Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 020 (Peter’s Sermon in the Temple)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

10. தேவாலயத்தில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 3:11-26)


அப்போஸ்தலர் 3:17-26
17 சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.18 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். 19 ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், 20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். 21 உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். 22 மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 23 அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். 24 சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். 25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். 26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

குழப்பம் அடைந்திருந்த யூதர்கள் முன்பு பேதுரு ஒரு நியாயாதிபதியாக நிற்கவில்லை. அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை அறிந்திருந்தும் அவர்களை “சகோதரரே” என்று அழைத்தார். இயேசு சிலுவையிலே அவர்களது எல்லா பாவங்களையும் மன்னித்துவிட்டார். அவர்களில் தங்கியிருப்பதற்கு ஆயத்தமாயிருந்த பரிசுத்த ஆவியானவரை அவர்கள் மீது ஊற்றினார். அந்த வாக்குத்தத்தம் அவர்களுக்கு மட்டும் உரியதல்ல, அவரை நம்பும் அனைவருக்கும் உரியது. அவர்கள் மீதான இறைவனின் கிருபையின் நோக்கங்கள் வெளிப்படுவதையும், அவர்களுக்காக காத்திருந்த இரட்சிப்பு அவர்களை ஊடுருவிச் செல்வதையும் பேதுரு ஏற்கெனவே திட்டவட்டமாய் அறிந்திருந்தார்.

அப்போஸ்தலர்களின் தலைவர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், இவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று விண்ணப்பம் செய்து துன்பங்களினூடே சிலுவை மரணத்தை அடைந்த இயேசுவின் வல்லமையை வெளிப்படுத்தினார். யூதர்கள் மற்றும் அவர்களின் தலைவர்களின் தவறுகளை தெளிவுடன் காண்பிக்கும் மிக முக்கிய வார்த்தைகள் இவைகள். பேதுருவின் வாயிலிருந்து தடையின்றி வந்த இந்த வார்த்தைகள் அவரது சொந்த அனுபவத்தை சார்ந்து இருந்தது. ஏனெனில் மறுதலித்த, சபித்த அவரையும் உயிர்த்தெழுந்த இயேசு மன்னித்து நீதிமானாக்கியிருந்தார். அவரது மறைவான பாவத்தையும் கூட அவர் கிருபையினால் மன்னித்திருந்தார். அவனது நற்செயல்களோ அவனது தூய நடக்கையோ அவனை மீட்கவில்லை. பேதுரு தனது சொந்த அனுபவத்தின் மூலம் உற்சாகம் அடைந்திருந்தார். அவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை வெளிப்படையாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்தினார். அவர் ஏற்கெனவே அவருடைய வார்த்தையை கேட்டவர்களின் பாவத்தை சுட்டி காண்பித்திருந்தார். எல்லா உண்மையோடும், தெளிவோடும் அவர்களது இருதயத்தை வசனத்தால் ஊடுருவியிருந்தார். மனம் வருந்துகிற ஒரு விசுவாசியிடம் பரிசுத்த ஆவியானவர் நியாயத்தீர்ப்பையும், பாவத்தையும் உணர்த்திய பிற்பாடு, புத்துணர்வையும், ஆசீர்வதிக்கப்பட்ட ஆறுதலையும் தருகிறார்.

இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரது வார்த்தைகளை அளப்பதற்கரிய ஆர்வத்துடன் பேதுரு கவனித்தார். கிறிஸ்துவின் பாடுகளின் மூலம் இந்த உலகம் இரட்சிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை பேதுரு நன்கு உணர்ந்திருந்தார். எல்லா நல்ல தீர்க்கதரிசிகளும் முன்னுரைத்தபடி இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் மரிக்க வேண்டும். இறைவன் முன்பு அறியச்செய்திருந்த அவரது முதன்மையான சித்தம் இது தான். அவர் அனைத்து பாவங்களையும், முழு உலகத்தின் அவமானத்தையும் தன்னுடைய குற்றமற்ற குமாரன் மீது சுமத்தும்படி தீர்மானித்திருந்தார். நமக்குப் பதிலாக அவர் ஒருவர் மாத்திரமே இறைவனின் கோபாக்கினையின் அக்கினியில் மரிப்பதற்கு தகுதியானவரும், உகந்தவரும் ஆவார். பரலோக பிதா தனது குமாரனை பலியாகக் கொடுப்பதற்கு பதிலாக அவரே ஒருவேளை தீய உலகிற்காக மரிக்கும்படி விரும்பியிருக்கலாம். ஆனால் அவரது மகத்துவமான தன்மையில் அவர் முழு பிரபஞ்சத்தையும் தாங்குபவராக இருக்கிறார். தனது குமாரனை நமக்குப் பதிலாக கொடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை. இயேசுவின் மரணம் என்ற பரிகாரப்பலியின்றி மன்னிப்பு கிடையாது.

இயேசு மனமுவந்து பாடுபடுவதற்கு தன்னை அர்ப்பணித்ததின் விளைவு தான் கண்களால் காணக்கூடிய கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் ஆகும். சிலுவையைக் குறித்து தியானிக்கும் ஒருவன் இறைவனின் இருதயத்திற்குள் சென்று பார்க்கிறான். அவர் அழிந்து போகக் கூடிய பாவிகளை நேசித்ததினால் தனது கீழ்ப்படிதலுள்ள குமாரனை கொடுத்தார். கனியற்ற அக்கிரமக்காரர்களை பரிசுத்தப்படுத்தி, தனக்குள் நிலைத்திருக்கச்செய்து, அதிக கனிகளை கொடுக்க வைக்கிறார்.

கொலைகாரர்களின் கைகளில் நாசரேத்தூர் இயேசு மரித்தது ஒரு விபத்து அல்ல என்பதை பேதுரு பழைய ஏற்பாடு மூலம் உறுதிப்படுத்தினார். அவர் பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து மரித்தார் என்பதை தெளிவுபடுத்தினார். பின்பு தன்னைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் மனந்திரும்பும்படியாக அவர்களுக்கு சவால் விடுத்தார். மனந்திரும்புதல் என்பது வெறுமனே ஒரு துக்க உணர்வோ, வெட்கத்தினால் ஏற்படும் கண்ணீரோ அல்ல. மாறாக முழுவாழ்விலும் ஏற்படும் முழுமையான மாற்றம் ஆகும். தவறான குறிக்கோள்களை விட்டுவிட்டு தெய்வீகத்தன்மை வாய்ந்த உண்மை குறிக்கோளாய் இருக்கக்கூடிய கிறிஸ்துவிடம் திரும்புவதை அது முக்கியப்படுத்துகிறது. இந்த மனந்திரும்புதல் என்பது பாவங்களை அறிக்கையிடுவது, இறைவனின் கோபத்திற்கு நாம் ஏதுவானவர்கள் என்று ஒத்துக்கொள்வது, இலவசமான கிருபையில் விசுவாசம் வைப்பது, அவர் நமக்கு அளித்திருக்கும் அளவிட முடியாத மன்னிப்பில் தொடர்ந்திருப்பது என்று அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். இறைவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தலும். உடைந்த இருதயமும் அளவற்ற முழுமையான கிருபையில் சந்திக்கிறது. கிறிஸ்து மாத்திரமே சிலுவையிலே நமது இரட்சிப்பை நிறைவேற்றுகிறார். அவர் மீது விசுவாசம் வைப்பவர்களை நீதிமான்களாக்குகிறார்.

இறைவனின் நீதி நமது இருதயங்களில் தங்கும் போது பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் வெளிப்பட்டு, இறைவனுடைய சமாதானம், விடுதலை அருளப்படுகிறது. இயேசுவைப் பின்பற்றுபவர்களின் இருதயங்களில் அவர் தங்கியிருக்கிறார் என்பதையோ அல்லது கிறிஸ்துவின் மரணம் குறித்த இறையியல் உண்மைகளின் பட்டியலையோ மட்டும் கிறிஸ்துவின் மீது விசுவாசம் மற்றும் உண்மையான மனந்திரும்புதல் உறுதிப்படுத்தவில்லை. மாறாக இந்த விசுவாசத்தின் மூலம் ஒருவருக்குள் தங்கியிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக வல்லமையை பெற்றுக்கொள்ள முடிகிறது. அருமையான சகோதரனே; இறைவனுடனான ஐக்கியத்திற்குள் நீ பிரவேசித்திருக்கிறாயா? நீங்கள் மனந்திரும்பியுள்ளீர்களா? உங்களது வாழ்வின் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா? கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் புதிய உடன்படிக்கையில் தொடர்ந்து இருப்பீர்கள், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவீர்கள்.

அருமையான சகோதரரே, சற்று கவனமாக இருங்கள். புதிய உடன்படிக்கையின் முதன்மையான நோக்கம் பாவங்களை மன்னிப்பது அல்லது நித்திய வாழ்வை பெற்றுக்கொள்வது அல்லது அற்புதமான பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பெறுவதும் அல்ல, மாறாக அது கிறிஸ்துவை நமக்குள் பெற்றிருப்பது ஆகும். எல்லா படைப்புகளும் அவருக்காக காத்திருக்கின்றன. படைத்தவருக்கும் படைப்புகளுக்கும் இடையே உள்ள பிரிவினை முடிவுக்கு வரும்படி சர்வசிருஷ்டியும் ஏங்குகிறது. அவரது ஜீவனின் வல்லமை அனைத்தையும் மேற்கொள்ளும். அழியும் பிரபஞ்சத்தை புதுப்பிக்கும். நாம் அனைவரும் இதற்காகவே ஏங்கித் தவிக்கிறோம். இன்று ஒரு விசுவாசியில் ஏற்படும் இந்த புதுப்பித்தல் கிறிஸ்துவின் வருகையின் போது நாம் அடைய உள்ள முழு மகிமைக்கு ஆதாரமாக உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதனின் பாவத்தினால் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்து மீண்டும் பரிபூரண நிலையை அவர் அடையச் செய்வார்.

கர்த்தரின் வருகைக்கான ஆயத்த காலம் என்பதின் பின்னணியத்தில் சீஷர்கள் இயேசுவின் பரமேறுதலை புரிந்து கொண்டார்கள். பரமேறிச் சென்று பிதாவுடன் இருக்கின்ற காலம், பூமியில் ஆவிக்குரிய ஓர் எழுப்புதலுக்கு அவசியமான காலம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவருடைய பரமேறுதல் முழு சிருஷ்டியை ஒப்புரவாக்கவும், மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் வழியைத் திறந்தது. கிறிஸ்துவின் பரமேறுதலின் போது பரிசுத்த ஆவியானவர் மக்களில் தங்கி செய்யும் புதுப்பிக்கும் பணியானது உறுதிப்படுத்தப்பட்டது.

எல்லா உண்மை தீர்க்கதரிகளும் கிறிஸ்துவின் வருகை தான் உலக வரலாற்றின் முடிவு என்பதை கூறுகிறார்கள். நமது முடிவு என்பது நியாயந்தீர்ப்பு அல்ல, அது எல்லாவற்றையும் அதனுடைய உண்மை நிலைக்கு மறுபடியும் கொண்டு வருவதால் ஏற்படும் மகிழ்ச்சி, புதுப்பித்தலின் சந்தோஷம் ஆகும். வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட மோசே என்ற தீர்க்கதரிசி சுட்டிக் காண்பித்தவர் தான் படைப்பின் மையம் ஆவார். மோசே மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கையைத் தள்ளி புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் ஆவார். இறைவனுடன் இந்த புதிய உடன்படிக்கைக்குள் வர மறுக்கும் அனைவருக்கும் எந்த நம்பிக்கையும் கிடையாது. கிருபையை புறக்கணிக்கிற கல்லான இருதயம் கொண்டோருக்கு நம்பிக்கை கிடையாது. கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் அனைத்து மக்களையும் இறைவன் பட்சித்துப் போடுவார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தலின் காணக்கூடிய விளைவு தான் உலக வரலாறு ஆகும்.

பேதுருவின் கருத்து செறிந்த இந்த அறிக்கைக்குப் பின்பு, யூதர்களை இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி அவர் உற்சாகப்படுத்தினார். அவர்கள் தீர்க்கதரிசிகளின் பிள்ளைகள் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். அவர்களுடைய பிதாக்களுடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் பங்காளிகள் என்பதை தெளிவுபடுத்தினார். தனக்குச் சமமான நிலையில் இருந்து மக்கள் தன்னுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த முடியாது என்பதை இறைவன் அறிந்திருந்தார். எனவே தான் பாவம் நிறைந்த, தற்காலிகமான, முரட்டாட்டம் பண்ணுகிற மனிதனின் நிலைக்கு நித்தியமான, பரிசுத்தமான சிருஷ்டி தன்னை உட்படுத்தினார். இதுவே அவரது மாபெரும் கிருபையின் சாராம்சம் ஆகும்.

கலகம் செய்த மனிதர்களுடனான இறைவனின் வரலாறு ஆபிரகாமை அவர் தெரிந்தெடுத்ததில் ஆரம்பித்தது. அவனது சந்ததியில் வரும் ஒருவர், மாம்சத்தில் வெளிப்பட்டு இறைவனின் ஆசீர்வாதங்களை பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொடுப்பார் என்று பரிசுத்தமான இறைவன் இந்த மனிதனிடம் சொன்னார். சாத்தானின் எதிர்ப்பு மற்றும் மனிதனின் தோல்வி இவைகளின் மத்தியிலும் இறைவன் தனது திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். பழைய உடன்படிக்கையின் முடிவை பரிசுத்த ஆவியானவர் கொண்டு வரும் நாள் வருகிறதை இறைவன் உணர்ந்தார். அனைத்து மக்களையும் இறைவனுடன் ஐக்கியம் கொள்ளும்படி அழைத்தார். அதற்கு முன் பேதுரு யூதர்களுக்கு அந்த கிருபையை காண்பித்தார். இறைவனை விசுவாசித்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.

இறைவன் தன்னுடைய குமாரனை சிலுவையில் அறைந்த தனது எதிரிகள் மனந்திரும்பும் படியான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தார். கிறிஸ்து தனது பிதாவின் சித்தத்திற்கு முழுவதுமாக இசைந்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் குமாரனை மகிமைப்படுத்தி உயர்த்தினார். இறைவனின் ராஜ்யத்தின் எல்லைக்குட்பட்ட தம்மை பின்பற்றுபவர்கள் மீது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை குமாரன் பொழிந்தருளும்படி செய்கிறார். ஆண்டவர் ஆயத்தப்பட்டு கேட்பவர்களின் இருதயங்களை ஆசீர்வதிக்கிறார். அவர்கள் திரும்பும்படியாகவும், மனந்திரும்பும்படியாகவும் வழி நடத்துகிறார். மனிதன் தானாகவே மனந்திரும்ப முடியாதவனாக இருக்கிறான். பரிசுத்த ஆவியானவர் தான் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்படி உதவுகிறார். மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்திலிருந்து மனந்திரும்பவில்லையென்றாலும், தனது வன்மத்தை விட்டுவிடவில்லையென்றாலும், அவன் ஒருபோதும் கிறிஸ்துவுடனான ஐக்கியத்திற்குள் வர இயலாது. நாம் அனைவரும் ஆயத்தத்துடன், முழு விருப்பத்துடன் இறைவன் பக்கம் திரும்பும்படி அவர் எதிர்பார்க்கிறார். வரப்போகும் முழுமையான ஒப்புரவாக்குதலின் பணியை அவர் நம்மில் தொடங்கியிருக்கிறார். பிரியமான விசுவாசியே, நீ உன்னுடைய பாவங்களை விட்டுவிட்டாயா? கிறிஸ்துவை நீங்கள் உறுதியாய் பற்றிக் கொண்டீர்களா?

விண்ணப்பம்: பரலோகத்தின் ஆண்டவரே, நீர் உமது வருகைக்காகவும், அனைத்துக் காரியங்களையும் முன்னிருந்த நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் ஆயத்தப்படுத்துகிறீர். தீமையிலிருந்து நாங்கள் விலகி இருக்க உதவும். உமது கிருபையில் நிலைத்திருக்க செய்யும். நீரே எங்கள் வாழ்வின் ஒரே இலக்காகவும், வாழ்வின் லட்சியமாகவும் இருக்கும்படி உதவும். உமது கிருபையால் நாங்கள் இரட்சிக்கப்பட்டது போல எங்களை சுற்றி நீர் ஆயத்தப்படுத்துகிற அநேகரை இரட்சியும்.

கேள்வி:

  1. மனுக்குல வரலாற்றின் நோக்கம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 10:35 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)