Previous Lesson -- Next Lesson
இ) யாக்கோபின் பிள்ளைகள் மீது புறவினத்து விசுவாசிகள் கொண்டிருந்த பெருமையைக் குறித்து எச்சரிக்கை (ரோமர் 11:16-24)
ROMANS 11:16-24
16 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். 17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவ மரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், 18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள். 19 நான் ஒட்ட வைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. 20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. 21 சுபாவக் கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. 22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். 23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே. 24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
ஆபிரகாம் கிருபையினால் மட்டுமே நீதிமானாக்கப்பட்டான் என்பதை பவுல் உறுதிப்படுத்தினான். ஆபிரகாமின் சந்ததியாரும் இதேவிதமாக விசுவாசிக்கும்போது நீதிமான்களாக்கப்பட முடியும் என்பதை உணர்ந்திருந்தான். மரத்தின் வேர்கள் நன்றாக இருக்கும் போது, அதனுடைய கிளைகளும் நன்றாக இருக்கும். ஒரு கூடையில் முதல் மாவு சுவையுடன் இருக்கும் போது, மற்ற மாவும் அதைப் போலவே சுவையுடன் இருக்கும். ஆரம்பத்தில் இறைஅரசில் கிறிஸ்தவர்கள் அந்நியர்களாக இருந்தார்கள். அவர்கள் வனாந்தரத்தில் உள்ள ஒலிவமர கிளைகளைப் போல இருந்தார்கள். ஆண்டவரின் கரம் ஆபிரகாம் மற்றும் அவனது சந்ததியைப் போன்று பழைய ஒலிவ மரத்தைப் போல அவர்களை வடிவமைத்தது. அவரிடம் அவர்கள் ஜீவனைப் பெற்று, அவருடைய வல்லமையினால் கனி தருகிறார்கள். உண்மையான ஒலிவக் கிளைகளை கர்த்தருடைய கரம் வெட்டியிருப்பதால், ஒட்டவைக்கப்பட்ட கிளைகள் தாங்கள் சிறந்தவர்கள் மற்றும் மதிப்புள்ளவர்கள் என்று பெருமை பாராட்டக்கூடாது.
யூதர்கள் வெட்டப்பட்ட கிளைகளைப் போல இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தார்கள், அவருடைய இரட்சிப்பை வெறுத்தார்கள். புதிதாக ஒட்டவைக்கப்பட்ட கிளைகள் இறைவனுடைய குமாரனில் விசுவாசம் வைத்த கிறிஸ்தவர்களைக் குறிக்கின்றன. புதிதாக ஒட்டவைக்கப்பட்ட கிளைகள் பெருமை பாராட்ட ஏதுவாய் இருந்தது. ஆபிரகாமின் பிள்ளைகள் கறைமிக்கவர்கள் மற்றும் வெறுக்கப்படத்தக்கவர்கள் என்றார்கள். பெருமையுள்ளவன் மற்றும் தன்னையே மகிமைப்படுத்துபவன் விரைவில் அழிந்துபோவான். எனவே தான் பெருமை கொள்ளாதபடி புறவினத்து விசுவாசிகளை பவுல் எச்சரிக்கின்றான்.
நீதியுள்ள பரிசுத்த இறைவன் சுபாவக் கிளைகள் மீது இரக்கம் பாராட்டவில்லை என்று அப்போஸ்தலன் உறுதிப்படுத்துகிறான். ஏனெனில் தமது வார்த்தைகள் மூலம் தொடர்ந்து பேசியும் அவர்கள் கனி தரவில்லை. எனவே ஒட்டவைக்கப்படும் கிளைகளும் கனி தரவில்லையென்றால் வெட்டப்படுவது நிச்சயம். இறைவனுடைய இரக்கத்தையும், கண்டிப்பையும் குறித்து பவுல் ஒரே நேரத்தில் பேசுகிறான். மறுபிறப்பு, தூய்மையாக்கப்படுதல் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு இடம் தராத கனியற்ற கிளைகளை வெட்டும் போது இறைவனின் கண்டிப்பு வெளிப்படுகிறது. கிறிஸ்துவில் வடிவமைக்கப்பட்டவர்கள் அவரில் உறுதியாக இருந்து கனி தரும் போது இறைவனின் நன்மை உணரப்படுகிறது. அவர்கள் கடினப்பட்டு, பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கும்போது, அவர்களையும் அவர் வெட்டிப்போடுவார்.
இயேசு இதை விளக்கும் போது இப்படிச் சொல்கிறார். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்” (யோவான் 15:5,6).
பழைய ஒலிவமரக்கிளை வெட்டப்பட்டாலும் ஒரு யூதன் இப்போது இயேசுவில், அவருடைய இறைதன்மையில் விசுவாசம் வைத்து, அவருடைய பரிகாரப்பலியை ஏற்றுக்கொள்ளும்போது, ஆண்டவருடைய கரத்தால் மறுபடியும் ஒட்டவைக்கப்படுகிறான். இறைவன் பெரிய காரியங்களை செய்வார். அவர் வெட்டப்பட்ட கிளைகளுக்கு உயிர் கொடுப்பார். சில யூதர்கள் தங்களுடைய இரட்சகர் இயேசுவிடம் திரும்பி விசுவாசிப்பார்கள்.
நாம் பாவிகளாயிருக்கையில் இறைவன் நம்மை வெறுக்கவில்லை நாம் மனந்திரும்பிய போது கிறிஸ்துவின் இரத்தத்தினால் நம்மை பரிசுத்தமாக்கினார். அவருடைய பரிசுத்த ஆவியினால் நமக்கு வாழ்வு தந்தார். இவ்விதமாக அவர் ஆபிரகாமின் எல்லா பிள்ளைகளையும் இரட்சிக்க விரும்புகிறார். சத்தியத்தை தேடும்போது யாக்கோபின் பிள்ளைகளையும், இஸ்மவேல் சந்ததியினரையும் அவர் இரட்சிக்கிறார். அவர்கள் கனிதரும் போது இயேசு அவர்களை ஒட்ட வைக்கிறார்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களை தூய்மைப்படுத்தி, உமது கிருபையினால் பரிசுத்தமாக்கினீர். கிறிஸ்துவின் சரீரத்தில் எங்களை இணைத்தீர். நீர் எங்களுக்கு இலவசமாக அருளிய கிருபை எவ்வளவு பெரியது நாங்கள் எங்களுக்காக வாழாதபடி உதவும். பெருமை கொள்ளாதபடி காத்துக்கொள்ளும். நீர் அருளும் நல வாழ்விற்குள் அநேகர் பிரவேசிக்க அருள் செய்யும்.
கேள்விகள்:
- கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் இணைக்கப்படுதல் என்பதன் அர்த்தம் என்ன?
- இணைக்கப்படுதல் பாதிக்கப்பட்டால் யாருக்கு ஆபத்து நேரிடும்?