Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 084 (Founding of the Church in Berea)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

6. பெரோயா பட்டணத்தில் திருச்சபையை நாட்டுதல் (அப்போஸ்தலர் 17:10-15)


அப்போஸ்தலர் 17:10-15
10 உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். 11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். 12 அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள். 13 பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள். 14 உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள். 15 பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.

பவுல் கிறிஸ்துவினிமித்தமாக நகரங்கள் தோறும் பயணம் செய்தார். சில விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர அவருடைய வாழ்வு முழுமையுமே துன்பங்களின் சங்கிலித்தொடராகவே இருந்தது. அவர் தம்முடைய உடன் ஊழியர்களுடன் சேர்ந்தது இறைவனிடத்தில் விண்ணப்பங்களை ஏறெடுத்த பிறகே அவர் நகரங்களுக்குள் சென்றார். அவர் கிராமங்களைத் தெரிவு செய்யாமல் முக்கியமான பட்டணங்களையே தனது பணிக்காகத் தெரிவுசெய்தார். அவர் எப்போதும் பழைய உடன்படிக்கையின் மக்களிடத்தில்தான் தனது பணியை ஆரம்பித்த காரணத்தினால் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள ஜெப ஆலயங்களுக்கே முதலில் சென்றார். சிலுவையில் அறையப்பட்டும் உயிரோடிருக்கும் கிறிஸ்துவை அவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் முதலில் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க விரும்பினார். அவர்கள் பவுலுடைய உபதேசத்தை வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்களில் சிலர் நற்செய்தியை நம்பினார்கள். குறிப்பாக கற்றறிந்தவர்களாகிய புறவினத்து மக்கள் இந்தப் புதிய உபதேசத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

யூதர்கள் இறைவனுடைய தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டி என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் கோபமடைந்தார்கள். அவர்களுக்கு சட்டத்தின் மீது கட்டப்பட்ட அரசின் ஆளுகை செய்யும் மேசியா தேவைப்பட்டார். அதன் காரணமாக முரண்பாடுகளும், வெறுப்பும், துன்புறுத்தல்களும், சித்திரவதையும், மரணவலியின் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு அதனால் இறைமக்கள் விலக்கி வைக்கப்பட்டு ஓயாமல் ஓடத் தொடங்கினார்கள். ஆகவே அப்போஸ்தலர் பணி செய்த அந்த நகரத்தில் மிகச் சிறிய கிறிஸ்தவ திருச்சபையே மீதியாக இருந்தது. அவர்கள் நசரேயனாகிய இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் மூலமாக இறைவாழ்வைக் கொடுப்பவர் என்பதை அறிந்து ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தார்கள். தெசலோனிக்கெயருக்கு எழுதப்பட்ட கடிதங்களில் காணப்படுவதைப் போலவே அப்போஸ்தலர் அவ்விடத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட பிறகு அந்த மக்கள் கடுமையான துன்பங்களை அவ்வப்போது அனுபவித்து வந்தார்கள் (1 தெசலோனிக்கெயர் 2:14; 3:1-4; 2 தெசலோனிக்கெயர் 1:4).

தெசலோனிக்கேயாவிலிருந்து சில சகோதர்களுடன் அப்போஸ்தலனாகிய பவுல் பெரோயா என்ற பட்டணத்தை வந்தடைந்தார். அந்தப் பட்டணம் தெசலோனிக்கேயாவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பெரிய பட்டணங்களைவிட இந்தச் சிறிய பட்டணத்தில் தனக்குப் பாதுகாப்பு இருக்கும் என பவுல் கருதியிருக்கலாம். ஆனால் பவுல் தனது பாதுகாப்பைக் குறித்து பயமுள்ளவராக இருக்கவில்லை. இயேசுவின் மகிமையைக் கண்ட அவருடைய இருதயம் அவருக்காக பேரார்வத்துடன் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. புறவினத்து மக்கள் மீது அவருக்கிருந்த அன்பினால் அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நற்செய்தியை அவர் பிரசங்கித்தார்.

தெசலோனிக்கேயாவில் இருந்த யூதர்களைவிட பெரோயாவில் இருந்த யூதர்கள் சற்று நிதானத்துடன் இருந்த காரணத்தினால் அவர்கள் இந்தப் புதிய போதனைக்கு செவிமடுக்க ஆயத்தமாயிருந்தார்கள். பலர் பழைய நூல்களை ஆராய்ந்து பார்த்தார்கள். அதன் மூலம் சிலர் நிலைவாழ்வையும் பெற்றுக்கொண்டார்கள். அந்த யூதர்களும் அங்கு வாழ்ந்த மற்றவர்களைப் போலவே தங்கள் இருதயத்திற்கு ஆறுதல்தரும் செய்திக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். இதுதான் பிரசங்கத்தின் சரியான முறையாக இருக்கிறது. ஆயினும் இது மட்டும்தான் மக்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவரும் ஒரே வழி என்று நாம் கருதக்கூடாது. யார் இறைவார்த்தையை ஆர்வத்துடன் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கிறார்களோ அவர்கள் இறைவனுடைய செயலை அனுபவிக்கிறார்கள். அச்செயல் அவர்களைப் பரிசுத்தமாக்குகிறது, தூய்மைப்படுத்துகிறது, நீதிமான்களாக்குகிறது, அன்பைக் கொடுக்கிறது, சாட்சியிடும்படி அவர்களைத் தைரியப்படுத்துகிறது, அவர்கள் கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் மக்களாக அவர்களை மாற்றுகிறது. அன்பார்ந்த சகோதரரே உங்கள் தயக்கத்தையும் சோர்வையும் மேற்கொள்ளுங்கள். இறைவார்த்தையின் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பை வெற்றிகொள்ளுங்கள். கிறிஸ்துவின் வார்த்தைகளினால் உங்கள் இருதயத்தை நிரப்புங்கள். அப்போது நீங்கள் சந்தோஷமான நபராக மாறி, உங்களைச் சூழ உள்ளவர்கள் நடுவில் இறையன்பின் ஊற்றாகக் காணப்படுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஆவியின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் உங்களுக்குள் இருந்து புறப்பட ஆரம்பிக்கும்.

அப்போஸ்தலனாகிய பவுலுடைய பிரசங்கம் யூத கிறிஸ்தவர்களையும் புறவினத்துக் கிறிஸ்தவர்களையும் சேர்த்து வேற்றுமையில் ஒற்றுமையுடன் காணப்பட்ட திருச்சபைகளையே உருவாக்கியது. மேற்கிற்கும் கிழக்கிற்கும், மக்களினங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையில் வேற்றுமைகள் காணப்பட்டது. ஆனால் கிறிஸ்துவின் அன்பு அனைத்து விசுவாசிகளையும் வெற்றிகொண்டதாயிருந்தது. இந்த ஆவிக்குரிய வெற்றி சாத்தானுடைய கண்களில் பெரிய உறுத்தலாக இருந்த காரணத்தினால், பின்னாட்களில் சபைக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பல பிரச்சனைகளைக் கொண்டுவருவதற்கு அவன் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டான். மதவாத யூதர்கள் தெசலோனிக்கேயாவிலிருந்து வந்து புதிய விசுவாசிகள் நடுவில் பொய்களைக் கூறி அவர்களுடைய கோபத்தைத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் பவுலை இன்னும் அதிகமாகத் துன்புறுத்தும்படி அந்தச் சபைகளில் இருந்த ஐக்கியத்தைக் குலைக்க நினைத்தார்கள்.

இந்தப் பிரிவினை அவர்களுக்குள் ஏற்படுவதற்கு முன்பாக மென்மையும் அமைதியுமான ஆவி அந்த மக்கள் நடுவில் வெளிப்பட்டிருந்தது. விசுவாசிகள் நாற்பது கிலோமீட்டர் தூரம் பவுலோடு கடற்கரைவரை நடந்து சென்று, தீயவர்களுடைய வெறுப்பின் கைகள் அப்போஸ்தலனுக்கு மேல் விழுவதற்கு முன்பாக அவர்கள் பவுலை சீக்கிரமாக கப்பலில் இருக்கச் செய்தார்கள். தெசலோனிக்காவிலிருந்த தனது நண்பர்களை விட்டுவிட்டு பெரோயா பட்டணத்திலிருந்த திருச்சபையை பெலப்படுத்தும்படி அங்கு தனியாக வந்திருந்தார். இப்போது அவர் பெரோயா பட்டணத்தை விட்டு உலகத்தின் புகழ்பெற்ற அறிவு மையமான அத்தேனே பட்டணத்திற்குச் சென்றார். அப்பட்டணத்தில்தான தத்துவ ஞானிகளும் அறிஞர்களும் கூடிவருவார்கள். அந்த மாபெரும் நகரத்தில் அவர்கள் பெருமையும் வீணுமான பல நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அத்தேனர்கள் தங்களுடைய அறிவின் மூலமாக உலகத்தின் இரகசியங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்று கருதினார்கள். ஆனால் அவர்கள் இறந்தவர்களில் இருந்து உயிரோடு எழுந்த ஆண்டவரின் ஆவியானவரை அறியாதவர்களாகவே இருந்தார்கள்.

அத்தேனே பட்டணத்து தத்துவ ஞானிகள் நடுவில் தோன்றுவதற்கு பவுல் பயப்படவும் இல்லை வெட்கப்படவும் இல்லை. திருச்சபை வரலாற்றில் தொடர்ந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருக்கப்போகும் ஒரு குழுப்பத்திற்குள் நுழைவதை பவுல் உணர்ந்தார். இறைவன் இல்லாத தத்துவத்தையும் நற்செய்தியையும் ஒப்பிடுவது இருளையும் ஒளியையும், நரகத்தையும் பரலோகத்தையும், தெய்வீக அகத்தூண்டுதலையும் சாத்தானுடைய கருத்துக்களையும் ஒப்பிடுவதைப் போன்றது. ஆவிகளுடன் உள்ள போரில் முதன்மையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள பவுல் விரும்பவில்லை. தான் மிகப்பெரிய ஞானி அல்ல என்றும் ஆனால் கிறிஸ்துவின் உடலில் தான் ஒரு உறுப்பு என்றும் அவர் நிச்சயமாக அறிந்திருந்தார். தெசலோகிக்கேயாவில் இருந்த தன்னுடைய உடன்வேலைக்காரராகிய தீமோத்தேயுவையும் சீலாவையும் அத்தேனே பட்டணத்திற்கு உடனடியாக வரும்படி பவுல் அழைப்புக் கொடுத்திருந்தார். இயேசு எவ்வாறு கெத்சமனே தோட்டத்தில் தம்மோடு விழித்திருந்து விண்ணப்பிக்கும்படி தம்முடைய சீடர்களைக் கேட்டுக்கொண்டாரோ அவ்வாறே பவுல் தனது இந்த நண்பர்களுடன் இணைந்து அசுத்த ஆவிகளுடனான தன்னுடைய போராட்டத்தை எதிர்கொண்டார். கர்த்தராகிய இயேசு தனியாகவே அந்தப் போராட்டத்தைச் சந்தித்ததைப்போலவும் இறைவனுடைய கோபத்தின் பாத்திரத்தை தனியாகவே பருகியதைப் போல பவுலும் தனியாகவே அத்தேனே பட்டணத்திற்குப் பயணம் செய்தார். அங்கு அவர் சிந்தனையாளர்கள் தத்துவஞானிகளுடைய பரியாசத்தையும் மக்களுடைய வெறுப்பையும் மனிதன ஞானத்தையும் அவர் அங்கு சந்திக்க வேண்டியிருக்கும்.

விண்ணப்பம்: அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய துன்பங்களைக் குறித்து கவலைகொள்ளாமல், கர்த்தராகிய இயேசுவே உம்முடைய நாமத்தின் மகிமையைப் பற்றி மட்டுமே கவலைப்படும்படி நீர் அவரை அவ்வப்போது உற்சாகப்படுத்தியதால் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் எந்த மனிதருக்கும், ஆவிகளுக்கும், உபதேசங்களுக்கும் பயப்படாமல், உமக்காக ஏங்குகிறவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி, உம்முடைய அன்பினால் எங்களை நிரப்பி, எங்களை பரிசுத்தப்படுத்தும் கர்த்தாவே.

கேள்வி:

  1. பவுல் ஒரு நகரத்திற்குள் செல்லும்போது நற்செய்தி அறிவிப்பதற்கு அவர் கையாண்ட முறை யாது?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)