Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 114 (The First Hearing of the Trial)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)

9. செசரியாவில் முதலாவது விசாரணை (அப்போஸ்தலர் 24:1-23)


அப்போஸ்தலர் 24:10-23
10 பவுல் பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்த தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன். 11 நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம். 12 தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெப ஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை. 13 இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள். 14 உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து, 15 நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன். 16 இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். 17 அநேக வருஷங்களுக்குப்பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன். 18 அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள். 19 அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும். 20 நான் ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக நின்றபோது அவர்கள் யாதொரு அநியாயத்தை என்னிடத்தில் கண்டதுண்டானால் இவர்களே அதைச் சொல்லட்டும். 21 நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லையென்றான். 22 இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாதிபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி; 23 பவுலைக் காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.

பவுல் தன்னுடைய சார்பில் குற்றமில்லை என்பதைப் பற்றி பேசியபோது, யூதர்களுடைய ஆலோசனைக் குழுவின் வஞ்சகமான வன்மம் நிறைந்த பேச்சாளனைப் போன்று முகத்துதியினால் ஆளுனரை வீணாகப் புகழவில்லை. மாறாக ஆளுனராகிய பேலிக்ஸ் பல வருடங்களாக பாலஸ்தீனத்தில் பணியாற்றி வருவதால், அவர் மக்களுடைய உணர்வுகளை நன்கு அறிந்திருக்கிறார், குறிப்பாக அவருடைய மனைவி ஒரு யூதப் பெண்மணியாக இருப்பதால் யூதர்களை அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்று யதார்த்தமாகப் பேசினார். பவுல் தன்னுடைய சொந்தப் பெயரில் அந்த அவையில் நிற்கவில்லை என்றும் இயேசுவின் பெயரினால் அவர் அங்கு நிற்கிறார் என்றும் அறிந்திருந்த காரணத்தினால், இந்த அறிவு அமைதியுடனும் நம்பிக்கையுடனும் தன்னுடைய வாதங்களை முன்வைப்பதற்கு அவருக்கு உதவியது.

ரோமப் பேரரசின் பொதுவான அமைதியைக் குலைப்பவர் என்ற முதலாவது குற்றச்சாட்டைப் பற்றிப் பேசும்போது பவுல், தான் கடைசியாக எருசலேமிற்குச் சென்றிருந்தபோது, 12 நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்ததாகவும், தேவாலயத்திலோ, ஜெப ஆலயத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ வேறு எந்த இடத்திலோ அவர் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை என்று கூறினார். மற்றவர்களுடைய உதவியின் மூலம் கடவுளை ஆராதனை செய்வதற்கு மட்டுமே தான் ஆயத்தமாகியதாகவும் குறிப்பிட்டார். எபேசுவில் கலகத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைக் குறித்த உண்மையை அறியும்படி ஆசியா மாகாணத்திலுள்ள யூதர்களைச் சாட்சிகளாக வருவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆகிலும் அவர்கள் மனப்பூர்வமாக வரமாட்டார்கள். காரணம் அங்கு நடைபெற்ற கலகத்தைத் தூண்டிவிட்டது பவுல் அல்ல, வெள்ளிச் சிற்பாசாரியாகிய தேமேத்திரியு என்பவரே. அவர் ஒருவேளை யூதர்களுடைய ஆதரவையும் தூண்டுதலையும் பெற்று அவ்வாறு செய்திருக்கலாம். அனதோலியா மற்றும் மக்கதோனியா நகரங்களில் பவுல் எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை. அவருடன் ஜெப ஆலயத்தில் வாதிட்ட அவரது எதிரிகள் வாதத்தில் அவரை மேற்கொள்ள முடியாததைக் கண்டு, தீவிரவாதத்தைக் கையாண்டார்கள்.

மாபெரும் ரோமப் பேரரசின் சமாதானத்தைக் குலைப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைக் குறித்து பதிலுரைத்தபோது, தான் கிறிஸ்துவின் மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதை பவுல் அறிக்கை செய்தார். அது ஒரு சமயக்குழு அல்ல, இறைவனுடைய சட்டப்புத்தகத்திலும் தீர்க்கதரிசிகளுடைய நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிற உண்மையான இறைவனுடைய வழி அதுவே என்று அறிவுறுத்தினார். ரோமர்கள் பழங்காலத்து முக்கிய சமயங்களை அனுமதித்திருந்தபோதிலும் புதிய நம்பிக்கைகளை கட்டுப்படுத்தியும், அந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்களை துன்புறுத்தியும், அவற்றைத் தடைசெய்தும் வந்தார்கள். புதிய ஏற்பாடு என்பது பழைய ஏற்பாட்டு மார்க்கத்திலிருந்து வேறுபட்ட புதிய மார்க்கமில்லை என்றும், அது பழைய ஏற்பாட்டின் உண்மையான கிரீடமாகவும் நிறைவேறுதலாகவும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காண்பிப்பதற்கு அவர் அதிக கருத்துள்ளவராயிருந்தார். இறந்தவர்களின் உயிர்தெழுதலைக் குறித்த உண்மைக்கு பவுல் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார் என்ற உண்மையை நமது தற்கால அனுபவத்தில் உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது. அவர் பாரம்பரியத்திற்காகவும் இறந்த காலத்துக் காரியங்களுக்காகவும் வாழாமல், முழு மனுக்குலத்திற்கும் வைக்கப்பட்டிருக்கிற இறுதி முடிவை நோக்கிச் செல்பவராக இருந்தார்.

இந்தப் பரந்த, உயிரளிக்கிற, உற்சாகமளிக்கிற நம்பிக்கை அவருடைய மனசாட்சியை உயிர்ப்பித்தது. அத்துடன் கிறிஸ்துவின் இரத்தம் அவருடைய இருதயத்தைச் சுத்திகரித்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் அவருக்குப் புதிய இருதயத்தைக் கொடுத்த பிறகு, இறைவனுடைய மனிதனாக மாறிய இவர், இறைவனுடனான தன்னுடைய உறவுக்கு ஆவியால் நிறைந்த தன்னுடைய மனசாட்சி எந்த குந்தகத்தையும் விளைவித்துவிடாபடி அதைப் பயிற்றுவித்தார். உங்களுடைய மனசாட்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது? உங்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருக்கிறதா? உங்களுடைய தீய சிந்தனைகள், அசுத்தமான வார்த்தைகள் அனைத்தையும் நீங்கள் கிறிஸ்துவின் அரியாசனத்திற்கு முன்பு அறிக்கை செய்து, பாவ மன்னிப்பையும் தூய்மையாக்குதலையும் கேட்டுப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து உங்களுக்கு உறுதியிருக்கிறதா? இறைனுடைய அடிப்படைத் தன்மையை உணர்வது எப்படி என்பதை உங்களுடைய மனசாட்சி உங்களுக்குக் கற்பிக்கும். நீங்கள் பாவம் செய்வதற்கு எதிராக அது உங்களை எச்சரிக்கும், உங்களுடைய தீய செயல்களுக்கு எதிரான சாட்சியாக அது மாறும். அவற்றை என்றைக்குமாக பதிவு செய்து வைத்திருந்து உங்களுக்கு எதிராக குற்றப்படுத்தும். உங்கள் மனசாட்சியின் சத்தத்திற்குச் செவிகொடுங்கள். மேம்போக்கான காரியங்களினாலோ, கவனத்தைத் திசைதிருப்புவதாலோ, வீணானவைகளைப் பேசுவதன் மூலமாக உங்கள் மனசாட்சியின் சத்தத்தைப் புறக்கணிக்கக்கூடாது. கிறிஸ்து உங்கள் உள் மனதைச் சுத்திகரிக்கவும், அதை தமது உண்மையினாலும் தூய்மையினாலும் கிருபையினாலும் நிறைக்கவும் விரும்புகிறார். நீங்கள் இறைவனிடத்தில் எவ்வளவு நெருக்கமாக வருகிறீர்களோ அவ்வளவு உங்கள் மனசாட்சி உணர்வுள்ளதாகவும் அறிவுள்ளதாகவும் மாறி, இறைவன் விரும்புகிறபடி ஞானமான நற்செயல்களைச் செய்யும்படி உங்களை வழிநடத்தும். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தை ஆறுதல்படுத்தி, நம்முடைய நீதிக்கும் சமாதானத்திற்கும் ஆதாரமாகிய கிறிஸ்துவின் சிலுவையினிடத்திற்கு நம்மை வழிநடத்திச் செல்வார்.

பவுல் தன்னைப் பார்த்து தனது உளவியல் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் வாழவில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் விரும்பினாரோ அதைச் செய்தார். அதனால் அவர் தேவையுள்ள சகோதரர்களைக் கவனித்தார். எருசேலமிலிருக்கிற ஏழை விசுவாசிகளுக்கு தாரளமாகக் காணிக்கைகளைச் சேகரித்தார். ஆகவே அவர் திருடவோ கொள்ளையிடவோ எருசலேமிற்கு வரவில்லை, தான் சேகரித்திருந்த பணத்தை அவர்களிடம் கொடுப்பதற்காகவே வந்தார். அவர் பிரிவினையை உண்டாக்கும் மனிதராக இராமல் அமைதியை ஏற்படுத்துபவராக இருந்தார்.

பவுல் யார் என்பதை ஆளனராகிய பேலிக்ஸ் விரைவாகவே அறிந்துகொண்டார். அவர் கிறிஸ்தவர்கள் என்ற கூட்டத்தைப் பற்றி அறிந்திருந்தார். ஏனெனில் செரியாவில் வாழும் கொர்னேலியு என்ற ரோம அதிகாரி சமீபத்தில் கிறிஸ்துவில் நம்பிக்கையாளராக மாறியதைக் குறித்து அவர் கேள்விப்பட்டிருந்தார். யூதர்கள் அனைவருமே காலனியாதிக்கத்திலிருந்து தங்களை விடுவிக்கும்படி கிறிஸ்து என்று ஒருவர் வருவார் என்பதைக் குறித்த எதிர்பார்ப்புடன் வாழ்ந்தார்கள் என்பதை ரோம உளவாளிகள் அறிந்திருந்தார்கள். ஆனால் பவுல் யூதர்களுடைய அரசியல் அல்லது போராளிக் குழுவைச் சேர்ந்தவரல்ல. அவர் தாழ்மையும் சேவை மனப்பான்மையுமுள்ளவராக தம்முடைய இலக்காகிய இயேசுவுக்காக வாழ்பவர். இந்த இயேசு தம்முடைய சீடர்கள் தமக்கு பாதுகாப்புக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ளாமல் சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை அனுபவித்தவர். சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த இயேசு ரோமர்களுக்கு அஞ்சியிருக்கவில்லை.

அதே வேளையில் பேலிஸ் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தையோ அல்லது அவர்களுடைய தலைமைக் குருக்களையோ எதிர்ப்பதையும் விரும்பவில்லை. ஆகவே அவர் ஒரு ஆறுதலான சமரச நிலைப்பாட்டை எடுத்தார். அவர் பவுலுக்கு மரண தண்டனை விதிக்காமல், அவரை ஓய்வெடுக்கும்படி செய்து, அவரைச் சென்று சத்திப்பதற்கு மக்களுக்கு அனுமதியும் செசரியாவிலிருந்த நம்பிக்கையாளர்களுடன் நல்லுறவையும் அனுமதித்தார். அதே வேளையில் தலைமைக் குருக்களுடன் ஒத்துழைக்கும் முகமாக தேவாலயம் தீட்டுப்படுத்தப்பட்டதைக் குறித்து எருசலேமிலிருக்கும் தளபதி விசாரணை நடத்தி, அங்கு கலவரம் ஏற்பட்டதற்கான காரணத்தை அறியவும் முயற்சி செய்தார். இவ்வாறு அந்த ஆளுனர் இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்ய நினைத்ததால் பவுலுக்கு அநியாயம் செய்து அவரை இரண்டு வருடங்கள் சிறை வாழ்வுக்கு உட்படுத்தினார். இந்த நீண்ட கால சிறைவாசத்தின் காலத்தை அவர் விண்ணப்பத்திலும் தியானத்திலும் செலவு செய்தார். இந்தக் காலத்தில் அவர் எபேசு சபைக்கும் கொலோசெய சபைக்கும் கடிதங்களை எழுதியிருக்கலாம். ஏனெனில் அந்தக் கடிதங்களில் கிருபையின் நீர் வீழ்ச்சியைப் போல கிறிஸ்துவின் மேன்மைகள் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. பவுல் தனது சிறைவாசத்தினால் சோர்வடைந்து போய்விடாமல், ஆவியில் உற்சாகமுள்ளவராகவும், செயல்படுகிறவராகவும், கவனமுள்ளவராகவும் காணப்பட்டார்.

விண்ணப்பம்: கர்த்தாவே நீர் அநீதியை அமைதியாக பொறுத்துக்கொண்டீர். மக்கள் எங்களைக் காயப்படுத்தி மறந்து போகும்போது நாங்களும் கோபப்படாதிருக்க எங்களுக்குக் கற்றுத்தாரும். நாங்கள் உம்மை கனப்படுத்தி, உம்மிடத்தில் அன்புகூர்ந்து, கற்றுக்கொண்டு மற்றவர்களுக்காக விண்ணப்பிக்கிறவர்களாக எங்களையும் மாற்றியருளும்.

கேள்வி:

  1. கிறிஸ்தவ மார்க்கம் பழைய ஏற்பாட்டிலிருந்து மாறுபட்டதல்ல என்று பவுல் ஏன் சொல்கிறார்? எவ்வாறு சொல்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:41 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)