Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 055 (Beginning of Preaching to the Gentiles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)


அப்போஸ்தல் 10:34-43
34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். 36 எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. 37 யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. 38 நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். 39 யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். 40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். 41 ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். 42 அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

இறைவனைக் குறித்த அறிவைத் தங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கொர்நேலியு வலியுறுத்தியபோது, தைரியமான அப்போஸ்தலன் ஆவியானவரின் வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டார். இறைவனுடைய வார்த்தை யூதர்களுக்கு மட்டும் கொடுக்கப்படாமல் அனைத்து மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதை அவர் அறிந்துகொண்டார். இறைவனைப் பற்றியும் இவர் கிறிஸ்துவில் மனுக்குலத்திற்காக என்ன செய்தார் என்றும் கேட்டு அறிந்துகொள்வதற்கு அனைத்து மனிதர்களுக்கும் உரிமையுள்ளது. இவ்விதமான புரிந்துகொள்ளுதல் பேதுருவுக்கும் அவரோடு வந்திருந்த சீடர்களுக்கும் கண்திறக்கப்பட்ட ஒரு அனுபவமாயிருந்தது. தங்களுக்கும் புறவினத்து மக்களுக்கும் இடையில் இருக்கும் தடையைக் கிறிஸ்து தகர்க்கத் தொடங்குகிறார் என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். இறைவனை உண்மையாகத் தேடுகிற உத்தம இருதயமுள்ளவர்களையும் நற்செயல்களுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களையும் அவர்கள் எந்த இன, மொழி, நிற, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள இறைவன் விருப்பமுள்ளவராயிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

அப்பொழுது பேதுரு கிறிஸ்தவ விசுவாசத்தின் அனைத்து முழுமையையும் எளிமையாக அவர்களுக்கு எடுத்தறிவித்தார். ஒரு பெயரிலே ஒரு கூற்றிலே அவர் கிறிஸ்தவத்தைச் சுருக்கிக் கூறினார். “கிறிஸ்து இயேசு அனைத்திற்கும் மேலான ஆண்டவராயிருக்கிறார். இறைவனுக்கும் மனிதருக்கும் நடுவராயிருக்கிற இவரை ஏற்றுக்கொள்கிறவர்கள் மன அமைதியைப் பெற்றுக்கொள்வார்கள். தெய்வீக ஒப்புரவாகுதலின் இந்த செய்தி கலிலேயாவிலும் சமாரியாவிலும் உள்ள கிராமங்களில் வசித்த பழைய ஏற்பாட்டு யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தது. அந்த செய்தி எருசலேமில் உதவிக்காரனாயிருந்த பிலிப்புவினால் செசரியாவை வந்தடைந்தது. அவர் யூதர்களுக்கு மட்டுமல்ல, ஒரு தருணத்தில் புறவினத்தைச் சேர்ந்த ஒரு எத்தியோப்பியருக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்திருக்கிறார். பேதுரு செசரியாவிற்கு வந்ததன் மூலமாக கிறிஸ்து அனைத்து மனிதர்களுக்குமான நற்செய்தியின் வாசலை அன்று திறந்து வைக்கிறார். உனக்குள் பூமியில் உள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி இங்கு நிறைவேறுவதை அப்போஸ்தலர் கண்ணுற்றார்.

அதன் பிறகு பேதுரு தனக்குச் செவிகொடுத்தவர்களுக்கு இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தார். மலைகளின் நகரமாகிய கலிலேயாவிலிருந்து அவர் எவ்வாறு யோர்தான் பள்ளத்தாக்கிற்கு இறங்கி வந்து, இறைவனுடைய வருகைக்காக காத்துக்கொண்டிருந்த மக்களோடு சேர்ந்து திருமுழுக்கு யோவானுடைய கரத்தினால் திருமுழுக்குப் பெற்றார் என்பதை எடுத்துரைத்தார். அப்பொழுது இறைவன் வானத்தைத் திறந்தார். பரிசுத்த ஆவியினால் இறைவன் அவரை அபிஷேகம் செய்து, நோயாளிகளைக் குணமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் அவருக்கு வேண்டிய பலத்தைக் கொடுத்தார். நடைமுறைக்கு உதவாத, அறிவுக்கு எட்டாத, கற்பனையான கருத்துக்களை இயேசு பிரசங்கிக்கவில்லை. அவர் தாம் பிரசங்கித்த காரியங்களைத் தம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினார். பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அவருடைய வாழ்க்கையை நேரில் கண்ட சாட்சிகளாயிருந்தார்கள். இறைவனுடைய செயலின் வெளிப்பாடாயிருந்த கிறிஸ்து எவ்வாறு தம்முடைய பிதாவுடன் ஏக சிந்தையுள்ளவராக வாழ்ந்தார் என்பதை அப்போஸ்தலர்கள் தங்கள் சொந்தக் கண்களினால் கண்டார்கள். கிறிஸ்துவின் அதிகாரம் அவர்களைப் பொறுத்தவரை கேள்விக்கு அப்பாற்பட்டதாயிருந்தது.

அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சி மனிதர்களுக்குப் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. ஓடிப்போன அடிமைகளையும் அசுத்தமான கொலைகாரர்களையும் கொலைசெய்யும் புகழ்பெற்ற கொலைமரத்தில் இறைவனுடைய பரிசுத்தரை மனிதர்கள் தூக்கிக்கொலை செய்தார்கள். ஆனால் இறைவன் தம்முடைய மகனை உயிரோடு எழுப்பினதன் மூலமாக அவருடைய அன்பு குற்றமற்றது என்றும் அவர் பரிசுத்தர் என்பதையும் உலகத்திற்கு அறிவித்தார். அதன் பிறகு இயேசு மக்கள் அறியும்படி தம்மைக் காண்பித்து அவர்கள் நடுவில் உலவித்திரிந்தார். அவர் எருசலேமிலுள்ள அனைத்து மக்களுக்கும் தம்மைக் காண்பிக்காமல் தம்முடைய உயிர்த்தெழுதலுக்கு யாரெல்லாம் சாட்சியிட வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தம்மைக் காண்பித்தார். அப்படிப்பட்ட சாட்சிகளில் பேதுருவும் ஒருவர். இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகும் தம்முடைய சீடர்களுடன் உண்டு, குடித்து, அவர்களோடு வாழ்ந்ததன் மூலம் தம்முடைய உயிர்த்தெழுந்த சரீரம் உண்மையானது என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காண்பித்தார்.

தம்முடைய உயிர்த்தெழுதலுக்கும் பரமேறுதலுக்கும் இடைப்பட்ட அந்த நாற்பது நாட்களிலும் தம்முடைய பிதாவின் அரசைக் குறித்த இரகசியங்களைத் தம்முடைய சீடர்களுக்குப் போதித்தார். இறைவன் வானத்திலும் பூமியிலும் தமக்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் என்பதை அவர் அவர்களுக்கு அறிவித்தார். இவ்வாறு இயேசு அனைத்து மனிதர்களுக்கும் நியாயாதிபதியாகவும் மரித்தவர்களுக்கும் உயிரோடு இருக்கிறவர்களுக்கும் ஆண்டவராகவும் இருக்கிறார். நம்மைப் போலவே அன்று கொர்நேலியுவும் அவரோடு கூடியிருந்த மக்களும் அவருக்குச் சொந்தமானவர்களாயிருந்தார்கள்.

இருப்பினும் நாம் இந்த எல்லாம் வல்ல இறைவனைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதோடு, நியாயத்தீர்ப்பில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள் என்று தீர்க்கதரிசிகள் மூலம் அவர் முன்னறிவித்திருக்கிறார். இறைவனிடத்திலிருந்து வந்தவர் நியாயத்தீர்ப்பில் இருந்து நமக்கு விடுதலைகொடுத்து நமக்கு பரலோகத்தின் வாசலைத் திறந்திருக்கிறார். அதனால் பாவத்தைக் குறித்தோ அதனிமித்தமாக வெளிப்பட்டுள்ள இறைவனுடைய கோபத்தைக் குறித்தோ நாம் பயப்படத் தேவையில்லை. இறைவனுடைய குமாரன் தம்முடைய இரத்தத்தினால் நம்மை முழுவதும் பரிசுத்தப்படுத்தி, நம்முடைய பரலோக பிதாவாகிய இறைவனிடத்தில் நம்மைக் கொண்டுவருகிறார்.

இவற்றை விசுவாசிக்கிறவர்கள் நீதிமானாக்கப்படுகிறார்கள். நற்செய்தியைப் பெற்றுக்கொள்கிறவர்கள் பரிசுத்தப்படுத்தப்படுகிறார்கள். இந்த வார்த்தைகள் மூலமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முழுக் கிருபையையும் புறவினத்து மக்களுக்கு பேதுரு முதல் முறையாக வாழங்கினார். கிறிஸ்துவின் பரிகாரத்திற்குரிய உரிமையை பேதுரு அவர்களுக்குத் திறந்துகொடுத்தார். இறைவனுடைய மீட்பின் சித்தத்திற்கு உகந்த ஒரு விசுவாசத்திற்கும் வாழ்க்கைக்கும் பேதுரு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்துவினுடைய மீட்பைக் குறித்த இரகசியங்களைஇறையியல் ரீதியாக நிரூபிக்க பேதுரு முயற்சிக்கவில்லை. தனிச்சிறப்பான வார்த்தைகளையோ அல்லது ஆழமான கருத்துக்களையோ பயன்படுத்தி அவர்களோடு தர்க்கரீதியான காரண காரியங்களை எடுத்து முன்வைக்கவும் பேதுரு முயற்சிக்கவில்லை. மாறாக, அவர் கண் கண்ட சாட்சியாக அந்த வரலாற்று உண்மைகளை எடுத்து முன்வைத்தார். அவர்கள் இந்த உண்மைகளின் மூலமாகவே இரட்சிப்பை அடைந்துகொண்டார்களே தவிர, அவர்களுடைய பாவங்களைக் கண்டித்து அவற்றிற்காக அவர்களைக் கண்ணீர் சிந்தவைக்க பேதுரு முயற்சிக்கவில்லை. பேதுரு அந்த மக்களுடைய கவனத்தைத் தன்னை நோக்கித் திருப்பாமல் கிறிஸ்துவை நோக்கித் திருப்பினார். இயேசுவில் வைக்கும் விசுவாசத்தினால் மட்டுமே மக்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவரை நம்புகிறவர்கள் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டது. காரணம் ரோம நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியு இயேசுவின் சிலுவை மரணம் ஒரு வரலாற்று உண்மையாக இல்லையென்றால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். இந்த உண்மை நன்கு அறியப்பட்டதாயிருந்தது. அதுதான் நம்முடைய விடுதலையின் அடித்தளம் என்றும் விடுதலைக்கான காரணம் என்றும் பேதுரு விளக்கப்படுத்தினார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நீரே அனைத்து மனிதர்களுக்கும் ஆண்டவர். உம்முடைய விலையேறப்பெற்ற திரு இரத்தத்தால் அவர்களை நீர் வாங்கியிருக்கிறீர். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்களை உமக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, உம்முடைய நாமத்தின் மகிமைக்காக, எந்தவித பயமுமின்றி, நீரே ஒரே ஆண்டவர் என்பதை அனைவருக்கும் அறிவிக்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.

கேள்வி:

  1. “இயேசு கிறிஸ்து அனைவருக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்ற கூற்றின் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)