Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 022 (Peter and John Imprisoned)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

11. பேதுருவும் யோவானும் சிறையிலடைக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல் (அப்போஸ்தலர் 4:1-22)


அப்போஸ்தலர் 4:8-11
8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, 9 பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், 10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.

இச் சம்பவம் நடப்பதற்கு சில வாரங்கள் முன்பு பேதுரு தனது உயிரைக் குறித்த பயம் நிமித்தமாக இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். ஆண்டவருடைய நாமத்தை ஒரு போதும் கேள்விப்படாதவனைப் போல அவர் சபித்தார். ஆனால் இப்போது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவராய் பேசினார். அவருக்குள் கிறிஸ்துவின் வாக்குத்தத்தம் நிறைவேறியது. “மத்தேயு 10:18-20 18.அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19.அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.20.பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

யூதேயா தேசத்தின் அதிபதிகள் முன்பு கிறிஸ்துவின் சாட்சிகளாக இரண்டு அப்போஸ்தலர்கள் நின்றார்கள். அவர்கள் பழித்துப் பேசவில்லை. இறைவனின் மக்களை வழிநடத்தும்படி இறைவன் முன்பு பொறுப்புள்ளவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்து எல்லாத் தாழ்மையோடும் பேசினார்கள். இறைவன் அருளிய ஞானம், பொறுமை மற்றும் நற்குணங்களைப் பெற்றுள்ள மூப்பர்களை எண்ணி, அவர்களை கனப்படுத்தினார்கள்.

பரிசுத்த ஆவியானவர் அவர்களை இவ்விதம் சொல்லும்படி வழிநடத்தினார். அவர்களை சிறையிலடைத்தது முறையான காரியம் அல்ல. பிறவியிலே சப்பாணியாய் இருந்த மனிதனை சுகமாக்கிய நற்செயலுக்காக கேள்வி கேட்பது சரியானது அல்ல. அவர்களை இரவு முழுவதும் சிறையில் அடைத்து வைத்திருந்த செயலை ஓர் அநீதியான காரியமாக ஆவியானவர் கருதினார்.

இரண்டு சீஷர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியின் நிமித்தம் அவர்கள் பெரிதாக ஒன்றும் பாதிக்கப்படவில்லை. சுகமானதைக் குறித்து அவர்கள் பேசவில்லை அல்லது அவர்களது வார்த்தைகளின் வல்லமை குறித்துப் பேசவில்லை. பேதுரு நேரடியாக குற்றச்சாட்டின் கருப்பொருளுக்குச் சென்றார். இயேசு கிறிஸ்துவில் இறைவன் அடைந்த வெற்றியை வெளிப்படையாக அறிவித்தார். அவர் பயம் அடைந்து பேசவில்லை அல்லது திறமையாகவும் பேசவில்லை. அந்த அதிகாரிகள் மற்றும் மக்களிடம், அந்த நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எளிமையான மொழிநடையில் பேசினார். அந்த தேசத்தின் அதிகாரிகள் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படியான அழைப்பை கொடுக்கும்படி ஆண்டவர் பேதுருவை தகுதிப்படுத்தியிருந்தார். கிறிஸ்து யார் என்பதைக் குறித்ததான காரியத்திற்கு எவ்வித சந்தேகத்திற்கும் அவர் இடம் கொடுக்கவில்லை. கிறிஸ்து சாதாரண மனிதனை போல வாழ்ந்து மறைந்து போகவில்லை. அந்த தேசத்தின் அதிகாரிகள் சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்திருந்த நாசரேத்தூரைச் சேர்ந்த வாலிபன் இயேசு தான் கிறிஸ்து என்பதை பேதுரு தெளிவுடன் அறிக்கையிட்டார். பேதுரு அவர்களை புகழ்ந்து பேசவில்லை. அவர்களை கொலைகாரர்கள் என்று அழைத்தார். இறைவனுடைய எதிரிகள் என்று அழைத்தார். அவர்கள் தனிப்பட்டவிதத்தில் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்திருந்தார்கள். என்ன ஓர் அருமையான காட்சி, இரண்டு மீனவர்கள் குற்றவாளிகளாக நிற்கவில்லை. அவர்கள் நீதிபதிகளாக செயல்பட்டு இறைவனுடைய குமாரனை கொலை செய்தவர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். கனத்திற்குரிய, நீதிமன்ற அதிகாரிகள் பழைய ஏற்பாட்டு வரலாற்றின் பொருளை தவறவிட்டு விட்டார்கள் என்பதை அவர்கள் தெளிவாக காண்பித்தார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்துவிற்கு மரணத்தை கொண்டுவந்ததின் நிமித்தம் அவர்கள் இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையில் இருந்த உடன்படிக்கையை உடைத்துப் போட்டார்கள். இறைவனின் நாமத்தில் பேதுரு, தங்களுடைய ஆண்டவருக்கு எதிரான அந்த அதிகாரிகளின் அக்கிரமத்திற்காக, குற்றச் சாட்டை முன் வைத்தார். அவர்கள் இயேசுவுக்கு எதிராக மட்டும் பாவம் செய்யவில்லை, மாறாக இறைவனுக்கு எதிராக பாவம் செய்தார்கள் என்பதை நிரூபித்தார்கள். அந்த இரண்டு மீனவர்களும் பிரதான ஆசாரியர்களை குற்றம் சுமத்தினார்கள். பரிசுத்தமானவர், அவர்களை உயர்த்தாமல் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவை உயர்த்திக் காண்பித்தார். அதுபோலவே அவர்களும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார்கள்.பழைய ஏற்பாட்டு மதரீதியான அமைப்புகளை இறைவன் அங்கீகரிப்பதில்லை என்பதை அவர்கள் வெளிப்படையாக தாக்கிப் பேசினார்கள். அவர்களை மேற்கொண்டார்கள். இப்போது இறைவன் தமது தாசனாகிய இயேசுவை பின்பற்றுபவர்களில் எளிய விசுவாசிகளுக்கு இப்போது அதிகாரத்தை தந்தார்.

இயேசு என்னும் நாமத்தில் மிகப்பெரிய இரகசியம் மறைந்துள்ளது. மரணத்துக்கேதுவான விஷத்தைவிட இந்த நாமத்திற்கு நரகம் நடுங்குகிறது. ஆனால் பரலோகம் இந்த நாமத்தை துதிப்பதினால் நிறைந்து காணப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் உலக இரட்சகரை மகிமைப்படுத்தினார். இறைவன் இயேசுவை தமது வலது பாரிசத்தில் அமரும்படி செய்தார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நித்தியமான இறைவனுடன் கிறிஸ்து ஆளுகை செய்கிறார். அவர் பூமியில் இருந்தபோது செய்த அற்புதங்களைவிட அதிகமானவைகளை இப்போது செய்கிறார். அவர் தமது ஆயிரமாயிரம் பணிவிடைக்காரர்கள் மூலமாக புதுப்பிக்கப்படுகிறார். வாழும் கிறிஸ்து செயல்படுபவர், உண்மையுள்ளவர், வெற்றி சிறந்தவர் ஆவார். அவரை விசுவாசிப்பவர்கள் அவரது வல்லமையில் பங்கெடுக்கிறார்கள்.

மூலைக்கல்லைக் குறித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை பேதுரு அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார். இயேசுவே அஸ்திபாரமானவர், வல்லமைமிக்கவர், கிரீடம் போன்றவர், இறைவனுடைய ஆவிக்குரிய ஆலயத்தை கட்டுபவர். அந்த ஆலயம் இன்றும் உலகம் முழுவதிலுள்ள நாடுகளில் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் மக்கள் மூலமாக கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. கிறிஸ்துவே ஆவிக்குரிய சரீரத்திற்கு தலையாக இருந்து அனைத்தையும் வழிநடத்துகிறார். அனைத்து உறுப்புகளையும் அவர் வழிநடத்துகிறார். கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரம் என்பது நம் காலத்து இரகசியம் ஆகும். அது சிலுவையில் அவருடைய வெற்றியின் விளைவு ஆகும். அருமையான சகோதரரே, நீங்கள் கட்டப்பட்டுள்ளீர்களா? கிறிஸ்துவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளீர்களா? அல்லது யூத அதிகாரிகளைப் போல இயேசுவை புறக்கணிக்கிறீர்களா? கிறிஸ்துவில் வெளிப்பட்ட இறைவனின் மிகச்சிறந்த, வலிமையான அன்பை புரிந்துகொண்டீர்களா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் உலக மக்களின் மத்தியில் செயல்பட்டு இன்றும் அவர்களுக்கு இரட்சகராக இருக்கிறீர். அநேக ஆயிரம் விசுவாசிகளை எழுப்புகிறீர். எங்கள் இருதயங்களில் உமது சபையைக் கட்டுகிறீர். உமக்கு உண்மையாய் இருக்க எங்களுக்கு உதவும். நாங்கள் ஆவியானவரின் செயலை புறக்கணியாதபடி காத்துக்கொள்ளும். உமது ஆவிக்குரிய ஆலயம் முழுமை பெறட்டும். நீரே அதனுடைய நியமிக்கப்பட்ட தலையாக இருக்கிறீர்.

கேள்வி:

  1. பிரதான ஆசாரியர்கள் முன்பு பேதுரு பேசிய வார்த்தைகளின் முக்கியத்துவம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 10:28 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)