Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 107 (Jesus Reveals Himself to Two Disciples)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 9 - இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (மாற்கு 16:1-20)

4. எம்மாவு சீஷர்கள் இருவருக்கு இயேசு தன்னை வெளிப்படுத்துதல் (மாற்கு 16:12-13)


மாற்கு 16:12-13
12 அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். 13 அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

பஸ்கா பண்டிகை வாரத்தின் முதல் நாளில் இயேசுவின் சீஷர்கள் இருவர் தங்களுடைய கிராமத்திற்கு துக்கத்துடன் சென்றார்கள். அந்த ஆண்டு பண்டிகை சமயத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வுகளைக் குறித்து எண்ணி கலக்கத்துடன் சென்றார்கள்.

அப்போஸ்தலனாகிய லூக்கா தனது நற்செய்தி நூலில் இதை குறித்த முழு விபரத்தை லூக்கா 24:13-35-ல் தருகிறார். குழப்பமடைந்திருந்த சீஷர்கள் மீதான இயேசுவின் அன்பை வலியுறுத்துகிறார். அவர்கள் தங்கள் எஜமான் சிலுவையிலறையப்பட்டதினால் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்திருந்தார்கள்.

இயேசுவைப் பின்பற்றியவர்களில் அநேகர் அவருடைய வருகையை உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய விதத்திலும் புரிந்துகொண்டிருந்தார்கள். கிறிஸ்துவின் ராஜ்யம் இந்த உலகத்திற்கு உரியது அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எம்மாவு சீஷர்கள் தேசத்துடன் மதத்தையும், விசுவாசத்துடன் அரசியலையும், ஆவியுடன் பணத்தையும், நித்தியத்துடன் காலத்தையும் கலந்தார்கள்.

இயேசு அவர்களை சுயமறுப்பிற்கு நேராகவும், ஆசை, இச்சைகள், பெருமை இவற்றை நீக்கிவிட்டு தாழ்மை, திருப்தி, அன்பு இவைகளை அடையவும், தங்கள் முழு வாழ்வையும் தியாகம் செய்யவும் வழிநடத்தினார் என்பதை அவர்கள் அறியவில்லை. கிறிஸ்து தனது ராஜ்யத்தை ஆயுதங்கள் அல்லது வரிகள், உயர்கல்வி, அல்லது வலிமைமிக்க தியானத்தினால் கட்டவில்லை. அவரே வழி. அவர் புதிய வாழ்வின் மத்தியஸ்தர். அவர் தன்னைப் பின்பற்றுவோரில் புதிய படைப்பை உருவாக்குகிறார். தனது சாயலுக்கு ஒப்பாக அவர்களை மறுரூபப்படுத்துகிறார்.

இவர்களுக்கு ஒரு மனமாற்றம் தேவை. அதாவது துரிதமான ஓர் மனமாற்றம். இயேசுவை பின்பற்ற விரும்புகிறவனுக்கு ஒரு புதிய இலக்கு இருக்கும். அவன் பணம், அதிகாரம், இச்சை, மற்றும் சுயநலத்தை தேட மாட்டான். இயேசு நம்மை பாவம் மற்றும் சோதனையில் இருந்து விடுதலை செய்கிறார். அவரைப் பின்பற்றுபவன் தன்னைத் தாழ்த்துகிறான். தேவையுள்ளோருக்காக தன்னை தியாகம் செய்கிறான். இறைவனுடைய குமாரனின் தாழ்மையை அறிந்தவன் பெருமை கொள்ள மாட்டான். தன்னை வெறுமையாக்கி பிறருக்கு சேவை செய்கிறான். மனிதனில் இருக்கும் பாவம் என்ற வியாதியை அறிந்திருக்கிறான். அவர் நமக்காக நியாயம்தீர்க்கப்பட்டார். நாம் நீதிமான்களாக்கப்பட அவர் மரித்தார். இறைவனுக்கு உகந்த ஜீவபலி அவரே.

இரண்டு சீஷர்கள் இதை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒரு வல்லமைமிக்க ராஜாவை எதிர்பார்த்தார்கள். இப்போதோ அவர்கள் சிலுவையில் பலவீன இரட்சகரை பார்க்கிறார்கள். அவர்கள் விடுதலையாளரை விசுவாசித்தார்கள். ஆனால் அவரை கல்லறையில் ஒருநாள் முன்பு அடக்கம்பண்ணினார்கள். வானத்தில் இருந்து வந்த போதகர் என்று அவரை வாழ்த்தினார்கள். அவர் தமது ராஜ்யத்தை ஸ்தாபிக்க அவர்களை பணியாளர்களாக நியமித்திருந்தார். இப்போது அவர்கள் அதிகாரங்களுக்கு பயந்து, சோர்வுடன் ஓடிப்போய்விட்டார்கள்.

எனவே சீஷர்களுக்கு இயேசு தன்னை நிரூபித்துக் காட்டினார். அவர்களை புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்கள் என்று அழைத்தார். பரிசுத்த ஆவியானவர் கற்றுக்கொடுத்ததை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. கிறிஸ்து மகிமையில் பிரவேசிக்கும் முன்பு பாடுபட்டு மரிக்க வேண்டும். அவர் நியாயம்தீர்க்கவோ அல்லது அதிகாரம் செலுத்தவோ வரவில்லை. அவர் ஒப்புரவாக்கவும், மரிக்கவும் வந்தார். இதுதான் மனிதர்களை இறைவனுடன் ஒப்புரவாக்கும் ஒரே வழி ஆகும். சிலுவையிலறையப்பட்டவரை மறுதலிப்பவன் இறைவனை அறியவில்லை. இறைவனுடைய தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியாகிய இயேசு இல்லாமல் ஒருவரும் பரிசுத்தமானவர் முன்பு நிற்க முடியாது. ஏனெனில் அவனுடைய சொந்தப்பாவம் அவனை பரிசுத்தமான இறைவனை விட்டுப்பிரிக்கிறது.

இறைவனுடன் இணைக்கும் பாலம் போன்றவர் சிலுவையிலறையப்பட்ட இயேசு. நமது விசுவாசமுள்ள மத்தியஸ்தர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர். இயேசு நம்மை சுயநீதி, சுயநலத்தில் இருந்து விடுதலை செய்திருக்கிறார். மீட்கும் விடுதலையாளரை நோக்கி நமது கரங்களை நீட்ட அவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். ஒருவரும் இறைவன் முன்பு நீதிமான் அல்ல. கிறிஸ்துவே நமது நீதியாய் இருக்கிறார்.

மேலறையில் பதினொரு சீஷர்கள் குழப்பத்துடனும், பயத்துடனும் உட்கார்ந்திருந்தார்கள். எம்மாவு சீஷர்கள் இரண்டு பேர் மகிழ்ச்சியுடன் வந்து கிறிஸ்து உயிருடன் இருப்பதைக் கூறினார்கள். அவருடைய மரணம், உயிர்த்தெழுதலின் அவசியம் குறித்து அவரே விளக்கிப் பேசியதைக் குறித்துச் சொன்னார்கள். ஆனால் சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து, தலைகளைத் துலுக்கினார்கள். அவர்களுடைய மனங்களில் அவநம்பிக்கை எண்ணங்கள் ஒடின. இந்த விசித்திர நிகழ்வு குறித்து மகதலேனா மரியாளும், பிற பெண்களும் முன்பு கூறியிருந்தார்கள். கிறிஸ்து மெய்யாகவே உயிர்த்தெழுந்தாரா?

ஒருவேளை அவர்களில் சிலர் இப்படிக் கூறியிருப்பார்கள். “இந்த செய்தி உண்மை என்றால் முதலாவது அவர் எங்களுக்கு காட்சியளிக்கட்டும்”. மற்றவர்கள் இப்படிக் கூறியிருப்பார்கள்: “ஒருவேளை அவரை விட்டு ஓடியதற்காகவும், பேதுரு மறுதலித்ததற்காகவும் நம்மைத் தண்டிக்க விரும்புகிறார்”.

அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் பேசினார்கள். ஆனால் அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவர் இன்றும் அவர்களில் தங்கியிருக்கவில்லை. அவர்கள் விசுவாசம் உண்மை, தைரியம், உயிருள்ளதாக இல்லை. பரிசுத்த ஆவியின் கனி என்பது உண்மையுள்ள விசுவாசம் ஆகும்.

விண்ணப்பம்: எங்கள் ஆண்டவரே, நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தீர். எங்கள் அவிசுவாசம், மந்த இருதயத்திற்காக எங்களை மன்னியும். உமது மரணத்தின் அவசியத்தையும் சிலுவையில் உமது வெற்றியையும், புரிந்துகொள்ள கிருபை தாரும். நீர் பரிசுத்தமானவர். நீர் மரணத்தை ஜெயித்து எழுந்தீர். மரணம் உம்மை அழிக்கவில்லை. நீர் ஜீவனுள்ளவர். நீர் அன்புள்ளவர். நீர் பூமியில் உம்மை வெளிப்படுத்தியது போல, இன்றும் ஆவியானவர் மூலம் உம்மை வெளிப்படுத்துகிறீர். உம்மைப் பின்பற்றி நடக்கக் கற்றுத்தாரும். உம்மை மட்டுமே நேசிக்கவும், மனிதர்களுக்கு உம்மைப் போல சேவை செய்யவும் கிருபை தாரும். ஆமென்.

கேள்வி:

  1. ஏன் சீஷர்கள் இயேசுவின் மரணத்தைப் புரிந்துகொள்ளாமலும், அவருடைய உயிர்த்தெழுதலை விசுவாசியாமலும் இருந்தார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 02:52 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)