Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 108 (Jesus Reproves His Disciples)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 9 - இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (மாற்கு 16:1-20)

5. இயேசு மீண்டும் தனது சீஷர்களுக்கு உறுதிப்படுத்துதல் (மாற்கு 16:14)


மாற்கு 16:14
14 அதன் பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.

இயேசு தம்முடன் இணைந்து பாடுகளையும், துன்பங்களையும் அனுபவிக்க பன்னிரெண்டு சீஷர்களை அழைத்தார். அவருடைய அற்புதங்களுக்கு அவர்களை சாட்சியாக்கினார். அவர்களில் ஒருவன் மறுதலித்தான். ஒருவன் நான்றுகொண்டு செத்தான். இறைவனுடைய குமாரனின் மரணத்திற்கு தான் ஒரு காரணம் என்பதை அவன் அறிந்து கொண்டான். “குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன்” என்றான். அவனுடைய மனந்திரும்புதல் மிகவும் தாமதமாக ஏற்பட்டது.

நரகம் தீய ஆவியினால் பிடிக்கப்பட்ட மக்களை செயல்பட வைத்தது. யூதாஸ் இயேசுவிற்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை. அவரை வெறுத்தான். அனைவர் முன்பும் தன்னை இயேசு குற்றப்படுத்தியதால் அவரை பழிவாங்க நினைத்தான். அவரை முத்தத்தினால் காட்டிக்கொடுத்தான்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் இயேசு பூட்டிய அறையில் திடீரென்று அவர்கள் நடுவில் தோன்றினார். அவர்கள் மிகவும் பயந்தார்கள். அவருடைய பிரசன்னம் அவர்களுடைய அவிசுவாசத்தைக் கடிந்துகொண்டது. அவருடைய பரிசுத்தம் அவர்களுடைய அசுத்தம், பயம், எதிர்காலத்திட்டம் அனைத்தையும் சரிசெய்தது.

அவர்கள் தங்களுடைய படவுகளுக்கு சென்று வலைகளை எடுத்து மீண்டும் மீன்பிடிக்க எண்ணினார்கள். ஆனாலும் மதவெறிமிக்க தலைவர்களை எண்ணிப் பயந்தார்கள்.

இயேசு சீஷர்களை கடிந்துகொண்டார். அவருடைய இருதயங்கள், மனங்களை சீரமைத்தார். அவர்களுடைய பாவங்களை சிலுவையில் சுமந்தார். அவர்களுடைய பொய், ஏமாற்று, களவு, இச்சைகளை மன்னித்தார். இப்போது பாவம் வளர்ச்சி பெற்று அவர்களுடைய இருதயங்களில் அவிசுவாசமாக காணப்பட்டது.

எனவே அவர் அன்புடன் அவர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு, பரலோக வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை கொள்ளாமல் அவிசுவாசத்துடன் காணப்பட்டதை குறித்து கடிந்துகொண்டார். ஏற்கெனவே அவருடைய உயிர்த்தெழுதலைக் கண்டு சாட்சியிட்ட மக்களின் வார்த்தைகளை நம்பாமல் இருந்ததினால் கடிந்துகொண்டார்.

அவர் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தன்னை வெளிப்படுத்தினார். ஆனாலும் அப்போஸ்தலர்கள் அந்த உண்மையை மறுதலித்தார்கள். ஏனெனில் அவர்கள் தனிப்பட்ட விதத்தில் அதை அனுபவிக்கவில்லை. இதை மறுதலித்ததன் மூலம் எளிய விசுவாசம் கொண்டவர்களை பொய்யர்களாக மாற்றினார்கள்.

அவர்களுடைய அவிசுவாசத்திற்கு காரணம் அவர்களின் மந்த இருதயம் ஆகும். அவர்கள் குறிப்பிட்ட எண்ணங்களை மனதில் கொண்டிருந்தார்கள். இயேசு நமது எண்ணங்களை மாற்றும்படி சொல்கிறார். நமது சொந்த தத்துவங்களை விட்டுவிட வேண்டும். நிபந்தனையற்ற முறையில் அவருடைய வார்த்தைகளைக் கேட்கவேண்டும். அவருடைய வார்த்தைக்கு உடனடியாக கீழ்ப்படிய வேண்டும். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, விசுவாசிக்கிறவனும், அதன்படி செயல்படுகிறவனும் பாக்கியவான்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை அசைக்க விரும்புகிறார். சுயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார். நம்முடைய பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களைவிட கிறிஸ்துவை நாம் முழுமையாக நேசிக்கும்படி செய்கிறார். இறைவனுடைய குமாரனுக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கவும், அவர் சித்தப்படி நடக்கவும் வழிநடத்துகிறார்.

உனது வாழ்வைக் குறித்த இயேசுவின் சித்தம் என்ன? அவர் உன்னில் புதிய இருதயத்தை உருவாக்குகிறார். நிலைவரமான ஆவியைத் தருகிறார். ஏனெனில் உனது பழைய இருதயம் கடினமாக உள்ளது. மனம் கறைப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உன்னை இறைவனுடனான புதிய வாழ்விற்கு நேராக நடத்துகிறது. உனது ஆண்டவர் உனக்கு புதிய விருப்பம், இறைவனைக் குறித்த புரிந்துகொள்ளுதலைத் தருகிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் பெலனை உனக்குத் தருகிறார்.

ஈஸ்டர் திருநாள் என்பது மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்ததினால் உண்டான சந்தோஷம் மட்டுமல்ல, அது மனந்திரும்புதலின் சந்தோஷத்தையும் உள்ளடக்கியது ஆகும். புதிய இருதயத்தில் புதிய சிந்தனை உருவாகிறது. அது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பகிர்ந்துகொள்கிறது. ஆண்டவர் தனது சீஷர்களை இரட்சிக்கும்படி அவர்களைக் கடிந்துகொண்டார். அவர்களுக்கு தனது ஜீவனின் பெலனைத் தந்தார்.

உயிருள்ள கிறிஸ்துவின் தன்மையை நீ விசுவாசிக்கிறாயா? மரணபரியந்தம் அவர் தன்னைத் தாழ்த்தியதை நீ உணருகிறாயா? எல்லா மனிதர்களும் இறைவனிடம் செல்லும் ஒரே வழி அவரே. நீ உனது வாழ்வை அவருக்கு ஒப்புக்கொடுப்பாயா? உயிர்த்தெழுதலின் வெற்றியில் நீயும் பங்குபெற விருப்பமா? அப்படியென்றால் எங்களுடன் இணைந்து பின்வரும் விண்ணப்பத்தை ஏறெடுங்கள்.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, நீர் என்னை அறிந்துள்ளீர். எனது வாழ்வின் ஒவ்வொரு பாவத்தையும் நீர் அறிகிறீர். நான் குற்றமுள்ளவன். உமது கோபத்திற்கு ஏதுவானவன். உமது ஒரேபேறான குமாரன் இயேசு எனது பாவத்தை சுமந்தார். நீர் உமது கோபாக்கினையை அவர் மீது ஊற்றினீர். என்னை நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்க அவர் சிலுவையிலறையப்பட்டார். என் முழு இருதயத்தோடும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். என் இரட்சகராகிய உம்மிடம் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நிர்ப்பந்தமான மனிதனாகிய என்னை நீர் நேசித்தீர். நீர் என்னை உயிர்ப்பிப்பீர். என்னுள் புதிய இருதயம், தூய சிந்தனையை உருவாக்குகிறீர். என்னை ஏற்றுக்கொண்டு நித்திய இரட்சிப்பை தந்ததற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய உம்மை நான் ஆராதிக்கிறேன். திரியேகராகிய நீர் என்னைக் காத்தருளும். வழிவிலகிச் செல்வோர், பாவத்தில் மரித்தோர் உமது அன்பையும், இரக்கத்தையும் அறிந்துகொள்ள என்னைப் பயன்படுத்தும். அவர்கள் உமக்கு தங்களை அர்ப்பணித்து உயிர்த்தெழுதலின் வாழ்வை பெற கிருபை செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களுடனான தமது முதல் சந்திப்பில் இயேசு ஏன் அவர்களைக் கடிந்துகொண்டார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:55 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)