Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 029 (The Apostle´s Imprisonment, and their Release by an Angel)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

16. அப்போஸ்தலர்கள் சிறையிலடைக்கப்படுதலும் தூதர் அவர்களை விடுவித்தலும் (அப்போஸ்தலர் 5:17-25)


அப்போஸ்தலர் 5:17-25
17 அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, 18 அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். 19 கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: 20 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 21 அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள். 22 சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: 23 சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். 24 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். 25 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.

ஆண்டவர் எங்கெல்லாம் தமது சபையைக் கட்டுகிறாரோ, அங்கெல்லாம் தனது தீய ஆவிகள் வாசம் பண்ணும்படியாக ஒரு ஆலயத்தை சாத்தான் கட்டுகிறான். இயேசுவின் நாமத்தில் மக்கள் மனந்திரும்பும்போது நரகத்தின் வல்லமை அவர்கள் மீது பொங்கி வருகிறது. இது இயற்கையாக நிகழக் கூடிய ஒன்று. எனவே பிரியமுள்ள விசுவாசியே,உனது நற்செய்திப் பணி முயற்சிகளை எதிரிகள் கொடூரமாக தாக்கினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இயேசு தனது மீட்பின் செயலுக்கு மையமாக சிலுவையில் தாமாகவே மரித்தார்.

இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக் கூடாது என்று பிரதான ஆசாரியர்கள் இட்ட கட்டளையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே பிரதான ஆசாரியர்கள் முற்றிலும் பொறுமை இழந்து போனார்கள். இந்த விசுவாசத்தில் பெருந்திரளான மக்கள் இணைந்து கொண்டார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் வெற்றியின் வல்லமையை பெற்றார்கள். மேலும் அவருடைய வல்லமையினால் ஆயிரக்கணக்கான சாட்சிகள் இறைவனுடன் ஒப்புரவாக்கப்பட்டார்கள். பிரதான ஆசாரியன் மிகுந்த கோபமடைந்தான். அவன் ஒருவேளை தேசத்து ஒற்றுமையைக் கருதி பயந்திருக்கலாம். அவனே நாட்டு மக்களுக்கு மேய்ப்பனாக இருந்து இந்த புதிய பாழாக்கும் இயக்கத்தை அழிக்க வேண்டிய கடமையுள்ளவன் என்று கருதியிருக்கலாம். இப்படிப்பட்ட அநேக எண்ணங்களும், சுதந்திரமான சிந்தனைகளும் ஓர் செயலுக்கு நேராக அவனை கொன்டு சென்றது. மதத்தலைவர்கள் கிறிஸ்தவத்துக்கு எதிராக செயல்படுவதை இறைவனுக்கு செய்யும் தொண்டாக கருதினார்கள். அப்படி எதிராக செயல்பட்டோரில் முக்கியமாக சதுசேயரின் பிரிவினர் இருந்தார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் நற்செய்தியோடு அவர்களுக்கு தனிப்பட்ட விரோதம் இருந்தது. அவர்கள் உயிர்த்தெழுதலின் கொள்கையை முற்றிலும் மறுத்தார்கள். ஆனால் கிறிஸ்தவமோ மரித்தோரில் இருந்து உயிர்த்தெழும் கொள்கையை நிலைநிறுத்தும், உறுதிப்படுத்தும் நம்பிக்கையாக காணப்பட்டது. மரணத்தை தோற்கடித்த இயேசுவுக்கு வலிமையான சாட்சிகளாக அவரைப் பின்பற்றுவோர் இருந்ததினால், அவர்கள் மீது இவர்கள் கடுங்கோபத்தினால் நிறைந்து காணப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட ஓர் எதிர்ப்பு இருப்பதை அப்போஸ்தலர்களும், சபையாரும் உணர்ந்தார்கள். ஆனால் அவர்கள் ஒடிப்போகவில்லை அல்லது தங்களை மறைத்துக்கொள்ளவில்லை. எல்லா மக்கள் முன்பாகவும் ஆலயத்து பிரகாரத்தில் அவர்கள் கூடினார்கள். கிறிஸ்தவம் ஒருபோதும் தன்னை மறைத்துக் கொள்ள முடியாது. அது பெரிதான பகல் வெளிச்சத்தில் தெளிவாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகாரிகள் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களையும் கைதுசெய்து, சிறைச்சாலையில் அடைத்தார்கள். “நீங்கள் பாம்பின் தலையை வெட்டிவிட்டால் அதனுடைய வால் ஆடுவதைக் கண்டு பயப்படத் தேவையில்லை” என்ற பழமொழியின் படி இப்படி செய்தார்கள்.

திருச்சபையின் தலையாக அப்போஸ்தலர்கள், பிஷப்மார்கள், ஊழியர்கள் இல்லை. கிறிஸ்துவே சபையின் தலையாக இருக்கிறார். அவர் வேறுவிதமான திட்டம் வைத்திருந்தார். அவர் சிறைச்சாலைக் கதவுகளை சத்தமின்றி திறக்கும்படி தன்னுடைய தூதனை இரவில் அனுப்பினார். சோதனையின் மத்தியில் விண்ணப்பம் செய்து தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த, குழப்பமடைந்த அப்போஸ்தலர்கள் முன் திடீரென்று மகிமையுள்ள இந்த தூதன் தோன்றி நின்றான். ஆச்சரியமான காரியம் என்னவென்றால், இச் சோதனையிலிருந்து அப்போஸ்தலர்கள் விடுவிக்கப்படும்படி அவன் முயற்சிக்கவில்லை. அவர்களுக்கு ஒரு படுக்கை, வசதியான விரிப்பு இவைகளை கொண்டு வரவில்லை. ஒடிப் போங்கள் என்று அவர்களுக்கு கட்டளையிடவில்லை. மாறாக தூதன் கூறினான். “நீங்கள் தேவாலயத்திற்குப் போய் கிறிஸ்து நிறைவேற்றி முடித்ததை எல்லாருக்கும் அறிவியுங்கள். இந்த நற்செய்தியின் ஜீவ வார்த்தைகளில் இருந்து வெளிப்பட்ட வல்லமை கேட்பவர்களின் இருதயங்களை ஆட்கொண்டது. எதிர்பபு மற்றும் பயமுறுத்தலுக்கு மத்தியில் இறைவனின் ஜீவ வார்த்தைகளை மக்களிடம் பேசுங்கள் என்று தூதன் கட்டளையிட்டான். “எல்லா வார்த்தைகளையும்” என்பதை கவனித்துப் பாருங்கள். அங்கே ஒரு வார்த்தையும் விட்டுவிடக்கூடாது,எதிரிகள் மீதான பயம் இருக்கக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அருமையான சகோதரனே, இதுவே உனக்கு இறைவனின் கட்டளை ஆகும். ஒவ்வொரு விசுவாசிக்கும் இது பொருந்தும். உங்கள் மக்களிடம் எல்லா ஜீவ வார்த்தைகளையும் பேசுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், சொற்பிரயோகம் இவைகள் முக்கியம் அல்ல. மக்கள் மரணத்தினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். கிறிஸ்து தரும் நித்திய வாழ்வு, அவரை விசுவாசிப்பவர்களுக்கு கிடைக்கும் என்பதற்கான சாட்சிகளாக வாழுங்கள்.

பன்னிரெண்டு காவற்காரர்கள் மத்தியில், சிறைச்சாலையிலிருந்து எழுந்து வெளியே புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் அதிகாலையில் தேவாலயத்து பிரகாரத்தில் நுழைந்தார்கள். அங்கே வந்திருந்த யாத்திரிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சற்று குழப்பமான நிலையில் அவர்களுடைய கர்த்தரின் திட்டத்தை குறித்த முழு நிச்சயம் அற்றவர்களாக காத்திருந்தார்கள். அவர்கள் ஏதோ மிகப்பெரும் காரியம் நடக்கப் போவதை உணர்ந்தார்கள். அவர்களது உயிருள்ள ஆண்டவர் மிகவும் வல்லமையாய் இடைபட்டு தமது மகிமையுள்ள தூதன் மூலம் நிறைவேற்றிய செயல்களை அடிப்படையாகக் கொண்டு அப்படி எண்ணினார்கள்.

யூத தேசத்தின் மிகப்பெரும் சனகெரிப் ஆலோசனைச் சங்கம் அந்த காலை வேளையில் கூடியது. அதில் கனத்திற்குரிய மூப்பர்கள், தந்திரம் வாய்ந்த சட்ட நிபுணர்கள், பிரதான ஆசாரியர்கள் உட்பட எழுபது பேர் இருந்தார்கள். மேலும் மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிலரை பிரதான ஆசாரியன் அழைத்திருந்தான். நாசரேத்தூர் இயேசுவை குறித்த இந்த புதிய இயக்கத்தை முற்றிலும் துடைத்தெறிவது அவனது திட்டமாய் இருந்தது. எல்லா மனிதரும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். ஆலோசனைச் சங்கத் தலைவன் சிறைபிடிக்கப்பட்ட அப்போஸ்தலரை தங்கள் முன்பு கொண்டுவந்து நிறுத்தும்படி கட்டளையிட்டான். காவல் அதிகாரிகள் சிறைச்சாலைக்கு வந்தார்கள். சிறைச்சாலை பத்திரமாக பூட்டப்பட்டிருந்தது. பூட்டுகள் உடைக்கப்படவில்லை. ஆனால் சிறைபிடிக்கப்பட்டோர் மறைந்துவிட்டார்கள். எனவே பயத்துடன், நடுங்கி ஆச்சரியப்பட்டார்கள். அவர்களை கண்டுபிடிக்க எந்த ஒரு சுவடும் அங்கில்லை. ஆலோசனைச் சங்கத்தார் அனைவரும் அவர்கள் மறைந்துபோன செய்தியைக் கேட்ட போது பிரமிப்புடன் கலங்கினார்கள். அப்போஸ்தலர்கள் மூலம் நடைபெற்ற அற்புதங்கள் குறித்து அவர்கள் அறிந்திருந்தார்கள். பேதுருவின் நிழல்பட்டு வியாதியஸ்தர் சுகமானது பற்றி அறிந்திருந்தார்கள்.

ஆழ்ந்த யோசனை செய்து திட்டம் தீட்டிய அவர்கள் அனைவருக்கும் இந்த அறிக்கை மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தீர்ப்பு சொல்ல முற்பட்ட அவர்களுக்கு இது பெரிய அவமானமாக இருந்தது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட நியாயதிபதிகளை இறைவன் அதிரச் செய்திருக்கிறார். நாட்டின் மக்கள் மத்தியில் இருக்கும் உண்மையான அப்பாவி விசுவாசிகளை நியாயம் தீர்ப்பதில் கவனமாய் இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவாக காண்பித்திருக்கிறார். கிறிஸ்துவின் கரம் அவருடைய அப்போஸ்தலர்களை பாதுகாத்தது. அவர்கள் முற்றிலும் கீழ்ப்படிந்து முழுமையான ஜீவ வார்த்தையை அவருடைய மக்களுக்கு பிரசங்கித்தார்கள்.

விண்ணப்பம்: ஆண்டவரே, நீரே இறைவன், உமது ஜீவன் உம்முடைய நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நீதியின் மேல் பசிதாகமுள்ள அனைவருக்கும் தைரியம், தாழ்மை, விவேகம் மற்றும் அன்புடன், உம்முடைய நாமத்தை அறிவிக்க எங்களுக்கு உதவும். அவர்கள் உமது ஜீவன் தரும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள உதவும்.

கேள்வி:

  1. சிறையிலிருந்து அப்போஸ்தலர்களுக்கு தூதன் இட்ட கட்டளையின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on June 07, 2013, at 11:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)