாகக் கீழ்ப்படிய எங்களுக்குப் போதித்தருளும்.

கேள்வி:

  1. ஒரு மீனவனாகிய பேதுருவை வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை ரோம இராணுவ அதிகாரியாகிய கொர்நேலியுவின் உள்ளத்தில் ஏற்படுத்தியது என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)