Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 018 (Healing of a Cripple)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

9. சப்பாணி சுகமாக்கப்படுதல் (அப்போஸ்தலர் 3:1-10)


அப்போஸ்தலர் 3:1-10
1 ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும்தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். 4 பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். 9 அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: 10 தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

அப்போஸ்தலர்களும் சபை அங்கத்தினர்களும் இணைந்து விண்ணப்பங்களை ஏறெடுத்த பின்பு, தேவாலயத்திற்குள் பிரவேசித்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயங்களாக மாறிய பின்பும், அவர்களின் பரலோக பிதாவை ஆராதிக்கும் இடத்தை அலட்சியம் பண்ணவில்லை. அவர்களது தொடர்ச்சியான விண்ணப்பங்கள் மற்றும் இறைவனுக்கு தூய்மையான நன்றி செலுத்துதலின் நிமித்தம் அசாதாரண வல்லமையை கடவுள் அவர்களுக்கு அருளியிருந்தார். தொடர்ச்சியான விண்ணப்பங்கள் மற்றும் வேதாகமத்தை படித்தல் இவைகளில்லாமல் ஒருவரும் ஆவிக்குரிய வல்லமையை காண இயலாது. அப்போஸ்தலர்கள் இருதயங்கள் கடவுளின் அன்பினால் நிறைந்திருந்தது. இந்த உலகில் ஏழைகளுக்கு உதவும் படியான வழியில் அந்த அன்பு அவர்களை நடத்தியது. அவர்கள் தேவையுள்ளோர், ஏழைகளைக் கண்டு விலகிச் செல்லவில்லை. கடவுளின் அன்பு அனைத்து மனிதர்களுக்கும் சேவை செய்திட நம்மைத் தூண்டுகிறது.

கூட்டத்தினூடே சத்தம் நிறைந்த ஆலயப் பிரகாரத்திற்கு, பேதுருவும், யோவானும் இணைந்து விண்ணப்பம் செய்யவும், ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளவும் போனார்கள். அவர்கள் மென்மையான ஒரு சத்தத்தைக் கேட்டார்கள். அவர்கள் திரும்பிப் பார்த்த போது தாயின் வயிற்றில் பிறந்தது முதல் சப்பாணியாய் இருந்த ஒரு பரிதாபமான மனிதனைக் கண்டார்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல், அவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலாது. கர்த்தரின் ஊழியர்கள் அந்த மனிதன் மீது இரக்கம் கொண்டு அவனுக்கு உதவிட விரும்பினார்கள். இயேசுவின் வல்லமை மீது நம்பிக்கை கொள்ளுமாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களை துரிதப்படுத்தினார். இரட்சகர் மீதான அவர்களது நம்பிக்கையை பெலப்படுத்தினார். இந்த பாடுள்ள மனிதனில் கர்த்தர் தமது நாமத்தை மகிமைப்படுத்த விரும்புவதை உடனடியாக பேதுருவும், யோவானும் உணர்ந்து கொண்டார்கள்.

பேதுரு அந்த ஏழை மனிதனிடம், தான் அவனை விட வசதிபடைத்தவன் இல்லை என்று கூறினார். ஆதி திருச்சபை மக்கள் தங்கள் சொத்துக்களை விற்று, பொதுவாக வைத்து இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு உயிருள்ள சபையிலும் இருக்க வேண்டிய தெளிவான கொள்கையை பேதுரு வெளிப்படுத்தினார். “எங்களிடம் வெள்ளியும் இல்லை, பொன்னும் இல்லை. அப்படி நாங்கள் பெற்றிருந்தால் கிறிஸ்துவை மகிமைப்படுத்த அவைகளை ஒப்படைத்து ஏழைகளுக்கு சேவை புரிந்திருப்போம்”. திருச்சபையின் பொதுசொத்தில் பணம் அதிகமாக இருக்கும் போது, அங்கே அன்பு குறைவாக இருக்கிறது, மேலும் கஞ்சத்தனத்தை அது வெளிப்படுத்துகின்றது. எனவே தான் பணத்தில் வசதி படைத்த சபையில் இறைவனின் வல்லமை இருப்பதில்லை. ஆனால் பணப்பற்றாக்குறை இருந்தும், விசுவாசத்தில் ஐசுவரியமுடைய சபை கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த இரண்டில் எந்த ஒன்றை நீங்கள் விரும்புகிறீர்கள்? அருமையான சகோதரரே, வல்லமையா? அல்லது பணமா? கிறிஸ்துவா? அல்லது உலகமா? இந்த காரியங்கள் ஒருபோதும் இணைந்து செல்வதில்லை.

பிறந்ததுமுதல் சப்பாணியாய் இருந்த அந்த மனிதனை அப்போஸ்தலர்கள் உற்று நோக்கிப்பார்த்தார்கள். இவர்கள் அந்த மனிதனுக்காக அக்கறைப்படுகிறார்கள் என்பதை அந்த மனிதன் உணர்ந்து கொண்டான். அப்போஸ்தலர்களும் அதை உணர்ந்தார்கள். அவர்கள் அவனை அவமதிக்கவில்லை. அவன் மீது கிளர்ச்சித்தலைவர்களைப் போல அதிகாரம் செலுத்தவில்லை. முதலில் அவர்களிடமிருந்து பணம் கிடைக்கும் என நம்பியிருந்தான். ஆனால் அப்போஸ்தலர்களும் அவனைப் போல ஏழை என்பதை அவன் கேள்விப்பட்டவுடன், அவனது எதிர்பார்ப்பு பொய்த்தது.

இயேசு என்ற பெயரை பேதுரு உச்சரித்தபோது, அந்த சப்பாணியான மனிதன் அதை கவனமாக கேட்டான். கடவுள் உதவுகிறார் என்ற அர்த்தமுடைய இந்த பெயரின் அர்த்தத்தைத் தவிர வேறெதுவும் அவன் சிறப்பாக அறிந்திருக்க வில்லை. ஒரேயொரு உதவியாளர், சுகம் தருபவர், இரட்சகர் மெய்யான கிறிஸ்து மட்டுமே என்பதை பேதுரு இங்கு குறிப்பிடுகிறார். ஒருவேளை சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்து அந்த சப்பாணி கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நாமத்தின் நிமித்தம் மக்களின் மத்தியில் மகிழ்ச்சியின் வெள்ளம் பொங்கி வழிவதை ஒருவேளை அவன் கவனித்திருக்கலாம். சிலுவையில் அறையப்பட்டவரை இறைவன் உயிரோடு எழுப்பினார். அவரை பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார். ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் செய்தியானது எருசலேமின் வீதிகளிலும்,தெருக்களிலும் மறைந்திருக்கவில்லை.

இயேசுவின் நாமத்தில் எழுந்து நட ப்பதற்கான கட்டளையை அந்த சப்பாணி கேட்டான். அவனது வலக்கையை பேதுருவின் கரம் பற்றிக்கொண்டதை அவன் உணர்ந்தான். பிறகு அவனது சரீரத்தில் வல்லமையுள்ள இறைவனின் அன்பு பாய்ந்தோடுவதை அவன் உணர்ந்தான். அவனது கால்களும், கரடுகளும் பெலன் கொண்டது, அவனது எலும்புகள் நேராக்கப்பட்டது. அந்த வியாதியஸ்தன் இந்த வார்த்தைகளை கேட்டான். “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எழுந்து நட”. அவனது முதலாவது அடியை துணிவுடன் எடுத்து வைத்தான். மிகப்பெரிய ஆச்சரியம், அவனால் நடக்க முடிந்தது.

சப்பாணி தனது வாழ்நாளில் ஒருபோதும் ஒரு அடியை கூட எடுத்து வைத்ததில்லை. இப்போதோ அவன் மானைப் போல துள்ளிக் குதித்தான். குழந்தையைப் போல ஓடினான். அவன் பேரானந்தத்தால் நிறைந்திருந்தான். அவன் அப்போஸ்தலர்களை புகழவில்லை. உடனடியாக இறைவனை அவன் மகிமைப்படுத்தினான். சுகமாக்கப்பட்ட அந்த மனிதன் நேராக வீட்டிற்கு செல்லவில்லை. அவன் இயேசுவே தன்னை சுகமாக்கினார் என்பதை அறிந்திருந்தான். விண்ணப்பம் செய்யும் அப்போஸ்தலர்களுடன் அவனும் இணைந்து கொண்டு தேவாலயத்திற்குள் பிரவேசித்தான், அவர்களுடன் இணைந்து இறைவனை துதித்தான். அவனது சந்தோஷத்தின் மிகுதியினால் வலப்பக்கமாக ஓடினான், இடப்பக்கமாக ஓடினான், மேலும் தனது எலும்புகளையும், கால்களையும் தொட்டுப் பார்த்துக் கொண்டான். நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிப்பதை அவன் முதன் முறையாக அனுபவித்தான். இறைவன் நாம் நடக்கும்படியான கிருபையை நமக்கு தருகிறார். இந்த சிலாக்கியத்தை பெற்ற நீங்கள் உங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறீர்களா?

அது பிற்பகல் மூன்று மணியாய் இருந்தது. எனவே பொது ஆராதனைக்காக மக்கள் ஆலயத்தில் கூடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஏழை பிச்சைக்காரனை அறிந்திருந்தார்கள். அவன் மகிழ்ச்சியுடன், அளவிட முடியாத ஆனந்தத்துடன் ஓடுவதை பார்த்தார்கள். கிறிஸ்துவின் வல்லமையை வெளிப்படுத்தும் சாட்சியாக அவன் திகழ்ந்தான். அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் மத்தியில் புதிய வல்லமை செயல்படுவதை உணர்ந்தார்கள்.

பிரியமான சகோதரரே? உங்கள் நிலை என்ன? இந்த சப்பாணியான மனிதனைப் போல தேவாலயத்து வாசலில் உட்கார்ந்து, ஆலயத்திற்குள் வந்து போகிற மக்களிடம் உதவி கேட்கிறீர்களா? அல்லது இயேசுவின் வல்லமை உங்களை உயிர்ப்பித்ததினால் நீங்கள் குதித்து எழுந்து, நடந்து அவரது நாமத்தை போற்றுகிறீர்களா? நீங்கள் உங்கள் நடத்தையினால் இரவும் பகலும் அவரை தொடர்ந்து மகிமைப்படுத்துகிறீர்களா?

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! உமது அப்போஸ்தலர்களின் விசுவாசத்தின் மூலம் நீர் அந்த சப்பாணியை சுகமாக்கினபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் விசுவாசத்தின் மூலமாகவும் உமது நாமம் பரிசுத்தப்படுவதாக. உமது இரக்கத்தினால் எங்களை நிரப்பும். நாங்கள் பணத்தை நேசிக்காமல், உமது நாமத்தினால் ஏழைகளுக்கு பணிபுரிய உதவும். உமது வல்லமையினால் எங்களை சுகமாக்கும். அப்போது நாங்கள் உமது நாமத்தினால் நடந்து, உம்மை துதிப்போம்.

கேள்வி:

  1. “நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்” – இந்த சொற்றொடரின் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 10:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)