Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 065 (Do not be Proud)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)

2. பெருமை கொள்ளாதே, விசுவாசிகள் மத்தியில் உனக்கு அருளப்பட்ட வரத்தினால் ஆண்டவருக்கு பணி செய் (ரோமர் 12:3-8)


ரோமர் 12:3-8
3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். 4 ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, 5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். 6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். 7 ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளுக்கு சொல்கின்ற பொதுவான அறிவுரைகளைப் போல பவுல் பேசவில்லை. அவன் முழு உலகிலும் உள்ள சபையின் எதிரிகளுக்கு இறுதியான தெளிவான கட்டளையை கூறுகிறான்.

நீ உன்னைக் குறித்து மிஞ்சி எண்ணாதே. நீ ஒன்றுமில்லை என்பதைக் குறித்து அறிந்து செயல்படு. குறிப்பிட்ட பணி செய்யும்படியான கிறிஸ்துவின் அழைப்பைக் கேள். உனது ஆவிக்குரிய வரத்தை அறிந்துகொள். உனக்கு பிரியமானதை நீ செய்யாதே. கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்கு உணர்ச்சி வசப்பட்டு அல்ல, உண்மையாகக் கீழ்ப்படி. ஆவிக்குரிய முதிர்ச்சி. உள்ளவர்களின் ஆலோசனையை கருத்தில் எடுத்துக்கொள்.

உனது வரம் என்பது உனது பணிக்கான அளவுகோள் அல்ல. கிறிஸ்துவில் உள்ள உனது விசுவாசம் பெருகும்போது, நீ செய்யும் பணிகளில் அவருடைய விருப்பம் நிறைவேறுகிறது. அவரது வல்லமை உனது பணிகளின் இரகசியம் ஆகும். ஆகவே எந்தவொரு செயலையும் சிந்திப்பது, பேசுவது என்பது இயேசுவுடன், இயேசுவுக்குள் இருக்க வேண்டும். அப்போது உனது வாழ்வில் அவருடைய அன்பின் கனிகளை நீ காண்பாய்.

வெற்றியுள்ள கிறிஸ்தவர்களின் இரகசியம் என்பது அவர்களது ஆவிக்குரிய ஒற்றுமை ஆகும். இந்த ஒற்றுமை என்பது உலகத்திற்குரியது அல்ல. அது கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரியதாய் இருக்கிறது. அவர்களது மீட்பரின் ஆவிக்குரிய சரீரம் போல அவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்து அவர்கள் மூலம் தனது செயல்களை நிறைவேற்றுகிறார். இதில் தனிநபருக்கு எந்த பெருமையும் இல்லை. எல்லோரும் பரிசுத்தமாக்கப்பட்டு ஒன்றாக இருக்கிறார்கள். கிறிஸ்துவே உனது வல்லமை. நீ அவருக்குள் பரிபூரணமாக இருக்கிறாய். அனைத்து வரங்களையும் பெற்றவர் ஒருவருமில்லை. கிறிஸ்துவின் சரீரத்தில் காலுக்கு இருதயம் தேவை, கைக்கு தலை தேவை, கண்ணிற்கு சித்தம் தேவை, விரல்களுக்கு மூளையின் கட்டளை தேவை. எனவே சரீரமாகிய சபையில் ஒவ்வொரு அங்கத்தினரும் மற்றவர் கூறுவதை கவனிக்க வேண்டும். அவர்கள் இணைந்து ஆண்டவருக்காக பணி செய்ய வேண்டும்.

உனது மனம் சொல்வதற்கு மாறாக உனது கை வேலை செய்தால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும்? உனது கண்கள் ஒரு குழியைக் கண்ட பின்னும் கால்கள் அதை நோக்கி நடந்தால் எப்படியிருக்கும்?. தனது சரீரத்தின் மற்ற அவயவங்களுடன் இணைந்து செயல்பட கற்றுக்கொள்ளாத ஒருவன் சுயநலம் மற்றும் முட்டாள்தனமுள்ளவனாக இருப்பான்.

ஒரு குறிப்பிட்ட சபையில் பவுல் ஆவிக்குரிய வரங்களைக் குறிப்பிடுகிறான். உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பும் ஒருவன் பரிசுத்த வேதாகமத்தை ஓரத்தில் வைத்து விட்டு, வெறுமனே மனித இரக்கத்துடன் மட்டும் பேச மாட்டான். அவன் இறைவார்த்தையில் நிலைத்திருப்பான். இயேசுவுக்காக மக்களை ஆதாயம் செய்வான்.

சபையில் உள்ள தேவையுள்ளோருக்கு திறமை, நேரம், பணத்தை பெற்றிருப்பவன் சேவை புரிய வேண்டும். அவன் அதிகம் பேசுபவனாக அல்ல, மற்றவர்கள் அவனுக்கு சேவை செய்ய வேண்டும் அல்லது நன்றி கூற வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அமைதியாக செயல்படுகிறான். கிறிஸ்துவின் ஞானத்தோடு அவர்களுக்கு பணி செய்கிறான். இறை ஆவியானவர் தரும் சிந்தனைகளை ஒரு ஆவிக்குரிய ஆசிரியர் ஒழுங்குப்படுத்தி, அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, இறைவார்த்தையை கைக்கொள்ளவும் உதவுகிறார். அநேக காரியங்களைக் குறித்து கற்றுக்கொடுப்பது முக்கியமல்ல. சீராக கற்றுக்கொடுக்க வேண்டும். இரைச்சல் மிக்க நீர் வீழ்ச்சி போல பேசி முடிவில் ஒருவரும் புரிந்திருக்காத நிலையில் விட்டுவிடுவது தவறு. ஒவ்வொரு காரியத்தை பேசி முடிக்கும் போது எளிமையாகவும், புரியக்கூடிய விதத்திலும் அவைகளை தொகுத்துப் பேசுவது அவசியம்.

ஆவிக்குரிய கரிசனை மற்றும் வழிநடத்துதலின் வரம் ஒருவனுக்கிருந்தால், அவன் அமைதியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் பிரச்சினைகளை கவனித்து, அவர்களது ஆவிக்குரிய நிலையை அறிய வேண்டும். அவன் தனது சொந்த சிந்தனைகளில் இருந்து பேச ஆரம்பிக்கக் கூடாது. ஏற்ற நேரத்தில் சரியான வார்த்தைகளை ஆண்டவர் கொடுக்கும்படி அவன் விண்ணப்பம் ஏறெடுக்க வேண்டும். கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து அக்கறையற்றிருப்போரை அவன் சந்தித்து, அவர்களுக்காக விண்ணப்பம் பண்ண வேண்டும். அவர்கள் கிறிஸ்துவின் நண்பர்களாக மாறும் வரை அவர்களை நம்ப வேண்டும்.

தேவையுள்ளோருக்கு உதவி செய்பவன் தன்னைக் குறித்து பேசாமல் அமைதியாகவும், நிதானமாகவும் அதை செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகிறான். இயேசு கூறுகிறார். “உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருப்பதாக”. ஆகவே உனது மகிமைக்காக அல்ல, இயேசுவின் மகிமைக்காக பணி செய்ய வேண்டும்.

ஒருவன் சபையின் தலைமைத்துவத்தில் அல்லது சபை ஆட்சிக் குழுவில் ஒருவனாக இருந்தால், அவன் விமர்சனங்கள் அல்லது பிறரின் செயல்பாடுகளால் பாதிக்கப்படக் கூடாது. இயேசுவின் பணி என்பது வல்லமை மற்றும் பொறுமையினால் அவர்களுக்கு காண்பிக்கப்பட வேண்டும். அன்பு இல்லாமல் செய்யப்படும் அனைத்தும் பொய்யாக இருக்கிறது.

இந்த வரங்கள் மற்றும் பணிகள் குறித்து தொகுத்துப் பார்க்கும் போது இயேசு கூறுகிறார். “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்” (லூக்கா 6:36).

இந்த இறைசிந்தனையை நமக்கு அறிமுகப்படுத்தும்படி இயேசு விரும்புகிறார். “நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே செய்யுங்கள்”. அன்பு தான் கிறிஸ்தவத்தின் சின்னம் மற்றும் இலக்கு ஆகும்.

விண்ணப்பம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் அன்பில் குறைவுள்ளவரர்களாக இருக்கிறோம். மற்றவர்களிடம் இருந்து இரக்கத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் மனங்களை மாற்றும். எங்களுக்கு அருளப்பட்ட வரத்தினால் பணி செய்ய உதவும். அன்பு, பொறுமை, விசுவாசத்துடன் வாழ செய்யும். எங்கள் சிந்தனைகளின்படி அல்ல, உமது சித்தத்தின்படி வாழ உதவும். பிசாசின் போதனையில் நாங்கள் விழாதபடி பெருமைகளில் இருந்து எங்களை காத்துக்கொள்ளும்.

கேள்வி:

  1. மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் இன்று மிகவும் தேவையான பணி என்று எதை நீ கருதுகிறாய்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 06:11 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)