Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 052 (Beginning of Preaching to the Gentiles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)


அப்போஸ்தலர் 10:1-8
1 இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். 2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான். 3 பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, 4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. 5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி. 6 அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். 7 கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, 8 எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.

பரிசுத்த ஆவியானவர் முதலில் பொழிந்தருளப்பட்டிருந்த பெந்தகொஸ்தே நாளிலிருந்து, திருச்சபைகளைச் சந்திக்கும்படி பேதுரு மிஷனரிப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிய காலம்வரைக்கும் திருச்சபையில் யூதக் குடிமக்களும், யூதர்களாயிருந்து கிரேக்க கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்களும், சமாரியர்களும், யூதர்களாக மாறிய புறவினத்து மக்களுமே அங்கமாயிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றிருந்தார்கள். இவ்வாறு யூதர்களாயிருந்தவர்கள் மட்டுமே திருச்சபையில் இருந்த காலமாக அது இருந்தது.

இருப்பினும் கொர்நேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்தாருக்கு இறைவனே கதவுகளைத் திறந்தார். இந்த மனிதன் திருச்சபையில் இணைக்கப்பட்டது இறைவனுடைய அற்புதமான செயலாயிருந்தபோதிலும், கிறிஸ்துவை விசுவாசிக்கும் யூதர்களுக்கு மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம் உரியது என்று கருதியவர்களுக்கு அது இடறலை உண்டுபண்ணியது.

புறவினத்து கொர்நேலியுவின் மனந்திரும்புதலைப் பற்றி லூக்கா மிகவும் விவரமாக எழுதியிருக்கிறார். இறைவனே அப்போஸ்தலர்களில் முக்கியமானவரும் தைரியமாகப் பேசக்கூடியவருமாகிய பேதுருவின் மூலமாக தெய்வபக்தியும் அர்ப்பணிப்பும் உள்ள புறவினத்து மக்களை தம்முடைய நித்திய வாழ்வுக்கென்று தெரிந்துகொண்டார் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி தெளிவாகக் குறிப்பிடுவதே அவருடைய நோக்கமாக இருந்தது. பேதுரு தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி கொர்நேலியுவை திருச்சபைக்குள் கொண்டுவரவில்லை. ஸ்தேவானுடைய வாழ்க்கையிலும் சவுலுடைய வாழ்க்கையிலும் கிறிஸ்து எவ்வாறு இடைப்பட்டு காரியங்களைச் செய்தாரோ அவ்வாறே பேதுருவின் வாழ்க்கையிலும் அவரே இடைப்பட்டு இந்தக் காரியத்தைச் செய்தார். இந்த உலகம் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு இங்கு நடைபெறும் நிகழ்வு ஒரு முத்தாய்ப்பான மாற்றமாக காணப்படுகிறது.

ஒரு தேவதூதன் புதிய ஏற்பாட்டில் ஒரு விசுவாசிக்கு தரிசமானமாகிறார் என்றால் எல்லாப்புத்திக்கும் மேலான இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றவே அவ்விதமாக நடைபெறுகிறது என்று நாம் அறிந்துகொள்ளலாம். நீதிமானுடைய விசுவாசம் அசைக்கப்படக்கூடாது என்பதற்காக கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்புகிறார். இறைவன் தம்முடைய தனிச்சிறப்பான அற்புதத்தை நடத்துகிறார் என்றும் தம்முடைய அரசில் அவர் புதிய வழியைத் திறக்கிறார் என்றும் மனிதன் தன்னுடைய ஐம்புலன்களாலும் அறிந்துகொள்ளும்படி இவை நடைபெறுகிறது. கொர்நேலியுவின் விசுவாசம் அனைத்து மக்களுக்கும் அடிப்படையான பொருளும் முக்கியத்துவமும் உடையதாயிருக்கிறது. இந்த சிலைவழிபாட்டுக்காரர் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் நற்செய்தி நம்மிடத்தில் வந்திருக்காது. அது யூதர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருந்திருக்கும்.

கர்மேல் மலைக்கு தெற்கே மத்தியதரைக் கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்த செசரியா என்ற ரோமானிய நகரத்தில் நூறு இராணுவ வீரர்களுக்குத் தளபதியாக இருந்தவர்தான் கொர்நேலியு. இந்த அதிகாரி யூத மதத்தின்பால் ஈர்க்கப்பட்டவராக இருந்தார்: ஒரே தெய்வ வழிபாடு, பத்துக்கட்டளைகள், இச்சையும் சுகபோகமும், பயமும், அற்பத்தனமும் நிறைந்த ரோம வல்லரசின் சமூக வாழ்க்கைக்கு எதிராக இருந்த யூதமதத்தின் தேவபக்தியின் ஒழுக்கம் ஆகியவை அவரைக் கவர்ந்திருந்தது.

ஆகவே, கொர்நேலியு தன் முழு இருதயத்தோடு இறைவனிடத்தில் மனந்திரும்பினார். தான் விசுவாசித்த காரியங்களின் அடிப்படையில் அவர் தம்முடைய வாழ்வை அமைத்துக்கொண்டார். அவருடைய தெய்வபக்தி வெறும் அறிவுபூர்வமானதாகவோ அல்லது வெறுமனே உணர்வுகளுக்கு உட்பட்டதாகவோ இருக்கவில்லை. அவர் தன்னுடைய சிந்தனைகளையும், வார்த்தைகளையும், செயல்களையும் தனது விசுவாசத்திற்குக் கீழ்ப்படுத்தியிருந்தார். ஒரு காலனிய அரசாகிய ரோமின் இராணுவத் தளபதியாக இருந்துகொண்டு அவர் ஏழைகளை ஒடுக்காதவராகவும் தம்மால் இயன்ற உதவிகளை தேவையுள்ள தனிநபர்களுக்குச் செய்பவராகவும் வாழ்ந்தார். அவர் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டு இறைவன் தம்மிடம் என்ன பேசுவார் என்பதைக் கேட்பதற்காக தனது இருதயத்தை எப்போதும் திறந்து வைத்துக்கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட மனிதனுடைய நல்ல ஆவியை நீண்ட நாள் மறைத்து வைக்க முடியாது. அவருடைய நற்குணம் வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும், போர்வீரர்கள் நடுவிலும் அறியப்பட்டிருந்தது. அவருடைய சாந்தகுணம், விண்ணப்பிக்கும் ஆவி ஆகியவற்றினால் அசைக்கப்பட்டிருந்த அவர்கள் இறைவனுடைய ஆவியானவர் சொல்வதைக் கேட்க ஆர்வத்துடன் இருந்தார்கள். உண்மையான விசுவாசிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ மாட்டார்கள். அவர்களுடைய அன்பு மற்றவர்களுடைய இருதயத்திலிருக்கும் பனிமலைகளையும் உருக்கிவிடும். அவர் தம்முடைய நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் விண்ணப்பித்த காரணத்தினால் அவர்களும் இறைவனை நோக்கி விண்ணப்பிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த ரோம நூற்றுக்கதிபதியின் ஒவ்வொரு விண்ணப்பமும் கேட்கப்பட்டது என்று மகத்துவமும் பரிசுத்தமும் உள்ள கடவுள் அவரிடம் சொன்னார். அவருடைய நற்செயல்கள் ஒவ்வொன்றையும் இறைவன் கண்ணுற்றார். இன்றும் மகா உன்னதமான இறைவன் உங்கள் நற்செயல்களை மறப்பதில்லை. உங்களுடைய விசுவாசத்தின் கனிகளாகிய உங்கள் இருதயத்தின் சத்தத்தைக் கேட்கவும், உங்கள் கரங்களின் நன்கொடைகளைக் காணவும் அவர் காத்துக்கொண்டு இருக்கிறார். நீங்கள் உங்கள் விண்ணப்பத்தினாலும் நோன்பினாலும் நீதிமானாக்கப்படுவதில்லை. கடவுளுடைய அன்பினாலேயே நீதிமான்களாக்கப்படுகிறீர்கள். அவருடைய மாபெரும் அன்பிற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பது உங்கள் கீழ்ப்படிதல் மூலமாக வெளிப்பட வேண்டும்.

யோப்பா பட்டணத்திற்கு ஆளனுப்பி, அங்கு சீமோன் என்னும் தோல்பதனிடுகிறவருடைய வீட்டிலிருக்கும் பேதுரு என்பவை அழைத்தனுப்பும்படி கொர்நேலியுவிற்கு அந்த தேவதூதன் கட்டளை கொடுத்தார். இறைவனுடைய கட்டளைகள் ஒவ்வொன்றிற்கும் நாம் உடனடியாகக் கீழ்ப்படிந்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்பதை கொர்நேலியு அறிந்திருந்தார். தேவதூதனோடு அதிக நேரம் செலவிடாமலேயே அவருடைய கட்டளைக்கு அவர் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். இறைவனுடைய அன்பு அவருடைய இருதயத்தைத் தொட்டிருந்த காரணத்தினால் அப்படிப்பட்ட அற்புதங்களைக் கண்டு அவர் பயப்படவில்லை. அவர் அனுதினமும் விண்ணப்பித்துக்கொண்டிருக்கும் இறைவனை அவர் முழுவதுமாக நம்பினார். ஒரு உளவாளியையோ அல்லது ஆபத்தான ஒரு நபரையோ அழைத்தனுப்பும்படி இறைவன் அவரை வழிநடத்தவில்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் இறைவனுடைய ஊழியனை, அப்போஸ்தலனை அழைத்தனுப்பியிருந்தார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே அப்போஸ்தலருடைய வாழ்வில் நீர் இடைப்பட்டு அவர்களை வழிநடத்தியதைப் போல திருச்சபை வரலாற்றில் எப்போதும் நீர் இடைப்பட்டு திருச்சபையை நடத்தி வருகிறதற்காக உமக்கு நன்றி. உம்மை அறியாத மக்களுடைய சரியான விண்ணப்பங்களுக்கும் நீர் செவிகொடுத்து, அவர்களுடைய நற்செயல்களையும் நீர் நினைவுகூரும் இறைவனாக இருப்பதற்காக உமக்கு நன்றி. உம்முடைய இரட்சிப்பின் நிறைவிற்குள் அவிசுவாசிகளான மக்களை உம்மிடத்தில் இழுத்துக்கொள்ளும்.

கேள்வி:

  1. ரோம அதிகாரியாகிய கொர்நேலியுவிற்கு தேவதூதன் காட்சிகொடுத்ததன் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)