Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 053 (Beginning of Preaching to the Gentiles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

9. நூற்றுக்கதிபதியாகிய கொர்னேலியுவின் மனமாற்றத்தின் மூலமாக புறவினத்திற்கான நற்செய்திப் அறிவிக்கப்படுவது ஆரம்பித்தல் (அப்போஸ்தலர் 10:1 - 11:18)


அப்போஸ்தலர் 10:9-16
9 மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்துவருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான். 10 அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, 11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், 12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். 13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. 14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். 15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 16 மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பேதுரு அதிகமாக விண்ணப்பித்துக்கொண்டிருந்தார். பயனுள்ளதும் ஆவிக்குரியதுமான விண்ணப்பமில்லாமல் எந்த வெளிப்பாடும் இருக்காது. வேதவாசிப்பும் விண்ணப்பமும் வானொலியில் நமக்கு வேண்டிய அலைவரிசைக்கு திருப்புவதைப் போன்ற செயல்களாகும். நீங்கள் உங்களை சரியாகவும் மனப்பூர்வமாகவும் பரிசுத்த இறைவனுடைய ஆவியானவருக்கு நேராகத் திருப்பவில்லையெனில் நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்கமுடியாது, அவருடைய கிருபைகளை நீங்கள் உணரவோ, அவருடைய வழிநடத்துதலை நீங்கள் அனுபவிக்கவோ முடியாது. விண்ணப்பத்தோடு வேதாகமத்தைப் படிக்கும் ஒருவர் இறைவனோடு தொடர்புகொள்கிறார்.

பேதுருவும் கொர்நேலியுவும் தொடர்ந்து விண்ணப்பித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையும் செயலும் விண்ணப்பத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. அன்புள்ள சகோதரனே, உங்கள் வாழ்க்கையை விண்ணப்பத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்திருக்கிறீர்களா? தொடர்ச்சியான உங்கள் விண்ணப்பமும் வேதாகமத்தை நீங்கள் ஆழமாக அறிந்திருப்பதும் உங்கள் சரீரத்திற்குத் தேவையான பெலத்திற்கும் ஊட்டச்சத்திற்கும் உணவருந்துவதைக் காட்டிலும் முக்கியமானது. உங்கள் ஆத்துமா இறைவனுக்காகப் பசியடைந்து நீதிக்காக தாகமடைய வேண்டும். உங்களுடைய தாகம் ஜீவ தண்ணீரினால் மட்டுமே தீர்க்கப்பட முடியும். உங்களை நீங்கள் புறக்கணிக்காமல், இறைவனுடைய ஆவியானவர் உங்கள் வாழ்வில் செயல்பட இடங்கொடுங்கள். நீங்கள் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்ளும்படி அனுதினமும் நற்செய்தியை வாசியுங்கள்.

வானம் திறக்கப்படுவதையும் அங்கிருந்து அனைத்து வகையான மிருகங்களும் வருவதையும் பேதுரு தரிசனமாகக் கண்டார். அதிக நேர விண்ணப்பத்தின் காரணமாக அவர் பசியாயிருந்த காரணத்தினால் அவற்றைப் பார்த்தவுடன் அவருக்கு பசியெடுத்தது. அவர் தங்கியிருந்த வீட்டில் ஆயத்தமாகிக்கொண்டிருந்த உணவின் வாசனை பேதுரு தங்கியிருந்த மேலறையை எட்டியது. விண்ணப்பஞ் செய்த பேதுரு உணவுக்காக காத்துக்கொண்டிருந்தார். தம்முடைய ஊழியக்காரனுடைய கடுமையான பசியுணர்வை இறைவன் பயன்படுத்தினார். அந்த மதிய நேரத்தில் இறைவன் பேதுருவுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். திடீரென வானத்திலிருந்து ஒரு பெரிய துப்பட்டியைப் போன்ற ஒருவித கூடு இறங்கிவரக் கண்டார். நன்கு சுவையாகச் சமைக்கப்பட்ட உணவுகளும் பழங்களும் அதில் இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அந்தத் துப்பட்டியில் அவர் கண்டதோ தேள்களும், பாம்புகளும், உடும்புகளும், பச்சோந்திகளும், ஆமைகளும் அதைப் போன்ற ஆயிரக்கணக்கான மிருகங்களும் பூச்சிகளுமே. இவையனைத்தையும் யூதர்கள் அசுத்தமான மிருகங்கள் என்றே கருதினார்கள். இந்த அசுத்தமான மிருகங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவராக முகம்சுளித்தார் பேதுரு. இந்த அசுத்த மிருகங்களின் பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவை அசுத்தமான மனிதர்களைப் போன்றவைகள். இறைவன் நம்மைப் பார்க்கும்போதும் நம்முடைய அருவருக்கத்தக்க செயல்களையும், விபச்சாரத்தையும், பெருமையான எண்ணங்களையும் பார்த்து இவ்வாறுதான் முகம்சுளிக்கிறார். உங்களுடைய கெட்ட இருதயத்திலிருந்து வரும் இவ்விதமான அசுத்தங்களை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

அப்பொழுது “பேதுருவே, இவற்றை அடித்துப் புசி” என்ற கட்டளை இறைவனிடத்திலிருந்து வந்தது. நாம் எப்போதும் இறைவனுடைய தெய்வீக சித்தத்திற்கு இசைவாகவே நடக்கிறோம் என்ற எண்ணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். தரிசனத்தில் கூட பேதுரு இறைவனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அனைத்துவித பாவச் செயல்களிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இறைவனே இந்த அசுத்தமான மிருகங்களை உண்ணக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாரே என்று பேதுரு பதிலுரைத்தார். இவ்வாறு தன்னை அசுத்தத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாவச்சோதனையை பேதுரு முழு இருதயத்தோடும் மேற்கொண்டார். நீங்கள் இவ்வாறு மேற்கொள்கிறீர்களா? நீங்கள் உங்கள் உறக்கத்தில், கனவில் பாவச் சோதனையை மேற்கொள்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் பாவத்தை எதிர்க்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களை பெலப்படுத்தி, வழிநடத்தி பாவச்சோதனையிலிருந்து உங்களைக் காக்க விரும்புகிறார்.

விஷமுள்ள மிருகங்களைப் பேதுரு உண்ண வேண்டும் என்பதல்ல இறைவனுடைய எண்ணம். மாறாக பேதுரு தம்முடைய கட்டளைக்கு நிபந்தனையின்றி கீழப்படிய வேண்டும் என்றும் அதன் மூலம் அவருடைய நியாயப்பிரமாணவாத சிந்தையிலிருந்து அவர் வெளியே வரவேண்டும் என்பதுதான் இறைவனுடைய விருப்பம். பாவ சிந்தனையைக் குறித்த பயத்திலிருந்து பேதுரு பின்வாங்க வேண்டும் என்று உன்னதமான இறைவன் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவர் பாவிகளை நேசிக்கிறவராக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார். மனிதர்கள் தீமையும் அசுத்தமும் நிறைந்தவர்களாயிருக்கிறார்கள் என்பதும் அதனால் அவர்கள் பேதுரு கண்ட மிருகங்களைப் போல இறைவனுடைய ஆவியானவரினால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் சந்தேகத்திற்கு இடமற்ற உண்மைகள். உங்களை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஒரு தேவதூதனைப் போல இருக்கிறீர்களா அல்லது ஒரு மிருகத்தைப் போல இருக்கிறீர்களா? நீங்கள் நன்மையை விரும்புகிறீர்களா அல்லது தீமையை விரும்புகிறீர்களா? நீதியை விரும்புகிறீர்களா அல்லது அசுத்தத்தை விரும்புகிறீர்களா? மனிதனுடைய இருதயம் சிறுவயதிலிருந்தே தீமையுள்ளதாயிருக்கிறது.

தம்முடைய சாயலைச் சுமந்துகொண்டிருக்கும் மனிதனை இறைவன் அழித்துவிடுவதில்லை. அவர் தம்முடைய கொள்கையின்படி அவனைச் சுத்திகரிக்கிறார். குமாரனுடைய இரத்தம் மீட்பைக் கொண்டுவருகிறது, இது நம்முடைய அறிவுக்கு எட்டாததாயிருக்கிறது. இறைவன் சிலுவையில் அறையப்பட்ட தம்முடைய குமாரன் மூலமாக இவ்வுலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கியிருக்கிற காரணத்தினால், மனிதர்கள் பாவிகளாயிருந்தபோதிலும் அனைவரையும் இறைவன் சுத்தமானவர்களாகவே பார்க்கிறார். ஆகவே இரட்சிப்பைக் குறுகியதாக்க வேண்டாம். கொலைகாரனும், ஊழல் செய்பவரும், விபச்சாரக்காரரும், பெருமையும் அகம்பாவமும் உள்ள யாராவது மனிதனை நீங்கள் அறிவீர்களா? அப்படிப்பட்டவருடைய பாவங்கள் அனைத்துக்காகவும் கிறிஸ்து மரித்து சிலுவையில் அவற்றைச் சுமந்து தீர்த்துவிட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆனால் பாவமன்னிப்பினாலும் பரிகாரத்தினாலும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ள இந்த கிருபையை அந்தப் பாவி இன்னும் அறியாதிருக்கிறார்.

இறைவன் அனைத்து மனிதர்களையும் சமமாகவே பார்க்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். கொல்கொதாவின் கல்வாரி சிலுவையில் கிறிஸ்துவின் இரத்தம் புறப்பட்ட நேரத்திலிருந்து, பரிசுத்த இறைவன் அனைத்து மனிதர்களையும் தூய்மையானவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவுமே கருதுகிறார். இயற்கையாக மனித சிந்தையின்படியும் புரிந்துகொள்ளுதலின்படியும் சீரழிந்ததை நல்லது என்றும் தீமையை நன்மை என்றும் சிந்திக்க முடியாத காரணத்தினால் பரிசுத்த ஆவியானவர் பேதுருவுக்கு இந்த தரிசனத்தை மூன்று முறை காண்பித்தார். மந்தமாயிருந்த பேதுருவுக்கு சிலுவை மனிதசுபாவத்தின் சிந்தையை மேற்கொண்டுவிட்டது என்பதை மூன்று முறை இறைவன் உறுதிப்படுத்தினார். மும்முறை தரப்பட்ட இந்த தரிசனம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவன் தனது முழு மீட்பின் சித்தத்தின்படி மனிதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்றும் சத்தியத்தை அறிகிற அறிவிற்குள் வரவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதையே காண்பிக்கிறது. இரட்சிப்பு நிறைவேற்றி முடிக்கப்பட்டுவிட்டது. அனைத்து மனிதர்களும் தம்முடைய குமாரனுடைய இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டவர்கள் என்றே இறைவன் அவர்களைப் பார்க்கிறார். தம்முடைய பரிசுத்தத்தின் நிமித்தமாக தாம் உடனடியாக அழிக்க வேண்டியவர்களைத் தவிர மற்றவர்களை அவர் அவ்விதமாகவே பார்க்கிறார்.

விண்ணப்பம்: பரலோக பிதாவே, உம்முடைய இரட்சிப்பைக் குறித்த என்னுடைய சந்தேகங்களையும் எதிர்ப்புகளையும் எனக்கு மன்னித்தருளும். என்னுடைய சிந்தையை நீர் மேற்கொண்டு, எனது இதயத்தை நீர் விரிவாக்கி, எனது விசுவாசத்திற்கு நீர் ஒளியூட்டி என்னை வழிநடத்தியருளும். அப்பொழுது நான் உம்முடைய இரட்சிப்பின் மேன்மையையும் மகிமையையும் உணர்ந்துகொண்டு, உம்முடைய பிரியமான குமாரன் அனைத்து மனிதர்களையும் தம்முடைய சிலுவையின் மூலமாக மன்னிக்கிறார் என்ற உண்மையை அனைத்து மனிதர்களுக்கும் அறிவிக்கிற மனிதனாக மாறுவேன். ஞானமுள்ள வார்த்தைகளை என் வாயில் தாரும். எனது விசுவாச அறிக்கைகளுக்கு சத்தியத்தின் வல்லமையைக் கொடுத்தருளும்.

கேளவி:

  1. “இறைவன் சுத்தமாக்கியவைகளை நீ அசுத்தம் என்று அழைக்காதே” என்று பேதுருவுக்கு இறைவன் சொன்னதன் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:40 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)