Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 004 (Identification and apostolic benediction)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
ஆரம்பம்: வாழ்த்துரை இறைவனுக்கு நன்றி, நிரூபத்தின் நோக்கமாக “இறைவனின் நீதி” வலியுறுத்தப்படுதல் (ரோமர் 1:1-17)

அ) அடையாளப்படுத்துதல் மற்றும் அப்போஸ்தலனின் வாழ்த்துரை (ரோமர் 1:1-7)


ரோமர் 1:5-7
5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவ குமாரனுமாயிருக்கிறார். 6 அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், 7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

இறைவனின் அனைத்து ஈவுகளுக்கும் இயேசுவே திறவுகோலாக இருக்கிறார். இறைவனின் கிருபை அல்லது ஆசீர்வாதத்தை அடைய தீர்க்கதரிசிகள், பரிசுத்தவான்கள் அல்லது கன்னி மரியாள் மத்தியஸ்தர்களாக இருக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக பரலோகப் பிதா நமது விண்ணப்பங்களுக்கு பதில் தருகிறார். அவர் ஒருவரே நமக்காக பிதாவிடம் பரிந்துபேசுகிறார். அவருடைய நாமத்தின் மூலமாக நம்முடைய விண்ணப்பங்கள் இறைவனை சென்றடைகின்றன. அவர் மூலமாக அனைத்து ஆவிக்குரிய வரங்களும் கிடைக்கின்றன. இயேசு மட்டுமே நம்மை பரிசுத்தமானவருடன் ஒப்புரவாக்கிற வரானார். அவர் மூலமாக நாம் “மன்னிப்பு, சமாதானம், இரட்சிப்பு மற்றும் நீதியுடன், கிருபையின் பரிபூரணத்தை பெறுகிறோம். அனைத்து இறை ஆசீர்வாதங்களையும் நாம் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. ஆனால் அவைகள் ஈவாகக் கொடுக்கப்படுகின்றன.

பவுலின் கடிதத்தின் தொகுப்பு “கிருபை” என்பதாகும். அவன் திருச்சபையைத் துன்பப்படுத்தியவனாய் இருந்த போது, இந்த கிருபையை அனுபவித்தான். அவனது வைராக்கியம், விண்ணப்பங்கள் அல்லது நற்செயல்கள் இவைகளினால் அல்ல, கிறிஸ்துவுக்குள் அவன் மீது பொழிந்தருளப்பட்ட இறைவனின் இரக்கத்தினால், அவன் இரட்சிக்கப்பட்டான். மாபெரும் கிருபையைக் குறித்த நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். கிறிஸ்து கிருபை, மன்னிப்பு மற்றும் சமாதானத்தைக் கொடுக்கிறார்.

கிருபையின் தன்மையை நீங்கள் அறிந்து கொண்டு, அதை உணர ஆரம்பிக்கும் போது, நீங்கள் கிருபையைப் பெற்றுக்கொள்கிறீர்கள். இறைவனின் அன்பைக் குறித்து பிரசங்கிக்கிறவராக மற்றும் இலவசமாக நீதிமானாக்கப்படுதலைக் குறித்த செய்தியைக் கூறுபவராக மாறுகிறீர்கள். உனது இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய செய்தியை வைத்திருக்கிறாரா? அல்லது நீ இன்னும் விரக்தியுடன், வருத்தத்துடன் மற்றும் உனது பாவங்களினால் கட்டப்பட்டவனாக இருக்கிறாயா?

கிருபையின் செய்தியை உணர்ந்துகொள்கிற ஒவ்வொருவரும் இறைவனை, அவருடைய கிறிஸ்துவை நேசிக்கிறார்கள். அவருடைய இரக்கத்தின் பிரமாணங்களுக்கு கீழ்ப்படிகிறார்கள். “விசுவாசத்தினால் கீழ்ப்படிதல்” என்று பவுலால் பயன்படுத்தப்படும் பதம், இந்த கிருபைக்கு மனிதனின் பிரதியுத்தரத்தை குறிப்பிடுகிறது. நமது சித்தத்திற்கு எதிரான கீழ்ப்படிதல் மற்றும் இணக்கமற்றக் கீழ்படிதலை இறைவன் நம்மிடம் கேட்கவில்லை. நமது இரட்சகர் மற்றும் மீட்பர் மீதான அன்பினால், ஆத்துமாக்களை மீட்கிற அவருக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதை அவர் விரும்புகிறார். பவுல் தன்னை இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அழைக்கிறான். இந்த தலைப்பில் பவுல் “விசுவாசத்தினால் கீழ்ப்படிதல்” என்ற பதத்திற்கு சரியான விளக்கத்தை கொடுக்கிறான். நீ கிறிஸ்துவின் ஊழியக்காரனா? கிறிஸ்துவின் நிமித்தமாக இறைவன் எல்லா காலங்களிலும், எல்லா மனிதர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்தார். இந்த செய்தியை விட வேறு எதுவும் மனிதனுக்கு பயனுள்ளதாகவும், உதவுகிறதாகவும் இல்லை. நாம் அறிந்திருக்கிற அனைவரையும் இந்த இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கவும், அவருடைய கிறிஸ்துவை நேசிக்கவும், அவருடைய கிருபையின் வல்லமையை அனுபவிக்கவும் அழைக்கிறோம். என்ன ஓர் சிறப்பான செய்தி. எல்லா கிருபையையும் வழங்குகிறவரை விசுவாசித்து கீழ்ப்படியும்படி உன்னுடைய நண்பர்களை நீ அழைத்திருக்கிறாயா?

பவுல் மூலமாக அல்லது மற்ற நபர்கள் மூலமாக அல்ல, ரோமாபுரி சபையின் அங்கத்தினர்கள் கிறிஸ்துவினால் நேரடியாக அழைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இதுவே உண்மையான விசுவாசத்தின் இரகசியம் ஆகும். எந்த மனிதனும் இன்னொரு மனிதனை இரட்சிப்பதில்லை. ஒரு மனிதன் விசுவாசிக்கும்படி நாம் ஆண்டவருடைய கரத்தில் கருவிகளாக இருக்கிறோம். இயேசு தன்னைப் பின்பற்றியவர்களை தனிப்பட்ட விதத்தில், தெரியத்தக்கவிதத்தில் அழைத்தார். அவருடைய சத்தம் இருதயங்களின் ஆழங்களை ஊடுறுவிச் சென்றது. அது மரித்தோரை உயிருடன் எழுப்புகிறவருடைய சத்தம் ஆகும். “சபை” என்ற வார்த்தையின் பொருள் அழைக்கப்பட்டவர்களின் ஐக்கியம் என்பதாகும். இறைவனுக்கு பணி செய்வதில் அன்புடன் செயல்படுவதை அது வலியுறுத்துகிறது. நீர் இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்பட்ட ஒருவரா? அல்லது பயனற்ற அல்லது கனியற்ற ஒருவரா நீங்கள்? நமது மார்க்கம் என்பது அழைப்பின் மார்க்கம் ஆகும்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் மற்றும் பதில் தருபவர்கள் இறைவனால் நேசிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் யார் என்பதை விவரிக்கிற காரியம் எவ்வளவு அற்புதமானது, மகிமையானது. அவர்கள் உன்னதமானவரின் உறவுகள் ஆவார்கள். அவரால் அறியப்பட்டும், கனப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். மேலும் இந்த ஐக்கியத்திற்கு வலுவூட்டும்படி, தமது பரிகாரபலியின் மூலம் இறைவன் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்தார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மீது வைத்திருக்கும் அன்பு அல்லது மணவாளன் மணவாட்டியின் மீது வைத்திருக்கும் அன்பு இவற்றை விட இறைவனின் அன்பு பெரியது, தூய்மையானது. இறைவனின் அன்பு பரிசுத்தமானது. அது ஒருபோதும் அழிவதில்லை. அவருடைய அன்பினால் நிரப்பப்பட்டு, அவருடைய பரிசுத்தத்தில் நடக்கிற இறைவனால் நேசிக்கப்படுகிறவர்களுள் ஒருவரா நீங்கள்?

கிறிஸ்து நம்மை மன்னிக்கும்படி , கீழ்ப்படியும்படி , பின்பற்றும்படி அழைக்கிறார். இந்த குணாதிசயங்களின் தொகுப்பு தான் பரிசுத்தம். ஒருவனும் தன்னில் தானே பரிசுத்தமுள்ளவன் அல்ல. நம்மை மீட்கும் இரட்சகர் மூலம் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள பாத்திரர் ஆனோம். கிருபையின் மூலம் மட்டுமே நாம் பரிசுத்தமாகிறோம். இறைவனுக்கு முன்பு அன்பில் குற்றமற்றவர்களாக இருக்கிறோம். எல்லா பரிசுத்தவான்களும் உலகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் இறைவனுடைய பணிக்கென்று நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அவர்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல. அவர்களது உறவினர்கள் அல்லது மற்றவர்களுக்கும் அல்ல. ஏனெனில் அவர்கள் பரிசுத்தத்தின் பணிக்கென்று இறைவனுக்கு சொந்தமானவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவரா? கிருபையினால் பரிசுத்தமாக்கப்பட்ட ஒருவரா நீங்கள்?

விண்ணப்பம்: எங்கள் பரிசுத்த இறைவனே, நீர் பரிசுத்தராய் இருக்கிறது போல, நாங்களும் பரிசுத்தமாய் இருக்கும்படி இயேசுகிறிஸ்துவிற்குள் நீர் எங்களை அழைத்தீர். எங்கள் பாவங்களை நாங்கள் அறிக்கையிடுகிறோம். நாங்கள் அறிந்த மற்றும் அறியாத பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம். நீர் எங்களை நேசிப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தினால் எங்களை தூய்மைப்படுத்தும். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை பரிசுத்தப்படுத்தும். நீர் எங்களை நேசிப்பது போல, நாங்களும் உம்மை முழுப் பெலத்தோடும் அன்பு கூற, நாங்கள் உமக்கு சொந்தமாயிருக்க எங்கள் வாழ்வை மாற்றி அமையும்.

கேள்வி:

  1. கிருபை என்றால் என்ன? அதற்கு மனிதனின் பிரதியுத்தரம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)