Previous Lesson -- Next Lesson
ஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)
அப்போஸ்தலர் 15:6-12
6 அப்போஸ்தலரும், மூப்பரும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.7 மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்;9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? 11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.12அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.
எல்லா அங்கத்தினர்களின் முன்னிலையில் நடைபெற்ற அந்த பொதுக் கூடுகை முடிந்தபின்பு, சபை மூப்பர்கள் மீண்டும் ஒரு முறை இறுதி கூடுகையில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் விண்ணப்பத்தின் மூலமாகவும், ஆகமங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்களை ஆழமாக ஆராய்ந்தும், நியாயப்பிரமாணம் மற்றும் நற்செய்தியைக் குறித்த தெளிவை அடையும் நோக்கத்திற்காக கூடினார்கள். இந்த கூடுகை மிக நீண்ட நேரம் நடைபெற்றது. பழைய ஏற்பாட்டின் கோரிக்கைகள் மற்றும் புதிய ஏற்பாட்டின் கிருபையின் வரங்கள் இடையேயுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தைக் குறித்த சூடான விவாதங்கள் நடைபெற்றது. வேதாகமத்தை மேலோட்டமாக வாசிக்கிறவன் இந்த வித்தியாசத்தைக் குறித்து புரிந்துகொள்வதில்லை. எப்படியிருப்பினும் இறுதியில் பேதுரு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் நமது இரட்சிப்பின் அஸ்திபாரங்களைக் குறித்து தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்படி எழுந்து நின்றான். புறஜாதிகளிடத்தில் போகும்படி பவுலை இறைவன் கேட்டுக்கொண்டார் என்று அவன் பேசவில்லை. மாறாக இறைவன் புறஜாதிகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி அவனுக்கு நேரடியாக கட்டளையிட்டார் என்று கூறினான். இவ்விதமாக அவரது சித்தம் நிறைவேறியது. இதன் விளைவாக அநேகர் விசுவாசித்தார்கள். அவர்களது விசுவாசம் போதனையை ஏற்றுக்கொண்டதால் மாற்றம் வந்தது அல்ல. அவர்கள் தங்களது இருதயங்களை முழுமையாக இயேசுவிற்கு ஒப்புக்கொடுத்ததை அது காண்பித்தது. சிலுவையில் அவர் சம்பாதித்த இரட்சிப்பை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
இறைவன் சர்வத்தையும் அறிந்தவராக இருக்கிறார். அவருடைய ஆவியின் முத்திரையின் சாட்சியினால் இயேசுவின் மீது வைத்துள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். அவர் மனிதனின் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறவர். ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் இறைவனிடம் இருந்து தெளிவான சாட்சியை பெற்றுக்கொள்கிறான். அது அழிந்து போகக் கூடிய காகித்தில் எழுதப்படவில்லை. மாறாக பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டுள்ளது. அவர் இயேசுவை நேசிப்பவரின் இருதயங்களில் வாசம்பண்ணுகிறார். பவுல் எபேசியருக்கு எழுதுகிறார். “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்”.
யூதர்களுக்கு ஒரு பரிசுத்த ஆவியானவர், புறஜாதிகளுக்கு இன்னொரு பரிசுத்த ஆவியானவர் என்று இல்லை. உயிருள்ள இயேசுவை பெற்றிருக்கிற யூதன், புறஇனத்து விசுவாசி பெற்றிருக்கும் அதே வல்லமையை பெற்றுத் தான் வாழுகிறான். விசுவாசிகள் மத்தியிலே இனம், பால், வயது, கலாச்சாரம் மற்றும் பணம் இவைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரும் பாவிகளாக இருக்கிறோம். ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் ரத்தத்தினால் நீதிமானாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறான். முழுமையான பரிசுத்தமாக்குதல் இல்லாமல் பரிசுத்த ஆவியனாவர் எந்த மனிதனிலும் வாசம்பண்ணுவதில்லை. ஏனெனில் ஒரு இருதயத்தில் பாவமும் இறைவனின் ஆவியும் இணைந்து இருக்க முடியாது. உங்களில் வாசம்பண்ணுவது யார்? கிறிஸ்துவா? அல்லது தீமையான ஒன்றா?
இறைவனின் சுதந்திரமான செயல் குறித்து பேதுரு தனது சாட்சியை தொடர்ந்தார். நியாயப்பிரமாணவாதிகள் அனைவரும் இறைவனின் திட்டத்திற்கு முரண்படுகிறவர்கள் என்பதை அவன் அறிக்கையிட்டான். நியாயப்பிரமாணம் இல்லாமல் புறஜாதிகளை மீட்பது பரிசுத்தமானவரின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், அவரது சித்தத்தை நிறைவேற்ற முடியாதபடி யார் தடுக்க முடியும்? இறைவனின் அன்பு நமது மனங்களை விடப்பெரியது. நமது புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டது.
இந்த வாதத்தின் மூலம் பேதுரு நியாயப்பிரமாணத்தை “பாரமான நுகம் என்று அழைத்தார். அதிலிருந்து இயேசு நம்மை விடுவித்திருக்கிறார். இயேசு கூறுகிறார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. மோசேயின் நியாயப்பிரமாணத்தை தனது சொந்தப் பலத்தினால் நிறைவேற்ற முயலுகிறவன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்ற முடியாமல் நசுக்கப்படுகிறான். “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்”. இறைவனைப் போல யாரும் பரிசுத்தமாக இருக்க இயலாது. தனது சொந்த திறமையினால் பரிசுத்தம் அடைய முயலுபவன் நியாயப்பிரமாணத்தினால் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறான். பழைய ஏற்பாட்டின் நுகத்தில் இருந்து கிறிஸ்து முற்றிலும் நம்மை விடுவித்திருக்கிறார். தனது மெதுவான நுகத்தை அவர் நம்மீது வைத்திருக்கிறார். (மத்தேயு 11:30) கிறிஸ்து நம்முடன் இணைந்து, அந்த நுகத்தை அவரும் சுமக்கிறார். இறைவனின் நுகமின்றி நாம் வாழ இயலாது. ஏனெனில் இந்த நுகமானது இறைவனுடன் மற்றும் கிறிஸ்துவுடன் நாம் கொண்டுள்ள ஐக்கியத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. இந்த மெதுவான நுகத்தின் மூலம் புதிய ஏற்பாட்டில் நாம் அவருடன் இணைக்கப்பட்டிருக்கிறோம். அவர் எங்கே போகிறாரோ அங்கே நாமும் போகிறோம், எங்கே நிற்கிறாரோ அங்கே நிற்கிறோம். நம்முடன் கொண்டுள்ள ஐக்கியத்தால் அவரது தாழ்மை மற்றும் பணிவினால், அவர் நம்மை மாற்றுகின்றார்.
எருசலேமில் நியாயப்பிரமாணவாதிகளுக்கு பேதுரு ஒரு காரியத்தை தெளிவாக உரைத்தார். அவர்களோ அல்லது பேதுருவோ அல்லது அவர்களது இறைபக்தி மிகுந்த முற்பிதாக்களோ நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க முடியாதவர்களாக பலவீனர்களாகவும், பாவிகளாகவும், இறைவனுடன் ஐக்கியம் கொள்ள தகுதியற்றவர்களாகவும் இருந்தார்கள். இப்படிச் சொல்வதின் மூலம் பேதுரு தானும் பாவி என்பதையும், நன்மையை விட்டு தூரமானவன் என்பதையும் சாட்சியாக அறிக்கையிட்டார். இந்த விதிமுறையை புரிந்துகொள்ளாத எவரும் கிறிஸ்துவையும் அறிந்துகொள்கிறதில்லை. அவன் ஒரு காலை பழைய ஏற்பாட்டில் வைத்துக்கொண்டு அடுத்த காலை புதிய ஏற்பாட்டில் வைக்க முயற்சி செய்பவனாக காணப்படுகிறான்.
இந்த அறிக்கைக்கு பின்பு, புதிய ஏற்பாட்டின் சத்தியங்கள் அனைத்தையும் தொகுத்து பேதுரு பேசினான். அவன் ஆவியின் தெளிவோடு கிறிஸ்தவ சபையின் பிரமாணத்தை சாட்சியாகக் கூறினான். இரட்சிப்பு என்பது கிரியைகள், விண்ணப்பங்கள், நன்னடைத்தை, கொடுப்பது, புனிதப்பயணம், விருத்தசேதனம் அல்லது சடங்குகளினால் வருவது அல்ல. அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஏற்படும் கிருபையாக இருக்கிறது. அவரது இரத்தம் மற்றும் உண்மையுள்ள வேண்டுதல் மூலம் நாம் இறைவன் முன்பு நீதிமானாக்கப்பட்டுள்ளோம். முடியாத ஒன்றை செய்யும்படியான வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். நாம் எதிரிகளை நேசிக்கிறோம். இறைவனின் பணிக்காக நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம். மேலும் கடைசி நாளில் நமது செயல்களின் அடிப்படையில் நியாயத்தீர்க்கப்படுவோம் என்று நாம் நம்புகிறதில்லை. அப்படியென்றால் நாம் அழிவை அடைவோம். நமது நம்பிக்கையை முற்றிலும் அவருடைய கிருபை மீது வைத்திருக்கிறோம். நமது கடந்தகாலம் நிகழ்கால மற்றும் எதிர்காலம் அனைத்தும் மன்னிப்பின் கிருபையுடன் தொடர்புள்ளதாக உள்ளது. அது பலப்படுத்தும் கிருபையாக, பூரணப்படுத்தும் கிருபையாக உள்ளது. எனவே நாம் மகிழ்ச்சியுடன் அறிக்கையிடுகிறோம். “அவருடைய பரிபூரணத்தினாலே நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். “யோவான் 11:16.
பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட பேதுருவின் இந்த அறிக்கைக்குப் பின்பு, எந்தவொரு பரிசேய சகோதரரும் தைரியமாக பேச முன் வரவில்லை. அவர்களில் ஒருவரும் இறைவனை சோதிக்க விரும்பவில்லை. இரட்சிப்பின் அஸ்திபாரமாக நியாயப்பிரமாணம் இருக்க இயலாது. அது கடவுளின் பரிபூரண கிருபையாக உள்ளது.
பவுலைத் தொடர்ந்து பர்னபாவும் மீண்டும் ஒரு முறை சின்ன ஆசியா பகுதிகளில் கிறிஸ்துவின் வெற்றிப்பவனியின் விபரங்களைக் கூறினான். இறைவன் எவ்விதம் தமது மீட்பின் சித்தத்தை அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் உறுதிப்படுத்தினார் என்பதை விளக்கினான். மதிப்பிற்குரிய பர்னபா தங்களது அருட்பணியின் காரியங்களை கூறும்படியாக பவுல் இக்கூட்டத்தில் அமைதி காத்தார். இந்த சாட்சியின் மூலம் பவுலுக்கும், திருச்சபைக்கும் பர்னபா இறுதியான அன்பின் பணியை செய்தான். அங்கே யூதக் கிறிஸ்தவர்கள் மற்றும் புறஜாதிக் கிறிஸ்தவர்கள் என்று இரண்டு சபைகள் இராதபடி பர்னபா இரண்டு குழுக்களையும் இணைத்தான்.
தைரியமாக முன்னேறிச் செல்லும்படி உயிர்த்தெழுந்த கிறிஸ்து தமது ஆவியினால் அப்போஸ்தலர்களை வழிநடத்தினார். அங்கே கூடியிருந்த அனைவரது மனங்களும் நியாயப்பிரமாணத்தைக் குறித்த முழுமையான புரிந்துகொள்ளுதலை அடைய முடியாமலும், கருத்து வேறுபாட்டில் முழ்கி போனவர்களாகவும் இருந்தார்கள். எனவே கிறிஸ்து முரண்பட்டிருந்த மக்களை ஒன்றிணைத்தார். தங்களது புரிந்துகொள்ளுதலின் அளவின் மூலமாக அல்ல மாறாக அப்போஸ்தலர்களின் முடிவின் மூலமாக பரிசுத்த ஆவியின் அனுபவங்களோடு தங்களது மனச்சாட்சியில் ஒத்துக்கொண்டார்கள். பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு அப்போஸ்தலர்கள் தங்களது இருதயத்தைக் கடினப்படுத்தவில்லை. அவர்கள் புதிய உடன்படிக்கையின் வேண்டுதலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தங்களது நம்பிக்கையை கிருபையின் மீது மட்டுமே வைத்தார்கள்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் நீர் அப்போஸ்தலர்களின் இருதயங்களை வழிநடத்தி உமது சபைக்கு விளக்குத்தண்டாக நற்செய்தியை நிலைநிறுத்தினீர். யூத நியாயப்பிரமாணத்திற்குள் சிக்கிக்கொள்ளாதபடியும், எங்களை நாங்களே நியாயம் தீர்க்காதபடிக்கும் எங்களுக்கு உதவும். உமது இரத்தத்தின் மீது கொண்டுள்ள எங்களது விசுவாசத்தின் மூலம் நியாயத்தீர்ப்பின் நாளில் கிருபாசனத்தண்டை நெருங்க உதவும். நாங்கள் இறைவனின் பிள்ளைகள் என்று உமது ஆவி எங்களது ஆவிக்கு அளிக்கின்ற சாட்சிக்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
கேள்வி:
- பேதுருவின் பிரசங்கத்திற்கு பொருளாக அமைந்த அவரது கூற்று என்ன? ஏன் கிறிஸ்தவ சபை இரட்சிப்பின் அஸ்திபாரமாக அதைக் கருதுகிறது?
குறிப்பு: அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் தொடர்ந்து கூறப்படும் சத்தியங்களின் ஒரு தொகுப்பாக அப்போஸ்தலன் பேதுருவின் கூற்று இருப்பதை நாம் கவனிக்க முடியும். அது ஆவிக்குரிய மையப்பகுதியில் நடைபெற்றது. மேலும் அப்போஸ்தலர் புத்தகத்தின் நடுப்பகுதியில் இது உள்ளது. மொத்த வசனங்களில் இதற்கு முன்பும், பின்பும் வருகிற வசனங்கள் ஒரே அளவாக உள்ளது. அதேசமயத்தில் இந்த வசனம் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் வரும் பேதுருவின் கடைசி அறிக்கையாக உள்ளது. அவன் சபை ஊழியராக தனது பணியை நிறைவேற்றி முடித்துள்ளான். உண்மையாக நற்செய்தியின் அஸ்திபாரமாக கிருபையின் நற்செய்தி மட்டுமே இருக்கமுடியும் என விவரித்து காண்பித்தான்.