Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Romans - 001 (Introduction)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்

முன்னுரை


ரோமருக்கு எழுதின நிரூபத்திற்கு ஓர் முன்னுரை

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய கிறிஸ்துவின் ஈவுகளில் சிறந்த ஈவு, அப்போஸ்தலனாகிய பவுலுக்கு அவர் வெளிப்படுத்திய முக்கியமான இந்த நிரூபம் ஆகும். இது ரோம தலைநகரத்தில் வசித்த ரோமர்களுக்கு எழுதப்பட்ட நிரூபம் ஆகும்.

நிரூபத்திற்கான காரணம் மற்றும் நோக்கம்

புறஜாதிகளின் அப்போஸ்தலன் தன்னுடைய மூன்றாவது அருட்பணி பயணத்தில், சின்ன ஆசியா மற்றும் கிரேக்கப் பகுதிகளில் தன்னுடைய பிரசங்க ஊழியத்தை அப்போது முடித்திருந்தான். முக்கியமான பட்டணங்களில் அவனால் நிறுவப்பட்ட உயிருள்ள சபைகளைக் கண்டு, விசுவாசிகள் அன்பின் ஊழியத்தில் நிலைத்திருக்க செய்தான். மேலும் மூப்பர்கள், போதகர்கள் மற்றும் சபை அங்கத்தினர்களுக்கு பேராயர்களை நியமனம் செய்தான். அவனுடைய பணியானது மத்தியதரைக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் முழுமையடைந்துள்ளதை கண்டான். ஆகவே அவன் மேற்கு நோக்கி சென்று பிரான்சு மற்றும் ஸ்பெயின் தேசங்களில் கிறிஸ்துவின் ராஜ்யத்தை நிலைநாட்ட எண்ணினான். (ரோமர் 15:22-24)

இந்த திட்டங்களுக்கான ஒப்புதலுடன், அவன் ரோமில் இருந்த சபை அங்கத்தினர்களுக்கு சிறப்பு வாய்ந்த நிரூபத்தை எழுதினான். அவர்கள் கிறிஸ்துவில் கொண்டிருந்த விசுவாசத்தை பாராட்டினான். அவன் புறஜாதிகளுக்கான அப்போஸ்தலன் என்பதை தெளிவுபடுத்தினான். அவனுடைய கரங்களில் கொடுக்கப்பட்ட சுவிசேஷத்தை கவனமாக, முறையாக கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தினான். அவனுடைய பயணங்கள், பிரசங்க ஊழியங்கள் மற்றும் பாடுகளில் சிரியாவில் உள்ள அந்தியோகியா சபை, விசுவாசமுள்ள விண்ணப்பங்களால் தாங்கியதைப் போல, அவர்களும் தன்னுடைய மேற்கு நோக்கிய அருட்பணிப் பயணத்தில் பங்கெடுக்கும்படியாக, அவர்களுடைய இருதயங்களைத் தூண்டி விட்டான். ஆகவே ரோமர் நிரூபம் ஆரம்பப் பாடங்களை உள்ளடக்கியுள்ளது. மெய்யான விசுவாசத்தில் சபை நிலைத்திருக்கும்படியும், இணைந்து பணிசெய்வதன் மூலம் உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிக்க சபையை ஆயத்தப்படுத்தவும் இதை எழுதினான்.

ரோமில் சபையை நிறுவியது யார்?

பவுல், பேதுரு அல்லது வேறொரு அப்போஸ்தலன், அல்லது நன்கு அறியப்பட்ட மூப்பர் யாருமே ரோமாபுரி சபையை நிறுவவில்லை. பெந்தெகோஸ்தே நாளின் போது பரிசுத்த பூமிக்கு (எருசலேம்) ரோமிலிருந்து சில யாத்திரிகர்கள் வந்திருந்தார்கள். மனந்திரும்பின மக்களின் விண்ணப்பங்களைக் கேட்டு கிறிஸ்து பரிசுத்த ஆவியை அவர்கள் மீது ஊற்றினார். அவர்களது நாவுகள் வல்லமை நிறைந்தவரின் மகத்துவ செயல்களால் நிரப்பப்பட்டது. பிற்பாடு அவர்கள் பட்டணங்களுக்கு திரும்பிச் சென்றார்கள். சிலுவையிலறையப்பட்ட சர்வவல்லமையுள்ளவரைக் குறித்து அவர்கள் சாட்சி பகர்ந்தார்கள். அவர் தரும் இரட்சிப்பைக் குறித்து தங்களுடைய யூத மற்றும் புற இனத்து நண்பர்களிடம் பேசினார்கள். கிறிஸ்துவைக் குறித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை தங்களது வீடுகளில் கற்றுக்கொள்ளும்படி குழுவாக கூடினார்கள்.

கி.பி 54க்கு முன்பு கிளாடியஸ் என்ற ரோமப் பேரரசன் காலத்தில் யூதர்கள் ரோமில் துன்புறுத்தப்பட்ட போது, அப்போஸ்தலனாகிய பவுல் ரோமில் இருந்து வந்த விசுவாசிகளை தொடர்ச்சியாக தன்னுடைய ஆசியா மற்றும் கிரேக்கப் பயணங்களின் போது சந்தித்தான். ரோமாபுரி சபையுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டவனாக பவுல் காணப்பட்டான். அவனுக்குள் செயல்பட்ட பரிசுத்த ஆவியின் வரங்களை அவர்களும் பெற்றிருந்தார்கள். உலகின் தலைநகரில் மிக நீண்ட காலம் தங்க வேண்டும் என்பதை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அங்கு உயிருள்ள, தனித்து இயங்கக் கூடிய சபையை அவன் கண்டான். தனது பயணத்தின் போது கர்த்தருக்குள் அவர்களுடன் ஐக்கியம் கொள்ளவும் சுற்றியுள்ள பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியை பிரசங்கிக்கவும் விரும்பினான்.

நிரூபத்தை எழுதியது யார்? எப்பொழுது? எங்கே?

கொரிந்து பட்டணத்தில் காயுவின் வீட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் தங்கியிருந்தபோது, கி.பி 58-ல் இந்த நிரூபத்தை எழுதினான். தன்னுடைய ஆவிக்குரிய அனுபவங்கள் மற்றும் அப்போஸ்தல உபதேசங்களை தொகுத்து இதை எழுதியுள்ளான். பவுல் இந்த நிரூபத்தை எழுதியுள்ளது போல வேறு எவரும் எழுத இயலவில்லை. உயிருள்ள, மகிமையுள்ள கிறிஸ்து அவனுடைய வழியில் குறுக்கிட்டு நின்றார். அவன் முன்பு நியாயப்பிரமாணத்தின் மீது இருந்த வைராக்கியத்தினால் தமஸ்குவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமான துன்புறுத்தல்களை கொண்டு வர எண்ணினான். அப்போது இறைவனுடைய மகிமையின் ஒளி அவனை சுற்றிலும் பிரகாசித்தது. அவன் புறக்கணித்த நாசரேத்தூர் இயேசு உயிருடன் இருக்கிறார் என்ற பெரிய உண்மையை உணர்ந்து கொண்டான். அவர் மகிமையின் ஆண்டவராக இருக்கிறார். அவர் கல்லறையில் இல்லை. அவர் உயிருடன் எழுந்தார். இயேசு மரணத்தை மேற்கொண்டார். அவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார். சர்வவல்மையுள்ளவராக எல்லாவற்றின் மீதும் அதிகாரம் உடையவர் என்பதை நிரூபித்தார். இயேசு இறைவனின் குமாரன் என்றும், தன்னை துன்புறுத்துபவனை அவர் அழிப்பவரல்ல என்றும், அவன் மீது இரக்கம் காண்பிப்பவர் என்றும் பவுல் புரிந்துகொண்டான். அவனுடைய தகுதியினால் அல்ல, இறைவன் தன்னுடைய கிருபையினாலும், புதிய நீதியின் தன்மையாலும், அருட்பணியை செய்யும்படி பவுலை அழைத்தார். நியாயப்பிரமாணத்தின்படி அவன் தன்னுடைய மனித செயல்களை சார்ந்து நிற்கவில்லை. அவன் கிறிஸ்துவின் இறை அன்பிற்கு ஊழியக்காரனாக உலகம் முழுவதிலும் செயல்பட்டான். வஞ்சிக்கப்பட்ட மற்றும் கறைப்பட்ட எல்லோரையும் இறைவனுடன் ஒப்புரவாகும்படி அழைத்தான்.

இந்த நிரூபத்தில் உள்ள தனித்துவமிக்க நடைகள் எவை?

ரோமாபுரி சபையின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் இந்த சமய மாற்றத்தை பவுல் தெளிவுப்படுத்தினான். ஆனால் இந்த ஒரு நோக்கத்திற்காக மட்டும் அழகான, தெளிந்த மொழிநடையோடு நீண்ட இந்த நிரூபத்தை அவன் எழுதவில்லை. மாறாக யூதர்கள் மற்றும் ரோமர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகத் தெளிவுடனும் பதிலளிக்க இதை எழுதினான். கர்த்தருக்குள் தன்னுடைய சகோதரனாகிய தெர்தியுவிற்கு பவுல் இந்த நிரூபத்தை வாய்மொழியாக கூற, அவன் எழுதினான். அவன் யாருக்கு எழுதினான் என்ற பெயர்பட்டியலை எண்ணிப்பாருங்கள். அவன் புதிய விசுவாசிகளின் பெயரையும் குறிப்பிட்டு இறைவனின் பரிசுத்தத்தால் அவர்களால் தூய்மையாக்கப்பட்டார்கள் என்று உறுதி செய்கிறான். பிற்பாடு உயிருள்ள விசுவாசத்தை விட்டு வழுவிப்போனவர்களை குறிப்பிடுகிறான். மனிதனுக்கு ஒரே நம்பிக்கை கிறிஸ்துவில் உள்ள முழுமையான நீதிமானாக்கப்படுதல் என்பதை வலியுறுத்துகிறான். மேலும் பெருமைமிக்க நியாயசாஸ்திரிகளின் சுயநீதியை உடைக்கிறான். அவர்களுடைய தவறு மற்றும் முழுமையான தோல்வியை காண்பித்து, எவ்விதம் அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிந்து, இறைவனுடைய அன்பின் பணிகளுக்கென்று தாழ்மையான விசுவாசத்தின் மூலம் பிரித்தெடுக்கப்பட முடியும் என்று கூறுகிறான். தன்னுடைய நிரூபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் அமைதியான போதனைகள் மூலம் வலிமைமிக்க பிரசங்கங்களை சாதாரண மனிதனுக்கும் கொண்டு செல்கிறான். அவன் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை. மாறாக யூதர்கள் மற்றும் புறவினத்தார், வாலிபர் மற்றும் முதியோர், கற்றோர் மற்றும் கல்லாதோர், அடிமைகள் மற்றும் சுயாதீனர், ஆண்கள் மற்றும் பெண்கள் என்று எல்லோருக்கும் எழுதுகிறான். ரோமருக்கு எழுதின நிரூபம் இன்று வரைக்கும் கிறிஸ்தவத்தின் போதனைகளைக் குறிப்பிட்டு பேசுவதில் முதன்மை வாய்ந்ததாக உள்ளது. அறிவர் மார்டின் லூத்தர் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார். “இந்தப் புத்தகம் புதியஏற்பாட்டின் முக்கியமான பகுதி மற்றும் தூய்மையான நற்செய்தி. ஒவ்வொரு கிறிஸ்தவனும் மனனம் செய்யவேண்டிய பகுதி ஆகும். ஆத்துமாவிற்கான ஆவிக்குரிய பொக்கிஷமாக ஒவ்வொரு நாளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு விசுவாசி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய நியாயப்பிரமாணமும் நற்செய்தியும், பாவமும் நியாயத்தீர்ப்பும், கிருபையும் விசுவாசமும், நீதியும் சத்தியமும், கிறிஸ்துவும் இறைவனும், நற்செயல்களும் அன்பும், நம்பிக்கையும் சிலுவையும் என்று அனைத்தும் இதில் நிறைந்து காணப்படுகிறது. பக்தியுள்ளவன் அல்லது பாவி, பலமுள்ளவன் அல்லது பலவீனன், நண்பன் அல்லது பகைவன் என்று ஒவ்வொரு மனிதனிடமும் நாம் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நம்மை நாம் எவ்விதம் நடத்த வேண்டும் என்றும் நாம் அறிந்திருக்க வேண்டும். எனவே எல்லா கிறிஸ்தவர்களும் இதில் தேர்ச்சிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அருமையான சகோதரரே, உங்கள் விசுவாசத்தைக் குறித்து ஆழமாகக் கற்றுக்கொள்ள விரும்பினால் ரோமருக்கு எழுதின நிரூபத்தை கவனமாகப் படியுங்கள். இது ஞானம், வல்லமை மற்றும் ஆவியினால் நிறைந்திருக்கிற இறைவனின் உலகளாவிய தன்மை போல் இருக்கின்றது. கிறிஸ்துவானவர் உன்னுடைய பெருமை மற்றும் சுயத்திலிருந்து உன்னை விடுவிப்பார். பரிபூரண நீதியில் உன்னை நிலைநிறுத்துவார். இறை அன்பில் நாளுக்கு நாள் விசுவாசத்தில் வளரும் வல்லமையுள்ள ஊழியக்காரனாக நீ மாறுவாய்.

ரோமருக்கு எழுதின நிரூபத்தின் பகுப்பாய்வு,

ரோமர் 1:1-17 -– ரோமாபுரி சபையுடன் எழுத்தாளருக்கு இருக்கும் நெருக்கமான உறவு. அப்போஸ்தலனின் ஆசீர்வாத உரை. நிரூபத்தின் அடையாளமாக இறைநீதியை முன்வைத்தல்.

பகுதி -1 – நம்மை நீதிமானாக்கும் இறைவனுடைய நீதி.

ரோமர் 1:18-3:23 -- நாம் அனைவரும் பாவிகள். நமது பெருமைகளை உடைத்தெறியும் நியாயப்பிரமாணத்தின்படி., இறைவன் நம்மை ஆக்கினைக்குட்படுத்துகிறார்.
ரோமர் 3:24 – 4:25 -- கிறிஸ்துவின் மீட்பின் பணிமூலம் இறைவன் மனிதர்கள் அனைவரையும், அவர்கள் விசுவாசிக்கும் போது இலவசமாக நீதிக்குட்படுத்துகிறார்.
ரோமர் 5:1 – 8:39 -- விசுவாசிகளில் ஆண்டவருடைய ஆவியானவர் தங்கியிருக்கிறார். அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் பாவத்தின் மீது வெற்றியைத் தருகிறார். அவர்கள் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆவியின் வல்லமையினால் நடக்கிறார்கள்.

பகுதி 2 – வரலாற்றில் இறைவனுடைய நீதி

ரோமர் 9:1 -11:36 -– பழைய உடன்படிக்கை மக்கள் இறைவனுடைய கிருபையை மறுத்திருந்தும், அவர் தமது நீதியில் தொடர்ந்திருந்தார்.

பகுதி 3 – நடைமுறையில் இறைவனுடைய நீதி

ரோமர் 12:1 – 16:27 -– மெய் விசுவாசம் நமது நடத்தை மற்றும் வாழ்வில் அன்புள்ள செயல்கள், தாழ்மையை வெளிப்படுத்தும் படி செய்கிறது.

இது கற்றுக்கொள்வதற்கான இலகுவான நிரூபம் அல்ல. நீங்கள் கவனமாக ஆராய்ந்து படிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், கருத்தொன்றி படிக்க வேண்டும். நீங்கள் அதனுடைய ஆசீர்வாதங்களில் மகிழமுடியும். மெய்யாக மனந்திரும்பி, உங்கள் மனம் புதிதாகி, கிறிஸ்துவுக்குள் வாழ்வின் ஒரு புதிய பரிமாணத்தை காணமுடியும். ரோமர்களுக்கு இது ஆவிக்குரிய மந்தத்தை கொண்டுவரவில்லை. மாறாக அவர்களது சூழ்நிலையிலும் மற்ற நாடுகளிலும் அவர்கள் பிரசங்கிக்கும்படி அவர்களை ஆயத்தப்படுத்தியது. ஆகவே அவருடைய கிருபையில் நிறைந்திருக்கும்படி, கிறிஸ்து உங்களை அழைக்கிறார். உங்கள் சகோதரர்கள் மற்றும் அன்பு, நம்பிக்கை இழந்த மக்கள் மத்தியில் இறைவன் உங்களை அனுப்புகிறார். கவனியுங்கள். விண்ணப்பம் ஏறெடுங்கள். போங்கள்.

கேள்விகள்:

  1. ரோமர்களுக்கு எழுதின நிரூபத்திற்கான காரணம் என்ன?
  2. ரோமில் சபையை நிறுவியது யார்
  3. யார் இந்த நிரூபத்தை எழுதியது? எங்கே? எப்பொழுது?
  4. பவுல் தன்னுடைய நிரூபத்தில் என்ன நடையை பயன்படுத்துகிறார்?
  5. இந்த நிரூபத்தின் உருவரை என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 06, 2021, at 02:56 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)