Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 062 (Healing on the Sabbath)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
2. பிறவிக் குருடனைக் குணமாக்குதல் (யோவான் 9:1-41)

அ) ஓய்வு நாளில் குணமாக்குதல் (யோவான் 9:1-12)


யோவான் 9:1-5
1 அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். 2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 2 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். 4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. 5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

யூதர்கள் இயேசுவைக் கல்லெறிய வந்தபோது, அந்த இக்கட்டான நிலையில்கூட இயேசு வேகமாகத் தப்பித்து ஓடிவிட எத்தனிக்காமல் ஒரு துயரப்படும் சகோதரனைக் கண்ணுற்றார். அவர் மன்னிப்பருளுகிற அன்பாயிருப்பதோடு, உண்மையுள்ளவரும் ஆசீர்வாதத்தினால் நிறைந்தவருமாயிருக்கிறார். சீடர்களும் அந்தக் குருடனைப் பார்த்தார்கள், அந்தக் காட்சி அவர்களைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மாறாக அந்த குருடனுடைய பரிதாப நிலைக்கு அவன் செய்த குற்றம் என்ன என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். ஏனெனில் அக்காலத்தில் நோய்கள் மனிதர்களுடைய பாவங்களுக்காக அவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை என்று மக்கள் கருதினார்கள். அந்த வாலிபனுடைய அங்கவீனத்திற்கான காரணத்தை இயேசு குறிப்பிடவில்லை. அவனோ அல்லது அவனுடைய பெற்றோரோ குற்றமற்றவர்கள் என்றும் அவர் கூறவில்லை. ஆனால் அந்த மனிதனுடைய துன்பம் இறைவனுடைய செயல்பாட்டிற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதை மட்டும் அவர் குறிப்பிட்டார். அந்தக் குருடனை நியாயம் தீர்க்கவோ, அவனுடைய குருட்டுத் தன்மைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கவோ அவர் தன்னுடைய சீடர்களை அனுமதிக்கவில்லை. இறைவனுடைய சித்தம் இரட்சிப்பும் குணமாக்குதலுமே என்பதைக் காணும்படி இயேசு அவர்களை உற்சாகப்படுத்தினார்.

“நான் செயல்பட வேண்டும்” என்று இயேசு சொன்னார். அன்பு அவரை நெருக்கி ஏவியது, ஏனென்றால் நியாயம்தீர்ப்பதையோ அழிப்பதையோ அவர் விரும்பாமல், குணமாக்க வேண்டும் என்று அவருடைய இரக்கமுள்ள மனது ஏங்கியது. அதன்மூலம் அவர் தம்முடைய மீட்கும் அன்பையும், எண்ணங்களையும் நோக்கங்களையும் வெளிப்படுத்தினார். மக்களை தெய்வீக வாழ்விற்குள் வழிநடத்த விரும்பும் உலக இரட்சகர் அவர். இயேசுவின் வார்த்தைகளை நாமும் கேட்கிறோம்: “நான் என்னுடைய நாமத்தினாலோ, என்னுடைய சுய பெலத்தினாலோ செயல்படுவதில்லை. மாறாக நான் என்னுடைய பிதாவின் செயல்களை, அவருடைய நாமத்தினாலே, அவருடைய விருப்பப்படி நிறைவேற்றுகிறேன்.” தன்னுடைய செயல்களை இறைவனுடைய செயல்கள் என்று அவர் அழைத்தார். தன்னுடைய காலம் குறுகிறது என்றும் தன்னுடைய மரணம் நெருங்கிவிட்டது என்றும் அவருக்குத் தெரியும். இருப்பினும் அந்தக் குருடனைச் சுகப்படுத்தும்படி தன்னுடைய நேரத்தைச் செலவிட்டார். அந்தக் குருடனுக்கு ஜீவ ஒளியைக் கொடுத்து அவனை ஒளிர்விக்க விரும்பிய உலகத்தின் ஒளி அவரே. அவரோ வேறு எந்த பரிசுத்தவானோ எதுவும் செய்யமுடியாத ஒரு காலம் வருகிறது. பகல்பொழுதாயிருக்கும்போதே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்க்கும்போதே அவருக்கு சாட்சிபகர்வோமாக. இருள் பெருகிக்கொண்டே போகிறது. கிறிஸ்துவின் வருகையில் மட்டுமே நமக்கு நம்பிக்கை இருக்கிறது. யார் அவருக்கு வழியை ஆயத்தம் செய்வார்?

யோவான் 9:6-7
6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.

இதற்கு முன்பு இயேசு வெறும் வார்த்தைகளினாலேயே அற்புதங்களைச் செய்தார். ஆனால் இந்தக் குருடனைக் குணமாக்கும்போது, அவர் தரையிலே துப்பி, சேறுண்டாக்கி, அவனுடைய கண்களில் பூசினார். கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து ஏதோ ஒன்று தனக்குத் தரப்பட்டிருப்பதை அந்தக் குருடன் உணர வேண்டும் என்று இயேசு விரும்பினார். இயேசு அந்தக் குருடன்மேல் இரக்கம்கொண்டு, அவனைக் குணமாக்குவதற்கான சிறந்த முறையைக் கையாண்டார். ஆனால் அவனுடைய கண்கள் உடனடியாகத் திறக்கப்படவில்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. அவன் ஒரு பள்ளத்தாக்கின் ஆழத்திற்கு நடந்துசென்று “சீலோவாம்” என்ற குளத்தில் தன்னைக் கழுவ வேண்டியிருந்தது. சீலோவாம் என்றால் “அனுப்பப்பட்டவன்” என்று அர்த்தம். அவனுடைய குணமாக்குதல் அவர் தன்னுடைய மக்களிடத்திற்கு அனுப்பப்பட்டவர் என்ற பொருளைக் கொடுத்தது. அவர்களும் தங்களுடைய பாவங்களினாலும் அக்கிரமங்களினாலும் குருடாகப் பிறந்தவர்களாக இருப்பதால், இயேசுவினால் சுகமாக்கப்பட வேண்டியவர்களாகவும், இரட்சிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்தக் குருடன் கிறிஸ்துவின் அன்பின் மீது நம்பிக்கையுள்ளவனாக கிறிஸ்துவின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டான். அவன் உடனடியாகக் கீழ்ப்படிந்தான். கிறிஸ்து தன்னிடம் சொல்லியவற்றை மனதில் தியானித்தவனாக மெதுவாக நடந்து சென்றான். அவன் நடந்து சென்று தன்னுடைய கண்களைக் கழுவி சுகத்தைப் பெற்றுக்கொண்டான். உடனடியாக அவன் மக்களையும், வெளிச்சத்தையும், தண்ணீரையும், தன்னுடைய கைகளையும், வானத்தையும் எல்லாவற்றையும் பார்த்தான். மிகுந்த ஆச்சரியத்தோடு அவற்றை எல்லாம் பார்த்தான். அவன் அல்லேலூயா என்று கத்தி இறைவனுடைய இரக்கத்திற்காக அவரைத் துதித்தான்.

யோவான் 9:8-12
8 அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். 9 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். 10 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். 11 அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். 12 அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.

அந்த அற்புதத்தை மறைக்க முடியவில்லை. ஏனெனில் அதை அநேகர் பார்த்து ஆச்சரியப்பட்டனர். கண் தெரியாமல் தடுமாறுகிறவனாகவும், நடமாட முடியாதவனாகவும், நடப்பதற்கு மற்றவர்களுடைய உதவியை நாடியவனாகவும் காணப்பட்ட குருடன்தான் இப்போது எழுந்து நேராக நடந்து செல்கிறான் என்று அவர்களில் சிலருக்கு நம்ப முடியவில்லை. அவர்கள் கண்டறிந்திருந்த அதே குருடன்தான் இன்று காண்கிறான் என்பதற்கு அவனே சாட்சியாகக் காணப்பட்டான்.

அவன் எவ்விதமாக குணமடைந்தான் என்று மக்கள் கேட்டார்கள். ஆனால் யார் அவனைக் குணப்படுத்தியது என்று அவர்கள் கேட்கவில்லை. அது எவ்விதமாக நடந்தது என்பதை மட்டும் அவர்கள் அறிய ஆவலாயிருந்தார்கள். கண் திறக்கப்பட்ட குருடன் தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று அறிந்திருந்தான். அதைத் தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. கிறிஸ்துவின் தெய்வீகத்தை அவன் அறியவில்லை. சேறுண்டாக்கிப் பூசி தன்னுடைய கண்களைத் திறந்த அவர் ஒரு மனிதன் என்றே அவன் நினைத்திருந்தான்.

ஆலோசனைச் சங்கத்தின் உளவாளிகள் “யார் இந்த இயேசு?” என்று அவனிடம் கேட்டபோது, “எனக்குத் தெரியாது. முன்பு நான் குருடனாக இருந்தேன். இப்போது காண்கிறேன். அவர் என்னிடம் பணத்தையோ என்னுடைய நன்றியையோ எதிர்பார்க்கவில்லை. நான் அவர் சொன்னபடி குளத்தில் சென்று கழுவினேன். அதனால் இப்போது எனக்குக் கண் தெரிகிறது. அவர் யார் என்றோ, இப்போது அவர் எங்கிருக்கிறார் என்றோ எனக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தான்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் அந்தக் குருடனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. நீர் அவனுடைய கண்களைத் திறந்தபடியால் பாவத்தில் பிறந்திருக்கும் மக்கள் அனைவருக்கும் அவன் ஒரு அடையாளமாயிருக்கிறான். நாங்கள் உம்முடைய வெளிச்சத்தைக் கண்டு, உம்முடைய நாமத்தை மகிழ்ச்சியோடு அறிக்கை செய்யும்படி நீர் உம்முடைய ஆவியினாலே எங்கள் கண்களைக் கழுவி சுத்திகரியும்.

கேள்வி:

  1. பிறவிக் குருடனை இயேசு ஏன் சுகப்படுத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:09 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)