Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 127 (Miraculous catch of fishes; Peter confirmed in the service of the flock)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
5. இயேசு ஏரியினருகே காட்சி தருகின்றார் (யோவான் 21:1-25)

அ) அற்புதமாய் மீன்களைப் பிடித்தல் (யோவான் 21:1-14)


யோவான் 21:7-8
7 ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.8 மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

மிகுதியான மீன்களைப் பிடித்த நிகழ்வு தற்செயலான ஒன்று அல்ல என்பதை நற்செய்தியாளர் உணர்ந்தார். அவர் படவில் இருந்தார். கரையில் நிற்பவர் இயேசுவைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அவர் உணர்ந்துகொண்டார். யோவான் இயேசுவின் பெயரை உச்சரிக்கவில்லை. ஆனால் மரியாதையுடன் “அவன் கர்த்தர்” என்றான். மீன் பிடிப்பதின் மூலமாக இரண்டாவது முக்கிய பாடத்தை கிறிஸ்து கற்றுக்கொடுக்கிறார் என்பதை பேதுரு நினைத்துப் பார்த்தான். அவன் அரை நிர்வாணமாய் இருந்தபடியால் தனது ஆடைகளை எடுத்துப்போட்டுக் கொண்டு கர்த்தரிடம் வந்தான். அவன் தண்ணீருக்குள் குதித்து. நீந்தி கர்த்தரிடம் வந்து சேர்ந்தான். இப்போது அவன் படகு, நண்பர்கள், புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தான். அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். ஏனெனில் அவனது இதயம் இயேசுவைப் பற்றிக் கொண்டது. யோவானின் அன்பு உண்மையானது தான் என்றாலும், அவன் படகிலேயே இருந்தார். இப்போது இந்த வாலிபன் தனது கூட்டாளிகளுடன் துடுப்பு போட்டு 100 மீட்டர் தொலைவில் இருக்கும் கரையை வந்து சேர்ந்தான். மிகப்பெரிய அளவில் மீன்களைப் பிடித்தபிற்பாடு அவர்கள் அனைவரும் கரையை அடைந்தார்கள்.

யோவான் 21:9-11
9 அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.10 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.11 சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

சீஷர்கள் கரையை அடைந்த போது கரிநெருப்பு போட்டிருக்கிறதையும். அதின் மேல் மீன் வைத்திருக்கிறதையும் கண்டார்கள். இந்த அக்கினி, மீன், அப்பம் எல்லாம் எங்கிருந்து வந்தது? அவர்கள் தொலைவுக்கு அப்பால் இருந்தார்கள். அவர்களுக்கு சாப்பிட ஒன்றும் இல்லாதிருந்தது. இப்போது அவர்கள் வந்த போது மீன் பொரிக்கப்பட்டிருந்தது. அவர்களை சாப்பிடும்படி துரிதப்படுத்தினார். அவர் கர்த்தர், அதே சமயத்தில் விருந்து அளிப்பவராகவும் இருக்கிறார். தயார் செய்த உணவில் பரிவுடன் அவர்களுக்குரிய பங்கை கொடுத்தார். அவரது பணியிலும், ஆக்கத்திலும் நாம் பங்கு பெற நம்மை அனுமதிக்கிறார். அவருடைய ஆலோசனையை அவர்கள் கேட்டு, அதிக மீன்களைப் பிடிக்கவில்லையா? ஆனால் இங்கு அவர் சாப்பிடும்படி அவர்களை அழைக்கிறார். கர்த்தருக்கு இந்த உலக உணவு தேவையில்லை. ஆனால் ஆச்சரியப்படத்தக்க விதமாய் தமது அன்பை அவர்கள் உணரும்படி அவர்கள் நிலைக்கு இறங்கி, அவர்களுடன் அந்த உணவை பகிர்ந்துகொண்டார்.

அக்கால பாரம்பரியத்தின்படி 153 மீன்கள் என்ற எண்ணிக்கை, அப்போது இருந்த மொத்த மீன்களின் வகைகளை குறிப்பிடுகிறது. அது உண்மையென்றால் இயேசு இவ்விதம் கூறுகிறார், “ஒரே வகை மக்களை நீங்கள் பிடிக்க வேண்டாம், ஆனால் எல்லா தேசங்களின் மக்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்”, எல்லோரும் இறைவன் தரும் வாழ்விற்குள் பிரவேசிக்க அழைக்கப்படுகிறார்கள். மீன்களின் மிகுதியால் வலைகள் கிழிந்து போகவில்லை, அதுபோல மக்களின் மிகுதியால் சபையும், அதனுள் இருக்கும் மக்களில் சிலர் சுயநலத்தோடு, அன்புக்குறைவோடு இருந்தாலும் உடைந்து போவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தை இழந்து போவதில்லை. உண்மையான சபை அவருக்கு சொந்தமானதாக, மேலானதாக இருக்கும்.

யோவான் 21:12-14
12 இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.13 அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.14 இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.

இயேசு தமது அன்பு என்னும் நெருப்பு வளையத்திற்குள் தமது சீஷர்களை கொண்டு வந்தார். யாருக்கும் அவரிடம் பேச துணிச்சல் இல்லை. இந்த அந்நியர் கர்த்தர் என்பதை அனைவரும் அறிந்திருந்தார்கள். அவரை அணைத்துக்கொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆனால் பயமும், நடுக்கமும் அவர்களை தடுத்தது, இயேசு அந்த அமைதியை கலைத்து, அந்த உணவை ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறினார். அங்கே அவர்களை மன்னித்தார். அவர்களை புதுப்பித்தார். எல்லா சீஷர்களும் தொடர்ந்து அவர்களுடைய கர்த்தர் தரும் மன்னிப்பை பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் அந்த உடன்படிக்கைக்கு உண்மையற்று நடக்கும் போது அழிந்து போவார்கள். இப்போது அவர்கள் மெதுவாக நம்ப ஆரம்பிக்கிறார்கள். அவர் அவர்களை கடிந்துகொள்ளவில்லை, தனது அதிசயமான பராமரிப்பின் மூலம் அவர்களை அவர் பெலப்படுத்தினார். உங்கள் பாவங்கள், மந்தமான இருதயம் இவைகள் மத்தியிலும் நீங்கள் தொடர்ந்து இயேசு மற்றும் இறைவனைப் பற்றிய நற்செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும். உயிர்த்தெழுந்த பின்பு இயேசு நிகழ்த்திய அற்புதங்களின் வழிமுறை இப்படியாய் இருந்தது.


ஆ)மந்தையை மேய்க்கின்ற பணியில் பேதுரு உறுதிபடுத்தப்படுகிறார். (யோவான் 21:15-19)


யோவான் 21:15
15 அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

பேதுருவின் மறுதலிப்பை இயேசு மன்னித்தது போல, இப்போது சீஷர்களின் பாவங்களையும் தமது சமாதானத்தின் வார்த்தையினால் மன்னித்தார். ஆனால் பேதுருவின் மறுதலிப்பிற்கு சிறப்பான சிகிச்சை தேவைப்பட்டது. இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற கர்த்தரின் வார்த்தைகளில் அவரது இரக்கம் தோன்றியது. சுய பரிசோதனை செய்யவோ அல்லது தன்னை உணர்ந்து கொள்ளவோ அவர் பேதுருவிடம் மறுதலிப்பு பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர் பேதுருவை அவனது உண்மையான பெயரைக் கொண்டு அழைத்தார். யோனாவின் குமாரனாகிய சீமோனே தன்னுடைய பழைய வழிகளுக்கு திரும்பினதால் இப்படி அழைத்தார்.

அதைப் போல இயேசு இன்று உன்னிடம் கேட்கிறார், “நீ என்னை நேசிக்கிறாயா?” என் வார்த்தையின்படி நடந்து, என் வாக்குத்தத்தஙகளை விசுவாசிக்கிறாயா? எனது பிரசன்னத்தை உணர்ந்து, என் அருகில் வருகிறாயா? எனது நிலைக்கு நீங்கள் வந்து இணைகின்றீர்களா? உங்களது சொத்து, நேரம் பெலன் அனைத்தையும் எனக்காக விட்டுக் கொடுக்கிறீர்களா? உங்கள் சிந்தனைகள் எப்போதும் என்னைப் பற்றியதாக உள்ளதா? நீங்கள் என்னுடன் ஒன்றாகி விட்டீர்களா? உங்கள் வாழ்வின் மூலம் நீங்கள் என்னை கனப்படுத்துகிறீர்களா?

இயேசு பேதுருவிடம் கேட்டார், “இவர்களிலும் அதிகமாய் நீ என்னை நேசிக்கிறாயா” பேதுரு இவ்விதம் பதிலளிக்கவில்லை. “இல்லை, கர்த்தாவே, நான் மற்றவர்களை விட சிறந்தவன் அல்ல, நான் உம்மை மறுதலித்திருக்கிறேன்”. பேதுரு இப்போதும் சுய நம்பிக்கûயுள்ளவராக காணப்பட்டான். ஆம் என்று பதிலளித்தான். ஆனால் அது குறைவான அன்பு என்பதை வெளிப்படுத்தும் கிரேக்கபதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் கொண்டுவரும் தெய்வீக அன்பு மற்றும் உறுதியான விசுவாசம் அல்ல அது.

தன்னுடைய பெலவீனமான அன்பிற்காக பேதுரு கடிந்து கொள்ளப்படவில்லை. ஆனாலும் தன்னைப் பின்பற்றுபவர்களை கரிசனையுடன் கவனிப்பதின் மூலம் அந்த அன்பை உறுதிப்படுத்தும்படி தொடர்ந்து கர்த்தர் அவனை வழி நடத்தினார். இந்த தடுமாற்றமடைகின்ற சீஷனிடம் மறுபடியும் தன்னுடைய ஆட்டுக்குட்டிகளை விசுவாசத்தில் நடத்தும்படி கட்டளை கொடுக்கிறார். ஆட்டுக்குட்டியானவர் ஆடுகளை தனக்கு சொந்தமாக வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட மந்தைக்கு சேவை புரிய நீ ஆயத்தமா? அவர்களை பொறுத்துக்கொண்டு, பொறுமையுடன் வழிநடத்த, முதிர்ச்சிக்காக காத்திருக்க ஆயத்தமா? அல்லது அவர்கள் நிலைக்கு அதிகமாக நீங்கள் அவர்களிடம் எதிர் பார்க்கிறீர்களா? அல்லது மந்தையை விட்டு அவர்கள் வெளியேறும்படி, பீறிப்போடப்படும்படி விட்டுவிடுகிறீர்களா? இயேசு பேதுருவிடம் இவ்விதம் கேட்டுக்கொண்டார். “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக”.

யோவான் 21:16
16 இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

இயேசு இவ்விதமாக பேதுருவிடம் பேசி அவனை அப்படியே விட்டுவிடவில்லை. “நீ எனக்கு பதிலளிக்கும் போது அவசரப்பட்டு சொல்லவில்லையா? நான் உம்மை நேசிக்கிறேன் என்று நீ சொல்வது மனித அன்பு மற்றும் குறைவுள்ள அன்பு அல்லவா? உனது அன்பு உணர்ச்சி சார்ந்து உள்ளதே. அல்லது உனது நேர்மையான நல் விருப்பத்தின் அடிப்படையில் வருகிற அன்பாக உள்ளதே.

இயேசுவின் கேள்வி பேதுருவின் இதயத்தை அசைத்தது. அவன் தாழ்மையுடன் பதிலளித்தான். “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், எனது குறைவுகள், திறமைகள் உமக்குத் தெரியும். எனது அன்பு உம்மிடம் இருந்து மறைந்திருக்கவில்லை. நான் உண்மையாகவே உம்மை நேசிக்கிறேன். எனது வாழ்க்கையை உமக்காக கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். நான் தோற்றுப் போயிருக்கிறேன். மறுபடியும் தோற்றுப்போவேன். ஆனால் உமது அன்பு எனக்குள் முடிவற்ற அன்பைத் தூண்டிவிடும்.

இயேசு பேதுரு சொன்னதை மறுக்கவில்லை. நீ என்னை நேசிப்பது போல திருச்சபையின் முதிர்ந்த நபர்களை நேசி, அவர்களது போதகப் பணி என்பது எளிதானது அல்ல. அவர்களில் அநேகர் பிடிவாத குணமுடையோர், பின் வாங்கியவர்கள், தங்கள் சொந்த வழியில் செல்பவர்கள். உனது தோள்கள் மீது எனது ஆட்டை சோர்வுகள் மத்தியிலும் சுமக்க உனக்கு விருப்பமா?. நீ அவைகளுக்கு பொறுப்புள்ளவனாக இருக்கிறாய்.

யோவான் 21:17
17 மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

பேதுரு தனது ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தான். எனவே இயேசு அவனது இருதயக் கதவை மூன்று முறை தட்டினார். இதன் மூலம் அவனது அன்பின் உண்மைத் தன்மையை சோதித்தார். பேதுரு தனக்குள் கண்டு கொள்ளும்வரை அவர் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் தெய்வீக அன்பின் தேவையை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வரும் வரைக்கும் அவன் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து அவனிடம் பேசினார். “மற்ற எந்த மனித உறவுகளையும் விட நீ எனக்கு கட்டுப்பட்டு இருக்கிறாயா? உலகத்தின் இரட்சிப்பிற்காக உனது உயிரையும் கொடுக்கும் அளவிற்கு நீ ஆயத்தமா?” மூன்றாவது முறையாக துக்கம் மற்றும் வெட்கத்தோடு பேதுரு பதிலளித்தான். கர்த்தாவே நீர் என் இருதயத்தை அறிகிறீர் என்று சேர்த்து பதில் அளித்தான்.

தான் மறுதலிப்பதை இயேசு முன்பே சொன்னது சரியென்பதை பேதுரு அறிக்கை செய்தான். கிறிஸ்து அனைத்தையும் அறிந்துள்ளார். ஆகவே பேதுரு அவரை உண்மையான இறைவன் என்று அழைத்தார். மனிதனின் உள்ளான இருதயத்திற்குள் இருப்பதை அவர் அறிந்திருக்கிறார். பேதுருவுக்கு கொடுக்கப்பட்ட போதகப்பணி இதுதான். அவருடைய ஆடுகளை மேய்ப்பது.

நீங்கள் இறைவனின் மந்தையை கண்காணிக்கும் போதகரா? நீங்கள் மந்தையை அணுகும் ஒநாய்கள் மற்றும் தீய ஆவிகளை காண்கிறீர்களா? நாம் அனைவரும் பாவிகள் என்பதை நினைவில் வையுங்கள். இறைவனின் மக்களை மேய்ப்பதற்கு நாம் தகுதியற்றவர்கள். சிலுவையே நம்மை தகுதிப்படுத்துகிறது. சந்தேகமின்றி ஆடுகளை விட மேய்ப்பர்களுக்குத் தான் அதிக மன்னிப்பு தேவைப்படுகிறது. அடிக்கடி அவர்கள் தங்கள் பொறுப்புகளில் தவறுகிறார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே: நீரே நல்ல மேய்ப்பர். நானும் ஒரு மேய்ப்பனாக இருக்கும்படி என்னை அழைத்தீர். இதற்கு நான் தகுதியுள்ளவன் அல்ல. நான் உம்மை பின்பற்றி நடக்கிறேன்; தடுமாறுகிறேன், நீர் அன்புடன் நேசிக்கும் மந்தையை எனக்கு தந்துள்ளீர். நான் அவைகளை உமக்குத் தருகிறேன். அவைகளை நடத்தும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். அவைகளுக்கு நித்திய ஜீவனைத் தாரும், உமது கைகளில் அவைகளை வைத்துக் கொள்ளும். அப்பொழுது ஒருவரும் அவைகளை பறிக்க இயலாது. அவைகளை பரிசுத்தப்படுத்தும். உமது அன்பில் நிலைத்தோங்க எங்களுக்கு பொறுமை, தாழ்மை, விசுவாசம், நம்பிக்கை தாரும். நீர் என்னைக் கைவிடுவதில்லை. என்னை கடைசி வரை நீர் நேசியும்.

கேள்வி:

  1. இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்த உரையாடலில் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது எது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)