Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 066 (We must Learn Brotherly Love)

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

3. நாம் சகோதர அன்பை கற்றுக்கொண்டு, அதில் நம்மை பயிற்றுவிக்க வேண்டும் (ரோமர் 12:9-16)


ரோமர் 12:9-16
9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். 10 சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். 11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். 12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். 13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள். 14 உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள். 15 சந்தோஷப் படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். 16 ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

கிரேக்கத்தில் அன்பைக் குறிப்பிட பல்வேறு பதங்கள் உள்ளன. “ஃபிலியோ” என்பதன் அர்த்தம் ஆழமான உணர்வுடன் கூடிய மனிதனின் அன்பு ஆகும். “எரோஸ்” என்பதன் அர்த்தம் மனிதனின் பாலியல் ஆசையில் இருந்து எழும்பும் காம அன்பைக் குறிப்பதாகும். “அகாபே” என்பதன் அர்த்தம் உயர்வான, பரிபூரணமான அன்பு என்பதாகும். ஏழைகள் மற்றும் சத்துருக்களின் மீதான தன்னையே தியாகபலியாய் ஒப்புக்கொடுத்த இறை அன்பை இது குறிக்கின்றது. இது இறை வெளிப்பாட்டின் அன்பு ஆகும்.

இந்த இறை அன்பில் கிறிஸ்து தனது வாழ்வை பாவிகளுக்கான மீட்பிற்காக ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் வாழ்வில் உள்ள நடைமுறை அன்பைக் குறித்து பவுல் பேசுகிறான். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5).

இறை அன்பு பொய் பேசாது. ஏனெனில் அது நீதி நிறைந்தது. ஞானம் மற்றும் இரக்கத்துடன் அது சத்தியத்தைப் பேசுகின்றது. மாய்மாலம் என்பது நல்லதல்ல என்று வேதம் நமக்கு கூறுகிறது. சில சமயங்களில் மக்களின் முன்பு நமக்கு எந்த பெருமையும் இல்லை என்பதை நம்முடைய பாவங்களை அறிக்கையிடும்போது கூற வேண்டும். இயேசுவின் மீதான நமது அன்பை அறிக்கையிட வேண்டும். அவரே தமது பரிகாரப் பலியின் மூலம் நம்மை நீதிமானாக்கியிருக்கிறார்.

இறை அன்பு தீமையை எதிர்க்கின்றது. நமது மனச்சாட்சி நம்மை கடிந்துகொள்கிறது. இறைவார்த்தை நம்மை அசுத்தர், பொய்யர், துன்மார்க்கர், அநீதியுள்ளோர் என்று தீர்க்கின்றது. இப்படிப்பட்ட நடக்கைகளை அன்பு ஒருபோதும் ஏற்காது. தூய்மை, உண்மை, மற்றும் நீதியை அது ஆதரிக்கின்றது.

ஆண்டவருக்குள் இருக்கின்ற நம்முடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் அன்பை இறை அன்பு நமக்கு கற்றுக்கொடுக்கிறது. குறை கூறாமல் அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. நமது பணி மற்றும் பேச்சு அனைத்தும் நேர்மையுள்ளதாக இருக்கிறது. நாம் உண்மையாகவே அவர்களை நேசிக்கிறோம் என்பதை அவர்கள் உணருவார்கள். இந்த விஷயத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் உள்ள பரஸ்பர மதிப்பும் அடங்கும்.

வார்த்தை அல்லது எழுதுதல் மூலம் நற்செய்திப்பணி செய்யும் ஒருவர் ஆவிக்குரிய அனலுடன் எதிர்ப்புகள் மத்தியிலும் ஆண்டவருடைய வழிநடத்துதலில் தன்னை உறுதிப்படுத்தி செயல்படுகின்றார்.

கிறிஸ்துவே வெற்றியாளர் என்ற நம்பிக்கையை தோல்வியை சந்திக்கும் ஒருவன் ஒருபோதும் இழப்பதில்லை. பாடுகள் மற்றும் துன்பங்கள் மத்தியில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் செயல்படுகிறான். விசுவாசத்துடன் சந்தேகப்படாமல் விண்ணப்பத்தில் நிலைத்திருக்கிறான். மற்றவர்களுக்காகவும், நமக்காகவும் ஏறெடுக்கும் நமது விண்ணப்பங்களுக்கு ஆண்டவர் பதிலளிக்கிறார்.

உங்கள் சகோதரர்கள் விசுவாசத்தில் பாடு அனுபவிக்கும்போது, நீங்கள் இரக்கம் காண்பிக்க வேண்டும். அவர்களுடைய பாடுகளில் பங்குபெற வேண்டும். அவருடைய நாமத்தின் நிமித்தம் மகிழ்ச்சியுடன் கதவைத் திறந்து பசியுள்ளோருக்கு நீங்கள் ஆகாரம் கொடுக்கும் போது ஆண்டவர் உங்கள் ஆகாரத்தை பெருகப்பண்ணுவார். அவர்கள் உங்களுடன் இணைந்து பிதாவை மகிமைப்படுத்துவார்கள். அவரை நேசிக்கும் அனைவரோடும் அவர் வாசம் செய்கிறார்.

ஒருவன் உன்னை துன்புறுத்தினால், நீ அவனை ஆசீர்வதி. உன்னை சபிப்பவனை நீ சபிக்காதே. அவர்கள் விடுதலை பெற மீட்பரிடம் மன்றாடு. பவுல் தமஸ்குவை நெருங்கி வந்து விசுவாசிகளை துன்புறுத்த, எருசலேமிற்கு அவர்களை அடிமைகளாக்கி கொண்டு போக முற்பட்ட போது விசுவாசிகள் விண்ணப்பம் பண்ணினார்கள். சவுலின் வழியில் ஆண்டவர் குறுக்கிட்டு, அவனது பெருமையை முற்றிலும் நொறுக்கினார்.

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்த போது விசுவாசிகள் மகிழ்ச்சியுற்றார்கள், விசுவாசத்தில் உறுதிப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவின் வெற்றியையும், அதன் பலன்களையும் கண்டார்கள். சிலர் கண்ணீருடன் காணப்படும்போது, நாம் அவர்களுடைய பாடுகளில் பங்கு பெற வேண்டும். கண்ணீரைக் குறித்து நாம் வெட்கப்படக் கூடாது.

இறை குடும்பமாக திருச்சபையில் ஒரே குழுவாக செயல்பட பிராயசப்படுங்கள். இந்த உலகத்தின் பணம், கனம், அதிகாரம் மற்றும் நன்மைகளுக்கு முதலிடம் வேண்டாம். இயேசு வியாதியுற்றோர் மத்தியிலும், பிசாசு பிடித்தோர் மத்தியிலும் வாழ்ந்ததைப் போல ஏழைகள் மற்றும் நம்பிக்கையற்ற மக்கள் மத்தியில் நாமும் வாழ வேண்டும்.

மற்றவர்களை விட கல்வியில் சிறந்தவர்களாக, உயர்வாக உங்களை எண்ண வேண்டாம். சபையார் மத்தியில் சுகமாக்குதல், ஆறுதல், இரட்சிப்பு மற்றும் தீர்வுகளை அறுவடையின் ஆண்டவர் கொண்டுவரும்படி கேளுங்கள்.

சண்டை போடாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஒருவரை ஒருவர் பொறுமையினால் தாங்குங்கள். ஆண்டவர் ஒருவரே! அவருடைய பரிகாரப்பலியும் ஒன்றே. அவருக்கு பதிலாள் ஒருவரும் இல்லை. நீ சிறந்த இரட்சிப்பை தருவது போல நடந்து கொள்ளாதே. நாம் அனைவரும் பிதா மற்றும் குமாரனுடைய கிருபையினாலும், அவருடைய அன்பின் ஆவியினாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, எங்கள் சபையில் உள்ள ஐக்கியத்தின் அற்புதத்திற்காக நாங்கள் உமக்கு நன்று கூறுகிறோம். எங்களுக்குள் வாழும் உமது பரிசுத்த ஆவியினால் நீர் எங்களுக்கு அன்பு, பொறுமை மற்றும் உமது சந்தோஷத்தை தந்திருக்கிறீர். உயிருள்ள கிறிஸ்துவின் மீதான விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலில் நாங்கள் தொடர உதவி செய்யும். வார்த்தையில் மட்டுமல்ல, நடைமுறையில் அன்பின் கிரியைகளை காண்பிக்க உதவும். எங்களில் தங்கியிரும். உமது மகிமையுள்ள நம்பிக்கையில் எங்களை காத்துக்கொள்ளும்.

கேள்வி:

  1. உங்கள் ஐக்கியத்தில் மிகவும் முக்கியமானதும் தேவையுள்ளதுமான இறை அன்பு எப்படிப்பட்ட அன்பு ஆகும்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 06:18 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)