Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 016 (He who Judges Others Condemns Himself)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)
2. யூதர்களுக்கு விரோதமாக இறைவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது (ரோமர் 2:1 – 3:20)

அ) மற்றவனை நியாயந்தீர்க்கிறவன் தன்னையே நியாயந்தீர்க்கிறான் (ரோமர் 2:1-11)


ரோமர் 2:3-5
3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? 4 அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

மிகவும் அருவருக்கத்தக்க பாவம் என்பது விபசாரம், பெருமை, இறைவனுக்கு விரோதமான பகை அல்ல, அது மாய்மாலம் ஆகும். ஒரு மாய்மாலக்காரன் நீதி, பக்தியுடன் தோற்றமளிக்கிறான். ஆனால் அவன் உள்ளத்திற்குள் பொய்கள், அசுத்தங்கள், மற்றும் வஞ்சகங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். பரிசுத்தமானவர் உனது முகத்திரையை நீக்குவார். எல்லா மனிதர்கள், தூதர்கள், பரிசுத்தவான்கள் முன்பு உனது உண்மையான பாவங்களை வெளிப்படுத்துவார். ஏனெனில் நீ அவர்களுக்கு முன்பாக பரிசுத்தமுள்ளவனாக நடித்துக் கொண்டிருந்தாய். நீ அறிந்திருப்பதை விட உனது அசுத்தங்கள் பெரியவை. பொய்யான நம்பிக்கைகளில் திருப்தியடையாதே. தீவிர பரிசோதனைக்கு பின்பு தான் பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதுபோல ஒருவரும் தப்பிக்க இயலாத நீதியுள்ள நியாயத்தீர்ப்பை சந்திக்காமல் எவரும் நித்தியத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஏன் அநேக மக்கள் தங்களுடைய மரண நேரத்தைக் குறித்து பயப்படுகிறார்கள்? மிகப் பயங்கரமான அறுவடையாளரைக் கண்டு ஏன் நடுங்குகிறார்கள்? ஏனென்றால் இத்தருணத்தில் தான் மக்கள் தங்களுடைய வாழ்வின் நோக்கத்தை தவறவிட்டுவிட்டோம் என்று உடனடியாக யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் நியாயத்தீர்ப்பின் நேரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இறுதி நியாயத்தீர்ப்பின் நாளில் இந்த உலகத்தின் அனைத்து மக்களும்; கருப்பு, மஞ்சள், சிவப்பு, மாநிறம், வெள்ளை, பணக்காரன், ஏழை, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஞானி, முட்டாள், வயோதிபன், இளைஞன், ஆண், பெண் மற்றும் அடிமை, சுயாதீனன் ஆகியோர் இறைவன் முன்பு நிற்பார்கள். அப்போது மக்களின் செயல்கள், வார்த்தைகள், சிந்தனைகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் திறக்கப்படும். அனைத்தையும் பதிவு செய்கிற காலத்தில் வாழ்கின்ற நமக்கு இதைப்புரிந்து கொள்வது கடினம் அல்ல. நாம் கண்காணிப்பு கேமாராக்கள் மற்றும் மைக்ரோ பிலிம்களை பதிவு செய்ய பயன்படுத்துகிறோம். நம்மை படைத்தவருக்கு, அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பதிவேடு உருவாக்குவது எளிதான ஒன்று. நித்தியத்தில் நேரம் இல்லாமல் போகாது, அவசரம் இருக்காது. இறைவனுக்கு உன்னைப் பற்றி முழுமையாக பரிசோதித்துப் பார்ப்பதற்கு போதுமான நேரம் உண்டு. இருதயங்களையும், மனங்களையும் ஆராய்ந்து அறிகிறவர் முன்பு நீ ஒரு வார்த்தை கூட உன் தற்காப்பிற்காக பேசமுடியாது. மற்றவர்கள் மீது, உன்னுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிற மனிதர்கள் மீது குற்றம் சாட்டுவது பயனற்றதாக இருக்கும். நீ குற்றமுடையவன். இறைவன் உன்னை நியாயந்தீர்க்கிறார். ஆகவே மிகப்பெரிய நீதிபதி முன்பு நிற்க நீ ஆயத்தப்படு. நீ தப்பிக்க இயலாது. அவருடைய நியாயத்தீர்ப்பின் நேரம் நெருங்கிவிட்டது.

இறைவனுடைய மகிமையின் வெளிப்பாட்டில் நீ குற்றமுடையவன் என்பதை இன்று அறிந்துகொள். கவலைப்படவோ அல்லது வருத்தப்படவோ வேண்டாம். ஆனால் இறைவன் முன்பு உன்னுடைய பாவத்தை அறிக்கை செய். சுயத்தை வெறுத்துவிடு. உன்னை நீயே நியாயம் தீர்த்துப்பார். நீ என்ன செய்தாய் என்பதைக் கூறு. உன்னுடைய எந்தவொரு தீய செயலையும் மறைக்காதே. உன்னுடைய எல்லா நோக்கங்களும் தீமையாய் இருக்கிறது என்பதை பரிசுத்தமானவரின் பிரசன்னத்திற்கு முன்பு அறிக்கை செய். சுய ஆவி நொறுக்கப்படுதலே உனது இரட்சிப்பிற்கான ஒரே வழி. ஒரு பெருமையுள்ள மனிதன் இறைவனின் ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதை விட ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்கும்.

எப்படியிருப்பினும் இறைவன் இரக்கமுள்ளவராக இருக்கிறார். அவர் இரக்கமற்ற விதத்தில் தன்னுடைய படைப்புகளை அழிப்பதில்லை. அவர் மனந்திரும்புகிற பாவிகளை, பாவத்தை முழுவதும் அழிக்க தீர்மானிப்பவர்களை நேசிக்கிறார். எல்லோரும் பாவிகள் என்பதை இறைவன் அறிகிறார். அவருடைய பரிசுத்தத்திற்கு முன்பு ஒருவனும் நீதிமான் இல்லை. அவர் பொறுமை, அன்பு மற்றும் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார். அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தின் நிமித்தமே, அவர் பாவியை மரிக்கும்படி விடுகிறதில்லை. அவருடைய நீதி நியாயத்தீர்ப்பை எதிர்பார்க்கிறது. இன்றைய நாளின் ஒவ்வொரு மனிதனும் நியாயம் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் அவருடைய இரக்கம் நமக்கு மனந்திரும்பும்படியான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. நாம் அனைவரும் இறைவனின் அமைதியான தன்மையினால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சந்தேகத்திற்கிடமின்றி நம்முடைய உலகை ஒரே அடியினால் அடித்து முடிவுக்கு கொண்டுவர அவர் உரிமையும், பலத்தையும் உடையவராய் இருக்கிறார். ஆனால் இறைவன் நம்மை பாதுகாக்கிறார், நமக்கு இரக்கம் காண்பிக்கிறார். அவர் துரிதமாக எதையும் செய்கிறதில்லை. எல்லோரும் தங்கள் மனங்களில் மனந்திரும்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். நீ மனம் வருந்தி இறைவனிடம் திரும்பியுள்ளாயா? உனக்குள் சுத்த இருதயத்தை உருவாக்கும்படி கேட்டிருக்கிறாயா? உனக்குள் நிலைவரமான ஆவியைத் தரும்படி கேட்டுள்ளாயா? அல்லது நீதியின் உடையை போர்த்தி, உனது பாவங்களை தொடர்ந்து செய்ய இறைவனின் இரக்கத்தை தவறாக பயன்படுத்த முற்படுகிறாயா? நீயாயத்தீர்ப்பு என்பதை நம்பாமல் நீ இறைவனை விட்டு திரும்பி அவரை அவமதிக்கிறாயா? நியாயத்தீர்ப்பு நாள் என்பது நிச்சயம். தன்னை வெறுக்காதவன், தனது மாம்ச இச்சைக்கு மரிக்காதவன் அவரை பரியாசம் பண்ணுகிறான். இறைவன் இருதயங்களையும், மனங்களையும் ஆராய்ந்து அறிகிறவர். அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை. அவர் ஒவ்வொரு மனிதனின் உண்மையான குணாதிசயத்தை அறிந்திருக்கிறார்.

இறைவனுடைய இரக்கத்தை உறுதியாக பற்றிக்கொள். அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய். அவருடைய இரக்கத்தின் ஆழங்களை எண்ணிப்பார். நீ நம்பிக்கையை பெறுவாய். உனது மனதை மாற்று. இறைவன் யார் என்பதை அறிய, அவருடைய அன்பை உணர்ந்துகொள். அவர் இரக்கம் உள்ள பிதா. தனிநபர் மீது அக்கறையின்றி, தன் விருப்பத்தை நிறைவேற்றுகிற, கவலையற்ற ஓர் சர்வாதிகாரி அல்ல. இறைவன் பார்க்கிறார், கேட்கிறார், உன்னைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருக்கிறார். உன்னுடைய பெற்றோர்களின் பெற்றோரை அவர் அறிகிறார். உனது பின்னணியத்தை அவர் நன்கு அறிவார். உனது குணநலன்களை பாதிக்கும் எல்லா சூழ்நிலைகளையும், அவர் அறிகிறார். உன்னுடைய சோதனைகள் மற்றும் வஞ்சகம் நிறைந்த மனதை அவர் அறிகிறார். இறைவன் அநீதியுள்ளவர் அல்ல. அவர் நல்லவர். அவர் நீதியை நிறைவேற்றுவார். இரக்கத்தை பொழிந்தருளுவார். அவர் உன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார். உன்னை பரிசுத்தப்படுத்த விரும்புகிறார். நீ அவருக்கு உன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். உனது வஞ்சகமான ஆத்துமாவை வெறுத்துவிடு. உனது வஞ்சகத்தை அறிக்கையிடு.

நீ இறைவனுடைய பரிசுத்தத்தையும், அன்பையும் அறிந்திருந்தும் மனந்திரும்ப வில்லையென்றால் உனக்கு ஐயோ. உனது இருதயம் கடினமாய் உள்ளது. உனது மனம் குருடாக்கப்பட்டுள்ளது. ஒரு கடினப்பட்ட மாய்மாலக்காரன் தனது ஆவியில் கறைபட்டவனாக, மனந்திரும்ப முடியாதவனாக இருக்கிறான். அவனால் இறைவனுடைய அழைப்பை கேட்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது. அவன் எந்தவித உணர்வுமின்றி இறைவனுடைய வார்த்தையை வாசிக்கிறான். ஆகவே இன்றே இரட்சண்யநாள். மனந்திரும்புங்கள். இன்னொரு சந்தர்ப்பம் உனக்கு கிடைக்காமல் போய்விடும். அதற்குமுன்பு உனது இரட்சிப்பை உறுதிப்படுத்திக்கொள்.

அவருடைய இரக்கத்தை அறிந்தும், அதை புறக்கணித்தவர்கள் மீதும் உடைக்கப்பட்ட இருதயங்களுடன் அவரிடம் திரும்பாத மக்கள் மீதும் இறைவனின் கோபம் பற்றியெரியும். அவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் நம்பிக்கையற்றிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் ஆவிக்குரிய காரியத்தை அலட்சியம் பண்ணினார்கள். அவர்கள் இறைவன் முன்பு குற்றஉணர்வு, அருவருப்பு, பகை, தவறுகள் மற்றும் அநீதியைத் தவிர வேறெதையும் கொண்டு வரவில்லை. அவைகள் அனைத்தும் இறுதி நியாயத்தீர்ப்பில் வெளியரங்கமாக்கப்பட்டு, கண்டிக்கப்படும். ஏனெனில் அவர்களுடைய பாவங்களை அறிக்கை செய்யப்படவில்லை, அவர்கள் மனந்திரும்பவும் இல்லை.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, உமது பரிசுத்த ஆவியின் நடத்துதலினால் எனக்கு மெய்யான மனந்திரும்புதலைத் தாரும். என்னை உம்மிடத்தில் சேர்த்துக்கொள்ளும். ஏனெனில் நான் முழுமையாகத் திரும்பமுடியாது. உமது பரிசுத்தம் மற்றும் அன்பை நான் புறக்கணியாதபடி செய்யும். என் மீது பொறுமையாயிரும். ஆண்டவரே, உமது நீதியுள்ள கோபத்தில் நான் அழிய வேண்டியவன். உமது உக்கிர கோபத்தால் என்னைத் தண்டியாதேயும். உமது இரக்கத்தினால் என்னை சீர்ப்படுத்தும். எனக்குள் இருக்கும் எல்லாப் பெருமைகளையும் உடைத்தெறியும். நான் சுயத்திற்கு மரிக்கவும், உமது அன்பில் வாழவும் உதவும். எல்லாவகையான மாய்மாலத்தில் இருந்தும் என்னை விடுவியும். இருதயம் கடினப்பட விட்டுவிடாதேயும். நீரே என் நியாயாதிபதி, என் இரட்சகர். நான் உம்மை நம்புகிறேன்.

கேள்வி:

  1. இறைவனுடைய நியாயத்தீர்ப்பைப் பற்றி பவுல் வெளிப்படுத்தும் இரகசியங்கள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:49 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)