Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 074 (The raising of Lazarus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)

இ) லாசருவை உயிரோடு எழுப்புதல் (யோவான் 11:34-44)


யோவான் 11:38-40
38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். 40 இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

எருசலேமில் வாழ்ந்த மக்கள் ஒரு பெரிய பாறையில் வெட்டப்பட்ட கல்லறையில் மரித்தவர்களை வைத்து, அதன் குறுகிய வாயிலை பெரிய வட்டவடிவக் கல்லைக் கொண்டு மூடிவிடுவார்கள். அவர்கள் அந்தக் கல்லறையைத் திறக்க வேண்டுமானால் அந்தக் கல்லை அவர்கள் வலது அல்லது இடது பக்கம் உருட்டித் தள்ளலாம்.

இவ்வாறு பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்தான் லாசருவையும் வைத்திருந்தார்கள். இயேசு அங்கிருந்தவர்கள் அனைவரையும் மரணத்தின் பயங்கரம் பிடித்திருந்ததை கண்டார். அழிப்பவனுடைய கரத்திலே இறைவன் பாவிகளைக் கொடுத்தவிட்டபடியால் இறைவனுடைய கோபமாக மரணம் அனைத்துப் பாவிகள் மீதும் ஊற்றப்பட்டதை அவர் பார்த்தார். ஆனால் சிருஷ்டிகர் மக்களுடைய மரணத்தை விரும்பாமல் அவர்கள் மனந்திரும்பி வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றும்படி இயேசு கட்டளையிட்டார். மரித்தவர்களைத் தொடுவது சில காலத்திற்கு அவர்களைத் தீட்டுப்படுத்தும் என்பதால் மக்கள் இயேசுவின் இந்தக் கட்டளையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். நான்கு நாட்களாகிவிட்ட காரணத்தினால் பிணம் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கியிருக்கும். மார்த்தாள், “ஆண்டவரே, மரித்தவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பிணம் நாற்றமடிக்கும்” என்றாள். மார்த்தாளே உன்னுடைய விசுவாசம் எங்கே? இயேசுதான் இறைமைந்தனாகிய மேசியா என்றும் அவர் மரித்தவர்களை உயிர்ப்பிக்க வல்லவர் என்றும் இப்போது அறிக்கையிட்டாயே. மரணத்தின் கொடூரமும் கல்லறையின் காட்சியும் அவளுடைய கண்களை மறைத்துவிட்டன. தன்னுடைய கர்த்தர் என்ன செய்யப்போகிறார் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

ஆனாலும் இயேசு அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தி, மனித சக்திக்கு மேலான அவளது நம்பிக்கையை அவர் உற்சாகப்படுத்தினார். இறைவனுடைய மகிமையைக் காணும்படி முழுவதும் தம்மை நம்ப வேண்டும் என்று கோரினார். “விசுவாசி, நான் ஒரு பெரிய அற்புதத்தைச் செய்வேன்” என்று அவர் கூறவில்லை. லாசருவின் சுகவீனம் மரணத்திற்கு ஏதுவானதாக இல்லாமல், இறைவனுடைய மகிமைக்கு ஏதுவானதாக இருக்கும் என்று அவர் ஏற்கனவே தன்னுடைய சீஷர்களிடம் சொல்லியிருந்தார் (யோவான் 11:4). தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தான் என்ன செய்ய வேண்டும் என்பதை இயேசு நன்கறிந்திருந்தார். மார்த்தாளின் கவனத்தை மரணத்தைவிட்டு விசுவாசிப்பவர்களுக்கு வெளிப்படுத்தப்படும் மகிமைக்கு நேராகத் திருப்ப இயேசு முயற்சித்தார். தன்னுடைய புகழ் அல்ல பிதாவின் மேன்மையும் மகிமையுமே அவருடைய நோக்கமாயிருந்தது.

அவ்விதமாக கிறிஸ்து உங்களையும் பார்த்து, “நீ விசுவாசித்தால் இறைவனுடைய மகிமையைக் காண்பாய்” என்று கூறுகிறார். பிரச்சனைகளையும் சோதனைகளையும் விட்டுவிட்டு இறைவனை நோக்கிப்பாருங்கள். உங்களுடைய குற்றங்களினாலும் பிரச்சனைகளினாலும் நிறைந்திருக்காமல் கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவருடைய பிரசன்னத்தை நம்புங்கள். ஒரு குழந்தை தாயை அணைத்துக்கொள்வதைப் போல அவருக்கு ஒப்புக்கொடுங்கள். அவருடைய சித்தம் செய்யப்படட்டும், அவர் உங்களை நேசிக்கிறார்.

யோவான் 11:41-42
41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 42 நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

மார்த்தாள் இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்தாள். அங்கிருப்பவர்களைக் கல்லைப் புரட்டச் சொன்னாள். மக்கள் நடுவில் பரபரப்புண்டானது. அவர் கல்லறைக்குள் சென்று லாசருவின் சரீரத்தைக் கட்டிப்பிடித்து அழப் போகிறாரா, அல்லது என்ன செய்யப்போகிறார்?

இயேசு அமைதியாகக் கல்லறைக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார். அவர் தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து மக்கள் கேட்கும்வண்ணம் விண்ணப்பம் செய்தார். இங்கு இயேசுவின் விண்ணப்பம் ஒன்று நமக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இறைவனைத் தன்னுடைய பிதா என்று அழைத்தார். தன்னுடைய முழு வாழ்க்கையும் பிதாவை பரிசுத்தப்படுத்துவதும் மகிமைப்படுத்துவதுமாகவே இருந்தபடியால் அவர் இறைவனுக்கு நன்றி சொன்னார். லாசரு உண்மையில் எழுப்பப்படுவதற்கு முன்பாகவே தம்முடைய விண்ணப்பத்திற்கு பிதா பதில்கொடுத்தார் என்பதற்காக நன்றி சொன்னார். மற்றவர்கள் அழுதுகொண்டிருந்தபோது இயேசு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். மரணத்தை வெல்லும் இறைவாழ்விற்கு அடையாளமாக அவர் தன்னுடைய நண்பனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். பிதாவும் ஏற்றுக்கொண்டு மரணத்தின் கொடூரத்திற்கு பலியான ஒருவனை விடுவிக்கும் அதிகாரத்தை குமாரனுக்குக் கொடுத்தார். தன்னுடைய விண்ணப்பம் கேட்கப்படும் என்று இயேசு நம்பினார். ஏனெனில் அவர் எப்போதுமே தம்முடைய பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறார். இயேசு தன்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்திலும் விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால் இப்போது அங்கு நடைபெறும் இரகசியங்களை மக்கள் அறியும்படி சத்தமாக விண்ணப்பித்தார். பிதா எப்போதும் தம்முடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பதற்காக நன்றி செலுத்தினார். எந்தப் பாவமும் பிதாவையும் குமாரனையும் பிரிக்கவில்லை, அவர்களுக்கிடையில் எந்தத் தடையும் இல்லை. குமாரன் தன்னுடைய சொந்த சித்தத்தை இங்கு வலியுறுத்தவில்லை. தனக்குப் புகழையோ வல்லமையையோ அவர் நாடவில்லை. பிதாவின் முழுமையே குமாரனை இயக்கியது. பிதாவின் சித்தமே லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பியது. பிதா தம்முடைய குமாரனைத் தங்களிடத்தில் அனுப்பியிருக்கிறார் என்பதை மக்கள் அறிந்துகொள்ளும்படி இயேசு இவற்றை எல்லாம் மக்கள் காதுகள் கேட்கும்படி கூறினார். ஆகவே லாசரு உயிருடன் எழுப்பப்பட்டது பிதாவுக்கு மகிமையாகவும் திரித்துவத்தின் ஒருமைக்குரிய அற்புதமான அடையாளமாகவும் காணப்பட்டது.

யோவான் 11:43-44
43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

இறைவனுக்கு மகிமையைச் செலுத்திய பிறகு, “லாசருவே வெளியே வா” என்று இயேசு சொன்னதும் மரித்தவனுக்கு அந்த சத்தம் கேட்டது (பொதுவாக மரித்தவர்களுக்கு எந்த சத்தமும் கேட்காது). மனிதனுடைய ஆள்த்துவம் மரணத்தில் அழிந்துபோய் விடுவதில்லை. பரலோகத்தில் விசுவாசிகளுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. சிருஷ்டிகரின் அழைப்பு, மீட்பரின் சத்தம், உயிரளிக்கும் ஆவியின் செயல்பாடுகள் ஆகியவை மரணத்தின் அடி ஆழத்தையும் ஊடுருவிச் செல்லும். இறைவன் ஒன்றுமில்லாமையிலிருந்து உலகத்தைப் படைத்தபோது ஆழத்தின் மீது பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார். லாசருவுக்கு இயேசுவின் சத்தம் நன்கு தெரியும். அதற்கு அவன் கீழ்ப்படிந்திருக்கிறான். கல்லறையில் இருக்கும்போதும் அவன் அவருடைய சத்தத்தை விசுவாசத்தினால் கேட்டு கீழ்ப்படிந்தான். கிறிஸ்துவின் வாழ்வின் தத்துவம் அவனுக்குள் ஊடுருவிச் சென்றது. அவனுடைய இருதயம் துடிக்கத் தொடங்கியது, அவனது கண்கள் திறக்கப்பட்டன. அவனுடைய அவயவங்கள் அசைந்தன.

அடுத்து, அற்புதத்தின் இரண்டாவது நிலை நடைபெற்றது. ஏனெனில் லாசரு முழுவதும் சீலைகளினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தான். மரித்தவன் முட்டைக்குள் இருக்கும் கூட்டுப் புழுவைப்போல இருக்கிறான். அவன் தன்னுடைய கட்டப்பட்ட கரங்களை அசைத்த முகத்தை மூடிய சீலையை நீக்க முடியாமலிருந்தது. ஆகவே இயேசு அவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடும்படி கட்டளையிட்டார்.

லாசருவின் வெளிறிய முகத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவன் கட்டப்பட்டிருந்தாலும் அசைந்துகொண்டுதானிருந்தான். அவன் இயேசுவினிடத்தில் நெருங்கிச் சேர்ந்தபோது அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தின் நடுவில் லாசருவும் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்றான். அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பணிந்துகொண்டதைப் பற்றியோ, உயிரோடு எழுந்தவனை உறவினர்கள் கட்டித்தழுவியதையோ, ஆனந்தக் கண்ணீரையோ யோவான் இங்கு குறிப்பிடவில்லை. இந்த உயிர்த்தெழுதலை இரண்டாம் வருகையின்போது விசுவாசிகளின் உயிர்த்ùழுதலோடு யோவான் ஒப்பிடவும் இல்லை. அவை எதுவும் அதிக முக்கியமானவை அல்ல. நாம் உயிரளிக்கும் இயேசுவை விசுவாசித்து நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசுவின் சித்திரத்தை மட்டுமே யோவான் நமக்காகத் தீட்டுகிறார். அந்தக் கூட்டத்தின் நடுவில் இந்த யோவான் இருந்தார். குமாரனில் இறைவனுடைய மகிமையைக் கண்டார். கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டு அவருடைய வல்லமைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

விண்ணப்பம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, பிதாவின் நாமத்தினால் நீர் லாசருவை உயிரோடு எழுப்பியமைக்காக உமக்கு நன்றி. நீரும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தீர். நீர் எங்களில் கொடுத்திருக்கிற உம்முடைய வாழ்வுக்காக உமக்கு நன்றி. விசுவாசத்தினால் நாங்களும் உம்முடன் உயிர்த்திருக்கிறோம். அனைத்து இனங்களிலும் மரித்திருப்பவர்கள், உம்மை நம்பி, உம்முடன் ஐக்கியம் கொண்டு, நித்தய வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி நீர் அவர்களை உயிருடன் எழுப்பும்.

கேள்வி:

  1. லாசரு உயிரோடு எழுப்பப்பட்டதன் மூலம் இறைவனுடைய மகிமை எவ்வாறு காணப்பட்டது.

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)