Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 121 (The shipwreck on Malta)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஊ - செசரியாவிலிருந்து ரோமாபுரிக்கு கடல் பயணம் (அப்போஸ்தலர் 27:1 - 28:31)

2. கடலில் ஏற்பட்ட புயலும் மால்தாவில் ஏற்பட்ட கப்பற்சேதமும் (அப்போஸ்தலர் 27:14-44)


அப்போஸ்தலர் 27:27-37
27 பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று. 28 உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள். 29 பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். 30 அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில், 31 பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். 32 அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள். 33 பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். 34 ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். 35 இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். 36 அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள். 37 கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம்.

பதினான்கு நாட்கள் கடலலைகளின் ஆபத்தில் சிக்கியிருப்பது உண்மையிலேயே நீண்ட காலம்தான். அலைகளினால் அலைக்கழிக்கப்படும் ஒரு கப்பலில் அரை மாத காலம் இருப்பது என்பது ஒரு யுகமாகவே அவர்களுக்குத் தோன்றியிருக்கும். தன்னுடைய முடிவை அறியாதவர்களாக மரணத்தை நோக்கிப் பார்ப்பவர்கள் பல முறை மரணத்தைச் சந்திப்பவர்களைப் போல வாதிக்கப்படுவார்கள். ஆனால் பவுல் தன்னுடைய முடிவை அறிந்திருந்த காரணத்தினால் நம்பிக்கையோடும் நிச்சயத்தோடும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். அவருடைய திசை காட்டும் கருவி எப்போதும் இறைவனையே காண்பித்துக் கொண்டிருந்தது. கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலும் நீதியினாலும் அவர் சுத்திகரிக்கப்பட்டு, ஆறுதல்படுத்தப்பட்டார்.

திடீரென நடு இரவில் கப்பலோட்டிகள் தரையை நெருங்கிவிட்டதாக உணர்ந்தார்கள். அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்தபோது அவர்கள் தரையை நெருங்கியிருந்தார்கள். கப்பல் பாறைகளின் மீது மோதி உடைந்துபோகும் என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆகவே அவர்கள் கப்பலுக்குப் பின்புறமாக நங்கூரத்தையும் அவர்கள் தப்பித்துப் போவதற்காக சிறிய படகையும் இறக்கினார்கள். அவர்கள் அவ்வளவு தந்திரமாக தாங்கள் மட்டும் தப்பிப்பதற்கு திட்டமிட்டார்கள்! பவுல் அவர்களுடைய திட்டத்தை அறிந்து அதிகாரிக்கு அறிவித்தார். அந்த அதிகாரி சிறிய படகு தொங்கிக்கொண்டிருந்த கயிறுகளை அறுத்துவிடும்படி கட்டளையிட அந்தப் படகு கடலுக்குள் விழுந்தது. நீங்கள் “எல்லாரும்” காப்பாற்றப்படுவீர்கள் என்றுதான் இறைவனுடைய தூதுவன் சொல்லியிருந்தான். அவர்களில் சிலர் மட்டும் காக்கப்படுவார்கள் என்று சொல்லவில்லை. கப்பலோட்டிகளை வஞ்சிப்பதன் மூலமாக இறைவனுடைய திட்டத்தையே சாத்தான் கெடுக்கப்பார்த்தான். ஆனால் பவுல் விழிப்புள்ளவராக இருந்த காரணத்தினால் அது முறியடிக்கப்பட்டது.

அவர்கள் தப்பிச் செல்வதற்கு அவர்களுக்கு உடல்பலம் தேவையாயிருந்தது என்பதைப் பவுல் கண்டுகொண்டார். அவர்கள் விடுவிக்கப்படும் தருணம் நெருங்கியிருந்த காரணத்தினால் அவர்கள் எதையாவது உண்ண வேண்டியவர்களாயிருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து பட்டிணியாக இருக்க வேண்டிய தேவையில்லை. அந்த காரிருளிலும் பயங்கர காற்று வீசிக்கொண்டிருக்கும்போதும் அவர்கள் நன்றாக உணவருந்தும்படி அவர்களை பவுல் ஊக்கப்படுத்தினார். இங்கு பவுல் அந்த கப்பலில் ஒரு கரிசனையுள்ள தகப்பனைப் போல செயல்படுவதைக் காண்பிக்கிறது. மேலும் அவர் போதகரைப் போல அவர்களுடைய உபவாசத்தை முடித்து வைத்து, அப்பத்தை எடுத்து பிட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்காவும் விண்ணப்பம் செய்து, அந்த புயல்காற்றிலும் அவர்களைக் காப்பாற்றிய ஆண்டவருக்கு துதிசெலுத்தி அவர்களுக்குக் கொடுத்து உண்ணும்படி கூறினார். இறைவன் அவர்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கையில் நீண்ட பட்டிணிக்குப் பிறகு ஆவலோடு உணவை வாங்கி அவர்கள் உண்டார்கள். அவர்களுடைய ஒரு முடியாகிலும் சேதப்படாது, ஆனால் அந்தக் கப்பல் முழுவதும் மூழ்கிப்போய்விடும் என்று அவர்களுக்கு பவுல் உறுதியளித்தார். பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது அப்போஸ்தலனுடைய நம்பிக்கையும் அதிகரித்துக்கொண்டிருந்தது. அவர் சந்தித்த பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்துவின் வாக்குறுதி அவருக்கு மிகவும் பெரிதாகத் தெரிந்தது.

அப்போஸ்தலர் 27:38-44
38 திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள். 39 பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, 40 நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி, 41 இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. 42 அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். 43 நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், 44 மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

பொழுது விடிந்தபோது அவர்கள் வந்து ஒதுங்கியிருப்பது ஒரு பாறையான இடம் அல்ல என்றும் ஒரு அமைதியான மணற்பாங்கான கடற்கரைக்கே இறைவன் அவர்களை நடத்தியிருக்கிறார் என்றும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தில் அவர்களுடைய கப்பல் கடல்நடுவில் உடைந்து போகாமல் அதைக் காத்து, இந்த மால்தா தீவிற்கு அருகில் அவர்களை வழிநடத்திய எல்லாம் வல்ல இறைவனில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. காற்று அவர்களை ஆழமற்ற கடற்கரைக்கு அடித்துக்கொண்டு வந்துவிட்டது. திடீரென அவர்களுடைய கப்பல் வேகமாக மோதியது. அது மணல் தரையில் மோதி கப்பலுடைய முன்பகுதி மணலில் சிக்கிக்கொண்டது. அதே வேளையில் கப்பலின் பின்பகுதி மோதிய வேகத்தினாலும் அலைகளின் வேகத்தினாலும் உடைந்து போனது. கடல் நீர் கப்பலுக்குள் வேகமாக ஆற்றுவெள்ளம்போல வருவதைப் பார்த்த போர்வீரர்கள் தங்கள் பட்டயங்களை எடுத்து கைதிகளைக் கொல்ல எத்தணித்தார்கள். அவர்கள் நீந்தி தப்பி கரையை அடைந்தாலும் அவர்கள் சிங்களுக்குத்தான் இரையாகப் போகிறார்கள். அந்த இறுதித் தருணத்தில்கூட சாத்தான் இறைவனுடைய திட்டத்தில் குறுக்கிட்டு பவுலுடைய விடுதலையைத் தடுத்து, நற்செய்தி ரோமாபுரிக்குச் செல்லாதபடி தடைசெய்ய முயற்சித்தான்.

ஆனால் பவுலை தனது பிரயாணத்தில் ஏற்பட்ட பல்வேறு இடறல்கள் நடுவிலும் கவனமாகக் கவனித்து வந்த மனிதாபமுள்ள படைத்தளபதியாகிய யூலியு இந்த இடத்தில் கிறிஸ்துவினால் பயன்படுத்தப்பட்டார். அவர் அப்போஸ்தலருடைய தீர்க்கதரிசனத்தை நம்பி, எதிரேயிருக்கிற கடற்கரை ஒரு தீவாக இருப்பதால் எந்தக் கைதியும் தப்பிச் செல்ல முடியாது என்பதை அறிந்து, போர்வீரர்கள் கைதிகளைக் கொல்ல வேண்டாம் என்றும் அனைத்துப் பயணிகளும் கப்பலைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கடுமையாக கட்டளையிட்டார். சிலர் நீந்திக் கரை சேர்ந்தார்கள். வேறு சிலர் கட்டைகளையும் கப்பலின் பாகங்களையும் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ஒருவரும் நீரில் மூழ்கி இறக்கவில்லை. 276 பேரும் பத்திரமாகக் கரை சேர்ந்தார்கள். அவர்கள் நனைந்தவர்களாக பாறைகளில் நடுங்கிக்கொண்டு நின்றாலும், அவர்களைக் காப்பாற்றி இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்து பவுலுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, பவுலின் நிமித்தமாக, அதிகாரிக்கும், கப்பல் சொந்தக்காரனுக்கும், அனைத்துப் பயணிகளுக்கும், கைதிகளுக்கும் வாழ்வளித்தார். பவுல் காப்பாற்றப்பட்டதுடன், அவருடைய உடன்பயணிகளான லூக்காவும் அரிஸ்தர்க்கும், லூக்கா தனது நற்செய்திக்காவும் அப்போஸ்தலர் நடபடிகளுக்காகவும் சேகரித்து பத்திரமாக தோல் பையில் வைத்திருந்த எழுத்துக்களும் காப்பாற்றப்பட்டன. அப்போஸ்தலர் ரோமாபுரியைச் சென்றடைய வேண்டும் என்ற தம்முடைய சித்தத்தை கிறிஸ்து நிறைவேற்றி முடித்தார். இறைவனுடைய மீட்பின் சித்தத்தை செயல்படுத்துவதிலிருந்து யாரும் அவரைத் தடைசெய்ய முடியாது.

விண்ணப்பம்: வல்லமையுள்ள எங்கள் ஆண்டவரே, நீர் பவுலையும் கடலிலே மூழ்கிவிடாமல் முழுக்கப்பலையும் காப்பாற்றியமைக்காக உமக்கு நன்றி. அதோபோல நீர் நாங்களும் நியாயத்தீர்ப்பிலும் தற்காலத்தில் உள்ள ஒழுக்கக் கேட்டிலும் மூழ்கிவிடாமல் பாதுகாப்பீர் என்று நம்புகிறோம். இந்த உலகத்தின் மக்களினங்களாகிய அலைகளின் நடுவில் பலர் மீட்கப்படும்படி, உம்முடைய நற்செய்தியை எங்கள் இருதயங்களிலும் உதடுகளிலும் சுமந்து செல்ல நீர் எங்களுக்கு அருள் புரியும்.

கேள்வி:

  1. அப்போஸ்தலனையும் அவருடைய நண்பர்களையும் எந்த மூன்று ஆபத்துகளிலிருந்து கிறிஸ்து காப்பாற்றினார்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:53 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)