Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 016 (The first six disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
ஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)

3. முதல் ஆறு சீஷர்கள் (யோவான் 1:35-51)


யோவான் 1:35-39
35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவஆட்டுக்குட்டி என்றான். 37 அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38 இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39 அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

கிறிஸ்து மாம்சத்தில் வந்த இறைவனுடைய வார்த்தை, அவரே இறைவன், அவரே வாழ்வும், ஒளியின் ஆதாரமுமானவர். இவ்வாறுதான் அவரை நற்செய்தியாளன் அடிப்படையில் விளக்கியிருக்கிறார். அவர் இயேசுவின் ஊழியத்தையும் செயல்களையும்கூட விளக்கியிருக்கிறார். அவரே அனைத்தையும் படைத்துப் பராமரிப்பவர். இறைவனை அன்புள்ள தகப்பனாக அறியும் புதிய அறிவை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அடிப்படைக் கருத்தின்படி, அவருடைய தன்மைகள் அனைத்தையும் தொகுத்துக் கூறும் விதமாக, மீண்டும் இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றும் குறிப்பிடுகிறார். 14ம் வசனத்தில் கிறிஸ்துவின் அடிப்படைத் தன்மையையும் ஆதாரத்தையும் விளக்குகிறார், 29 மற்றும் 33 ஆகிய வசனங்களில் கிறிஸ்துவினுடைய சேவையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

தன்னுடைய மகனையே நம்முடைய பாவத்தைச் சுமக்கும்படியாகக் கொடுத்து, நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மை விடுவிக்கும் இறைவனுடைய கரங்களில் தன்னைப் பலிகடாவாகக் கொடுக்கும்படி கிறிஸ்து மனிதனானார். இறைவன் இந்த பலியை விரும்பினார் மட்டுமல்ல, அதை ஆசீர்வதித்து ஏற்றுக்கொண்டதைப் போலவே, அதைச் செலுத்தியவரும் அவர்தான். பவுலுடைய வார்த்தைகளில் சொன்னால், இறைவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

இன்றைய தலைமுறைக்கு தேவ ஆட்டுக்குட்டி என்ற பதத்தைப் புரிந்துகொள்வது கடினமானது, ஏனெனில் நாம் இன்று பாவத்தின் பரிகாரத்திற்காக பலிசெலுத்துவதில்லை. பழைய ஏற்பாட்டு பலிமுறைகளில் அனுபவமுள்ள ஒருவர் கூறுகிறார், இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று. இறைவன் நம்முடைய பாவங்களுக்கு நம்முடைய இரத்தத்தைச் சிந்தாமல் தன்னுடைய மகனுடைய இரத்தத்தைச் சிந்துவது ஆச்சரியமானது. நம்மைப் போன்ற கலகக்காரர்களுக்காக பரிசுத்தர் மரித்தார். குற்றமுள்ள மக்கள் பரலோக பிதாவின் நீதியுள்ள பிள்ளைகளாக வேண்டும் என்பதற்தாக இறைவனுடைய குமாரன் நம்முடைய பாவங்களுக்காக கொலை செய்யப்பட்டார். நம்மை விடுவிக்கும் அவரையும் குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் சேர்த்து நாம் கனப்படுத்துவோம்.

தேவ ஆட்டுக்குட்டி என்ற சொற்றொடரின் ஆழத்தை இரண்டு சீஷர்களும் உடனடியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஸ்நானகன் தேவ ஆட்டுக்குட்டியை விழித்தததைப் பார்த்த அவர்களும், கர்த்தரும் உலகத்தின் நியாயாதிபதியும், அதேவேளையில் மனுக்குலத்துக்கான பரிகார பலியுமாக இருக்கும் இயேசுவை அறிய விரும்பினார்கள். இந்த இரண்டு சீஷர்களும் கவனமாகக் கவனித்தபோது இந்தக் சிந்தனைகள் அவர்களுடைய இருதயத்தை நிரப்பியது. இயேசு யோவானுடைய சீஷர்களை அபகரிக்கவில்லை, யோவானே அவர்களை இயேசுவிடம் வழிநடத்துகிறார். சீஷர்கள் முழு மனதோடு அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.

இயேசு அவர்களுடைய ஏக்கங்களையும் நோக்கத்தையும் உணர்ந்துகொண்டார். இயேசுவின் அன்பையும் கிருபையையும் அவர்கள் கண்டார்கள், இந்த நற்செய்தியிலுள்ள இயேசுவின் முதல் பேச்சைக் கேட்டார்கள்: நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? இயேசு அவர்களுக்கு கடினமான உபதேசங்களைப் போதிக்காமல், அவர்களுடைய இருதயத்தை திறந்துகாட்டும் வாய்ப்பைக் கொடுத்தார். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் சகோதரரே? உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன? உங்களுக்கு இயேசு வேண்டுமா? ஆட்டுக்குட்டியை நீங்கள் பின்பற்றுவீர்களா? உங்கள் பள்ளிப் பரீட்சைக்குப் படிப்பதைக் காட்டிலும் தீவிரமாக இந்த மேன்மையான சத்தியங்களைப் படியுங்கள்.

இரண்டு சீஷர்கள் இயேசுவின் வீட்டிற்குப் போக விரும்புகிறார்கள். அவர்கள் மக்கள் கூட்டத்தின் தொந்தரவு இல்லாத ஒரு இடத்தில் சென்று சத்தியங்களைக் கேட்க நினைத்தார்கள். வந்து பாருங்கள் என்று இயேசு அவர்களுக்கு பதிலுரைத்தார். வந்து என்னுடன் சேர்ந்து படியுங்கள் என்று அவர் சொல்லவில்லை. உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள், என்னுடைய உண்மையான ஆளத்துவத்தையும், என்னுடைய செயல்களையும் வல்லமையையும், இறைவனுடைய புதிய சாயலையும் அறிந்தகொள்வீர்கள் என்று கூறினார். கிறிஸ்துவுக்கு அருகில் வருபவன் உலகத்தைக் குறித்த புதிய தரிசனத்தைக் காண்பதோடு இறைவனை அவர் இருக்கிறவண்ணமாகவே காண்பான். கிறிஸ்துவைக் குறித்த தரிசனம் நம்முடைய அறிவின் அமைப்பு முறையையே தலைகீழாக மாற்றிவிடும். அவர் நம்முடைய சிந்தனையின் மையமாகவும் நம்முடைய நம்பிக்கையின் இலக்காகவும் மாறிவிடுவார். ஆகவே இந்த சீஷர்களுடன் நீங்களும் வந்து பார்ப்பீர்களானால், அவர்களோடு சேர்ந்து கூடிய விரைவில், அவருடைய மகிமையைக் கண்டோம்; அது கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த பிதாவின் ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது என்று சாட்சிபகருவீர்கள். இரண்டு சீஷர்களும் இயேசுவோடு ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்தார்கள். அந்த கிருபையின் மணித்துளிகள் எத்தனை அருமையானதாக இருந்திருக்கும்! அந்தத் தருணம்தான் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்று நற்செய்தியாளன் சாட்சிபகருகிறான். அப்போது அவர் இயேசுவைப் பற்றிய உண்மையைப் பரிசுத்த ஆவியின் அகத்தூண்டுதலினால் அறிந்துகொண்டார். அவருடைய கர்த்தர் அவருடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு நீதியை வழங்கின போது, இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை அவர் நிச்சயமாக அறிந்துகொண்டார். உங்கள் ஆத்துமாவிலுள்ள இருளில் கிறிஸ்துவின் ஒளி என்றாவது பிரகாசித்திருக்கிறதா? அவரை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?

விண்ணப்பம்: பரிசுத்த தேவ ஆட்டுக்குட்டியே நாங்கள் உம்மைக் கனப்படுத்துகிறோம், துதிக்கிறோம். நீர் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்து, எங்களை இறைவனோடு ஒப்புரவாக்கினீர். நீர் எங்களைப் புறக்கணியாமல் உம்மைப் பின்பற்றுகிறவர்களாக்கும். எங்களுடைய மீறுதல்களை மன்னித்து உம்முடைய மகத்துவத்தை எங்களுக்கு வெளிப்படுத்தும், அப்போது நாங்கள் உம்மை அதிக அர்ப்பணத்துடன் பின்பற்றுவோம்.

கேள்வி:

  1. ஏன் இரண்டு சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 09:26 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)