Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 010 (The Wrath of God against the Nations)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)

1. தேசங்களுக்கு எதிரான இறைவனின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 1:18-32)


ரோமர் 1:18-21
18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. 21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

தாழ்மை, அன்பு, வாஞ்சையுடன் பவுல் ரோமாபுரி சபையை வாழ்த்திய பிறகு, நற்செய்தியின் நோக்கத்தை அவர்களுக்கு வலியுறுத்தினான். அது கிறிஸ்துவில் உள்ள இறை நீதி ஆகும். தன்னுடைய ஆழமான ஆராய்ச்சியின் முதல் பகுதியில் அவன் இவ்விதம் எழுதுகிறான். இறைவனுக்கு எதிரான அவபக்திக்கும், மனிதர்களுக்கு எதிரான அநியாயத்திற்கும் விரோதமாக இறைவனுடைய நீதியுள்ள ஆக்கினை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் இப்போது கிருபையின் காலத்தில் மட்டுமல்ல, இறைவனின் கோபாக்கினையின் காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நம்முடைய நாட்களின் இரகசியமாக உள்ளது. மனிதனுடைய அருவருப்புகளுக்கு எதிராக, அவர்களுடைய பாவங்களுக்கு எதிராக இறைவன் அதிருப்தி கொண்டுள்ளதை, நம்முடைய நாட்களில் தெளிவாகக் காண்கிறோம். பரிசுத்தமானவரை அறிந்திருக்கிற ஒவ்வொருவனும் அவருக்குப் பயப்படுகிறான். அவருடைய கோபத்திற்குமுன் நடுங்குகிறான். பரிசுத்தமானவருடைய பரிசுத்தத்தின் சிறு ஒளிக்கதிர்களை ஒருவன் உணரும் வரை, அவரை எவரும் அறியமுடியாது. இறைவனுடைய மகத்துவம் இதில் வெளிப்படுகிறது.

இறைவன் மனிதர்களை தமது சாயலில் உருவாக்கினார். ஆனால் அவர்களோ அறிவீனமாக அவரை விட்டுப்பிரிந்து சென்றார்கள். அவர்கள் அகங்காரம் மிக்கவர்களாக மாறினார்கள். ஆனாலும் இந்த கீழ்ப்படியாத மக்களை தமது பொறுமையினிமித்தம் இறைவன் அழிக்கவில்லை. அவர்கள் மறுபடியும் அவரிடம் திரும்பும்படியாக எதிர்பார்த்தார். உடனடியாக அவருக்கு தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அவர்களோ இறைவனை விட தங்களையே அதிகம் நேசித்தார்கள். அவரை விட்டு அதிக தூரம் விலகிச் சென்றார்கள். அவர்கள் ஆவிக்குரிய குருடர்களாக மாறினார்கள். பரிசுத்தமானவரின் மகிமையை அவர்கள் ஒருபோதும் உணரவில்லை. தீமையில் தொடர்ந்திருந்து, தங்களைத் தாங்களே தீட்டுப்படுத்திக் கொண்டார்கள். மற்றவர்களும் இரட்சிப்பை அடைய முடியாதபடி தடுத்தார்கள். தங்களது தவறுகள் மற்றும் பொய்களை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மனிதன் பாவத்தில் வீழ்ச்சியடைந்த போதிலும், இறைவன் இருக்கிறார் என்பதை இயற்கையில் அவருடைய அற்புதங்கள் வழியாக உணர்ந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான். தாவரங்களின் அமைப்பு, அணு சக்தி, எண்ணிலடங்கா நட்சத்திரங்களின் மகிமை இவைகளை நீங்கள் கற்றுக்கொள்ளும் போது, படைத்தவரை நிச்சயம் நீங்கள் ஆராதிப்பீர்கள். அவருடைய ஞானம், வல்லமை மற்றும் நித்தியமான தன்மையை அறிவீர்கள். உங்கள் ஆத்துமாவின் அழுகிய தன்மை, உங்கள் மனச்சாட்சியின் உணர்வு மற்றும் உங்கள் மனதின் உருவாக்கும் ஆற்றல் இவைகளை நீங்கள் உணர்ந்து பார்த்ததுண்டா? தினமும் நூறு ஆயிரம் முறைகள் துடிக்கும் உங்கள் இருதயத்தின் சத்தத்தை நீங்கள் கவனித்ததுண்டா? அதன் மூலம் உங்கள் சரீரத்தின் எல்லா பாகங்களுக்கும் இரத்தம் செல்கின்றதை நீங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா? இந்த ஆச்சரியங்கள் எல்லாம் தானாய் நிகழ்பவை அல்ல, அது படைத்தவரின் ஈவுகள் ஆகும்.

இயற்கையில் இறைவனின் மகிமையை நாம் காணும்போது, பயத்துடனும், நடுக்கத்துடனும் அவர் முன்பு நிற்காதிருக்க யாரால் முடியும்? அவருடைய மகிமையைக் குறித்த சாட்சிகள் ஓய்வின்றி பேசுகின்றன. ஆனால் நமது காலத்தின் நாகரீக மனிதன் இறைவனுடைய கரத்தால் தெளிவாக எழுதப்பட்ட இயற்கையின் இந்த திறந்த புத்தகத்தை வாசிப்பதற்கு போதுமான நேரம் இல்லை.

படைத்தவரை கனப்படுத்த தவறுபவன், அவர் செய்த செயல்களுக்கு நன்றி செலுத்தாதவன், அவருடைய மகிமைக்கு ஒப்புக்கொடாதவன் முட்டாள் ஆகிறான். அவன் பரிசுத்த ஆவியின் ஞானத்தை இழக்கிறான். அவனுடைய மனம் குருடாக்கப்படுகிறது. அவன் ஒரு மிருகத்தைப் போல் ஆகிறான். அருமையான சகோதரனே, இறைவனுக்கு அன்பு மற்றும் பயத்துடன் துதியை ஏறெடு. அவர் தமது சாயலில் உன்னைப் படைத்திருக்கிறார். அவருடைய ஜீவ சுவாசத்தை உனக்குள் ஊதியுள்ளார். நீ அவருக்கு சொந்தமானவன். அவரில்லாமல் உன்னால் வாழ இயலாது.

இறைவனை ஆராதிக்காத அனைத்து மனிதர்களும் இழந்து போனவர்கள், பாவம் நிறைந்தவர்கள், அவிசுவாசிகள். அவர்கள் தங்கள் பெலம் மற்றும் வல்லமையின் மையத்தை இழந்திருக்கிறார்கள். தங்கள் மனச்சாட்சியை கடினமாக்கியுள்ளார்கள். அவர்களுடைய மனம் இருளடைந்துள்ளது. அவர்கள் பொய்யை உண்மையென்று கருதுகிறார்கள். இறை அறிவை அவர்கள் புரட்டுகிறார்கள். அதை தடுக்கிறார்கள். உயிருள்ள விசுவாசத்தை தாரும் என்று உங்கள் ஆண்டவரிடம் கேளுங்கள். இறைவனை விசுவாசிக்கும்படியாக மற்றவர்களை வழிநடத்துங்கள். அவருடைய மகிமையில் நம்பிக்கை, அவருடைய இரக்கத்தை போற்றுதல் இல்லையெனில், இறைவனின் கோபாக்கினையில் மனுக்குலம் அழிந்துவிடும்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே, நீர் சர்வவல்லமையுள்ளவர். நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களை உருவாக்கினீர்; சிறப்பாக எங்களை படைத்தீர். எங்களுடைய பெருமைகளுக்காக, உம்மைத் துதிக்காமல் புறக்கணித்ததற்காக எங்களையும் மன்னியும். உம்மிடத்தில் திரும்ப எங்களுக்கு உதவும். உம்மை வெளிப்படையாக சாட்சியிட உதவும். தினமும் உமது அன்பில் தொடர்ந்திருக்க செய்யும். எல்லா காலங்களிலும் உம்மை மகிமைப்படுத்த உதவும். எல்லா அவபக்தியுள்ள மக்கள், அநியாயக்காரர்களுக்கு எதிரான உமது நீதியுள்ள கோபத்தை அறிவித்து அவர்களும் மனந்திரும்ப, உம்மிடத்தில் திரும்ப கிருபை செய்யும்.

கேள்வி:

  1. ஏன் இறைவனின் கோபாக்கினை வெளிப்படுத்தப்பட்டுள்ளது?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:40 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)