Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 122 (Wintering at Malta)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஊ - செசரியாவிலிருந்து ரோமாபுரிக்கு கடல் பயணம் (அப்போஸ்தலர் 27:1 - 28:31)

3. மெலித்தாவில் குளிர்காய்தல் (அப்போஸ்தலர் 28:1-10)


அப்போஸ்தலர் 28:1-6
1 நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம். 2 அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். 3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. 4 விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 5 அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். 6 அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.

பிசாசு ஒருபோதும் இறைவனையும் அவருடைய பிள்ளைகளையும் நேசிப்பதில்லை. அவன் அவர்களை அழிக்கவும் அவர்களுடைய நம்பிக்கையை அற்றுப்போகச் செய்யவுமே முயற்சிக்கிறான். ஆனால் கிறிஸ்துவின் பராமரிக்கும் கரம் இரவும் பகலும் நம்மைக் காக்கிறது. அதனால்தான் பவுல் “கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது” என்று சொன்னார்.

பரிதாபமும் வேதனையும் நிறைந்த கடற் பயணிகள் கரையேறியபோது இறைவனுடைய இரக்கத்தைத் தாராளமாக உணர்ந்துகொண்டார்கள். காத்தேனியர்களுடைய அதிகாரத்திற்குக் கீழிருந்த அந்த தீவின் குடிமக்கள் கரையேறிய பயணிகளைக் கொள்ளையிடவோ கொலை செய்யவோ இல்லை. அவர்களை அன்புடன் வரவேற்றார்கள். அவர்கள் அங்கிருந்த விறகுகளை ஒரு பெருங்குவியலாகச் சேர்த்து, அதில் அவர்கள் குளிர்காயும்படி நெருப்பு மூட்டினார்கள். பவுல் அந்த நெருப்புக்காக சில விறகுகளைப் பொறுக்க முற்பட்டார். பவுல் கப்பற் சேதத்திலிருந்து காக்கப்பட்டதைக் குறித்து கடும் கோபத்தில் இருந்த பிசாசு, அவர் அந்த விறகுகளை நெருப்பில் போட்டபோது, நெருப்பிலிருந்து ஒரு பாம்பு புறப்பட்டு வந்து அவரைக் கடிக்கும்படி செய்தான். அது ஒரு கொடிய விஷப்பாம்பாக இருந்தது, அது பவுலுடைய கையில் நன்றாக தனது பல் பதியும்படி அதைக் கவ்விக்கொண்டது. பிசாசின் அழிவிற்கு அடையாளமாக பவுல் அந்தப் பாம்மை நெருப்புக்குள் உதறிப்போட்டுவிட்டார்.

அந்த விஷமுள்ள பாம்பு பவுலுடைய கையில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அந்த தீவுவாசிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்: “இந்த மனிதன் இறைவனுடைய கோபத்தினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். ஏனெனில் கடலிலிருந்து தப்பியும் அவன் மீண்டும் மரணத்திற்கு ஆளாகும்படி பாம்பின் கடிக்கு உள்ளாகிறானே” என்றார்கள். பவுல் அந்த பாம்பின் விஷம் தலைக்கேறுவதால் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டு, உடல் வீங்கி கீழே விழுந்து இறந்துவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் புறவினத்து மக்களின் அப்போஸ்தலனுக்கோ எதுவும் நடக்கவில்லை. தமது பணியாளர்களோடு கிறிஸ்து இருப்பதால் பாம்புகளையும் தேள்களையும் அவர்கள் மிதிப்பார்கள் என்றும், சாவுக்கேதுவான விஷம்கூட அவர்களுக்கு எதுவும் செய்யாது என்றும் கிறிஸ்து சொல்லியிருந்த வாக்குறுதியைப் பவுல் நம்பினார்.

பவுலுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதை அந்த தீவு மக்கள் கண்டபோது, அவர்கள் பயமடைந்து, இவர் கடவுளாக இருப்பாரோ என்று தங்களுக்குள் மெதுவாகப் பேசத் தொடங்கினார்கள். “மனிதர்களுடைய வடிவத்தில் தெய்வங்கள் நம்மிடத்தில் வந்திருக்கின்றன” என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். உண்மையில் கிறிஸ்தவ நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் இறைவனுடைய பிள்ளையே. கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களுடைய மூடத்தனமான நம்பிக்கைகளைப் போல எண்ணற்ற தெய்வங்களின் கூட்டத்தில் கிறிஸ்தவனும் ஒரு தெய்வமல்ல. ஆனால் அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறார். பிதாவாகிய இறைவன் அவர் மூலமாகப் பேசி அவருக்கு நிலைவாழ்வைக் கொடுக்கிறார். பவுலை ஏன் கொல்ல வேண்டும் என்பதை பிசாசு அறிந்திருந்தான். ஏனெனில் பவுல்தான் முழு உலகத்திற்கும் நற்செய்தியைக் கொண்டு செல்வதற்கு தலையான அருட்பணியாளனாக இருந்தார். நற்செய்தி ரோமாபுரிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எதிராக அனைத்து நரகத்தின் சக்திகளும் எதிர்த்துப் போராடின: யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம், மேட்டிமை நிறைந்த ஆளுனர்கள், தீய ஆவிகள், பெருங்காற்று, கொந்தளிக்கும் கடல் மற்றும் விஷப் பாம்பு. ஆனால் கிறிஸ்துவே இறுதியில் வெற்றியடைந்தார். அவருடைய வெற்றி பவனியில் யாரும் குறுக்கே நிற்க முடியாது.

அப்போஸ்தலர் 28:7-10
7 தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். 8 புபிலியுவினுடைய தகப்பன் ஜூரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக்க கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். 9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து. குணமாக்கப்பட்டார்கள். 10 அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.

தீவின் தலைவனாகிய புபிலியு என்பவர் தளபதியையும் போர்வீரர்களையும் கைதிகளையும் தன்னுடைய வீட்டில் தங்கும்படி அழைத்தார். அவர் அவர்களை அன்புடன் உபசரித்தார். அதன் பிறகு ஒரு கொள்ளை நோய்க்கு ஆள்பட்டிருந்த புபிலியுவின் தந்தை அவரது வீட்டில் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். ஆகவே, பவுல் அவர்களுக்கு இரக்கம் செய்ய நினைத்து, புபிலியுவின் தந்தை வீட்டிற்குச் சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களைச் சுகமாக்கினார். நம்பிக்கையுள்ளவனுடைய விண்ணப்பம் பெரிய காரியங்களைச் செய்யும். கிறிஸ்துவுக்குச் சித்தமான சமயங்களில் நம்பிக்கையாளர்கள் பிணியாளிகளுடைய தலைகளின் மீது கரங்களை வைத்து விண்ணப்பிக்கும்போது அவர்கள் சுகமடைவார்கள். இறைவனுடைய வல்லமை பவுலிடத்திலிருந்து அந்த நோயாளிக்குச் சென்று அவர் நொடிப்பொழுதில் சுகமடைந்தார்.

இந்த அற்புதம் அந்த தீவுவாழ் மக்களுக்குப் பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த செய்தி அந்தத் தீவு முழுவதும் காட்டுத் தீ போல பரவியதால், தெய்வங்கள் நம் நடுவில் வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். அவர்கள் பிணியாளிகள் அனைவரையும் பவுலிடத்திலும், மருத்துவனாகிய லூக்காவிடத்திலும், அரிஸ்தர்க்குவிடத்திலும் கொண்டு வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒருமித்து விண்ணப்பித்தபோது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்கள் அனைவரும் சுகமாக்கப்பட்டார்கள். அதன் பிறகு அவர்கள் அந்தத் தீவிலிருந்து கப்பல் ஏறியபோது அவர்களுடைய பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அத்தீவு மக்கள் அவர்களுக்குக் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார்கள். பவுல் அந்த கிராமத்தில் அவர்கள் பேசும் மொழியில் தன்னால் இயன்ற வரைக்கும், அவர்கள் அனுமதித்த வரைக்கும் நிச்சயமாக நற்செய்தியைப் பிரசங்கித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிறிஸ்தவர்களுடைய சுகமாக்கும் வல்லமை மந்திரவாதத்தினாலோ, ஆவிகளோடு அவர்களுக்கிருக்கும் தொடர்பினாலோ வருவதில்லை. அவைகள் கர்த்தராகிய இயேசுவே வல்லமையுள்ள கிறிஸ்து என்பதற்கான தெளிவான அடையாளங்களாக இறைவனிடத்திலிருந்து வருகின்றது.

கேள்வி:

  1. பவுலைக் கடித்த பாம்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறது? மெலித்தா தீவில் மக்களுக்கு சுகமளிக்கப்பட்டதிலிருந்து நீங்கள் எதைப் புரிந்துகொள்கிறீர்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:55 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)