Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 091 (Abiding in Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

1. கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் அதிக கனிகளைக் தரும் (யோவான் 15:1–8)


யோவான் 15:5
5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

அவருடைய இதயத்திலிருந்து வரும் கொடிகளாக நாம் அவருடைய சாயலில் இருக்க வேண்டும் என்று அவர் நம்மை ஏற்படுத்தியிருப்பது எவ்வளவு பெரிய கனத்திற்குரிய காரியம். அவரே நம்மில் ஆவிக்குரிய வாழ்வை ஆரம்பித்து வைத்தவர். ஒரு திராட்சைச் செடியில் எவ்வாறு முதலில் ஒரு முளைதோன்றி பிறகு அது பெரிய ஆரோக்கியமான செடியாக வளருகிறதோ அதேபோலதான் இதுவும். அவ்வாறே அனைத்துக் கிறிஸ்தவ குணாதிசயங்களோடும் வளருகிற ஒரு கிறிஸ்தவன் இயேசுவுக்கே நன்றிசொல்ல வேண்டியவனாயிருக்கிறான். நமக்கு விசுவாசத்தை மட்டுமல்ல, தொடர்ச்சியாக கிருபையின் மேல் கிருபைகளை அவர் நமக்கருளுகிறார். நாமோ அவரில் நிலைத்திருக்க வேண்டிய பொறுப்புடையவர்களாயிருக்கிறோம்.

“நாம் அவரில்” என்ற வித்தியாசமான கூற்று இந்த நற்செய்தியில் 175 முறை இடம்பெறுவதை நாம் கவனிக்கிறோம். அதற்கு இணையாக “அவரில் நாம்” என்ற சொற்றொடரும் பலதடவை இடம் பெறுவதைக் கவனிக்கலாம். புதிய உடன்படிக்கையில் ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவுடன் இணைக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் கிறிஸ்துவோடு கலந்தொன்றாகி விடுவதால் இந்த ஐக்கியம் மிகவும் உறுதியானதாக மாறிவிடுகிறது.

நாம் கர்த்தரை விசுவாசிப்பதால் நம்முடைய தனித்தன்மையை நாம் இழந்துபோவதில்லை. நாம் ஒரு மாய நிலைக்குள் அமிழ்ந்துபோய்விடுவதுமில்லை. அவர் உங்கள் சித்தத்தை வலுப்படுத்தி, உங்கள் வாழ்வை அவருடைய ஆவியினால் நிரப்புகிறார். கிறிஸ்து உங்களை முதிர்ச்சிக்குள் வழிநடத்தவும், உங்களுக்காக ஆதிமுதல் ஆயத்தப்படுத்தப்பட்ட சாயலில் உங்களை வனையவும் விரும்புகிறார். அவருடைய தன்மைகளை அவர் ஒரு விசுவாசியின் இருதயத்திற்குள் செலுத்துகிறார். அப்போது நம்முடைய விசுவாசமும் அன்பும் எங்கேயிருக்கும்?

இறைவனுடைய மகன் மானிடர்களுடன் இணைந்திருப்பதன் நோக்கம் என்ன? இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்; பரிசுத்த ஆவியானவர் ஏன் விசுவாசிகள் மீது பொழிந்தருளப்படுகிறார்? கர்த்தர் உங்களிடத்தில் எதைக் கேட்கிறார்? உங்கள் மீது அருளப்பட்டுள்ள ஆவிக்குரிய கனிகள் இறைவனிடத்திலிருந்துதான் வருகிறது. அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, இரக்கம், நற்குணம், உண்மை, சாந்தம் மற்றும் இச்சையடக்கம் ஆகியவையே பரிசுத்த ஆவியின் கனிகள் ஆகும்.

இந்தக் குணாதிசயங்களில் ஒன்றைக்கூட நாம் நம்முடைய சொந்த முயற்சியினால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நாம் அறிய வேண்டும். சுவாசிப்பது, நடப்பது, பேசுவது போன்ற காரியங்களை நாமாக எவ்வாறு உருவாக்க முடியாதோ அவ்விதமாகவே ஜெபம், விசுவாசம், அன்பு போன்ற காரியங்களையும் நம்மால் உருவாக்க முடியாது. இயேசுவிடம் இருந்து மட்டுமே புறப்பட்டுவரும் ஆவிக்குரிய வாழ்வைப் பெற்றனுபவிக்கும் பாக்கியம் விசுவாசிகளாகிய நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்வுக்காகவும், அவர் நமக்கு அருளிய தெய்வீக வல்லமைக்காகவும் நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த வல்லமைகள் மற்றும் ஊழியங்கள் அனைத்தும் இறைவனிடமிருந்து நமக்கு ஈவாகக் கிடைக்கிறது. அவராலேயன்றி நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது.

யோவான் 15:6
6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.

கிறிஸ்துவில் நிலைத்திருப்பது உங்கள் பொறுப்பாயிருக்கிறது. ஒருபுறம் ஆவிக்குரிய வாழ்வும் கிறிஸ்துவில் நிலைத்திருத்தலும் இறைவனுடைய கொடைகள் என்று பார்த்தோம். மறுபுறம் கிறிஸ்துவை விட்டு விலகுகிற எவனும் தற்கொலை செய்கிறவனுக்குச் ஒப்பாயிருக்கிறான் என்பதையும் நாம் பார்க்கிறோம். இறைவனை விட்டு விலகுகிறவன் கடினமடைந்தவனாக இறைவனுடைய கோபத்தின் நெருப்பில் போடப்பட வேண்டியவனாயிருக்கிறான். இயேசுவைப் புறக்கணித்தவர்கள் அனைவரையும் உரிய காலத்தில் சேகரித்து அவர்களைப் புறம்பான இருளிலிலே போடுவார்கள். அவர்களுடைய குற்ற மனசாட்சி அவர்களை ஓய்வெடுக்க விடாது. நித்திய காலம் முழுவதும் இரக்கமுள்ள இறைவனை அவர்கள் காண்பார்கள், ஆனால் அவரிடத்தில் அவர்களால் போக முடியாது. அவர்கள் முன்பு எவ்விதமாக இறைவனுடைய அன்பைப் புறக்கணித்தார்கள் என்று அப்போது அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். அவர்கள் அவரைப் புறக்கணித்து, தங்கள் இரட்சகரை அசட்டை செய்த காரணத்தினால் அவர்கள் நித்திய அழிவுக்குள்ளாக்கப்படுவார்கள்.

யோவான் 15:7
7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

கிறிஸ்துவில் நிலைத்திருப்பவன் அவருடன் ஒரு அறிவுபூர்வமான உறவில் வாழ்கிறான். ஒரு கணவனும் மனைவியும் தங்கள் நீண்டகால உறவில் ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளையும் நோக்கங்களையும் அறிந்திருப்பார்களோ அவ்விதமாகவே இதுவும் காணப்படும். யார் கிறிஸ்துவை நேசிக்கிறார்களோ அவர்கள் அவருடைய சித்தத்தை அறிந்து, அவரோடு ஒருங்கிணைந்து வாழ்வார்கள். நாம் வேதாகமத்தை அதிக ஆழமாகக் கற்று தியானிக்கும்போது, நம்முடைய உள்ளுணர்வுகளை அவருடைய வார்த்தையால் நிரப்புவதால், அவருடைய விருப்பத்தை நாம் எளிமையாக அறிந்துகொள்வோம்.

அப்போது நாம் நம்முடைய சுயநல விருப்பங்களின்படி விண்ணப்பிக்காமல், இறைவனுடைய இராஜ்யத்தின் வளர்ச்சியை ஆவலுடன் கவனிப்பவர்களாயிருப்போம். ஆவிக்குரிய போராட்டத்தில் பொறுப்புடன் பரிந்துபேசி ஜெபிப்பவர்களாயிருப்போம். அப்போது நம்முடைய இருதயம் நன்றியினாலும் துதியினாலும் நிரம்பும். நம்முடைய பிரச்சனைகளையும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிற தேவையுள்ள, துன்பமளிக்கிற மக்களுக்காவும் நாம் பரிசுத்தரை நோக்கி நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுப்போம். நம்முடைய விசுவாசமுள்ள விண்ணப்பத்தின் அடிப்படையில்தான் இறைவன் இந்த உலகத்தில் செயல்படுகிறார். அவர் தம்முடைய இரட்சிப்பின் செயலில் பங்குபெறும்படி நமக்கு அனுமதியளிக்கிறார். நீங்கள் விண்ணப்பம் பண்ணுகிறீர்களா? எவ்வாறு? பரிசுத்த ஆவியில் நீங்கள் விண்ணப்பம் செய்கிறீர்களா? இறைவனுடைய சித்தம் பல்வேறுபட்டது. அதில் ஒன்று உங்களுடைய பரிசுத்தம்; இன்னொன்று அனைவரையும் இரட்சித்து சத்தியத்தை அறிகிற அறிவிற்குள் கொண்டுவருவது. நாம் தாழ்மையாக நடந்துகொண்டால் அதன் மூலம் இறைவனுடைய நாமம் பரிசுத்தப்படுகிறது. நீங்கள் அதிக கனிகளைக் கொடுக்கவும், உங்கள் பரலோக பிதாவையும் உங்கள் வழிகாட்டியாகிய கிறிஸ்துவையும் மகிமைப்படுத்தவும் விண்ணப்பத்தின் ஆவியைக் கர்த்தர் உங்களிடத்தில் ஊற்ற வேண்டும் என்று கர்த்தரிடம் கேளுங்கள்.

யோவான் 15:8
8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

நீங்கள் அதிகமான கனிகளைக் கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அவர் உங்கள் வாழ்வில் சிறிதளவான பரிசுத்தத்தைப் பார்த்து, அல்லது சில உண்மையான ஆத்துமாக்களை நீங்கள் ஆதாயப்படுத்தியதைப் பார்த்து, அல்லது உங்கள் குறைவான நன்றியுணர்வைப் பார்த்து அவர் திருப்தியடைவதில்லை. இல்லை. அவர் உங்கள் பரிசுத்தமாகுதலை விரும்புகிறார். பிதா பூரண சற்குணராயிருப்பதுபோல நீங்களும் பூரண சற்குணராயிருக்க வேண்டும் என்றும் எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். நீங்கள் ஒருபோதும் சுயதிருப்தியடைந்து விடாதீர்கள்.

விண்ணப்பம்: நீர் எங்களை உம்முடைய சரீரத்தின் அவயவங்களாக ஏற்றுக்கொள்ள வெட்கப்படாததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் கர்த்தாவே. உம்மிடத்தில் வரும்படி நீர் அழைத்த எல்லாருடைய மனந்திரும்புதலுக்காகவும் நாங்கள் விண்ணப்பிக்கிறோம். அவர்களுடைய பெயர்களை நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்லுகிறோம். நீர் அவர்களை உம்முடைய சிலுவையினால் இரட்சித்திருக்கிறீர் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தருளியதால் அவர்களுடைய இரட்சிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உம்முடைய பிதாவின் நாமம் மகிமைப்படுவதாக. பரிசுத்த ஆவியில் உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. நீர் இன்றி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி :

  1. கிறிஸ்துவில் நாமும் நம்மில் கிறிஸ்துவும் இருப்பது ஏன்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)